நாட்டின் குடிமகன் என்பவன் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வாக்குச் சீட்டில் விரல் வைப்பவன் மட்டுமல்ல; தன் நாட்டின் ஒவ்வொரு நகர்வையும் விழிப்புணர்வோடு கவனிப்பவன். ‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாவதூ உம்’ என்று சிலப்பதிகாரம் பாடிய தமிழ் மண்ணில் இன்று ‘அரசியல்’ என்ற வார்த்தையே ஒரு சாக்கடையாகவும், தீண்டத்தகாத ஒன்றாகவும் சித்தரிக்கப்படுவதுதான் நம் காலத்தின் ஆகப்பெரும் சாபக்கேடு. ‘நமக்கு ஏன் அரசியல் வம்பு? பிள்ளைகளைப் படிக்க வையுங்கள், நல்ல வேலைக்கு அனுப்பப் பாருங்கள்’ என்று கைகளைக் கழுவிக்கொள்ளும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மனநிலை, ஒரு சுயநலச் சமூகத்தையே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.
அரசியல்
என்பது ஏதோ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் சாவடிக்குச் சென்று, முத்திரை குத்திவிட்டு வரும் வெறும் ‘சடங்கு’ அல்ல; அது நாம் சுவாசிக்கும் காற்று. நாம் வாங்கும் தீப்பெட்டி முதல் குழந்தைகளின் கல்விவரை அனைத்தையும் தீர்மானிக்கும் அந்த அரசியலை, ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தின் ஆன்மிகச் சூழலிலும், குடும்பப் பின்னணியிலும் வளரும் இக்காலக் குழந்தைகளுக்கு எப்படிப் புகுத்துவது? அதற்கு நாம் எங்கும் தேடிப் போக வேண்டியதில்லை; நம் வீட்டுச் சமையலறையும், சாப்பாட்டு மேசையுமே போதுமானது.
‘அரிசி சோறும் அரசியல் பேசும்’ என்று நாம் கூறுவது வெறும் அலங்கார வார்த்தை அல்ல; நம் தட்டில் இருக்கும் ஒவ்வொரு பருக்கைச் சோற்றுக்குப் பின்னாலும் ஓர் அரசியல் இருக்கிறது. “சென்ற மாதம் இந்த அரிசி என்ன விலை விற்றது? இந்த மாதம் ஏன் விலை கூடியிருக்கிறது? நெல் விளைவித்த விவசாயிக்குச் சரியான விலை கிடைக்கிறதா? இடைத்தரகர்கள் இலாபம் பார்ப்பது நியாயமா? நாம் ஏன் உணவை வீணாக்கக்கூடாது?” என்று சாப்பாட்டு மேசையில் குழந்தைகளோடு உரையாடலைத் தொடங்குங்கள். அங்கேதான் ‘பொருளாதார அரசியலின்’
முதல் புள்ளி குழந்தையின் மனத்தில் விதைக்கப்படுகிறது. விலையேற்றமும், விவசாயியின் கண்ணீரும் தற்செயலானது அல்ல; அரசின் கொள்கை முடிவு என்பதைக் குழந்தைகள் அங்கேதான் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள்.
இன்றைய குழந்தைகளுக்கு
அரசியல் புகட்டுவது எப்படி என்று நாம் யோசிக்கும்போது, நம் சொந்தக் குடும்பங்களின் வரலாற்றையே நாம் திரும்பிப் பார்க்கவேண்டும்.
சில
ஆண்டுகளுக்கு முன்னால் நம் கிராமத்துத் திண்ணைகளிலும், பெரிய கூட்டுக்குடும்பங்களின் முற்றங்களிலும் மாலையில் பெரியவர்கள் அமர்ந்துப் பேசும்போது, அங்கே நாட்டின் நிலவரங்களும், சமூகப் பிரச்சினைகளும் இயல்பாக விவாதிக்கப்படும். அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளும், அந்தப் பேச்சுகளைக் கேட்டு வளர்ந்தார்கள். யார் நல்லவர்? சமூகத்திற்கு யார் என்ன நன்மை செய்தார்கள்? என்பதை தாத்தா, பாட்டிமார் கதைகளாகக் குழந்தைகளுக்குக் கூறினார்கள். இதனால் அன்று குழந்தைகளுக்குத் தனிப்பாடம் எடுக்காமலேயே சமூக அறிவு தானாகவே இரத்தத்தில் ஊறியது.
இன்றைய
கால வரலாறு முற்றிலும் மாறிவிட்டது. கூட்டுக்குடும்பங்கள் மறைந்து, தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டன. சமையலறை, படுக்கையறை என்று சுவர்களுக்குள் சுருங்கிவிட்ட இன்றைய வீடுகளில், குழந்தைகளின் உலகம் மொபைல் திரைகளுக்குள் முடங்கிவிட்டது. பெற்றோரும், ‘குழந்தைகளுக்கு இதெல்லாம் வேண்டாம், மார்க் வாங்கினால் போதும்’ என்று சமூகத்திலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தி வளர்க்கிறார்கள். இந்த வரலாற்று மாற்றம்தான், இன்றைக்குக் குழந்தைகளிடம் சமூகப் பொறுப்பு குறைவதற்குக் காரணியாக அமைந்துவிட்டது.
நம்
வீட்டுக் குழந்தையிடம் முறையான சமூக விழிப்புணர்வையும், குடும்பப் பின்னணியில் இந்த வரலாற்றுப் புரிதலையும் நாம் புகுத்தத் தவறுவதன் விளைவை இன்றைய இளம்தலைமுறையினரின் சில பொதுவான போக்குகளைக் கொண்டே உணர்ந்துகொள்ள முடியும். நம் முன்னோர் காட்டிய அந்த இயல்பான சமூகச் சிந்தனைகளைத் தாண்டி, வெறும் ‘திரைப்படக் கவர்ச்சி’
மற்றும் தற்காலிக உணர்ச்சிப்பெருக்கின் காரணமாக மட்டுமே தங்களின் வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு மேலோட்டமான கலாச்சாரம் பெருகி வருகிறது.
சமூகப்
பொறுப்போ, தொலைநோக்குப் பார்வையோ, சித்தாந்தத் தெளிவோ இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கக்கூடிய ‘பகுத்தறிவுத் திறன்’ இன்றைய இளைய சமுதாயத்தில் பலரிடம் ஏன் பின்தங்கிப் போகிறது? காரணம், அவர்களின் சிறுவயதில் குடும்பங்கள் அவர்களுக்குச் சரியான வாழ்வியல் கல்வியையும், சமூகப் புரிதலையும் ஊட்டத் தவறியதே ஆகும். திரையில் தோன்றும் மாயப்பிம்பங்களை அப்படியே உண்மை வாழ்விலும் பொருத்திப் பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள், எதிர்காலச் சமுதாயத்தின் போக்கையே மாற்றிவிடக் கூடும் என்பதைப் பெற்றோர் குழந்தைகளுக்கு மென்மையாக உணர்த்த வேண்டிய தருணம் இது.
அரசியல்
என்பது பொழுதுபோக்குச் சினிமா அல்ல; அது மக்களின் வாழ்வாதாரப் போராட்டம். “ஒருவர் நல்ல நடிகராகவோ அல்லது பிரபலமானவராகவோ இருப்பதால் மட்டுமே அவர் நல்ல தலைவராக மாறிவிட முடியாது; அதற்குச் சமூகக் கூட்டுப் பொறுப்பும், தியாகமும், சித்தாந்தத் தெளிவும்வேண்டும்” என்பதை
நாம் குழந்தைகளுக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.
வெறும்
தனிநபர் வழிபாட்டு (Hero Worship) அரசியலிலிருந்து,
‘கொள்கை வழி’ அரசியலுக்கு நம் குழந்தைகளை மாற்றவேண்டும். ஒரு தலைவரை அவரது திரையுலகக் கவர்ச்சியால் அல்ல; அவரது கொள்கையாலும் செயல்பாட்டாலும் மட்டுமே எடை போடவேண்டும் என்ற அரசியல் முதிர்ச்சியை (Political Maturity) நம்
வீட்டுச் சாப்பாட்டு மேசையிலிருந்தே நாம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும்.
குடும்பம்
என்பது ஒரு நாட்டின் மிகச்சிறிய வடிவம். ஒரு நாட்டில் சனநாயகம் மலரவேண்டும் என்றால், அது முதலில் குடும்பத்தில் பழகப்பட வேண்டும். வீட்டில் ஒரு பொருளை வாங்கும் போதோ அல்லது ஒரு நல்ல நிகழ்வைத் திட்டமிடும்போதோ, குழந்தைகளையும் அமர வைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்கவேண்டும். ‘இது பெரியவர்கள் விசயம், நீ உள்ளே வராதே’ என்று
குழந்தைகளின் குரலை நசுக்குவது, எதிர்காலத்தில் சமூகத்தில் நடக்கும் பேரதிகாரத்தைச் சகித்துக் கொள்ளும் ஓர் அடிமைத் தலைமுறையையே உருவாக்கும். குடும்பத்தில் தங்களுக்குக் கிடைக்கும் கருத்துரிமைதான், நாளை நாட்டின் ‘வாக்குரிமையாக’ மாறும்
என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.
நமது
கத்தோலிக்கத் திரு அவையின் சமூகப் போதனைகள் (Social Teachings of the Church) குடிமைப் பொறுப்பையும்,
சமூக நீதியையும் மிக முக்கியக் கடமையாக வலியுறுத்துகின்றன. “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்”
(மத்தேயு 22:21) என்ற இயேசுவின் வாக்கு, நாம் வாழும் நாட்டின் சட்டங்களுக்கும், அரசியல் கடமைகளுக்கும் நம்பிக்கையாக இருக்கவேண்டும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
அரசியல்
என்பது வெறும் கட்சி சார்ந்தது அல்ல; அது நற்பண்புகள் சார்ந்தது. சுயநல அரசியலுக்கும், பொதுநல அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரவேண்டும். ஏழை எளியவர் மீதான அக்கறை, ஒடுக்கப்பட்டோருக்கான நீதி, பிற மதத்தினரை மதிக்கும் பன்முகத்தன்மை ஆகிய நற்பண்புகளை திருவிவிலியப் பின்னணியோடு ஒப்பிட்டுக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கலாம்.
இன்று
மொபைல் போன்களிலும், சமூக வலைதளங்களிலும் வன்முறையும், அவதூறுகளும் நிறைந்த போலி அரசியல் செய்திகளே அதிகம் வருகின்றன. இதைப் பார்த்துக் குழந்தைகள் அரசியலின்மீது வெறுப்பு கொள்ளக்கூடாது. மாலையில் குடும்பமாக அமர்ந்து செய்திகளைப் பார்க்கும்போது, நடப்பு நிகழ்வுகளைப் பிள்ளைகளுக்கு எளிய முறையில் விளக்கி, இதில் எது சரி, எது தவறு? இந்தச் செய்தியின் பின்னணி என்ன? என்று அவர்களைக் கேள்வி கேட்க வைக்கவேண்டும். ஒரு செய்தியை அப்படியே நம்பாமல், அதன் உண்மைத்தன்மையை ஆராயும் பகுத்தறிவை வீட்டிலிருந்தே பழக்கவேண்டும்.
இந்தியா
என்பது பல்வேறு மொழிகளும் பண்பாடுகளும் கொண்ட ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த அழகான தேசம். இந்தத் தேசத்தின் தூண்களாக மாறப்போகும் இக்காலக் குழந்தைகள், வெறும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மட்டும் வளர்ந்தால் போதாது; சமூகப் பொறுப்புள்ள, விழிப்புணர்வுள்ள குடிமக்களாக வளரவேண்டும்.
அரசியல்
என்பது அழுக்கல்ல; அது நம் சமூகத்தைத் தூய்மைப்படுத்தும் உன்னத ஆயுதம் என்பதை நம் வீட்டுக் குழந்தைகளுக்குப் புரிய வைப்போம். அன்று திண்ணைகளில் பழகிய அதே சமூக விழிப்புணர்வை, இன்று நம் வீடுகளில் குழந்தைகளுக்குக் கதைகளாகக் சொல்வோம். குடும்ப அறைகளில் பேசப்படும் ஆரோக்கியமான, வரலாற்றுத் தெளிவுள்ள, கொள்கை சார்ந்த அரசியலே, நாளை நாட்டின் நல்லாட்சியாக எதிரொலிக்கும்!