கிறிஸ்து பிறப்பு விழாக் காலங்களில் ஆண்டுதோறும் வத்திக்கானில் நடைபெறும் ‘ஏழைகளுடன் இசை’ என்னும் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களைத் திருத்தந்தை லியோ அண்மையில் சந்தித்தார். திருத்தந்தை பிரான்சிஸின் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த முயற்சியை ‘அழகான பாரம்பரியம்’ என்று நினைவுகூர்ந்த அவர், கிறிஸ்துவின் மானுடலேற்பு தந்தையாம் கடவுள் நம் ஒவ்வொருவர் மீதும் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார். “மாண்பினை இழந்து துயருறும் மனிதகுலத்தில் தொலைந்துபோன ஆடுகளைத் தேடிச் செல்லும் கடவுளின் தெய்வீகச் செயல்பாடே, கிறிஸ்துவின் பிறப்பில் வியத்தகு முறையில் பொருள்படுகிறது” எனும் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்டின் (Deus Caritas Est) கூற்றை மேற்கோள் காட்டிய திருத்தந்தை லியோ, “இது வெறும் இசை நிகழ்வு மட்டுமல்ல; மாறாக, ஏழைகள் மற்றும் மிகவும் தேவையில் இருப்பவர்களில் கிறிஸ்துவை அடையாளம் காணக்கூடியதாக அமையவேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில்
வெளிவந்த தனது ‘Dilexe Te’
(‘நான் உன்னை அன்பு செய்கிறேன்’) என்னும்
திருத்தூது ஊக்கவுரையிலிருந்து மேற்கோள் காட்டிய திருத்தந்தை, “இது வெறும் மனிதக் கருணையின் செயல் அல்ல; மாறாக, ஒரு தெய்வீக வெளிப்பாடு. ஏழைகள் வழியாக அவர் தொடர்ந்து நம்மிடம் பேசுகிறார்; ஆகவே, மனித மாண்பு, உடைமைகளைச் சார்ந்தது அல்ல; நாம் வெறும் பொருள்கள் அல்ல; மாறாக, கடவுளால் நேசிக்கப்படும் அன்புக் குழந்தைகள். இந்தப் பார்வையில் இசை நிகழ்ச்சி மிகவும் பின்தங்கிய ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக அமையட்டும்” என்று
கேட்டுக்கொண்டுள்ளார்.