news-details
சிறப்புக்கட்டுரை
‘ஆன்லைன்’ வெடி! (வலையும் வாழ்வும் – 37)

இரவு முழுவதும் பட்டாசு சத்தங்கள்! காலையும் அது தொடர்ந்தது. அன்று தீபாவளி.  அம்மா, நேத்தில இருந்தே கேட்டுட்டு இருக்கேன். பட்டாசு வாங்கக் காசு குடுமாஎன்று நச்சரித்துக் கொண்டிருந்தான் அஜித். தன் பத்து வயது மகன் அஜித்திடம், கடையிலிருந்து வாங்கி வந்த காய்கறிகளை அருவாமனையில் அறுத்தவாறே, “அதான் நேத்தே பிஜிலி வெடி ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்தேன்ல... அது எங்க?” என்று அதட்டல் தொனியிலேயே கேட்டாள் சாந்தி.

அம்மா, அதெல்லாம் காலியாயிடுச்சு! எனக்கு யான வெடி வாங்கித்தாம்மா.”

சாந்திக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இறைச்சி வாங்கி வருவதாகச் சொல்லிச் சென்ற தன் கணவனை இன்னும் காணவில்லை என்பதே அவள் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது.

டேய், அம்மாக்கிட்ட இவ்வளவு காசுதான் இருக்கு. இனி கேட்கக்கூடாது சரியாஎன்று சொல்லிக்கொண்டே தன் மசாலா டப்பாவில் சேமித்து வைத்திருந்த நூறு ரூபாய் தாளை எடுத்து மகனிடம் கொடுத்தாள்.

அம்மா, இதுக்கு இரண்டு யான வெடிதாமா கிடைக்கும். சரி கொடுஎன்று மாமரத்தில் மாங்காய்களைத் துள்ளிப் பறிப்பதுபோல அந்த நூறு ரூபாய் நோட்டைப் பறித்துக்கொண்டு வெளியே பறந்தான் அஜித்.

தடபுடலென்று அடுப்பில் சோறு கொதித்துக் கொண்டிருந்தது. காய்கறிகள் பொரியலுக்காகத் தயாரானது. இறைச்சிதான் பாக்கி. வீட்டுக்காரர் வந்தாரென்றால் அதுவும் தயாராகிவிடும். ஊரிலிருந்து தங்கையும் அவ புருஷனும் கிறிஸ்மசுக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்கள். வரக்கூடிய நேரம்தான். அதுக்குள்ள எல்லாம் தயாராகிவிடும்என்று தன் மனத்தில் சொல்லிக்கொண்டவாறே அடுப்பங்கரை கதவில் சாய்ந்துகொண்டு பட்டாசு வெடிச்சத்தத்திற்குப் பயந்து ஒடுங்கிப்போய் படுத்திருந்த தன் வீட்டு நாயைக் கவனித்துக்கொண்டிருந்தாள் சாந்தி.

அம்மா!’ என்று அலறல் சத்தத்தோடு கையைப் பிடித்துக்கொண்டே வீட்டிற்குள் ஓடிவந்தான் அஜித். அவன் வலது கைவிரல்கள் தீக்காயத்தால் பூத்திருந்தன. புதிய சட்டைத்துணி இரத்தத்தால் நனைந்திருந்தது. பட்டாசு வாங்கச் சென்றபோது யாரோ சில இளைஞர்கள் வீரியமான பட்டாசைக் கொளுத்தி அவன் மீது எறிந்ததாகவும், ஏதேச்சையாக அதைக் கையில் பிடிக்கும்போது அது வெடித்ததாகவும் அவன் அழுதுகொண்டே சொன்னது சாந்திக்கு மனத்தில் பெரும் வலியை ஏற்படுத்தியது. அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தாள். அவனிடமிருந்த நூறு ரூபாயும் கூடுதலாக இருநூறு ரூபாயும் செலவானது.

இவ்வளவு நடந்திருந்தும் ஐந்நூறு ரூபாய் கொடுத்து கறி வாங்கி வரச்சென்ற கணவர் இன்னும் வீடு திரும்பாததிலிருந்தே அவர் நன்றாகக் குடித்துவிட்டு மாலைதான் வீடு வருவார் என்பதை சாந்தியால் யூகிக்க முடிந்தது.

கிறிஸ்துமஸ் விருந்திற்காக ஊரிலிருந்து தங்கையும், அவ புருஷனும் சாப்பாட்டு நேரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். மீதமிருந்த பணத்தை மருந்திற்கும் மருத்துவமனைக்கும் செலவு செய்தாகிவிட்டது. டப்பாக்களைத் தேடிப் பார்த்தும் ஒன்றும் கிடைக்காததால் பக்கத்து வீட்டு விஜி அக்காவிடம் கடன் வாங்கினாள். ஐந்நூறு ரூபாய்க்கு ஹோட்டலிலிருந்து பொரித்த கோழி வாங்கி வந்து அவர்களுக்குப் பரிமாறி எப்படியோ சமாளித்தாள்.

இனி செலவு இல்லையென்று நினைத்துக் கொண்டிருந்தபோது, “அக்கா! சூப்பர் ஸ்டார் படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்காம். பாத்திட்டு வரலாமா?” என்று கேட்டாள் சாந்தியின் தங்கை. ‘ஏழைகளுக்குத் திருவிழாக்கள் இல்லாமலேயே இருந்திருக்கலாம்என்று சாந்திக்கு அன்று தோன்றியது.

குழந்தைகளையும் குடும்பங்களையும் குறிவைத்துத் தாக்குகின்ற யானை வெடி இன்று சமூக ஊடகங்கள் எனச் சொல்லலாம். திறன்பேசியினை (Smart phone) குழந்தைகளின் கரங்களில் திணித்ததில் கொரோனா பெருந்தொற்றின் பங்கும் அதிகம் இருக்கின்றது எனலாம். கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில்தான் இணையவழிக் கல்வி என்ற போர்வையில் சிறார்கள் திறன்பேசியின் வழியாகக் கல்வியினை நுகரத்தொடங்கினர். இந்த நுகர்வு இணையம்வழிக் கல்வி என்று நின்றுவிடாமல் இணைய விளையாட்டு, இணைய நண்பர்கள், இணைய உணவுகள், இணைய வியாபாரம், இணைய சூதாட்டம் என்று விரியத்தொடங்கியது. இதனால் திறன்பேசியினைப் பயன்படுத்தும் சிறார் அதிகமாக இணையத்தைச் சார்ந்து இருப்பதால் திறனற்றக் கூட்டமாக உருவாகி வருகின்றனர்.

இப்பெரும் உண்மையைக் கூர்ந்து கவனித்த சில நாடுகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் சிறாருக்குப் பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன. குறிப்பாக, ஆஸ்திரேலியா அண்மையில் டிக்டாக் (TikTok), இன்ஸ்டாகிராம் (Instagram), யூடியூப் (YouTube), ஸ்நாப் சாட் (SnapChat) போன்ற தளங்களை 16 வயதிற்குட்பட்டவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்தது. அந்நாட்டின் தொடர்புத்துறை அமைச்சர் அன்னிக்கா வெல்ஸ் (Anika Wells) இது பற்றிக் குறிப்பிடும்போது, “சமூக ஊடகங்கள் சிறார்களை இயங்குநிலை உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு (online purgatory) இழுத்துச் செல்கிறதுஎன்று குற்றம் சாட்டுகிறார். மேலும், “சமூக ஊடகங்களை இயக்கும் நெறிப்பாட்டுமுறை (algorithm) சிறார்களின் நடத்தையில் போதை யூட்டியாக (behavioral cocaine) இருந்து அவர்களின் முழுமனித வளர்ச்சியைப் பாதிக்கிறதுஎன்கிறார். பல்வேறு ஊடக அறிஞர்கள் மற்றும் இணையச் செயற்பாட்டாளர்கள் இதற்கு எதிர்வினையாற்றினாலும், சிறார்களின் பாதுகாப்பிற்காக ஒரு நாடு திட்டமிடுகிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியே.

ஆஸ்திரேலியாவைப் போன்று இன்று பல நாடுகள் சமூக ஊடகங்களைச் சிறார் பயன்படுத்துவதற்கு எதிராகச் சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கின்றன. டென்மார்க், சீனா, பிரான்ஸ், பிரிட்டன், மலேசியா, அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளும் சில வழிகாட்டுதல்களையும் சட்டங்களையும் சிறார்களை இணைய ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கக் கொண்டு வந்திருக்கின்றன.

அதிகமாக, சமூக ஊடகங்களை நுகரும் சிறார்கள் அதிகமாக உளநலப் பாதுகாப்புகளை எதிர்கொள்கின்றனர். தங்கள் உடல் பற்றிய எண்ணத்தில் எதிர்கருத்துகளைக் கொண்டுள்ளனர்தங்களை எப்போதும் இணைய உலக ஆளுமைகளோடு ஒப்புமைப்படுத்தித் தங்களைக் கீழ்த்தரமாகப் பார்க்கின்றனர். எனவே, இத்தகைய சமூக ஊடகத் தடை என்பது சிறார்களை நல்வழிப்படுத்தி, அவர்களை மனப்பிறழ்வுகளிலிருந்தும் தூக்கமின்மையிலிருந்தும் பாதுகாக்கும் என்கின்றனர் அறிஞர்கள்.

யானை வெடிக்கு ஆசைப்பட்டு திருவிழா மகிழ்ச்சி திவாலானது போல, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது சிறார் தங்கள் கைகளை மட்டுமல்ல, தங்கள் அறிவையும் ஆற்றலையும் பாழ்படுத்திக்கொள்கின்றனர்.

(தொடரும்)