தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இன்று வெகுவாகப் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் சொல் கடப்பாரை!
கடப்பாரை
எனும் கவசத்தால் (ஆயுதத்தால்) திராவிடத்தை உடைத்துவிடப் போவதாகச் செந்தமிழன் முழங்கியுள்ளார். இவர் உடைத்துவிடக் கருவியாகக் கொள்ளும் கடப்பாரை எனும் கருவி ‘பார்ப்பனியம்’ என்பதைப்
புரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த அறைகூவலை ஒரு வெற்று முழக்கமாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனும் ஆதங்கத்தின் விளைவே இக்கட்டுரை.
பார்ப்பனியம்
என்பது வெறும் சாதியக் குறியீடு அல்ல; அது ஒரு சித்தாந்தம், வலுவான சித்தாந்தம். வர்ண அடிப்படையிலான வலுவான படிநிலை அமைப்பை எப்படியேனும் கட்டிக்காக்க உறுதி பூணும் சித்தாந்தம். பார்ப்பனியத்தின்மீது கட்டப் பட்ட இந்துத்துவமே இதன் மறுவடிவம். இந்துத் துவம் என்பதும், பார்ப்பனிய மேலாண்மை என்பதும் இக்கொள்கைகளின் அடிப்படையில் உருவாகவிருக்கும் இந்து இராஷ்டிரமும் வேறு வேறல்ல; ‘இந்துத்துவா’ என்று
சொல்லை உருவாக்கிய வீரசவார்க்கர் (1923) யாரை இந்து என்றழைக்கிறார்? ‘இந்து’ அடையாளம்
என்பது வெறும் நம்பிக்கையில் அல்ல! ஆனால், இது ஒரு கலாச்சாரம், உள்ளுணர்வு (Belonging).
இந்தியாவில்
வாழ்வோருக்கு இப்பூமி பித்ரு
பூமி (Father Land) மட்டுமல்லாது, புண்ணிய பூமியாகும் (Holy land).
இப்பூமியில் கிறித்தவருக்கும் இசுலாமியருக்கும் இடமில்லை. அவர்களின் புண்ணியத் தலங்கள் இங்கு இல்லை. இங்கு வாழும் அனைத்துச் சாதியினரும் இந்துகளே. சவார்க்கர் தீண்டாமையை எதிர்த்த போதும், சாதி அமைப்பில் சீர்திருத்தம் செய்ய விரும்பினாரே தவிர, ஒழிக்க (To Destroy) விரும்பவில்லை.
சாதிய அமைப்பு ஒரு வேலைப்பிரிவு என்பதால், இந்து மதத்திலிருந்து இப்பிரிவை வேரறுக்க முடியாது என்றே நம்பினார். இப்பிரிவு இயல்பானது, இயற்கையானது, ஒற்றுமையை வளர்ப்பது என்று நம்பினார்.
சவார்க்கருக்குப்
பின் இந்துத்துவத்தைத் தூக்கிப்பிடித்த எம்.எஸ். கோல்வால்க்கர் (1939) ‘நாம் அல்லது நமது தேசம் பற்றிய விளக்கம்’
(We or our
nationhood defined) என்ற நூலிலும், ‘Bunch of thoughts’ என்ற
நூலிலும், வர்ணப்பிரிவு பாராட்டப் பெற வேண்டுவது எனவும், இது இறைவன் ஆசியால் உருவாக்கப்பட்டது எனவும் (Divinly Ordained) எழுதுகிறார்.
அம்பேத்கர் மற்றும் பொதுவுடைமையாளர்கள் இவ்வமைப்பைச் சாடுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறார். கோல்வால்க்கர் “சாதியப் படிநிலை, மக்களின் ஒடுக்கும் வடிவமல்ல; இதுதான் பிரபஞ்சத்தின் முறையான ஒழுங்கு”
(order) என்பார் (ஆனந்த் டெலும்டே, Outlook.
Dec.2025).
பார்ப்பனியத்தின்
உள்ளடக்கம் என்னவென்பதைத் தமிழர் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டமே அறியும். இந்தியாவிலும் ஏன் தமிழ்நாட்டிலும் தோன்றிய பக்த இயக்கம், பெரியார் தலைமையில் உருவான சுயமரியாதை இயக்கம், இக்காலகட்டத்தில் அம்பேத்கர் தலைமையில் உருவான தலித் இயக்கம் என்பனவெல்லாம் ஒரு வகையில் கவனித்தால் சாதி எதிர்ப்பு இயக்கங்களே. மானுடரின் மாண்பையும் உரிமைகளையும் காக்கும் வகையில் திடமான சித்தாந்தத் தெளிவோடு உருவாகி, இந்தியச் சமூக அமைப்பில் பெரிய மாற்றத்தை உருவாக்கி வந்த இவ்வெதிர்ப்பு இயக்கங்களுக்கு எதிராகத் தோன்றியதுதான் இந்துகளை மதரீதியாக ஒருங்கிணைக்கும் போர்வையில் ‘இந்து’ என்ற பேரடையாளத்திற்குள் ஒருங்கிணைக்கும் சூழ்ச்சியில் சாதிய அடையாளத்தைக் கட்டிக்காத்து வருவதுதான் இந்துத்துவம்.
இந்துத்துவ
இயக்கத்தின் மூலவர்களான சவார்க்கர், கோல்வால்க்கர் தொடங்கி இன்றைய மோகன் பகவத் வரை தேசியம் என்ற பெயரில், இந்தியாவின் பன்மைக் கலாச்சாரப் பண்பை அழித்து, கலாச்சாரத் தேசியம் என்ற பெயரில் இந்து தேசத்தைக் கட்டமைத்து, இந்தியாவின் தேசிய இனங்களின் தனித்துவத்தை மறுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் வெகு வேகமாக நடந்து வருகையில், நமது ஊரில் தமிழ்த் தேசியத்தை வீதியெங்கும் முழங்கிய ஒருவர், தமிழ்த் தேசியத்தின் மாற்று அடையாளமாகத் திகழும் திராவிடச் சிந்தனையை - திராவிடக் கருத்தியலை ஆரியக் கடப்பாரை கொண்டு தகர்க்கப் போகிறாரா?
இந்துத்துவச்
சக்திகள், சனாதனிகள் வர்ண பேதம் உருவாக்கும் கெட்டியான படிநிலை அமைப்பைப் புனிதமாகக் கருதுகின்றனர்; சமனற்றச் சமூக அமைப்பைத் தேசியமாகக் கட்டமைக்கின்றனர்; அவ்வப்போது முன்னெடுக்கும் மக்களை உள்ளடக்கிய திட்டங்களால், சனரஞ்சக வாக்குறுதிகளால் ஓரங்கட்டப்பட்ட மக்களை மீண்டும் ஓரங்கட்டுவதோடு, ஒடுக்கப்பெறும் மக்கள் தாம் அடிமையானோம் என்பதை மறக்கச் செய்கின்றனர்” (Outlook டிசம்பர் 2025).
காந்தியும்,
அவரின் காங்கிரஸ் இயக்கமும் முன்னெடுத்த இந்திய தேசியம் எனும் பேரமைப்பு, மாநிலங்களின் தனித்துவம் உணர்ந்து மொழிவாரி மாநிலங்களை உருவாக்கினாலும், மத்திய-மாநில அரசுகளுக்கான தனித்த அதிகாரங்களையும், பொதுவான அதிகாரங்களை வகுத்தாலும், மத்திய- மாநில அரசுகளிடையே உரசல்கள் இருந்தன. இவ்வுரசல்களால் ‘திராவிட நாடு’ என்ற முழக்கமும் எழத்தான் செய்தது.
இன்றைய
இந்துத்துவ அரசு முன்வைக்கும் ‘ஒரே’என்ற ஒற்றை முழக்கத்தின் உள்ளடக்கம் என்ன? ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல்!’ - இம்முழக்கத்தின் உள்ளடக்கம் இவர்களின் காதுகளில் எட்டாமற்போன மாயமென்ன?
உண்மையான
தேசியம், உள்ளடக்குவதை (Inclusion) ஒதுக்காது!
இந்துத்துவ அரசு முன்வைக்கும் ஒற்றை முழக்கத்தை இவர்கள் எந்தக் கடப்பாரையால் வீழ்த்தப் போகிறார்கள்? ‘ஒற்றை’ எனும் முழக்கம் வெறும் எண்ணல்ல; ஒற்றை எதேச்சதிக்காரத்தின் வடிவம். ‘ஒன்று’ என்பதும், ‘ஒற்றை’ என்பதும் மற்றொன்றின் இருப்பை மறுப்பதால், இப்போக்கினில் சனநாயகம் இல்லை. சனநாயகம் மறுக்கப்படும்போது, தேசிய இனங்களின் உண்மைத்தன்மையான ‘தனித்துவம்’ மற்றும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும்.
தேசங்களின்
நாடாம் இந்தியாவில் தேசிய இனங்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதோடு, நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைக்கும் எதிரான குற்றமாகக் கருதப்பட்டு, கடுமையான தண்டனைக்கு ஆளாகும் நிலையும் உருவாகும். அதுவும் இன்றைய மதவாத அடிப்படையிலான அரசு மதரீதியான விமர்சனங்களைக்கூட தேச விரோதக் கருத்தாக எடுத்துக்கொண்டு தேச விரோத (Sedition) வழக்கும்
தொடுத்துச் சிறைக்கும் அனுப்பி வைப்பதைப் பார்க்கிறோம்.
தமிழ்த்
தேசியமும், இந்து தேசியமும் இணைந்து செல்லமுடியாது. இந்தியச் சமூகம், பன்மைச் சமூகம் என்று ஏற்றுக்கொண்டு, பன்மைத்துவம் காக்கப் போராடுவதுகூட
பிரிவினைவாதமாகக் கருதப்படும் சூழல் கண்முன்னே வெட்ட வெளிச்சமாகத் தெரிகையில், கடப்பாரை கொண்டு திராவிடத்தை உடைக்க நினைக்கும் இவர்கள் உணர வேண்டிய பாடமிது.
தமிழ்த்
தேசியம் பேசும் இவர்களும், இந்து தேசியம் பேசும் இந்துத்துவர்களும் எங்கேயாவது கருத்தியல் ரீதியாக மோதுவதைப் பார்க்க முடிகிறதா? பரந்துபட்ட இந்தியாவில் இந்து தேசியம் அல்லது கலாச்சாரத் தேசியம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கலாச்சாரத் தேசியம், பன்முகச் சமூக அமைப்புள் தேசிய இனங்களின் இருப்பை அழிக்க முனையும் என்ற உண்மையை இவர்கள் எங்கேயாவது எடுத்துரைத்ததுண்டா? கலாச்சாரத் தேசியம் என்ற செயலில் முன்னெடுக்கப்படும் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறிப்பாக, இந்தி மொழி திணிப்பு, சமஸ்கிருத மொழிக்கு அளிக்கப்படும் முன்னுரிமை, தமிழ்நாட்டில் நடைபெறும் அகழ்வாராய்வு உண்மைகளை மதிக்காமை, மதச்சிறுபான்மையின்மீது காட்டப்பெறும் பகை, அவர்களின் நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், காஷ்மீர் மக்களின் சுயாதீன உரிமைகளைத் தொடர்ந்து மீறிவருதல் என்பனவெல்லாம் இவர்கள் கண்களுக்குப் பிரச்சினையாகவில்லையே!
நெற்றியில்
திருநீற்றுத் பொட்டணிந்து முப்பாட்டன் முருகன் புகழ் பாடும் இவர்கள், பெரும்பான்மை மத உணர்வைக் கருவியாக்கி
அரசியல் ஆதாயம் தேடும் பெரும்பான்மை மதவாதிகளின்
கொள்கைக்கு ஆதரவாகக் களமாடுகிறார்கள் என்றுதானே எண்ணத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில்
பேசப்படும் திராவிடம் ஓர் அடையாளமே தவிர, வேறு இல்லை. இன்று வளர்ந்து நிற்கும் பார்ப்பனிய இந்துத்துவ மாடலுக்கு எதிராக மாற்றுக்கருத்தியல் கொள்ளவேண்டிய சூழலில் திராவிடத்தை முன்வைக்கிறோம். திராவிடம் ஏற்றுக்கொண்ட கருத்தியல், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதல்ல; திராவிடச் சித்தாந்தம் ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. வடவராகிய ஆரிய ஊடுருவலும், மேல்சாதி
ஆதிக்கமும், சாதி ரீதியான பாகுபாடும் நிறைந்து நின்ற சமூக அமைப்பில் ‘திராவிடம்’
என்ற கடப்பாரை தேவைப்பட்டது. தந்தை பெரியாரும் நீதிக்கட்சியும் திராவிட இயக்கமும் இன்றைய தி.மு.க.
அரசும் ஆரிய மேலாண்மையை உடைத்தெறிய தேவைப்பட்ட கடப்பாரை அதற்கான வேலையைச் செவ்வனே செய்தது.
கடப்பாரை
எனும் கவசம் கொண்டு நாம் வீழ்த்த வேண்டுவது இன்றைய ஆளும் வர்க்கக் கருத்தியல் என்பதாக இருக்க, ‘திராவிடம்’
என்ற ஒரு சொல்லை, அச்சொல்லை எப்போதும் தாங்கியே செயல்படும் திராவிட மாடல் அரசினை ‘தீய சக்தி’ என்று வாய் கூசாமல் நாளும் புலம்பும் கட்சிகள் அனைத்தையும் சனநாயகம், சமத்துவம், சமயச்சார்பின்மை கடப்பாரைகளால் அடித்து நொறுக்கவேண்டிய காலத்தில் சமூக நீதியை, சுயமரியாதையை, பெண் விடுதலையை, மாநில சுயாட்சிக் கோட்பாட்டை உள்ளடக்கமாகக் கொண்ட திராவிடத்தை உடைத்து, உடையுண்ட கற்கள்மீது எதைக் கட்டப் போகிறார்கள்?
மக்களை
குறிப்பாக, மதச் சிறுபான்மையினரை நாட்டின் எதிரிகளாக, அந்நியராகச் சித்தரித்து அவர்கள்மீது ஏவப்பெறும் வன்முறைகளை இவர்கள் பார்க்கவில்லை.
‘சனாதனத்தை ஒழிப்போம்’
என்று பேசிய ஒற்றை வார்த்தையால் வெகுண்டுபோன சனாதனக் காவலர்கள், தமிழ்நாடே இந்துகளுக்கு எதிரானது என்று வட மாநிலங்களில் பரப்புரை
செய்தபோது இவர்கள் எங்கே போனார்கள்?
ஒன்றிய
அரசின் புதிய தொழிலாளர் பற்றிய சட்டங்கள், தொழிலாளர் நலம் பாதிக்கப்படும் என்று நாடே கேள்வி எழுப்பி வருகையில், மக்களின்
வேலைக்கான 100 நாள் வேலைத்திட்டம் பறிக்கப்பட்டபோது, இத்திட்டத்தில் இடம்பெற்ற காந்தியின் பெயர் களவாடப்பட்டபோது கடப்பாறைகளைக் காணோமே!
கால்டுவெல்
மதம் பரப்ப வந்த ஒரு பாதிரி என்றும், அவர் முன்னிறுத்திய திராவிடம் பொய்யானது என்றும் பேசும் இவர்கள், ‘கால்டுவெல், போப் வேறு வேறானவர்கள்’ என்ற
வேறுபாடு கூட தெரியாத நிலையை என்னவென்று சொல்வது?
சங்கப்
பரிவாரங்கள், திராவிடம் பற்றிப் பேசிய கால்டுவெல்லை எங்கு வைத்துள்ளதோ, அதே இடத்தில் இவரும் வைப்பதில் வியப்பு எதுவும் இல்லையே!