news-details
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு (08-02-2026) எசா 58:7-10; 1கொரி 2:1-5; மத் 5:13-16

திருப்பலி முன்னுரை

உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ பொதுக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. உப்பும் ஒளியும் மற்றவருக்குப் பயன்தரும் பொருளாக இருக்கின்றன. உப்பு சுவை தருவது மட்டுமல்ல; மாறாக, பொருள்கள் கெடாமல் பாதுகாக்கும் சக்தியையும் கொண்டது. மற்றவர்கள் வாழ்வுபெற தன்னையே முழுமையாக இழக்கிறது. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலேஎன்கிறது பழமொழிஉப்பு உவர்ப்பற்றுப் போனால், அது வீணாகிவிடும். அதுபோலவே நமது ஆன்மிக வாழ்க்கையும் ஆழம் காணாவிட்டால் வாழ்க்கையும் உவர்ப்பற்றதாகிவிடும்நம்மைப் பார்த்து இயேசு, ‘நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள்என்கிறார். ஒளி இருளை அகற்றும்; ஒளி வழியைக் காட்டும்; ஒளி இறைவனின் அடையாளம். ஒளியைப் போன்று நமது அன்புச் செயல்களால் இயேசுவைப் பிரதிபலிக்க முயற்சியெடுப்போம். உப்பைப் போன்றும் ஒளியைப்போன்றும் நமக்காக வாழாமல், பிறரின் நன்மைக்காக வாழ்வோம். நமது உடனிருப்பாலும் மென்மையான அணுகுமுறையாலும் மேன்மையான வார்த்தைகளாலும் அனைவருடைய வாழ்க்கையிலும் ஒளியேற்றுவோம். நமது பெயருக்காகவும் புகழுக்காகவும் விளம்பரத்திற்காகவும் எந்தச் செயலையும் செய்யாமல், இறைவனின் அதிமிக மகிமைக்காகச் செய்வோம். இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையில் சுயநலம் களைந்து, உடன்வாழும் சகோதர-சகோதரிகளை உளமார நேசித்து, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்பிக்கையின் தீபங்களாய் ஒளிர்ந்திடவும், இறைவனைச் சார்ந்து சாரமுள்ள வாழ்வு வாழவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.  

முதல் வாசகம் முன்னுரை

கடவுள் விரும்பும் நோன்பு என்பது உணவு உண்ணாமல் இருப்பது அல்ல; மாறாக, பசித்தோருக்கு உணவிடுவதும், ஆடை இல்லாதவருக்கு ஆடை அணிவிப்பதும், வறுமையில் இருப்போருக்கு உறைவிடம் கொடுப்பதும், தேவையில் இருப்போரைத் தேடிச் சென்று உதவுவதுமே உண்மையான நோன்பு. இவ்வாறு செய்யும்போது, ஆண்டவரின் மாட்சியை நாம் காண்போம் என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்று உலகத்தைப் பற்றியும், விஞ்ஞானத்தைப் பற்றியும், அறிவியல், பொருளாதாரம் பற்றியும் அறிந்துள்ளோம். ஆனால், மெஞ்ஞானமாகிய கடவுளைப் பற்றிய அறிவில் பின்தங்கியுள்ளோம். தூய ஆவியின் வல்லமையையும் இறைஞானத்தையும் பெற்று, கிறிஸ்து இயேசுவை அறிவதிலும் அன்புசெய்வதிலும் முனைப்போடு செயல்பட்டு, இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘உலகின் ஒளி நானேஎன்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ்ந்து, நற்செய்தியை அறிவிக்கத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! உலகத் தலைவர்களும், நாட்டுத் தலைவர்களும் அன்பையும் அமைதியையும் இவ்வுலகில் கட்டியெழுப்பவும், மக்கள் என்ற சொத்தைப் பேணிகாக்கவும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வழியும் ஒளியுமான ஆண்டவரே! இந்த ஆண்டு அரசுப் பொதுத்தேர்வினை எழுதவிருக்கும் மாணவ-மாணவிகளை ஆசிர்வதியும். ஞானத்தோடு தேர்வு எழுதவும், கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றிபெற்று வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளான ஆண்டவரே! எம் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் உண்மையான அன்பும் உறவும் மலர்ந்திடவும், நற்சுகம் கிடைத்திடவும், ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் தூதுவர்களாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.