news-details
கவிதை
இலக்கியத் தமிழே வணக்கம்!

எழுத்துகளின் அழுத்தங்களினால்

செழித்து நிற்பவை செந்தமிழ் இலக்கியம்- தமிழன்னை

கழுத்து மாலைப் பொன்னின் மணிகளாய் 

கறுத்துப் போகாது மிளிர்பவை இலக்கியம்!

பழுத்த பண்பாடு, வரலாறு, கலாச்சாரம்

அனைத்து நிலைகளை விளக்கிடும் இலக்கியம்!

ஒழித்துப் போட ஒருபகை வரினும்

உயிர்த்தே நிற்பவை நம் தமிழ் இலக்கியம்!

               

வாழ்க்கையின் பல்வேறு கூறுகளனைத்தையும்

வழுவாது வடித்து அளிப்பவை இலக்கியம்!

வாழ்வாங்கு வாழ்ந்தோர் பெருமையால் நமக்கு

வழிகாட்ட எழுதப் பட்டவை இலக்கியம்!

வீழ்வேது நம் தாய்மொழிக்கென்றே

வீரமுடன் மார்தட்டிச் சொல்வது இலக்கியம்!

வீரமும் காதலும் விளைந்த வரலாற்றை

வெளிச்சமிட்டுக் காட்டிடும் இலக்கியம்!   

 

முன்னோர்கள் வாழ்ந்த வரலாறு அறியலாம்-அவர்

முழுமூச்சாய் உயர்ந்த பின்னணி அறியலாம்

நடையுடை பாவனை நாகரிகம் அறியலாம்

நல்மனத்தோரவர் நற்குணம் அறியலாம்

அன்னார் பெற்ற அதிசயங்கள் அறியலாம்

ஆற்றலோ டவற்றில் மீண்டதை அறியலாம்

எந்நாளும் நம் தாய்த் தமிழ் மண்ணுக்கு

எப்படிப் புகழ் சேர்ந்ததென அறியலாம்

     

சங்க இலக்கியமும் நீதி இலக்கியமும்

பழங்கால இலக்கியப் பெருமையைக் கூட்டும்

பக்தி காப்பியம் உரைநடை புராணம்

தல புராணம் மற்றும் இசுலாமிய இலக்கியம்  

இடைக்கால இலக்கியப் பட்டியல் காட்டும்

கிறித்தவ இலக்கியம் புதினம் கட்டுரை

சிறுகதை புதுக்கவிதைகளோடு

ஆராய்ச்சிக் கட்டுரைகள் இக்கால ஏற்றம்!

 

எழுத்துகளெல்லாம் தொகுக்கப்பட்டு

எழுத்துக் கலையால் இலக்கியமாயிற்று

எடுத்துப் படிக்கும் நூல்களுக்குள்ளே

இழந்திடும் மனத்தினால் இரசனை கூடிற்று

அலுத்துப்போன தொலைக்காட்சித் தொடர்களால்

அன்றாட மணித்துளிகள் வீணாய்ப் போயிற்று    

அறிவும் ஆன்மிகமும் வளர்த்த நூல்களே

ஆன்றோர்கள் தோன்ற அடித்தளமாயிற்று!