news-details
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (01-03-2026) தொநூ 12:1-4; 2திமொ 1:8-10; மத் 17:1-9

திருப்பலி முன்னுரை

இறையாட்சியைக் கட்டியெழுப்பி, கடவுளை மாட்சிப்படுத்த தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. தோற்ற மாற்ற நிகழ்வு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பணிவாழ்வின் ஒரு திருப்புமுனை நிகழ்வாகும். தாம் இறைமகனாய் இருந்தபோதும் துன்பங்களை அனுபவித்துத்தான் மீட்பை அளிக்கவேண்டும் என்பதை அவர்தம் உருமாற்றத்தின் வழியாகக் கற்பிக்கிறார்.

தோற்ற மாற்ற நிகழ்வு இயேசுவின் சீடர்களைச் சிலுவை நிகழ்வுக்குத் தயார்செய்து, உயிர்ப்பின் மாட்சியை முன்கூட்டியே உணரவைக்கிறது. சிலுவைக்குப் பின் நிச்சயம் மாட்சி உள்ளது என்ற நம்பிக்கையை ஊட்டி, துன்பத்தை எதிர்கொள்ளப் பக்குவப்படுத்துகிறது. இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்ட நாமும் துன்பங்களில் துவண்டு போகாமல் இறைவனுக்குச் சான்றுபகர்வோம்.

விஞ்ஞானத்தை மட்டும் நம்பி, மெய்ஞானமாகிய கடவுளின் குரலுக்குச் செவிகொடுக்காமல் மனிதத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் விதைத்து, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை எவருக்கும் அஞ்சாமல் துணிவுடன் வாழ்க்கையால் எடுத்துச்சொல்வோம். அப்போது கடவுள் நம்மைப் பார்த்து, “இவரே என் அன்பார்ந்த மகன் (மகள்)” என்று சொல்லி பூரிப்படைவார். நற்செயல்கள் வழியாக நல்லவராம் இயேசுவை அறிவித்து, ஆண்டவரின் ஆசிபெற்ற மக்களாக வாழ்ந்திட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆபிரகாம் கடவுளின் அழைப்பை ஏற்று, தன் சொந்த நாடு மற்றும் குடும்பம் அனைத்தையும் துறந்து ஆண்டவர் பணித்தவாறு செல்கிறார். ஆண்டவர் அவருக்கு ஏராளமான ஆசிகளை வழங்குகிறார். ஆபிரகாமைப்போல நாமும் இறைவனின் கட்டளைகளை ஏற்று மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும்போது இறைவனின் ஆசியால் நிரப்பப்படுவோம் எனக் கூறும் இன்றைய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்து வழியாகக் கடவுள் நம்மை மீட்டுள்ளார். சாவை அழித்து நிலை வாழ்வை வழங்கியுள்ளார். இயேசுவின் இரத்தத்தால் வாழ்வைப் பெற்றுக்கொண்ட நாம் அனைவரும், நமது சொற்களாலும் செயல்களாலும் நற்செய்தியை அறிவிக்கவும், துன்பங்களின் மத்தியிலும் துணிவுடன் இறையாட்சியைக் கட்டியெழுப்பவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நம்பிக்கையின் ஆண்டவரே! உலகெங்கும் நற்செய்தியின் பொருட்டு துன்பங்களையும் இழப்புகளையும் எதிர்கொள்ளும் திரு அவையின் பணியாளர்கள் அனைவரும் துன்பத்தால் துவண்டுபோகாமல், உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ தேவையான அருள்வரங்களைத் தந்து  காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உடன்வாழும் ஆண்டவரே! நீர் வாக்களித்த நாட்டையும் வாழ்வையும் அடைவதற்கு ஆபிரகாம் கொண்டிருந்த பொறுமையையும் நம்பிக்கையையும் நாங்களும் பின் பற்றி, வாழ்வில் மாற்றத்தை நோக்கி நம்பிக்கையோடு பயணிக்கவும், தளராத சாட்சிய வாழ்வு வாழவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாதுகாக்கும் ஆண்டவரே! அரசுப் பொதுத்தேர்வினை எழுதவிருக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவியர் ஆர்வத்தோடு படித்து, ஞானத்தோடு தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி அடையவும், எதிர்காலம் சிறப்பானதாக அமைந்திடவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உடன் பயணிக்கும் ஆண்டவரே! தவக் காலத்தில் உம்மோடு பயணிக்கும் நாங்கள் அனைவரும் எங்களுடன் வாழும் சகோதர-சகோதரிகளின் துன்பத்தில் துணையாக இருந்து, மற்றவர்களின் மனக்காயத்திற்கு மருந்திடத் தேவையான நல்மனத்தை எங்கள் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.