(சென்ற இதழ் தொடர்ச்சி)
சமூகத் துறைகளில் ஈடுபட ஆற்றல்படுத்தல்
பொதுநிலையினருக்கே
உரிய தனி இறையாட்சிப் பணித்தளம் அவர்கள் பணியாற்றும் சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு எனும் உலகியல் துறைகளே. அவற்றில் நற்செய்தி விழுமியங்களுடன் ஈடுபட்டு, அவற்றை இறையாட்சிக்கு இயைந்ததவையாக மாற்றுவது அவர்களுக்கே சிறப்பாக உரிய அழைப்பு. 2-ஆம் வத்திக்கான் சங்கம் இதனை அழுத்தமாக எடுத்துரைத்துள்ளது (திரு அவை 31; பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி 7). எனவே, நம் பொதுநிலையினரை வெறும் கோவில் மையக் கிறித்தவர்களாக வைத்திருக்கும் அல்லது வளர்த்தெடுக்கும் இன்றைய பரவலான நிலை மாற்றப்படவேண்டும்.
உலகியல்
துறைகளை நற்செய்தி விழுமியங்களால் உருமாற்றும் ஈடுபாட்டினை அவர்களிடம் வளர்க்காது, அதற்கென அவர்களை ஆற்றல்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளாது, செபக்கூட்டங்களையும் பக்தி முயற்சிகளையும் நவநாள்களையும் நற்கருணை ஆராதனைகளையும் அதிகரித்துக் கொண்டு, பொதுநிலையினரை அவற்றிலேயே மூழ்கடிக்க முயலும் பாணியே இன்று தமிழ்நாடு திரு அவையில் வளர்ந்துகொண்டிருக்கிறது. இத்தகைய கோவில் கிறித்தவம் சமூக ஈடுபாட்டு மற்றும் சமூக மாற்றுக் கிறித்தவமாக வடிவெடுக்கும்போதுதான், அது உண்மையான சீடத்துவக் கிறித்தவமாகச் சிறந்தோங்கும். இத்தகைய சமூக மாற்றுக் கிறித்தவ வாழ்வுக்குச் சிறந்த மாதிரியாக வாழ்ந்தவர் புனித தேவசகாயம்.
பொதுநிலையினர்
திருப்பணிகளைச்
செயல்படுத்துவோம்
தகுதியும்
திறமையும் உடைய இல்லற ஆண்களைத் திருத்தொண்டர்களாகத் திருநிலைப்படுத்துவதை 2-ஆம் வத்திக்கான் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது (திரு அவை 29). உலகின் பல நாடுகளிலும், இந்தியாவில்
ஓரிரு மறைமாவட்டங்களிலும் இல்லறத் திருத்தொண்டர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், காலத்திற்கு ஏற்ற புதிய முன்னெடுப்புகளுக்கு இந்தியத் திரு அவைக்குத் தடம் காட்டும் தமிழ்நாடு திரு அவையில் அதுபற்றி எவரும் சிறிதுகூடச் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
மேலும்,
1972-இல் திருத்தந்தை 6-ஆம் பவுல் ‘சில திருப்பணிகள்’ எனும்
திருத்தூது மடல் வழியாக வாசகர், பீடத்துணைவர் எனும் பணிகளைப் பொதுநிலையினர் திருப்பணிகள் என அறிவித்தார். தலத்
திரு அவைகளின் ஆயர் பேரவைகளும் தங்கள் தேவைக்கேற்ப வேறு பொதுநிலையினர் திருப்பணிகளையும் ஏற்படுத்த வாய்ப்பு அளித்தார். அதனைப் பின்பற்றி தமிழ்நாடு ஆயர்கள் 2000 ஆண்டில் நற்செய்திப் பணியாளர், நற்கருணைப் பணியாளர், நோயுற்றோர் பணியாளர், நீதிப் பணியாளர், அருள்பணித் துணைவர் என ஐந்து பொதுநிலையினர்
திருப்பணிகளை ஏற்படுத்தினர். 2013-ஆம் ஆண்டு திருந்தந்தை பிரான்சிஸ், வேதியர் பணியை ஒரு திருப்பணியாக அறிவித்ததும் தமிழ்நாட்டு ஆயர்கள் அதையும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், இன்றுவரை ஓரிரண்டு தவிர ஏனைய தமிழ்நாடு மறைமாவட்டங்கள் அத்தகைய திருப்பணிகளைப் பொதுநிலையினருக்குத் தர முன்வரவில்லை.
எத்தகைய
நலமான மாற்றமாக இருந்தாலும், பழைய பாணிகளுக்குப் பழக்கப்பட்ட பலர் அவற்றை முதலில் ஏற்க மறுப்பதும் எதிர்ப்பதும் இயல்பானதே. 2-ஆம் வத்திக்கான் சங்கம் புகுத்திய பல மாற்றங்களுக்கு அன்று
எவ்வளவோ எதிர்ப்புகள் இருக்கத்தானே செய்தன! இருப்பினும், தக்க விளக்கங்கள் தந்ததாலும், மெல்ல மெல்லப் பழக்கப்பட்டு விட்டதாலும் இன்று அவை பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளவைதானே! திருத்தந்தை பிரான்சிஸ் திரு அவையின் உரோமைத் தலைமைச் செயலகத்தின் முக்கியப் பல பொறுப்புகளில் பொதுநிலையினரை
நியமித்துத் தலத்திரு அவைகளுக்குச் சிறந்த முன்மாதிரி காட்டியுள்ளார் என்பது எண்ணிப்பார்க்கத்தக்கதே.
அவசரத் தேவை
- பொதுநிலையினர்
உருவாக்கம்
அருள்பணியாளர்களுக்கான
உருவாக்கம் 8-10 ஆண்டுகள் என நீடிக்கிறது.
ஆனால், பொதுநிலையினருக்குத் தரப்படுவதோ சிறுவப் பருவத்து மறைக்கல்வி, பிற்கால குறுகிய அருளடையாளத் தயாரிப்பு வகுப்புகள், ஞாயிறு மறையுரைகள் என்பன தவிர, பெரிதாக எதுவும் இல்லை. திருத்தந்தை பிரான்சிஸ் அழுத்தியுரைத்த கூட்டியக்கத் திரு அவையாகத் தங்களுக்கே உரிய தனி அறிவு மற்றும் ஆற்றல்களுடனும் சமமான பணிப்பகிர்வுடனும் கூட்டுப் பொறுப்புடனும் இணைந்து பயணிக்கப் பெரும்பான்மையினரான பொதுநிலையினருக்குப் போதிய பயிற்சிகள் தரப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக,
பங்கேற்பு அமைப்புகளின் உறுப்பினர்களாகும் பொதுநிலையினரை எடுத்துக்கொள்வோம்: அவற்றிற்கான தேர்தல்களில்தான் எத்தனை போட்டிகள்? உறுப்பினர்களுக்கு இடையே எத்தனை பிளவுகள்? சண்டைகள், அதிகாரத்தைக் கையாள்வதில் எவ்வளவு சுயவிளம்பரத் தேடல் மற்றும் ஆதிக்கங்கள்! அனைத்திற்கும் மேலாக நிதி மேலாண்மையில் எத்தனை கையாடல்கள் மற்றும் வீண் பெருமைக்கான ஆடம்பரச் செலவுகள். இவற்றிற்கெல்லாம் முதல் காரணம், அவர்களை இத்தகைய பொறுப்புகளை நன்கு வகிக்க, அவர்களுக்குச் சரியான உருவாக்கம் தர நம் மறைமாவட்டங்கள்
தவறியுள்ளனதானே!
மேலும்,
நல்ல கல்வியாளர்களாக, கலைஞர்களாக, அரசு ஊழியர்களாக, அரசியலாளர்களாக, மருத்துவர்களாக, வணிகர்களாக, அறிவியலாளர்களாக, ஊடகத்துறையினராக எனத் தத்தம் துறைகளில் கிறித்தவ விழுமியங்களோடு செயல்பட நாம் தொடக்க மற்றும் தொடர் பயிற்சிகளை அதிகமாகத் தருவதில்லை. அத்தகைய உருவாக்கத்தின் தேவையை 2023-24 ஆண்டுகளில் இணைந்து பயணிக்கும் திரு அவையை மையப்படுத்தி நடைபெற்ற ஆயர் மாமன்றம் அழுத்தி உரைக்கிறது. இறையியல் உருவாக்கத்துடன் கூட்டுப் பொறுப்பு, செவிகொடுத்துக் கேட்டல், தெளிதேர்வு செய்தல், கிறித்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல், வறியோருக்கு உதவுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கணினிவழி மறைத்தூதுப் பணி என்பனவற்றை நடத்துவதற்கான தனிப்பட்ட சில திறமை வளர்ப்புப் பயிற்சிகளும் தேவைப்படுகின்றன. சிறாருக்கும் இளையோருக்கும் மறைக்கல்வி உருவாக்கம் தருவதிலும் தனிப்பட்ட கவனம் தேவை என அது எடுத்துரைக்கிறது
(முதல் அறிக்கை 14e).
அத்தகைய
உருவாக்கம் அறிவு, உணர்ச்சி, உறவு, அருள்வாழ்வு எனும் ஆளுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் சார்ந்ததும் ஒருங்கிணைந்தும் நடைமுறை அனுபவமுறையிலும் அமையவேண்டும் என்பதை மாமன்றம் சுட்டிக்காட்டுகிறது. மேலும், ‘மாமன்றத்தின் நடைமுறை முழுவதிலும் அழுத்தி உரைக்கப்பட்ட ஒன்று ஆண்களும் பெண்களும் பொதுநிலையினரும் துறவியரும் திருநிலைத் திருப்பணியாளர்களும் அருள்பணி பயிற்சி மாணவர்களும் இணைந்து பங்கேற்கும் பொது உருவாக்கம். இத்தகைய உருவாக்கத்தில் ஒருவர் மற்றவரை நன்கு தெரிந்துகொள்ளவும் மதிக்கவும் ஒத்துழைக்கும் திறனை வளர்க்கவும் முடியும்’
(இறுதி அறிக்கை 143).
இறுதியாக...
திரு
அவையிலும் சமூகத்திலும் பொதுநிலையினரால் மட்டுமே ஆற்ற இயன்ற நற்செய்திப் பணியின் பல முக்கியப் பங்களிப்புகள்
இன்று நிறைவேற்றப்படாமலே உள்ளன. குறிப்பாக, நமது சமூகம் இன்று பல வகைகளில் தடம்மாறி
அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இச்சூழமைவில், நற்செய்தி விழுமியங்களால் உலகியல் துறைகளை ஊடுருவி அவற்றை இறையாட்சிக்கு ஏற்ப உருமாற்றுவது பொதுநிலையினருக்கு உரிய தனிச் சிறப்பான அழைப்பு.
உலகை
இறையாட்சியாக உருமாற்றுவதற்கே திரு அவை இருக்கிறது என்பதால், பொதுநிலையினரின் குடும்ப மற்றும் சமூகப் பணிக்காகவே அருள்பணியாளர்களின் சமயப் பணிகள் இருக்கின்றன. எனவே, பொதுநிலையினரின் அழைப்பும் பங்களிப்பும் முதன்மைப்படுத்தப்பட்டு, அதனை அவர்கள் நிறைவேற்றும் வகையில் உரிய உருவாக்கப் பயிற்சிகள் அளித்து அவர்கள் ஆற்றல்படுத்தப்படவேண்டும். பொதுநிலையினரின் தலைமையை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுக்கும் சகோதரத் தலைவர்களாக நம் அருள்பணியாளர்கள் செயல்படும் வகையில் அவர்களது உருவாக்கமும் புத்தாக்கம் பெறவேண்டும்.