வகை வகையான உணவுகள் சாப்பிட நமக்கு ஆசை அதிகம். வகை வகையான எண்ணங்களை அதே ஆர்வத்தோடு அணுக முடியுமா? முடியாது. எண்ணங்களின் வகைகள், அவை ஏற்படுத்தும் விளைவுகள் அதிகம். ஒருசில உணவுகள் ஒரு சிலருக்கு எப்படி ஒவ்வாதோ அதேபோல, எனது எண்ணங்கள் பிறருக்கு ஒவ்வாமல் போகும்.
மனிதனின்
எண்ணங்களால்தான் அவனது உணர்வுகள், செயல்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கையின் தரம் நிலைநிறுத்தப்படுகிறது. மனத்தில் தோன்றும் ஒவ்வோர் எண்ணமும் நல்லதோ, கெட்டதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எண்ணங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, நம் வளர்ச்சிக்குத் தேவையான எண்ணங்களை வளர்ப்பது மிகவும் அவசியம்.
ஒரு
மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகப்பெரிய ஆற்றல் அவனுடைய எண்ணங்கள்தான். நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படைக் காரணம் நமது எண்ணங்கள்தான். நாம் இன்று இருப்பதற்குக் காரணம், நேற்று நாம் நினைத்த எண்ணங்களே. இப்படி வரையறை இல்லாமல் வகை வகையாக எண்ணங்களின் அவசியம், அது தரும் தாக்கம் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.
எண்ணங்களை
நாம் கவனமுடன் கையாண்டால் அதன் பலன் அதிகம். இல்லையென்றால் பின்விளைவுகள் நம்மைப் புரட்டியெடுக்கும். அறிவியல் தரவுகளின் அடிப்படையில் ஒரு நாளைக்கு நமக்குள் 50,000 முதல் 70,000 எண்ணங்கள் வந்து போகும் எனக் கூறப்படுகிறது. அதை ஒரு மணி நேரத்திற்கு என்று பார்த்தால், சுமார் 300 முதல் 3,000 எண்ணங்கள் வரை இருக்கலாம். தூக்கம், உணவு மற்றும் இன்னும் சிலவற்றைத் தாண்டி, ஒரு நாளைக்கு 16,500 எண்ணங்கள் நம் மனத்தில் தோன்றுகின்றன. இவை நாம் மனத்தில் எப்பவோ பதுக்கித் தேக்கி வைத்ததன் வெளியீடுதாம்.
இப்படித்
தோன்றும் எண்ணங்கள் பல வகைகளில் அடங்கும்.
அவற்றை நாம் நான்கு மிகப்பெரிய எண்ண வகைக்குள் அடக்கிவிடலாம்.
அவை:
1. நேர்மறை
எண்ணங்கள் (Positive Thoughts)
2. எதிர்மறை
எண்ணங்கள் (Negative Thoughts)
3. பகுத்தறிவு
எண்ணங்கள் (Critical Thoughts)
4. தேவையற்ற எண்ணங்கள் (Waste and Unwanted Thoughts).
1. நேர்மறை எண்ணங்கள்
(Positive Thoughts)
செயல்கள்
மீதான ஆர்வம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நல்ல எதிர்பார்ப்புகளை உருவாக்கும் எண்ணங்கள் நேர்மறை எண்ணங்கள் ஆகும். தன்னம்பிக்கையை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைத்து,
சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ள உதவுகின்றன. நல்ல உறவுகளை உருவாக்கி, வாழ்க்கையில் முன்னேற முழு ஊக்கத்தை இந்த நேர்மறை எண்ணங்கள் தருகின்றன. எல்லா நேரமும் நேர்மறை எண்ணங்களால் மட்டுமே ஒருவர் நிறைந்து இருக்க முடியாது. ஆனால், பெரும்பாலான தருணங்களில் இப்படி இருப்பது நல்லது.
2. எதிர்மறை எண்ணங்கள்
(Negative Thoughts)
பயம்,
தோல்வி, சந்தேகம், விரக்தி, பெருங்கோபம் போன்றவற்றை மையமாகக் கொண்ட எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள். உணர்ச்சி சார்ந்த எண்ணங்கள், பயம் சார்ந்த எண்ணங்கள் (Fear-Based Thoughts) இதில்
அதிகம் அடங்கும். இது மன அழுத்தம் மற்றும்
கவலையை அதிகரித்து தன்னம்பிக்கையைக் குறைக்கும். முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும்; உறவுகளில் விரிசல் ஏற்படும்; உடல் நலத்திலும் பாதிப்பு ஏற்படும்.
கோபம்,
துக்கம், கண்டுகொள்ளப்படாத அன்பு, பயம் போன்ற உணர்வுகளால் உருவாகும் எண்ணங்கள் இவை. இதனால் உருவாகும் கட்டுப்பாடற்ற உணர்ச்சிகள் தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும். மனநிலையையும் நடத்தையையும் பாதிக்கும். தயக்கம் மற்றும் தள்ளிப்போடும் பழக்கம் உருவாகும். தன்னம்பிக்கை குறையும். நல்ல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். மன அமைதி பாதிக்கப்படும்.
ஆனால், அளவான பயம் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் செயல்பட உதவும்.
3. பகுத்தறிவு எண்ணங்கள்
(Critical Thoughts)
நம்மைச்
சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாமல், உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து சிந்திப்பது பகுத்தறிவு எண்ணங்களாகும். இது நமக்கான சரியான முடிவுகளை எடுக்க உதவும். தவறான நம்பிக்கைகளைத் தவிர்த்து, தலைமைத்துவத் திறனை வளர்த்து, பொறுப்பான செயல்பாட்டை உருவாக்கும். புதிய சிந்தனைகள், புதுமையான அணுகுமுறைகள் மற்றும் கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் எண்ணங்களாக இவை அறியப்படுகிறது. இவை நமக்குள் நன்றாக இருக்கும்போது, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகள் உருவாகும். பிரச்சினைகளுக்குப் புதிய தீர்வுகள் கிடைக்கும். தனித்துவமான சிந்தனை வளர்ச்சி அடையும்.
4. தேவையற்ற எண்ணங்கள்
(Waste and Unwanted Thoughts)
பிரச்சினைகளைப்
பற்றி மட்டுமே சிந்தித்து, சிக்கலுக்கான தீர்வுகளைத் தேடும் எண்ணங்களை ஆக்கப்பூர்வமாக அணுகாமல், பழைய நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் அசைபோட்டு அசைபோட்டு, நேரத்தையும் மனத்தையும் பாழ்படுத்துவதுதான் இவ்வகை எண்ணங்கள். செயல்திறன் குறைந்து, புதிய வாய்ப்புகள் எதையும் சிந்திக்காமல் வெறுமனே வாழ்க்கையைக் கழிப்பதுதான் இதன் நோக்கமாகும். இந்த எண்ண வகையில் நாம் மிகவும் தீவிர கவனம் செலுத்தவேண்டும். ஏனென்றால், நம்மை நாள் முழுக்க ஏதோ வேலை செய்த உணர்விலேயே இவ்வகை எண்ணங்கள் வைத்திருக்கும். ஆக்கப்பூர்வமான எந்த முடிவும் இதில் இருக்காது. ஒரு கட்டத்தில் நம்மையே முழுவதும் வெறுக்கும் நிலைக்குத் தள்ளி, விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க வைத்துவிடும்.
நாம்
எல்லா எண்ணங்களையும் கட்டுப்படுத்த முடியாது. சூழல் மற்றும் நம் மனநிலை சார்ந்து அது மாறுபடும். ஆனால், எந்த எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய முடியும். அதை வளர்த்தெடுப்பதன் மூலம் நம் வாழ்க்கையையும் வளர்த்தெடுக்க முடியும். ‘எனக்கு ஏன் இது நடந்தது?’ என்று கேட்பதற்குப் பதிலாக, ‘இதை எப்படிச் சரிசெய்வது?’ என்று எண்ணுவதன் மூலம் நமது எண்ணங்கள் சீர்செய்யப்படும்.
எப்படி
ஒரு சிற்பி கல்லில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கியதும் அழகுமிகு சிற்பம் கிடைக்கிறதோ அதுபோல, நம் மனத்தில் குப்பையெனத் தேங்கிக்கிடக்கும் தேவையற்ற எண்ணங்களை முதலில் தூக்கிப்போட்டு, அந்த வெற்றிடத்தை நல்ல எண்ணங்கள் மூலம் நிரப்பி, நல்வாழ்வைத் தேர்ந்தெடுப்போம்.
நல்ல
எண்ணங்கள், நல்ல செயல்கள், நல்ல பழக்கங்கள், நல்ல குணநலன்கள், நல்ல வாழ்க்கை... இவ்வரிசையை அடிக்கடி நினைவில் கொள்வோம்.
‘உலகம்
மாறுகிறதோ
இல்லையோ,
உங்கள் எண்ணங்களை
மாற்றுங்கள்;
உங்கள் உலகமே
மாறும்.’
(தொடரும்)