news-details
தலையங்கம்
இந்தூர் குடிநீர் துயரம் உணர்த்தும் கசப்பான பாடங்கள்!

சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளைக் கடந்த பின்னரும்டிஜிட்டல் இந்தியா, ‘ஸ்மார்ட் சிட்டிஎனும் முழக்கங்களுக்கு இடையே, ஒரு குவளை பாதுகாக்கப்பட்ட குடிநீருக்காகச் சாமானிய மக்கள் உயிரை விடும் அவலம் இந்திய மண்ணில் நீடிப்பது இச்சனநாயகத்தின்மீது படிந்திருக்கும் தீராக் கறையையே காட்டுகிறது!

மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் பகீரத்புரா (Bhagirathpura) பகுதியில் மாசுபட்ட குடிநீரால் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமும் ஒன்றிய மற்றும் மாநில, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் மெத்தனத்தையும், ஆட்சியாளர்களின் போலிப் பெருமிதங்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.

இந்தூர் நகரம் இந்தியாவின்தூய்மையான நகரம் (Cleanest City) எனத் தொடர்ந்து பலமுறை விருதுகளைப் பெற்றுவரும் ஒரு பெருநகரம். ஆனால், ‘இந்தத் தூய்மை என்பது வெறும் மேலோட்டமான அலங்காரம்தானா?’ என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஹராப்பா - மொகஞ்சதாரோ, கீழடி - வைகைக்கரை நாகரிகங்களின் பெருமை கொண்ட இந்திய மண்ணில், பகீரத்புரா பகுதியில் கழிவுநீர்க் குழாயும், குடிநீர்க் குழாயும் ஒன்றோடொன்று கலந்து, மக்கள் மலம் கலந்த நீரை அருந்த நேரிட்டது என்பது ஒரு நவீன நகர நிர்வாகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம்.

அரசு நிர்வாகம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஏழை எளிய மக்களின் வீடுகளில் துக்கம் குடிபுகுகிறது என்பதற்கு இந்தூர் ஒரு சாட்சியாக மாறியுள்ளது. ‘ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அடிப்படை உள்கட்டமைப்பான நிலத்தடி நீர்க்குழாய்களின் பராமரிப்பில் காட்டிய அலட்சியம் மன்னிக்க முடியாதது. இக்கொடுஞ்செயல் மாநில அரசின் பொறுப்பற்றத்தன்மையையே எடுத்துக்காட்டுகிறது.

மத்தியபிரதேசத்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் பா... அரசு, இந்நிகழ்விற்கு முழுப் பொறுப்பேற்கவேண்டும். ஒரு பகுதியில் தொற்றுநோய் பரவுகிறது என்பது தெரிந்தும், ஆரம்பக்கட்டத்திலேயே அதைத் தடுக்கத் தவறியது ஏன்? மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் துடித்தபோது, சுகாதாரத்துறை எங்கே சென்றது? போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு அங்கே ஆட்சியாளர்கள் எவரிடமும் பதில் இல்லை.

மாநில அரசு அங்குப் பெருநிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதிலும், அரசியல் விளம்பரங்களில் கோடிக்கணக்கில் செலவு செய்வதிலும் காட்டும் ஆர்வத்தை, சாமானிய மக்களின் உயிர் காக்கும் சுகாதாரக் கட்டமைப்பில் காட்டவில்லை என்பது பெரும் கவலையளிக்கிறது. பகீரத்புரா போன்ற நெரிசலான பகுதிகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். அவர்களின் வாக்குகள் மட்டுமே தேவைப்படும் ஆட்சியாளர்களுக்கு, அவர்களின் வாழ்க்கை ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

ஒன்றிய பா... அரசுஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission) மூலம் நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதாக மார் தட்டிக்கொள்கிறது. ஆனால், குழாய்கள் வழியாக வருவது குடிநீரா? அல்லது விஷமா? என்பதை உறுதிசெய்யும் தணிக்கை முறைகள் எங்கே போயின? ‘ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின்கீழ் பெரிய சாலைகளையும் மின்விளக்குகளையும் அமைப்பதில் காட்டும் வேகம், பூமிக்கடியில் இருக்கும் கழிவுநீர் மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகச் சீரமைப்பில் காட்டப்படுவதில்லை.

ஒன்றிய பா... அரசின் திட்டங்கள் பெரும்பாலும் புள்ளி விவரங்களை நோக்கி இருக்கின்றனவே தவிர, மக்களின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதில் தோல்வியடைந்துள்ளன. இந்தூர் போன்ற ஒரு நகரத்திலேயே இத்தகைய நிலை என்றால், இந்தியாவின் பின்தங்கிய கிராமப்புறங்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

மாநில அரசு, அங்கே பழைய நீர்க்குழாய்களை மாற்றாமல், புதிய இணைப்புகளை மட்டும் வழங்கிக் கொண்டே சென்றதும், குடிநீர் மாதிரிகளைத் தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டிய மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறியுள்ளதும், மக்கள் புகார் அளித்தும், அதன் தீவிரத்தை உணராமல் கோப்புகளை நகர்த்திக் கொண்டிருந்த அதிகாரத்துவமுமே இந்த உயிரிழப்புகளுக்கு நேரடிப் பொறுப்பு என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மாநில அரசின் ஒட்டுமொத்த மெத்தனப்போக்கையே படம்பிடித்துக்காட்டுகிறது.

அண்மைக்காலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும்ஸ்மார்ட் சிட்டி-களுக்குப் பஞ்சமில்லை. எங்குப் பார்த்தாலும்ஸ்மார்ட் சிட்டிபற்றிய அறிவிப்புகளும் விளம்பரங்களும் ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. ‘ஸ்மார்ட் சிட்டிஎனும் திட்டத்தின் அடிப்படை நோக்கமே குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான். ஆனால், இந்தூர் நிகழ்வு இங்குஸ்மார்ட்என்பது வெறும் டிஜிட்டல் திரைகளிலும், பளபளப்பான கட்டடங்களிலும் மட்டுமே முடிகிறது என்பதையே உணர்த்துகின்றன. நிலத்தடியில் புதைந்துகிடக்கும் சிதைந்த குழாய்களும், அவற்றிலிருந்து கசியும் கழிவுநீரும்ஸ்மார்ட்பட்டியலில் ஒருபோதும் சேர்க்கப்படப் போவதில்லை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒன்றிய பா... அரசு முன்வைக்கும் வளர்ச்சி மாடல் என்பது மேல்தட்டு மக்களுக்கானது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி குறிப்பிடுகையில், “இந்தூரில் வீடுகளுக்கு வழங்கப்பட்டது குடிநீர் அல்ல; மாறாக, அது நஞ்சு. நிர்வாகத்தின் ஆழ்ந்த தூக்கமே இதற்குக் காரணம்; ஒவ்வொரு குடும்பமும் துக்கத்தில் வாடும் சூழலில் பா... தலைவர்களோ ஆணவத்துடன் பேசுகின்றனர்என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “ஜல் ஜீவன், தூய்மை இந்தியா திட்டங்கள் குறித்து பெருமை பேசும் பிரதமர் மோடி, இந்தூர் உயிரிழப்புகள் குறித்து அமைதி காப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியதுடன், “மக்களுக்குத் தேவையான தூய்மையான குடிநீரையோ, தூய்மையான காற்றையே ஒன்றிய பா.. அரசால் மக்களுக்கு வழங்க முடியவில்லைஎன்று வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளார். ஆகவே, அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்யத் தவறும் எந்த ஓர் அரசும் தன்னைவளர்ந்த அரசுஎன்று அழைத்துக்கொள்ளத் தகுதியற்றது என்பதை குறைந்தபட்சம் தேர்தல் காலங்களிலாவது குடிமக்கள் நாம் உணர்ந்தாக வேண்டும்.

மானுட மாண்பிற்கு எதிரான இத்தகைய கொடிய நிகழ்வுகள் அரங்கேறும்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சில இலட்சங்களை நிவாரணமாக அறிவிப்பதோடு அரசு தன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது. ஆனால், உயிரிழந்த மனித உயிர்களுக்கு ஈடு ஏது? தவறு செய்த அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெறும் பணியிட மாற்றம் அல்லது தற்காலிகப் பணி நீக்கம் என்பது தீர்வாகாது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதற்காக அவர்கள்மீது கொலைக்குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

இறுதியாக, நிர்வாகம் தூங்கிக் கொண்டிருந்தால், மக்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் உயிரைக் கொடுத்துதான் அந்தத் தூக்கத்தைக் கலைக்க வேண்டுமா? எனும் கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது. மத்தியபிரதேசத்தின் இந்தூர் துயரம் ஓர் எச்சரிக்கை மணி என்பதனை நாம் உணர்ந்திடவேண்டும்; ஒன்றிய  மற்றும் மாநில அரசுகள் வெற்று விளம்பரங்களைத் தள்ளி வைத்துவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்தவேண்டும்.

நமது அரசு, ஐயன் வள்ளுவர் சுட்டிக்காட்டியமக்கள் நல அரசாகமாறவேண்டும்; அதுவும் சாமானிய மக்களுக்கான அரசாக மலரவேண்டும்அதாவது, குடிமக்களை அரவணைத்து, அவர்களின் நல்வாழ்விற்காகச் செயல்பட்டு, அறவழியில் செங்கோல் செலுத்தி, நாட்டை வளம்பெறச் செய்து குடிமக்களின் மகிழ்ச்சியையும், நாட்டின் செழிப்பையும் குறிக்கோளாகக் கொண்ட, அறநெறி சார்ந்த, பொறுப்புள்ள அரசாக இருக்கவேண்டும். இதனையே வள்ளுவர்,

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு (குறள் 544)

என்று குறிப்பிட்டுள்ளார்

இறுதியாக, ‘அனைவருக்கும் குடிநீர்என்பது வெறும் தேர்தல் வாக்குறுதியாக மட்டும் இல்லாமல், மக்களின் அடிப்படை உரிமையாக, உடைமையாக மாறவேண்டும். இல்லையெனில், நிர்வாகத்தின் இந்த ஆழ்ந்த உறக்கம், இந்திய சனநாயகத்தின் எதிர்காலத்தையே பெரும் துக்கத்திற்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆட்சியாளர்கள் தங்கள்வளர்ச்சிமுழக்கங்களை நிறுத்திவிட்டு, மக்களின் மரண ஓலங்களுக்குச் செவிசாய்க்கவேண்டிய தருணம் இது.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்