“எழிலின் நிறைவாம் சீயோனின்று ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள்” (திபா 50:2).
பேரொளியான
இறைத்தந்தை நம்மில் ஒளியாக ஒளிர்வது அவரது பேரன்பின் நிலைப்பாடு. இது நிறைவாக நமது அன்பு உறவில், ஆற்றல்மிக்கச் செயல்கள் வழியாக வெளிப்படுகிறது. இதற்குத் திறந்த மனத்துடன் இறைத்தந்தையின் கரங்களில் நம்மை முழுமையாக அர்ப்பணித்துச் சரணடையும் பொழுது ‘அப்பா அனுபவம்’ பெறுகின்றோம். இயேசுவோடு நாமும் இணைந்து முழக்கமிட்டு அறிக்கையிடலாம்.
“என்னை அனுப்பியவர் (அழைத்தவர்) என்னோடு இருக்கிறார்; அவர் என்னைத் தனியே விட்டுவிடுவதில்லை; ஏனெனில் நான் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்” (யோவா
8:29).
தந்தைக்கு
உகந்த வாழ்வு பற்றிய தெளிவான ஞானம், அப்பா அனுபவம் மிக்க வாழ்வு வாழச் செய்யும். நம்மை ஒளியின் மக்களாக ஒளிரும் பேறுபெற்றோர் என்று உயர்த்தும். ஏனெனில், “ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது” (எபே
5:9).
உண்மையைச்
சார்ந்து செய்யும் நன்மைகள்தான் சுடர்விடும். இறை நம்பிக்கை ஆழப்பட்டு, இறைவார்த்தையை வாழ்வாக்கும் இயேசுவின் சீடராக வாழ உறுதிசெய்ய தூய ஆவியாரால் இயக்கப்படுபவர்களாக ஒளியேற்றும் விளக்குகளாவோம். இந்த விளக்குகளுக்கு எண்ணெயாக நிலைப்பது இறையருள் என்பது நிதர்சனமான உண்மை. இறையருள் வழங்கும் இயேசுவின் நெருக்கமான தோழமையை அனுபவித்து அன்புப் பணி ஆற்றும்பொழுது ஒளியின் மக்களை உருவாக்க முடியும்.
“இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு ஒளியின் படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக”
(உரோ 13:12); “கடவுளின் ஆவியாரால் இயக்கப்படுகின்றவர்களே கடவுளின் மக்கள்”
(உரோ 8:14).
புனித
யோவான் தன் திருமடலில் குறிப்பிடுவதுபோல, “யாரெல்லாம் ஆண்டவருடைய ஒளியில் நடக்கின்றார்களோ, அவர்கள் ஆண்டவரோடும் மற்றவரோடும் நட்புறவு கொண்டிருக்க முடியும்”
(1யோவா 1:7). மேலும், ஆண்டவருடைய ஒளியின் வழியில் நடந்து, நாம் அவரோடு நட்புறவு கொண்டிருக்கும் பொழுது பேரொளி நமக்குள்ளும் நம்மைச் சூழ்ந்தும் சுடர்விட, நாம் மட்டுமல்லாமல் நம்மோடு உறவாடும் அனைவரும் ஒளியின் மக்களாக விளங்குவர்.
நம்
செயல்கள் நன்மையானவையாக ஒளிரும் பொழுது இறைவன் மாட்சி அடைகின்றார். நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறுகின்றது. “ஏனெனில்,
நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நாம் நற்செயல் புரிந்து வாழும்படி, கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்” (எபே
2:10).
நம்
வாழ்வில் நாம் இறைவனின் திட்டப்படி நன்மைகள் புரிய வியத்தகு வகையில் அவர் செயலாற்றுவதை நாம் அனுபவித்திருப்போம். இத்தகைய ஓர் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ந்து இறைவனை மாட்சிப்படுத்துகின்றேன்.
மதுரையில்
கணவனைப் பிரிந்து, தன் ஒரே மகனோடு வாழும் தாயைச் சந்தித்தேன். 15 வயது நிரம்பியும் திருமுழுக்குப் பெறவில்லை. இந்த நிலையில், அந்தத் தாய்
கத்தோலிக்கத் திரு அவைச் சட்டப்படி அருளடையாளங்களில் பங்குபெறத் தடைசெய்யப்பட்டதால் பெயரளவுக்குக் கிறித்தவர்களே. இந்தச் சூழ்நிலையில், மீட்பின் கருவியாகச் செயலாற்றி, ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ வழிகாட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
திரு
அவை ஒழுங்குமுறைப்படி அத்தாய் பரிகாரம் செய்து, மீண்டும் உண்மைக் கத்தோலிக்கக் கிறித்தவ வாழ்வு வாழத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அந்த இளைஞனுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்து, திருமுழுக்கு, நற்கருணை, உறுதிபூசுதல் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்பொழுது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அந்த மகன், பொறுப்பு நிறைந்த கத்தோலிக்கக் கிறித்தவ மகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். எத்தனை பொறுப்பு என்றால், கல்லூரிக்குச் செல்லும் முன்பும், கல்லூரியில் இருந்து வந்த பின்பும், வேலைக்குச் சென்று தன் படிப்புக்குத் தேவையான பணம் சம்பாதித்துத் தாய்க்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் உடன் பயணிக்கின்றான்.
கிறித்தவக்
கடமைகளையும் நிறைவேற்றுவதில் இவர்கள் இப்போது கருத்தாய் இருக்கின்றனர். இவர்களை நினைக்கும்பொழுது நான் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன். அண்மையில் நான் மருத்துவமனையில் இருக்கும் பொழுது என்னைத் தங்கள் உடன்பிறப்பாகக் கவனித்துக் கொண்டார்கள். “மிகச்
சிறியோராகிய என் சகோதர-சகோதரிகளுக்குச் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத்
25:40) என்ற இயேசுவின் கூற்று இவர்களில் நிறைவேறுகின்றது.
இறைத்தந்தையின்
ஆசிபெற்றவர்கள் இவர்களைப் போன்ற நன்மனம் உள்ளவர்கள் பேறு பெற்றோர். விண்ணகச் செல்வம் சேர்ப்பவர்கள் இத்தகையோரே. நாமும் உண்மையைச் சார்ந்து நன்மை மட்டுமே செய்யும் பேறுபெற்றோராவோம். பேரொளியின் ஒளியாக ஒளிரும் அருள் நிறைந்த நம்பிக்கையாளர்களாகி, இறைத்
தந்தையின் பேரன்பில் மகிழ்ச்சி கொண்டவர்களாக அவரை என்றென்றும் மாட்சிப்படுத்துவோம்.