காமராசர் சுருக்கமாகவே பேசுவார். ஆனால், அவர் செயலில் தீரமுண்டு. எடுத்த காரியத்தை முடித்துவிடுவார். படிக்காத மேதையாக விளங்கிய இவர், மிகவும் புத்திக்கூர்மையுடன் எந்தக் காரியத்தையும் தொடங்குவார். செயலில் கெட்டிக்காரர். பேச்சுத்திறமை இல்லை என்று சொல்லிவிட முடியாது. பேச்சிலும் வல்லவர்தான். ஆனால், மக்கள் மொழியில் அளந்தேதான் பேசுவார்.
திருவள்ளுவர்
கூறுவது போல,
‘ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல்
சொல்லின்கட் சோர்வு’
(குறள் 642)
என்பதை
அறிந்து திறம்பட காமராசர் நடந்தார். இனி இவர் பேசிய முறை, மக்களின்பால் கடமை செய்யத் தூண்டிய வகை பற்றி அவர் சொற்பொழிவுகளிலிருந்தே ஆராய்வோம்:
“நாடு ஒற்றுமை அடையவேண்டும். இதற்காக முதலில் வேண்டுவது சாதி, மத பேதம் ஒழிவது;
உயர்வு-தாழ்வு என்பது கூடாது; சுதந்திரம் பெற்றது ஒற்றுமையினால்; இனி புதிய சமுதாயத்தை உருவாக்குவதும் ஒற்றுமையினாலேயே!
சுதந்திரம்
அடைந்த பாரதம், இனி முன்னேறும் பாணியில்தான் இருக்கவேண்டும். புதியதொரு சமுதாயம் உருவாகவேண்டும். இதற்குச் சட்டம் போட்டு ஆவது ஒன்றுமில்லை. பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் மட்டும் புதுமை செய்துவிட முடியாது. மக்களிடத்தில் ஒரு மனப்புரட்சி, மன எழுச்சி, மனவேகம்
ஏற்பட்டாகவேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் பெருகும்.
இன்றைய
சிறுவர்கள் மூலமே வருங்காலப் பாரதம் உருவாகவேண்டும். மாணவர்களிடையே தன்னம்பிக்கை நிலவவேண்டும். தமது தேவைகளைத் தாமே பூர்த்தி செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு இருந்தால்தான் அவர்கள் மகத்தான சாதனைகள் பல புரியமுடியும்.
புத்திக்
கூர்மையுடையவர்கள் சிலர், அவர்கள் தமது மிகுந்த அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி முன்னேறுகிறார்கள். அதை நாம் தடுக்க முடியாது. சொல்லப்போனால், உடல் வலிமை மாத்திரம் அதிகாரத்தைக் கவர அடிப்படை அல்ல; அறிவும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது.
அறிவு
பரம்பரைச் சொத்தல்ல; அது ஆள்களைப் பொறுத்துள்ளது. ஆனால், அது பலவீனமானவர்களுக்குச் சரியான வசதிகள் அமைத்துத் தருவதால், அவர்களையும் சமுதாயத் தலைவர்களாக, அறிவாளிகளாக ஆக்கிவிடலாம். பெரிய பணக்காரர்களை அவர்களிலும் புதுப் பணக்காரர்களை நாட்டில் அவர்களது விருப்பம் போல் விட்டுவிடக்கூடாது. அவ்வாறு செய்தால், அவர்கள் ஏழைகளை உறிஞ்சும் அட்டைகளாக மாறிவிடுகிறார்கள். அப்போது பணக்காரன் பணக்காரனாகத்தான் இருப்பான்; ஏழை இன்னும் கூட தாழ்ந்த நிலையில்தான் இருப்பான். இதனால்தான் பணக்காரர்களின் வசதிகளை ஓரளவு குறைக்க வேண்டியுள்ளது.
நம்
நாடு பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. நாம் சுதந்திரம் பெற்றது அண்மையில்தான். நம் நாடு முன்னேற வேண்டுமாயின் வறுமையும் அறியாமையும் போகவேண்டும். அதற்கான திட்டங்கள் போட்டு நாம் அவற்றைச் செயலாற்ற வேண்டும்.
இவையெல்லாம்
வேண்டியவைதான். ஆனால், சூழ்நிலை அவ்வளவு சாதாரணமாக அமைந்து விடவில்லையே! சமுதாயத்தினிடையே விழிப்புணர்வு இருக்கவேண்டும். இவை அற்றுப்போய் விட்டால் காரியங்கள் நடக்கமுடியாது. மக்களுக்குப் பேச்சுரிமைதான் இருக்கிறதே! ஆகவே, எதையும் துணிந்து சொல்லவேண்டும். இவை நல்லமுறையில், ஒழுங்குடன் இருந்தால், எவ்வளவோ சாதிக்க முடியும்.
இப்போதுள்ள
சூழ்நிலைகளில் அவ்வப்போது சமூக, பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்குத் தேசிய அடிப்படையில் பாடுபடவேண்டும். எல்லாரும் ஒரே தொழிலில் கவனம் செலுத்தக்கூடாது. பல்வேறு துறைகளில், பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்த வேண்டும். அதையும் பகிர்ந்து கொள்ளவேண்டும். வாழ வழி வகுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, வேதாந்தம் பேசுவதில் பயனில்லை.
ஒற்றுமை
பல காரியங்களைச் சாதிக்கும். ஊருக்கு நல்லது செய்வதில் எல்லாரும் ஒருமைப்படவேண்டும். அவரவர் தேவைகளை அவரவர் பூர்த்திசெய்து கொள்ளவேண்டும். முக்கியமாக இது கிராமங்களில் நிலவ வேண்டியது அவசியம். மக்கள் தத்தம் பொறுப்புகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும். சுயநலமில்லாமல் ஒற்றுமையுணர்ச்சியோடு மக்களுக்குச் சேவை செய்ய முன்வருபவர்களுடைய வாழ்வு சிறக்கும், செழிக்கும்.
மக்கள்
ஒரு காரியத்தை நன்கு உணர வேண்டும். இப்போது மிகுந்த தேவை ஏற்பட்டுவிட்டது. அதனால் ஆட்சி சரியில்லை என்று சொல்லிவிட முடியாது. வாழ்வில் வசதி ஏற்பட்டால், தேவை வரத்தான் செய்யும். தேவை இல்லாவிட்டால் வாழ்வு செயலற்றுப் போய்விடும். தேவைகள் ஒரு நாட்டில் இல்லையென்றால், அங்கு எப்படி வளர்ச்சி இருக்கமுடியும்? இல்லையென்றே பொருள்.
எத்தனை
கோட்பாடுகள், கொள்கைகள் ஒரு நாட்டில் இருந்தாலும், நாட்டில் அமைதிவேண்டும். கொள்கைகள், வேறுபாடுகள் காரணமாக அமைதி குலையக்கூடாது. இந்தச் சூழ்நிலை குலைந்தால் மக்கள் வாழ்வே குலையும். நம் சக்திகள், தேசச் செல்வங்கள் பாழாய்ப் போகும். அமைதியைக் காக்க இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் பொறுப்புண்டு. இதற்கெல்லாம் சனநாயக அடிப்படையில்தான் தீர்வு காண வேண்டியிருக்கிறது.
நாட்டில்
மொத்தத்தில் எல்லாரும் நல்லவர்களாக இருந்துவிட முடியாது. அவ்வாறு இருந்தால் சட்டம் கூட வேண்டாமே! இது நடக்கக்கூடிய காரியமா? ஆளும் உணர்ச்சியே கொண்ட பணக்காரர் சிலர் ஏழையரைக் கசக்கிப் பிழிகிறார்களே? அப்படியானால் உழைப்பவன் காலமெல்லாம் பிறர் செய்யும் தர்மத்தை எதிர்பார்த்து ஏங்கிச் சீரழிவதா? இதுதான் தர்மமா?
நமது
நாடு பரந்துபட்டது. இங்குப் பலர், பல இனத்தவர், பல
மொழியினர் இருக்கிறார்கள். நாம் இந்த வேறுபாடுகளைப் பாராட்டக்கூடாது. வேறுபாடு வளர்ந்தால் நாட்டில் பல தகராறுகள் ஏற்படும்.
நாடு முன்னேற வழி இராது. நம்மில் ஒற்றுமையில்லையேல் அனைவருக்கும் தாழ்வுதான். நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்.”
காமராசர்
கவர்ச்சியாகப் பேசத் தெரியாதவர்தான். ஆனால், அவரது கருத்துகள், பேச்சுகள் நமது சிந்தனையைத் தூண்டுவதென்னவோ உண்மைதானே?