news-details
ஆன்மிகம்
தவக்காலத்தில் வீசும் வசந்தமும் விடுதலையும்

தவக்காலத்தை அருளின் காலம், மீட்பின் காலம், மனமாற்றத்தின் காலம், மன்னிப்பின் காலம், ஒப்புரவின் காலம் என்றெல்லாம் பல பெயர்களைக் கொண்டு நாம் வழக்கமாக அழைப்பதுண்டு. இந்த வரிசையில், ‘காலங்களில் அவள் வசந்தம்என்னும் பாடல் வரி சொல்வதைப் போன்று, தவக்காலத்தை திருவழிபாட்டு ஆண்டின் காலங்களில் வசந்த காலம் என்றும் விடுதலையின் காலம் என்றும் சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

கழுகு சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆனால், இந்த வயதை அடைய, கழுகு தனது 40-ஆம் வயதை எட்டுகையில் ஒரு மிகக் கடினமான முடிவை எடுக்கவேண்டும். ஆம், அந்த வயதில் அதன் வலிமையான நகங்கள் மிகவும் பலவீனமாகவும், அதன் நீண்ட கூர்மையான அலகு மிகவும் வலுவற்றும் மாறியிருக்கும். அதன் இறக்கைகள் தடித்தும் கனமாகவும் போயிருக்கும். இதனால் கழுகால் பறக்க இயலாமலும், தனது இரையைப் பிடிக்க இயலாமலும் ஆகி, வாழ்வின் இறுதிக்கட்டத்தை அது நெருங்கும். இச்சமயத்தில், கழுகு ஒரு கடினமானத் தேர்வை எதிர்கொள்கிறது. இறப்பது அல்லது புதுப்பிப்பது - இரண்டில் ஒன்றைக் கழுகு முடிவு செய்கிறது.

புதுப்பித்தலுக்குத் தன்னை ஒப்படைக்கும் கழுகு சுமார் 150 நாள்கள் நீடிக்கும் ஒரு வலிமிகுந்த பயணத்தைச் சந்திக்கிறது. முதலில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளும் கழுகு, காடு அல்லது மலைப் பகுதிக்குச் சென்று, தன் அலகுகளால் உடலெங்கும் குத்திக்கொண்டு இறகுகளைப் பிய்த்துவிடுகிறதுமேலும், பாறைகளில் தன் அலகுகளையும் நகங்களையும் மோதி நீக்கிவிடுகிறது. பின்னர் புதிய இறகுகளும் நகங்களும் முளைக்கும்வரை தன்னை மறைத்துக்கொண்டு வாழ்கிறது. புதிய இறகுகள் முளைத்தவுடன் வெளியே வந்து முன்பைவிட உயரமாகப் பறக்க ஆரம்பிக்கிறது. இவ்வாறு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் கழுகு மேலும் 30 ஆண்டுகள்வரை வாழும்.

தவக்காலத்தைத் தொடங்கியுள்ள நமக்கும் கழுகின் புதுப்பித்தல் பயணம் சிறந்ததோர் ஆன்மிகப் பாடமாக அமைகிறது. கழுகின் தவ நாள்கள் அதற்கு ஆற்றல் ஊட்டியதைப் போலவும், அதன் இளமையைத் திரும்பக் கொணர்ந்ததைப் போலவும் நமக்கும் இத்தவக்காலத்தின் நாள்கள் அமைய வேண்டும். “உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும் (திபா 103:5) என்னும் திருப்பாடல் வரிகள் இத்தவக்காலத்தில் நம் புதுப்பித்தலுக்கு வழிவகுக்கின்றன.

இயேசுவின் உயிர்ப்பிற்காகத் தயாரிக்கும் இத்தவக்காலத்தின் நாள்கள், நம்மையும் இயேசுவுடன் சேர்ந்து உயிர்க்கச் செய்யவேண்டும். நம்மைப் புதுப்பிப்பதன் வழியாக நாமும் இயேசுவோடும் - இயேசுவாகவும் உயிர்த்தெழ முடியும். அதுவே இத்தவக்காலத்தின் நோக்கமாகும். இப்புதுப்பித்தல் அனுபவம் வசந்தம், விடுதலை ஆகிய இரு சிறப்பான பயன்களை நமக்கு அளிக்கிறது.

தவக்காலம் ஒரு வசந்த காலம்

லெண்ட் (Lent) என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு வசந்த காலம் (Spring) என்கிற அர்த்தமுண்டு. பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகளும் மலர்களும் தளிர்க்கின்ற, பூக்கின்ற காலமே இவ்வசந்த காலம். இந்த அடிப்படையில் நம்முடைய பழைய பாவ எண்ணங்களையும் தீய நாட்டங்களையும் எதிர்மறைச் சிந்தனைகளையும் உதிர்த்து விட்டு, புதிய எண்ணங்களையும் நற்சிந்தனைகளையும் புனித விழுமியங்களையும் நம்முள் பூக்கச்செய்யும் தவக்காலமும் உண்மையில் ஒரு வசந்த காலமே.

நம்மிடமிருந்து அகற்றப்பட வேண்டியவை எவை? களையப்பட வேண்டியவை எவை? என்று நன்கு ஆய்ந்தறிய இந்நாள்களில் நாம் முயல வேண்டும். தகாதவற்றை விலக்குவதும் தகுந்தவற்றை உள்வாங்குவதும் இத்தவக்காலத்தின் அழைப்பாகும். அல்லவை நீக்கிடவும் நல்லவை சேர்த்திடவும் இத்தவக்காலம் நமக்கு உதவிட வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் ஆன்மிக வாழ்வை இன்னும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது. இதற்கு இத்தவக்காலம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன் (திவெ 21:5) என்று கூறும் கடவுளின் வாக்கிற்கேற்ப அவருடைய பேரன்பும் பெருங்கருணையும் இத்தவக்காலத்தின் நாள்களில் நம்மை உண்மையில் புதுப் படைப்பாக மாற்றட்டும்!

தவக்காலம் ஒரு விடுதலையின் காலம்

புகழ்பெற்ற சிற்பியான மைக்கேல் ஆஞ்சலோ இவ்வாறு கூறுகிறார்: “ஒவ்வொரு கல்லிலும் ஒரு சிலை உள்ளது; அதைக் கண்டுபிடிப்பதே சிற்பியின் பணி.” மேலும் அவர் தொடர்ந்து சொல்வார்: “இந்தச் சலவைக்கல்லில் நான் ஒரு வானதூதரைப் பார்த்தேன்; நான் அவரை இதிலிருந்து விடுவிக்கும்வரை செதுக்கினேன்.” இவ்வாறே இத்தவக்காலமும் ஒரு சிற்பியைப்போல நாம் செயல்பட நம்மைத் தூண்டுகிறது.

கடவுள் நம் எல்லாரையும் அவருடைய உருவிலும் சாயலிலும் படைத்துள்ளார் (தொநூ 1:26). ஆனால், இந்த இறைமையை நம்முடைய குற்றங்களால் இருட்டடிப்புச் செய்திருக்கிறோம். நம்முள் மறைக்கப்பட்ட இறைமையை வெளிக்கொணர இத்தவக்காலம் உதவிடவேண்டும். ‘நான்என்னும் சிறைக்குள் சிக்கிச் சிதையாமல், விடுதலை பெற்றவர்களாக நம்மை வாழப் பணிக்கும் காலமாக இத்தவக்காலம் உள்ளது. நமக்குள் ஒளிந்திருக்கும் ஒரு வானதூதரை வெளிக்கொணரும் பொருட்டு, நம்மையே நாம் தொடர்ந்து செதுக்குவதற்கான காலமே இத்தவக்காலம்.

ஆகையால், இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம். பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே (கலா 4:7) என்னும் கூற்றுக்கு இணங்க, இத்தவக்காலம் நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக, விடுதலை வாழ்வு பெற்ற மக்களாக இவ்வுலகில் வாழச் செய்யட்டும்.

நிறைவாக, தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் இறைவேண்டல், நோன்பு, பிறரன்புச் செயல்பாடுகள் ஆகியவற்றின் வழியாக நம்முடைய புதுப்பித்தல் வீரியமும் வேகமும் பெறட்டும்! இப்புதுப்பித்தலின் நாள்களின் நிறைவில் நமக்கு வசந்தமும் விடுதலையும் கிடைக்கட்டும்!