தூய ஆவியார் வருகையின் துணிவால் சீடர்கள் அனைவரும் ஒருநாள் ஒன்றுகூடி நற்செய்திப் பணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர். தங்கள் தலைவரின் நற்செய்தியை எங்கே, எவ்விதம் கொண்டு செல்வது என்று வெகுநேரம் ஆலோசித்தனர். உலகமெங்கும் பரவிச் செல்ல முடிவெடுத்த அவர்கள் யார், எந்தப் பகுதிக்குச் செல்வது என்பதில் சிறிது குழப்பம் ஏற்படவே இறுதியாக, சீட்டுப் போட்டுப் பார்த்து எவரெவர் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமென்று குறிப்பிடப்படுகிறதோ அதன்படி அந்நாடுகளுக்குப் பயணிக்கலாம் எனத் தீர்மானித்தனர். இறைவேண்டுதலோடு திருவுளச் சீட்டும் போடப்பட்டது. அதன்படி தோமா தான் செல்ல வேண்டியது இந்தியப் பகுதி என்றவுடன் அதனை ஏற்றுக்கொள்ள அவரிடம் பெரும் தயக்கமே தலைதூக்கி நின்றது.
1955-ஆம் ஆண்டு
டிசம்பர் 18 அன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற புனித தோமா நினைவுநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் காலஞ்சென்ற டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் தம் உரையின்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
“நினைவில் கொள்ளுங்கள்... புனித தோமா இந்தியா வருவதற்குமுன் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கிறித்தவத்தை அறிந்திருக்கவில்லை. புனித தோமாவின் வருகைக்குப்பின் இந்தியர் கிறித்தவத்தைத் தழுவியதால் மற்ற பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைப்போல் அல்லாமல் நீண்ட வரலாறும் உயர்ந்த வழிமரபும் கொண்டதாகக் கிறித்தவம் இந்தியாவில் விளங்குகிறது. இது உண்மையில் நாமெல்லாம் பெருமை கொள்ளக்கூடிய செய்தியாகும்.”
குடியரசுத்
தலைவரின் கூற்று உண்மைதான். இயேசுமீது பற்று வைத்து, இந்தியாவில் தோமா ஆற்றிய நற்செய்திப் பணிதான் கிறித்தவத்தை இந்நாட்டில் வேரூன்றச் செய்தது.
இயேசுமீதான
தோமாவின் பற்று என்பது இயேசுவின் அழைப்பில்தான் நிலைபெற்றது. இயேசுவை தோமா தன் குருவாக ஏற்றுக்கொள்ளும்போது அவருக்கு வயது 29. திருமணம் முடித்திருந்த அவர் ஆரம்பத்தில் தச்சுத் தொழிலையே செய்துவந்தார். பின்னரே அவர் மீன்பிடித் தொழிலுக்கு வந்தார். கலிலேயாவில் தாரிகே என்ற பகுதியில் குடியிருந்து வந்தார். அவருடைய பெற்றோர் திபேரியாவில் வசித்து வந்தனர்.
தோமாவின்
பெற்றோர் அவரின் சிறுவயதில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்ததால், தோமாவின் இளம்பருவம் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. தன் குடும்பச் சூழலில் அவர் சிறுவயதிலேயே கடின மனதுடையவராக வளர்ந்தார். அரமாயிக் மொழி பேசிய தோமா, மற்ற யூதர்களைப் போலவே சராசரி கல்வியறிவு கொண்டிருந்தாலும் எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறன் கொண்டு விளங்கினார். சிறுவயதிலிருந்தே அறிவியல் மனப்பான்மை அவருள் வளர்ந்தது.
‘யூதா’ என்ற இயற்பெயர் கொண்ட அவரிடம் ‘தோமா’ என்ற கிரேக்கப் பெயர் பின்னர் இணைந்திட, ‘யூதா தோமா’ என்று அழைக்கப்பட்டார். இதற்கு ‘இரட்டையராகிய யூதா’ என்று பொருள். இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. தோமாவுக்கு ஒரு சகோதரி இருந்திருக்கிறார். இருவரும் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்றும், தோமாவுக்கு ஒன்பது வயது நடக்கும்போது அந்தச் சகோதரி இறந்துவிட்டதாகவும் தெரிகிறது.
நற்செய்தியாளரான
மத்தேயு தோமாவை ஏழாவது இடத்திலும், மாற்கு, லூக்கா இருவரும் அவரை எட்டாவது இடத்திலும் குறிப்பிடுகின்றனர். எனினும், தோமாவை மற்ற சீடர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோமானால் பலவித வேறுபாடுகள் தென்படுகின்றன.
பேதுருவுக்கு
அதிகாரம் இருந்தது. யோவான் இயேசுவின் அன்புக்குரிய சீடராக இருந்தார். அந்திரேயாவும், பெரிய யாக்கோபும் இவ்விருவரிடமும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். பிலிப்பு, பர்த்தலோமேயு இருவரும் நட்பைப் பகிர்ந்து கொண்டார்கள். யூதா ததேயு, சின்ன யாக்கோபு, கானாவூர் சீமோன் ஆகியோர் இயேசுவின் உறவினர்களாக விளங்கினார்கள். மத்தேயு வரி வசூலிக்கும் பெரிய பொறுப்பிலிருந்து சீடரானவர். யூதா இஸ்காரியோத் பணத்தை வைத்திருக்கும் அளவுக்குப் பெரிய நபராக இருந்தார். ஆனால், தோமா என்ன பின்னணியில் இயேசுவின் சீடராக மாறினார் என்பது தெரியவில்லை.
மேலும்,
திருத்தூதர்களில் ஏழு பேர் மட்டுமே அவர்கள் அழைக்கப்படுவதற்கு முன்னமே நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். தோமா உள்பட யூதா ததேயு, சின்ன யாக்கோபு, சீமோன், யூதாஸ் இஸ்காரியோத் ஆகிய ஐந்து பேரும் அழைக்கப்பட்ட விதம் நமக்குத் தெளிவாகவில்லை.
பன்னிரு
சீடர்களும் இயேசுவோடு இருக்கையில் அவரவர் சில பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர். பர்த்தலோமேயு திருத்தூதர்களின் பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பையும், பிலிப்பு உணவு தயாரிக்கும் பொறுப்பையும், அல்பேயுவின் மகனாகிய சிறிய யாக்கோபு, யூதா ததேயு இருவரும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துபவர்களாகவும்
பொறுப்பேற்றிருந்தனர்.
யூதாஸ் இஸ்காரியோத் பணக் கணக்குப் பார்க்கும் பொறுப்பில் இருந்தார்.
இயேசுவும்
சீடர்களும் நற்செய்திப் போதிப்பதற்கு ஏதுவாக ஊர், இடம், காலம், நேரம் ஆகியவற்றை வடிவமைக்கும் பொறுப்பு தோமாவுக்குக் கிடைத்தது. அவர் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பணியைத் திறம்படச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இயேசுவின் சீடர்களில் துணிவு மிகக்கொண்டவர்கள் பேதுருவும், செபதேயுவின் மகனான பெரிய யாக்கோபும் என்று கருதப்பட்டாலும், தோமாவும் மிகத் துணிவு உடையவராகவே விளங்கினார்.
தோமாவிடம்
காணப்பட்ட துணிவு, நம்பிக்கை இரண்டுமே வியப்பூட்டும் விதமாக இருந்தன. ஒருமுறை இயேசு தம் பாடுகளை முன்னறிவிக்கும் போது தலைமைச் சீடரான பேதுரு குறுக்கிட்டு, “ஆண்டவரே, இது உமக்கு வேண்டாம்”
என்று தடுத்ததை அறிவோம். இயேசுமீது கொண்டிருந்த அன்பின் மிகுதியால் பேதுரு அப்படிக் கூறியிருந்தாலும், அவருக்கும் சற்றே பயம் இருந்தது. பாடுகள் பற்றிக் குறிப்பிடும்போதே பேதுரு இலேசாக அஞ்சினார் என்றால், பாடுகள் பட இயேசு புறப்படும்போதே
“வாருங்கள், நாமும் போவோம்; அவரோடு இறப்போம்”
என்று இயேசுவின்மேல் வைத்த பற்றுறுதியோடும், அசாத்தியமான துணிவோடும் தோமா மற்ற சீடர்களை அழைத்தார்.
தோமா
இவ்வளவு துணிவுள்ளவராக இருந்தாலும், அவ்வப்போது மனச்சோர்வு கொண்டவராக இருந்தார். அவர் இப்படி இருக்கக் கண்டால் பர்த்தலோமேயு அவரைத் தேற்றுவதைக் கடமையாகக் கொண்டார். பேதுரு தோமாவை நன்கு புரிந்து வைத்திருந்தார். தோமா மனச்சோர்வு கொள்ளும்போது இயேசுவுடன் தொடர்புகொள்வதே கிடையாது என்றும் கூறப்படுகிறது. தோமாவிற்கு இயேசுவிடம் பிடித்தது அவருடைய தடுமாறாத நிலையான மனது என்றால், சந்தேகக் குணமுடைய தோமாவிடம் இயேசுவுக்குப் பிடித்தது தோமாவின் நேர்மைதான்.
தோமாவின்
அந்தச் சந்தேக குணம்தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் அவரை, ‘சந்தேகத் தோமா, ஐயப்பாட்டுத் தோமா’ என்று அழைக்க வைத்திருக்கிறது. அவருடைய சந்தேகம்கூட உயிர்த்த இயேசுவை அவர் தரிசித்ததால் ஆசிர்வாதமாக மாறிப்போனது.
உயிர்த்த
இயேசுவைச் சந்தித்த மற்ற திருத்தூதர்களுடன் தோமா ஏன் காணப்படவில்லை என்பதற்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. மனச் சோர்வுகொள்ளும் இயல்புடைய அவர் இயேசுவின் பாடுகளை அறிந்து மனமுடைந்து போனவராய் எங்கேனும் சென்றிருக்கலாம். உயிர்த்த இயேசுவைக் கண்ட ஆனந்தத்தில் மற்ற சீடர்கள் “ஆண்டவரைக் கண்டோம்” என்றபோது ‘ஆண்டவரின் விலாவில் விரல் விட்டுப் பார்த்தாலன்றி நம்ப மாட்டேன்’
என்று கூறும்போதே தோமாவின் ஐயக்குணம் வெளிப்பட்டது.
மற்ற
திருத்தூதர்முன் இயேசு தோன்றும்போது தோமா அருகில் இல்லை. எம்மாவு கதையில் இயேசுவைச் சந்தித்த சீடர்கள் தெரிவித்த செய்திகளிலும் அவர் முழுநம்பிக்கைகொள்ளவில்லை. அவருக்குள் இருந்த ஒரே பெரிய கவலை, இயேசுவைத் தரிசித்ததன் மூலமாக மற்ற சீடர்கள் அனுபவித்த இறைமகிழ்ச்சியை, இறையனுபவத்தைத் தான் அனுபவிக்க முடியவில்லையே என்பதுதான்.
ஆனால்,
தோமாவின் நேர்மைமீது பற்றுக் கொண்டிருந்த இயேசு, திருத்தூதர்கள் கூடியிருந்த அறையில் நேரில் தோன்றி தோமாவிடம், தம் விலா காயத்தைத் தொட்டுப் பார்க்க அனுமதியளித்து அவருடைய ஐயத்தைப் போக்கியதுடன், அவருடைய சந்தேகக் குணத்தை மன்னிக்கவும் செய்கிறார். அன்று தெய்வீக உண்மையும், மனித இயல்பிலான ஐயமும் நேருக்கு நேர் சந்திக்கையில், இறையுண்மையின் முன் மனித ஐயம் காணாமல் போகிறது. இதனால்தான் தோமாவால் தன்னையறியாமல் ‘என் ஆண்டவரே, என் கடவுளே’ என்று வாய்விட்டு நம்பிக்கை அறிக்கையிட முடிகிறது. ஐயம் நீக்கப்பட்டது அவருக்கு மட்டுமல்ல; அவர் வழியாகக் கிறித்தவச் சமூகத்திற்கும்தான்.
இந்நிகழ்வு
தொடர்பாக ஒரு பாரம்பரியச் செய்தியும் உண்டு. இயேசுவின் விலாக்காயத்தைத் தொட்ட தோமாவின் கரம் செந்நிறக் கறையைக் கொண்டிருந்தது என்றும், அந்தக் கறை தோமா மரிக்கும்வரை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, தன் தலைவரின் காயத்தைத் தொட்ட தோமாவின் கரம், வாழ்நாள் முழுக்க இயேசுவை நினைவூட்டுவதாகவே இருந்தது என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேலும், இந்த நம்பிக்கை மற்ற திருத்தூதர்களைக் காட்டிலும் வெகுதொலைவில் சென்று நற்செய்திப் பரப்பும் பணிக்கு அவரைத் துணிவுடன் இயங்க வைத்தது என்றால் அது மிகையாகாது என்றே கொள்ளலாம்.
இயேசுவின்
நற்செய்தியைப் பரப்ப மிகுந்த ஆர்வம் கொண்ட தோமா தொடக்க காலத்தில் தம் நாடுவிட்டு கண்காணாத தொலைவில் செல்லத் தயக்கம் கொண்டவராகவே இருந்தார். அதனால்தான் எருசலேமில் ஒருநாள் அனைத்துத் திருத்தூதர்களும் ஒன்றுகூடி சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளை முடிவு செய்தபோது, தோமா இந்தியப் பகுதிகளுக்குச் செல்லவேண்டும் என்று சீட்டு விழுந்தவுடன் அவர் மிகவும் தயங்கினார்; அதற்குக் காரணமும் இருந்தது.
‘அரமாயிக் மொழி மட்டுமே தெரிந்திருந்த யூதனான நான், இந்தியப் பகுதிகளில் எப்படி நற்செய்திப் பணி செய்யமுடியும்? அப்பகுதி மொழிகளின் பெயர்களைக்கூட அறிந்திராத நிலையில் எப்படி அம்மக்களிடம் தொடர்பு கொள்ள முடியும்? அவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா?’ என்று குழம்பியதோடு அதை மற்ற திருத்தூதர்களிடம் வினாவாகவும் எழுப்பினார்.
கூடியிருந்த
மற்றவர்கள் ‘தோமா, இது இறைவனின் சித்தம். உம்மைப் போலத்தான் நாங்களும் நமக்குத் தொடர்பே அல்லாத தேசங்களுக்குச் செல்லவிருக்கிறோம். உமக்கு ஏன் தயக்கம்? உலகெங்கும் போய் நற்செய்தியை அறிவியுங்கள் என்றுரைத்த நம் ஆண்டவரின் கட்டளையைத்தான் நாம் நிறைவேற்றப் போகிறோம்’
என்று அவரைத் தைரியப்படுத்தினர். ஆனாலும், தோமாவின் தயக்கம் எளிதில் மாறவில்லை, பிடிவாதமும் போகவில்லை.
துணிச்சல்
மிக்கவரும், எதையும் ஆராய்ந்து உணர்பவரும், பிடிவாதக் குணமும் உள்ளவரான தோமாவின் மனம் இந்தியப் பகுதிகளுக்குப் போவதை மறுத்துப் பிடிவாதமாக இருந்த நிலையில் ஓர் இரவு இயேசு அவருக்குத் தோன்றி “பயப்படாதே தோமா, இந்தியப் பகுதிக்குச் சென்று நற்செய்தியை அறிவி. நான் உன்னோடிருக்கிறேன்” என்றுரைக்க,
தன்னுடைய உணர்வுகளை மறைத்துப் பழக்கமில்லாத தோமா, “எங்குப் போனாலும் நான் இந்தியா பக்கம் மட்டும் போகமாட்டேன்” என்று
முரண்டு பிடித்தார். இயேசுவும் அவரின் பிடிவாதத்தைக் கண்டு புன்னகைத்து மறைந்துபோனார்.
இயேசு
தோன்றி மறைந்தபின் தோமா இப்போது இரட்டை மனநிலைக்கு ஆளானார். ‘இந்தியப் பகுதிகளுக்குப் போகவே மாட்டேன்’
என்று பிடிவாதமாய் இருந்தவர் இப்போது ‘போவதா? வேண்டாமா?’ என்ற குழப்பத்திற்கு உள்ளானார்.
(தொடரும்)