news-details
கவிதை
அன்னையின் தியாகம் தந்த தெளிவு!

இல்லத்திலிருந்து இறைவனுக்காய்

அன்னையின் - அழைப்பின் பயணம்.

ஓர்  இல்லத்தின் அமைதியில்

அவள் வாழ்வு தொடங்கியது.

அன்பும் பொறுப்பும் அன்றாட  வாழ்வின்

மொழியாயிருந்தது. உறவுகள் சூழ்ந்த

வாழ்க்கை, கனவுகள் கைப்பிடித்த பாதை,

பெண்மையின் முழுமை இல்லறத்தில்

மலர்ந்த நாள்கள்! ஆனால்,

அந்த அமைதிக்குள் மற்றொரு குரல் ஒலித்தது.

உலகத்தின் குரல் அல்ல;

இதயத்தின் ஆழத்தில் வந்த அழைப்பு!

இறைவன் மெதுவாகக் கேட்டார்

நீ என்னை முழுமையாய் அன்பு செய்கிறாயா?’

அந்தக் கேள்வி அவள் ஆன்மாவை உலுக்கியது.

விட்டு விடுதல் எளிதல்ல,

பிரிவுகள் கண்ணீரைத் தந்தன. ஆனாலும்,

அவள் தேர்ந்தது பாதுகாப்பை அல்ல

- விசுவாசத்தை! தெரிந்த பாதையை அல்ல -

இறைவன் காட்டிய வழியை!

துணிந்து கூறினாள், அந்தத் தைரியமானஆம்!’

அந்தஆம்ஒரு வரலாற்றின் தொடக்கமானது.

இல்லற வாழ்வைத் தாண்டி

துறவின் வாசலுக்குள் நுழைந்தாள்,

அனைத்தையும் விட்டாள்.

ஆனால், அடையாளம் கண்டாள்.

உலக அன்பை விட்டு

இறைவன் அன்பை அணைத்தாள்,

ஒருவருக்காய் வாழ்ந்தவள்

திக்கற்றவர்களுக்காய் அனைத்தும் ஆனாள்.

அவள் துறவு தப்பிச் சென்ற ஓட்டமல்ல;

அது முழுமையான அர்ப்பணம்.

முழு மனத்துடன் எடுத்த முடிவு!

அன்னையே! உன் பயணம் சொல்கிறது...

அழைப்பு எங்கும் வரலாம்,

அதை ஏற்கத் தைரியம் வேண்டும்;

உன் தியாகத்தின் சாட்சியம்

என் பாதையை ஒளிரச் செய்யட்டும்!