news-details
ஞாயிறு மறையுரை
பிப்ரவரி 08, 2026, ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு எசா 58:7-10; 1கொரி 2:1-5; மத் 5:13-16 (உலகிற்கு உப்பாகவும்... வாழ்விற்கு விளக்காகவும்...)

சுவை இல்லாத உணவு குப்பையிலே... ஒளி இல்லாத வீடு இருளிலே...! ஒரு சிறு துளி உப்பு ஒரு பானை உணவின் சுவையையே மாற்றுகிறது. ஒரு சின்னஞ்சிறு மெழுகுவர்த்தி ஒரு பெரிய அறையின் இருளையே விரட்டுகிறது. இவை இரண்டிற்கும் ஒரு பொதுவான குணம் உண்டு. இவை இரண்டும் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்றால், தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளவேண்டும். உப்பு உணவோடு கரைந்து தன்னை இழக்கவேண்டும்; மெழுகுவர்த்தி நெருப்போடு உருகித் தன்னைத் தேய்த்துக்கொள்ளவேண்டும். தன் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ளும் உப்பு குப்பையில் எறியப்படும்; எரியாத மெழுகுவர்த்தி இருளில் புதைக்கப்படும்.

ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் இயேசு, “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் (மத் 5:13-14) என்ற உருவகங்கள் வழியே ஒவ்வொரு நாள் வாழ்விலும் பயன்படுத்தப்படும் இரு பொருள்களை அவர் நம்முடன் ஒப்புமைப்படுத்துகிறார். இயேசு கூறிய இவ்விரு உருவகங்களில் பொதிந்திருக்கும் உண்மைகளைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

இயேசு மலைப்பொழிவின் வழியாக நமக்கு வழங்கும் இந்த அழைப்பு, வெறும் அறிவுரை அல்ல; அது ஒரு சீடத்துவத்தின் அடையாளம். இயேசுவின் வார்த்தைகளைக் கூர்மைப்படுத்தி நோக்கும்போது, அவர் உப்பாக, ஒளியாக இருக்க முயலுங்கள் என்றோ அல்லது உப்பைப்போல, ஒளியைப்போல இருக்கிறீர்கள் என்றோ கூறவில்லை. அவர், உப்பாக, ஒளியாக இருக்கிறீர்கள் என்கிறார். அதாவது, ஒரு கிறித்தவர் இயல்பிலேயே இந்தத் தன்மைகளைக் கொண்டிருக்கிறார் என்கிறார் இயேசு.

உப்பின் தன்மையை திருவிவிலியக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, உப்பு மதிப்புமிக்க ஒன்றாகக் கருதப்பட்டது. இது வெறும் சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை; மாறாக, உணவுகளைப் பதப்படுத்தவும் பாதுகாக்கவும் இந்த உப்பு பயன்படுத்தப்பட்டது. எலிசா இறைவாக்கினர் உப்பைக்கொண்டே உதவாத நீரை நல்ல நீராக்கினார் (2அர 2:19-22). உப்பு ஒரு மாறாத உடன்படிக்கையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது (எண் 18:19). “நீ செலுத்தும் மாவுப்பலி ஒவ்வொன்றிலும் உப்பு சேர்க்கவேண்டும்  (லேவி 2:13). அதாவது, உப்புக் கலந்து உண்ணுவது பிரிக்க முடியாத நட்பையும் முடிவுறா உறவையும் குறித்தது. ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை (வாழ்நாள் முழுவதும்) என்னும் வழக்காட்டுப் பழமொழி நம் வாழ்விற்குச் சுவை சேர்த்த இறைவனையும், நமக்கு உதவிய மனிதர்களையும் நன்றியோடு நினைக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. புதிய ஏற்பாட்டில் உப்பை அழகான உருவகமாகவே காட்டும் இயேசு, தம் சீடர்களைஉலகின் உப்பாக இருக்கிறீர்கள் (மாற்கு 9,50: லூக்கா 14,34) என்கிறார். தூய பவுல் கிறித்தவர்களின் பேச்சு எப்போதும் கனிவாகவும் உப்புச் சேர்த்தது போலச் சுவையாகவும் இருக்கக் கேட்கிறார் (கொலோ 4:6).

ஒளி என்பது திருவிவிலியத்தில் இறைவனின் முன்னிலையையும் உண்மையையும் குறிக்கும் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது. திருவிவிலியம் ஒளியை உயிரின் அடையாளமாகக் காட்டுகிறது (யோபு 3:16; திபா 49:19). ஒளியில் நடத்தல் மற்றும் ஒளியில் வாழ்தல் போன்றவை நேர்மையான வாழ்வையும், கடவுளுடனான வாழ்வையும் குறிக்கின்றன. ஒளி வளமையையும், அத்தோடு மகிழ்ச்சியான வாழ்வையும் குறித்தது (எஸ் 8:16). திருப்பாடல் ஆசிரியர் ஒளியைப் பல இறையியல் விழுமியங்களுக்கு ஒப்பிடுகிறார். ‘இறைவார்த்தையே விளக்கு (திபா 119:105); ‘ஆண்டவரே ஒளி (திபா 27:1). முதல் ஏற்பாட்டில் ஒளி கடவுளின் இறைமகிமையையும் மாட்சியையும் காட்டவும் அடையாளப்படுத்தப்பட்டது. முதல் ஏற்பாட்டைப் போலவே இரண்டாம் ஏற்பாட்டிலும் ஒளி பல அடையாளங்களைத் தாங்கி நிற்கிறது. இயேசு தம்முடைய சீடர்களை ஒளியின் மக்களாக இருக்கிறீர்கள் என்கிறார். “நானே உலகிற்கு ஒளி; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார் (யோவா 8:12) எனக் கூறி சாட்சிய வாழ்வுக்கு அழைக்கிறார். பவுலும், “ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள் (எபே 5:8) எனக் கூறுகிறார்.

சமூகத்தில் உப்பாகவும் ஒளியாகவும் இருப்பவர்களின் சாட்சிய வாழ்வு எவ்வாறு இருக்கும் என்பதை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகம் நமக்கு நயம்பட எடுத்துரைக்கிறது. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா நான்கு மிக முக்கியமான மனிதநேயச் செயல்களைப் பட்டியலிடுகிறார். அவை: 1. பசித்தோருக்கு உணவைப் பகிர்தல், 2. தங்க இடமில்லாத வறியோருக்கு இல்லத்தில் இடம் தருதல், 3. உடையற்றோருக்கு உடையளித்தல், 4. இனத்தாருக்கு உதவிசெய்தல் (எசா 58:7). கடவுளுடைய பார்வையில் இவை ஏன் முக்கியத் வம் பெறுகின்றன?

முதலில், உண்ணாநோன்பு என்பது ஓர் ஆன்மிகப் புதுப்பித்தலுக்கான ஒரு நிகழ்வு. இச்செயல் சாதாரண இறைவேண்டலுக்கு வலுசேர்க்கும் ஒன்றாகவே இஸ்ரயேல் மக்கள் பார்த்தனர் (2சாமு 12:22; எஸ் 8:23; யோவே 2:12; லூக் 2:37). ஆனால், கடவுளின் பார்வையில் உண்ணாநோன்பு என்பது தவிர்க்கப்படும் உணவைப் பசிப்போருக்குக் கொடுப்பதில் நிறைவுபெறுகிறது. இரண்டாவது, தங்க இடமில்லாத வறியோருக்கு இல்லத்தில் இடம் தருதல் என்பது சகோதரத்துவத்தைப் பேணுகின்ற ஒரு முக்கியச் செயல். யூதா நாட்டின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாபிலோனிய இடப்பெயர்விற்குப் பிறகு (யூதாவின் 70 ஆண்டுகால அடிமைத்தனத்திற்குப் பிறகு) வறியவர்கள் மேலும் வறியவர்கள் ஆகினர். பணக்காரர்கள் தங்கள் நிலங்களைப் பெரிதாக்கிய அதேவேளை, ஏழைகள் வீடு நிலமற்றவர்களாயினர். இப்பின்னணியில், வீடற்றவர்களுக்கு வீட்டில் இடம் கொடுத்தல் ஒரு புண்ணியமாகப் பார்க்கப்பட்டது. அதுமட்டுமன்றி, இச்செயலைச் செய்வதன் வழியாக அவர்கள் வீடற்றவர்களுக்கும் தந்தையாக இருக்கும் கடவுளின் உண்மையான மக்களாகின்றனர்.

மூன்றாவது, உடை என்பது வெறும் ஆடை மட்டுமல்ல, அது ஆளையும் குறித்துக் காட்டுகிறது. ஆகவேதான் நம் முன்னவர்கள்ஆள் பாதி, ஆடை பாதிஎன்றனர். உடையற்று இருப்பவர் அனைத்தையும் இழந்தவராகிறார். அவர் அடிமை என்றே கருதப்படுவார். உடையைக்கொண்டே ஒருவரின் நிலைமை கணிக்கப்படுகின்றது. இங்ஙனம், உடையற்றவருக்கு உடையளிப்பது, அவருக்கு மனிதத்தைக் கொடுப்பது போன்றதாகிறது. நான்காவது, இனத்தாருக்கு உதவிசெய்ய மறுப்பது என்பது தன் அடையாளத்தையே மறைத்தலும் சகோதர வெறுப்பைக் காட்டலும் ஆகும். எனவேதான்உன் இனம்என்பது எபிரேயப் பாடத்தில்உன் சதைஎன்று குறிப்பிடப்படுகிறது. எனவே, உதவி செய்யாதிருப்பது ஒரு பாவம் என்றாகிறது. மேற்குறிப்பிட்ட மனித நேயச் செயல்களைச் செய்பவர்கள் என்னென்ன நன்மைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்?

கடவுளின் பிரசன்னத்தைக் காட்டும் மிக முக்கியமான அடையாளமான ஒளிபோல அவர்கள் இந்தச் சமூகத்தில் துலங்குவர்; அவர்களுக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். நேர்மை ஒரு வானதூதர் போல், நல்லவர்களின் முன்னால் சென்று காக்கும். அதாவது, ஒருவருக்கு முன் நேர்மை செல்லும்போது அவர் தீமை மற்றும் ஆபத்துகளைத் தவிர்ப்பார். ஆண்டவருடைய வல்லமை அவர்களுக்குப் பின்னால் காவல்தூதர் போல் செல்லும் என்கிறார் இறைவாக்கினர் எசாயா. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலும், சமூகத்தில் உப்பாக, ஒளியாக இருப்பது என்பது, மனித அறிவினாலோ, வல்லமையினாலோ அல்ல; மாறாக, ‘சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியால்என்கிறார். எவரொருவர் தன்னுடைய கற்றல் மற்றும் உலக மெய்யறிவுகள் அனைத்தையும்குப்பையாககருதுகிறாரோ, அவரிடத்தில்தான் ஞானத்தின் உறைவிடமாகிய தூய ஆவியார் குடிகொள்கிறார் என்கிறார்.

நிறைவாக, இன்று நாம் வாழும் உலகம் இரண்டு பெரும் சவால்களைச் சந்திக்கிறது: 1. சுவையற்ற வாழ்வு, 2. இருள் சூழ்ந்த உலகு. இன்று மனித நேயம் மறைந்து, சுயநலமே மேலோங்கி நிற்கிறது. அநீதி, சாதி-மத வன்முறை, வெறுப்பு இச்சமூகத்தை இருளாக்குகின்றன. இத்தகைய சூழலில் நாம் எப்படி உப்பாகவும் ஒளியாகவும் மாறுவது? ) கிறித்தவர்கள் கோவிலுக்குள் மட்டும் இருப்பவர்கள் அல்லர்; எசாயா கூறுவதுபோல, வீடற்றவரைத் தேடிச்சென்று அணைப்பதிலும், பசித்திருப்பவனுக்கு உணவிடுவதிலும்தான் நம் நம்பிக்கை சுவை பெறுகிறது. ) பவுல் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே தன் ஒளியாகக் கொண்டதுபோல, நம்முடைய துன்பங்களையும் தியாகங்களையும் மற்றவர்களுக்காகப் பலியாக்கும்போது நாமும் ஒளியாகிறோம். ) “மலையின் மேல் இருக்கும் நகரை மறைக்க முடியாது.” நம்முடைய கத்தோலிக்க வாழ்வு ஒரு சாட்சிய வாழ்வாக இருக்கவேண்டும். நாம் செய்யும் நற் செயல்கள் நம்மைப் பெருமைப்படுத்த அல்ல; மாறாக, கடவுளைப் புகழவேண்டும்.

காயப்பட்டிருக்கும் உலகை நலம்பெறச் செய்யும் உப்பாய் மாறுவோம்... வெறுப்பென்ற இருளில் மூழ்கியிருப்போருக்கு ஒளியாய் மிளிர்வோம்... கிறிஸ்துவின் சாட்சிகளாய் உலகை மாற்றுவோம்.