திருமணம், புதுநன்மை, காதணி விழா, புதுமனைப் புகுவிழா, நீராட்டு விழா என்று பல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் நமக்குக் கொடுக்கப்படும். நாம் அழைப்பிதழைப் பெற்றவுடன் அந்த நிகழ்ச்சிகளுக்குப் போகலாமா? அல்லது வேண்டாமா? என்ற குழப்பம் இரண்டு விதங்களில் தோன்றலாம்.
முதலாவது,
‘அழைப்பிதழ் கொடுத்தவர் நெருங்கிய நபர், என் வீட்டு விருந்துக்கு வந்தவர், நான் வேலை பார்க்கும் இடத்திலிருக்கும் உயர் அதிகாரி, நான் இந்த நிகழ்விற்குப் போனால்தான் அவர் என் வீட்டு நிகழ்விற்கு வருவார்’ என்ற பல காரணங்கள் நம்
மனத்தில் தோன்றும். மேற்கண்ட காரணங்களுக்கு ஏற்றபடி நாம் அந்த அழைப்பிற்குப் பதில் கொடுப்போம்.
இரண்டாவது,
‘அழைப்பிதழ் கொடுத்தவர் என் மாமனா? மச்சானா? என் வீட்டு நிகழ்விற்கு அவன் வரவில்லை, நான் ஏன் போகவேண்டும்? கொடுத்தவர் எனக்குக் கீழே வேலை செய்பவர், அதற்கு நான் போவதா? அவருக்கு ஏதாவது செய்தால் அவர் திருப்பியே தரமாட்டார்; அதனால் நான் போக மாட்டேன்’
என்ற காரணங்களும் தோன்றும்.
முதலாவது
மற்றும் இரண்டாவது காரணங்களும் அழைப்பிதழ்களும் நம் வாழ்வில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மேற்கண்ட அழைப்புகள் ஒரு வரையறைக்குட்பட்டு, உறவிற்காக மற்றும் சமூகத்திற்காக ஏற்படுத்தப்படும் அழைப்பாகும். உண்மையான அழைப்பு மூன்று விதங்களில் நடைபெறுகிறது.
அழைப்பு
ஒவ்வொரு
குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்கும்போது கடவுள் இந்த உலகத்தை இன்னும் அன்பு செய்கிறார் என்ற கருத்தைச் சொல்கிறது என்று இரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார். பிறப்பு என்பது கடவுள் கொடுக்கும் ஒரு கொடையாகும். மில்லியன் கணக்கில் இருக்கும் கருமுட்டைகளில் ஒரு கருமுட்டையும் ஒரு விந்தும் சேர்ந்து ஓர் உயிரை இந்த உலகிற்குக் கொடுக்கிறது. ஒரு கருமுட்டையும், ஒரு விந்தும் கடவுளின் விருப்பமின்றி நடைபெறுவதில்லை. எனவேதான் “தாய் வயிற்றில் உருவாகும் முன்பே அறிந்திருந்தேன்” (எரே
1:5) என்ற கடவுளின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது. இந்த அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் தாய் வயிற்றிலே கொடுக்கப்படும் முதல்
அழைப்பாகும்.
அழைப்புக்குள்
அழைப்பு
பிறப்பு
ஒரு கொடை. அந்தக் கொடை கடவுள் நமக்குக் கொடுத்த ஓர் அழைப்பு. அந்த அழைப்பின் அடிப்படையில் நாம் இந்த உலகத்தில் வாழ்கின்றோம். ஆனால், இந்த உலகத்தில் பிறப்பு ஓர் அழைப்பு என்று தன் குடும்பத்துடன் அல்லது உறவினர்களுடன் வாழ்ந்தவர்களின் வாழ்வில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகின்றன.
நமது
நாட்டின் காந்தியடிகள் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப வழக்கறிஞர் படிப்பைப் படித்தார். தனது படிப்பின் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி வாழும் போது, தனது வாழ்விற்கான அழைப்பு இதுவல்ல என்று உணர்ந்தார். அவர் தனது வாழ்வையே அகிம்சை வழியில் நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தர வேண்டுமென்று மாற்றுகிறார்.
புனிதை
அன்னை தெரேசா அவர்கள் இலொரோட்டா என்ற சபையில் சேர்ந்து பணிபுரியும்போது தனது வாழ்வின் அழைப்பு இதுவல்ல என்று உணர்ந்தார். பின்பு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதே தனது அழைப்பு என்று உணர்ந்து பொருளுள்ள வாழ்வு வாழ்கிறார்.
தமிழ்நாட்டில்
பிறந்த வள்ளலார், அண்ணனின் அரவணைப்பில் குடும்ப உறுப்பினராக வாழ்கிறார்; திருமணமும் செய்கிறார். ஆனால், தனது வாழ்வின் அழைப்பு இதுவல்ல என்று உணர்ந்தார். பின்பு சத்திய சுத்த சன்மார்க்க சங்கம் ஒன்றை ஏற்படுத்துகிறார். ‘பசி’ என்ற மொழியே அனைவருக்கும் பொதுவாக இருக்கிறது என்பதை உணர்ந்தவராய் அனைவரின் பசியைப் போக்க வேண்டுமென்று உழைக்கிறார்.
இயேசு, தூய
ஆவியால் கருவுற்று முதல் அழைப்பைப் பெற்று முப்பது ஆண்டுகள் தம் குடும்பத்துடனும் உறவினருடனும் வாழ்ந்தார். பின்பு இந்த வாழ்வின் அழைப்பு இதையும் கடந்தது என்பதைத் திருமுழுக்கு அனுபவத்தில் உணர்கிறார். அதன்பின் தம் வாழ்வு “ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை
விடுதலை செய்து அனுப்பவும்” (லூக்
4:18) என்பதை உணர்ந்து அதற்காக வாழ்கிறார்.
மேற்கண்ட
நபர்கள் போன்று நாமும் இந்த உலகத்தில் பிறப்பு என்னும் கொடையைப் பெற்று முதல் அழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நாமும் ‘இந்தச் சமூகத்திற்கான எனது தனிப்பட்ட
அழைப்பு என்ன?’ என்பதை உணர வேண்டும். இந்த இரண்டாவது அழைப்பு என்பது நேரிடையாகக் கடவுளிடமிருந்து வருமென்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஒவ்வொருவரையும் இயற்கையையும் மதித்து மாண்புடன் வாழும்போது நமக்கு வெளிப்படுத்தப்படும். அந்த வெளிப்பாட்டிற்கான அழைப்பிற்கு நாம் ஒவ்வொருவரும் எப்போதும் கவனமுடன் விழிப்பாயிருந்து செயல்படவேண்டும். அப்படி வாழும்போது ஒவ்வொருவரும் அந்த ‘அழைப்பிற்குள் அழைப்பை’ உணரமுடியும். இதைத்தான் திருவள்ளுவர்
‘உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது
போலும் பிறப்பு’
(குறள் 339)
என்கிறார்.
ஒவ்வொரு நாளும் எத்தனையோ உயிர்கள் பிறக்கின்றன, எத்தனையோ உயிர்கள் இறக்கின்றன! ஆனால், அவற்றில் ஒருசில உயிர்கள் மட்டுமே மற்ற எல்லாருக்கும் பயனுள்ள அழைப்பை உணர்ந்து பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து இறக்கின்றன. அதுவே வாழ்க்கை.
நிலையில்லா அழைப்பு
என்னுடைய
பணித்தளத்தில் 47 வயதுடைய நபர் திடீரென இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்பு என்னுடன் அவரது வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றி உரையாடினார். அந்த அனுபவத்திலிருந்துதான் இந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கினேன். அவர் தனது குடும்பத்தை சென்னையில் குடியமர்த்திவிட்டு டெல்லியில் வேலை பார்த்தார். ‘ஒத்தாரும், உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்’
என்ற வரியின் அர்த்தத்தை உணர்ந்தார். தன் வாழ்வு என்ற கொடையின் அழைப்பில் பொருளுள்ள வாழ்வு வாழ வேண்டுமென்று முடிவு செய்தார். அதனால் தனது குடும்பத்துடன் சேர்ந்து சென்னையிலே வேலையைத் தேடிக்கொண்டார். மேலும், தான் இருக்கும் சமூக மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டுமென்று எண்ணி, தனது வாழ்வைப் பொதுச் சேவைக்காகவும், இறையனுபவம் நிறைந்ததாகவும் மாற்றிக்கொண்டு அனைவரையும் சமம் என்று எண்ணி வாழ்ந்தார். மேலும், தனது மகனையும் மனைவியையும் அதன் அடிப்படையில் வளர்த்தார். இன்று அவர் இல்லையென்றாலும் அவரின் சேவையும், அவரின் இறையனுபவமும் அந்தச் சமூக மக்களின் மனத்திலும் என் மனத்திலும் அழியாத முத்திரையாக உள்ளது. காந்தியடிகள்,
அன்னை தெரசா, வள்ளலார் போன்ற மாமனிதர்கள் வாழ்வின் அழைத்தலை உணர்ந்து வாழ்ந்தார்கள். இன்று அவர்கள் நிலையில்லா அழைப்பைப் பெற்றவர்களாயினர். அதனால் மக்களின் மனத்தில் இன்றும் வாழ்கின்றனர்.
நாமும்
நமது வாழ்வின் அழைப்பிற்குள் இருக்கும் அழைப்பை உணர்ந்து வாழும்போது, நிலையில்லா அழைப்பு அனைவருக்கும் பொருளுள்ளதாக இருக்கும். “எல்லா உயிர்களும் இறைவனின் படைப்பு, எல்லா மனங்களும் அவனது இருப்பு” என்ற வள்ளலாரின் பாடல்களுக்கு ஏற்ப நாமும் மேற்கண்ட மாமனிதர்கள் போன்று எல்லா மனங்களிலும் நீங்காத இடம்பெற்று நிலையில்லா அழைப்பின் பொருளை உணரமுடியும்.