news-details
கவிதை
சென்னை – மயிலை உயர் மறைமாவட்டத்தின் முதல் பெண் ஊழியர்

திருவள்ளூர் கீழ்ச்சேரி

திசையறியா சிற்றூரில்

ஆதரவிலா மாதருக்கு

அன்புக்கரம் தந்தாயே!

வழிதெரியா மக்கட்கு

வழிகாட்ட வந்தாயே!

வாழ்வளிக்க வேண்டுகிறேன்

வரமீந்து காப்பாயே!

பெண்களுக்குக் கல்விவேண்டிப்

பெருமுயற்சி எடுத்தாயே!

பெண்கல்விபெருமைபெற

பெரும்பாடு பட்டாயே!

கைம்பெண்ணாய்இருந்ததாலே

காயங்கள் ஏற்றாயே!

ஞாலத்தில் இருள்நீக்கி

நல்விளக்காய் ஒளிர்ந்தாயே!

நினைவென்னும் மண்டபத்தில்

நித்தமும்யான் செபித்திடவே

நீண்டுவரும் தேவைகளை

நித்தியமும்                 தருவாயே!

உன்பார்வை ஒளிகண்டு

உன்னருகில் வருதற்கு

புன்சிரிப்பால் அழைப்பாயே!

புத்தொளியால் அணைப்பையே!

அம்மாவுன் நினைவிடத்தில்

அன்புமணம் வீசுதம்மா!

கருணைமிகு கண்களிலே

இரக்கவொளி பாயுதம்மா!

அருட்பார்வை நாற்புறமும்

அலையலையாய்த் தாவுதம்மா!

வறியவனாய் நிற்கின்றேன்

வாழ்வளித்துக் காப்பாயே!

அம்மாநின் அருகினிலே

ஆதரவிலாப் பிள்ளைகளை

அன்பாக அனைவரையும்

அரவணைத்து மகிழ்வாயே!

எப்பக்கம் பார்த்தாலும்

எழில்தவமும் உன்முகமே!

எந்நாளும் வருவோரை

இருக்கரத்தால் காப்பாயே

உவமையிலா நற்றாயே!

உன்னையான் போற்றுகிறேன்

கண்ணொளியால் காப்பதற்கு

கருணையொலி காட்டிடம்மா!

நன்னெறியில் நிற்பதற்கு

நாளுமுனை வேண்டுகிறேன்

நன்மைபல பலர்க்கீந்து

கண்ணிமையாய்க் காப்பாயே!

தனிமரமாய் நின்றன்று

கனிமரமாய்ச் செழித்தாயே!

பணிச்சுமையை ஏற்றவர்க்குப்

பக்கபலம் ஆனாயே!

அணிகள்பல இன்றமைய

அன்றேநீ உழைத்தாயே!

அப்பப்பா! உன்னுழைப்பால்

அகிலமெலாம் நிலைத்தாயே!

ஞானம்நிறை ஒளிநீயே!

மனவானின் குளிர்நீயே!

வானொளிரும் மதியாக

வலம் வந்த தாய்நீயே!

திக்கெட்டும் ஓங்கிநிற்கும்

தீந்தமிழின் சுவை நீயே!

தினமுன்னை வேண்டுகிறேன்

வேண்டுவரம் ஈவாயே!