“அணு ஆயுதப் பெருக்கத்தால் அல்ல; மாறாக, படிப்படியான ஆயுதக் குறைப்பால் மட்டுமே உலக அமைதியை உருவாக்க முடியும்” என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘ஆயுதங்களற்ற நிலை: அமைதி ஒரு கொடை’என்ற அவரது புதிய நூலில் இக்கருத்துகள் இடம்பெற்றுள்ளன. உலக அளவில் உக்ரைன், மத்திய கிழக்கு, சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட 103 நாடுகள் போரில் ஈடுபட்டுள்ள சூழலைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, “மூன்றாம் உலகப்போர் துண்டு துண்டாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது” என்று கவலை தெரிவித்துள்ளார். அணு ஆயுதப் போட்டியும், நவீனத் தொழில்நுட்பச் சேர்க்கையும் மனிதகுலத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக எச்சரித்துள்ளார். அமைதி என்பது தனிநபரின் அன்றாட நடத்தையிலிருந்தும், மன்னிக்கக்கூடிய மனப்பக்குவத்திலிருந்தும் தொடங்குகிறது என்றும், அது அணு ஆயுதங்களின் அச்சுறுத்தலால் ஒருபோதும் சாத்தியமாகாது. இயந்திரங்கள் முடிவெடுக்கும் நவீன உலகில் மனிதச் சான்றாண்மையே பேரழிவைத் தவிர்க்கும். எனவே, வன்முறையற்றப் பாதையில் பயணித்து அமைதியைக் கட்டியெழுப்ப உலக மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.