தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுக்காக இறைவேண்டல் செய்துள்ளதாகத் திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா,
இலங்கை, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 1500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்,
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்காகத் திருத்தந்தை லியோ சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி இறைவேண்டல் செய்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், அண்மைக்காலமாக நிலவி வரும் இயற்கைப் பேரழிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் தான் நெருக்கமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும்,
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும், அவர்களுக்காக உதவி வழங்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்காகவும் தான் இறைவேண்டல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உலகளாவிய சமூகமும், நல்லெண்ணம் கொண்ட அனைவரும் அந்த வட்டாரங்களில் உள்ள நமது சகோதர-சகோதரிகளுக்குப் பக்க பலமாக துணை நிற்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.