news-details
ஞாயிறு தோழன்
சனவரி 18, 2026, பொதுக்காலத்தின் 2-ஆம் வாரம் எசா 49:3,5-6; 1கொரி 1:1-3; யோவா 1:29-34

திருப்பலி முன்னுரை

இயேசுவை அனுபவிக்கவும் அறிவிக்கவும் ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றி அறிவிக்க அனுப்பப்பட்டவர்; தான் கருவறையில் இருக்கும்போதே கடவுளின் மகனைக் கண்டு மகிழ்ந்தவர்; தான் அனுபவித்த இயேசுவை இந்த அகிலமும் அனுபவிக்கச் செய்தவர்.

இந்த உலகின் மீட்பர், நம்மைப் பாவத்திலிருந்து மீட்க வந்த  ஆட்டுக்குட்டி, இறைமகன், தூய ஆவி நிரம்பப் பெற்றவர்என்று திருமுழுக்கு யோவான்  இயேசுவைப் பற்றி பறைசாற்றுகின்றார். திருமுழுக்கு பெற்ற நாமும் இயேசுவைப் பற்றி அறிவிக்க அழைப்புப் பெற்றுள்ளோம். அருளடையாளங்கள், திருப்பலி, நற்கருணை, இறைவார்த்தை இவற்றின் வழியாக அன்றாடம் இயேசுவை அனுபவிக்கிறோம். நாம் அனுபவித்த இயேசுவை நமது வாழ்க்கையால் இவ்வுலகிற்கு அறிவிப்போம். இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தைத் தேடிக் கண்டடைய ஒவ்வொரு நாளும் முயற்சியெடுப்போம். நாம் வாழும் சமுதாயத்தில் அனைவரிலும் அனைத்திலும் இயேசுவைக் காண்போம். வாழ்வும் வல்லமையும் ஆற்றலும் மீட்பும்  கொடுக்கவல்ல இயேசுவின் திருப்பெயர் வெற்றிபெற அன்றாடம் உழைப்போம். திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவை அறிவிக்கும் உயிருள்ள சாட்சிகளாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

கடவுள் தம்முடைய பணிக்காகக் கருப்பையிலே நம் அனைவரையும் தேர்ந்துகொண்டார். அவரது பிள்ளைகள் என்ற உரிமையை நமக்கு வழங்கினார். அவரது ஊழியர்களாகிய நாம்  இறைவனை விட்டு விலகாதிருக்கவும், நம்முடைய துன்ப வேளைகளில் இறைவன் உடனிருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழவும், கடவுளின் பார்வையில் மதிப்புப் பெற்ற மக்களாக வாழவும் அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளோம், இயேசுவின் சாயலை நாம் பெற்றுள்ளோம்.    இயேசுவின் பெயரை நினைத்தவர்கள், அறிக்கையிட்டவர்கள் அனைவரும் அமைதியைப் பெற்றுக்கொன்டார்கள்எல்லா நேரத்திலும் வாழ்க்கையாலும் வார்த்தையாலும் இயேசுவை அறிவித்து, அவரது அருளையும் அமைதியையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நீயே ஆசியாக விளங்குவாய்என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைக்கு ஆசியாக நீர் கொடுத்த திரு அவைத் தலைவர்கள் உமது பணியை இக்காலச் சூழலுக்கேற்ப ஞானத்தோடும் ஆற்றலோடும் செய்வதற்குத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்து வழிநடத்த வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. கண்மணி போல் எம்மைக் காக்கும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் அன்றாடம் நீர் எமக்குச் செய்து வருகின்ற அனைத்து நன்மைகளுக்கும் நன்றி கூறும் நல்ல மக்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நீ என் ஊழியன்என்று மொழிந்த ஆண்டவரே, உமது ஊழியர்களாகிய நாங்கள் இறைவார்த்தையை அன்றாடம் படித்து அதன்படி வாழவும், எங்களது வாழ்க்கையால் உம்மை அறிவிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மைப் பாதுகாக்கும் ஆண்டவரே, எம் குடும்பத்திற்கு ஆசியாக நீர் கொடுத்த குழந்தைகளைத் திரு அவை காட்டுகின்ற நெறிகளில் நாங்கள் வளர்க்கவும்கிறித்தவ நம்பிக்கையில் நாங்கள் வாழ்ந்து வழிகாட்டவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.