news-details
சிறப்புக்கட்டுரை
வாரம் ஒரு குறள் – 07

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது (குறள் 7)

குறள் விளக்கம்

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவருக்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

சிந்தனை

வண்டி ஓட அச்சாணிவேண்டும். வண்டி அச்சாணியைச் சார்ந்தே இயங்குகின்றது. யாராயிருந்தாலும் ஒருவர் மற்றவரைச் சார்ந்துதான் வாழ வேண்டும். உதாரணமாக, குழந்தைகள் பெற்றோரையும், பெற்றோர் குழந்தைகளையும் சார்ந்தே வாழ்கின்றனர். ஒருவருடைய தயவோ, உதவியோ மற்றவருக்கு அவசியம் தேவை.

கடவுளுக்கு ஒப்பாரும் இல்லை; மிக்காரும் இல்லை. அதாவது அவருக்குச் சமமானவரும் அவரைவிட உயர்ந்தவரும் இல்லை. மனிதரைச் சார்ந்து வாழ்வதைவிட உயர்வான கடவுளைச் சார்ந்து வாழ்வது சாலச்சிறந்தது.

மூன்று நாடுகளுக்கு இடையே பெரும் பகை. கடவுள் அந்த மூன்று நாடுகளின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசினார்.

உங்கள் பிரச்சினை என்ன?” என்றார்.

முதல் நாட்டுப் பிரதிநிதி, இரண்டாம் நாட்டுப் பிரதிநிதியைச் சுட்டிக்காட்டி, “இவருடைய நாட்டை முழுமையாக அழித்துவிடுங்கள்; என் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றார்.

இரண்டாம் நாட்டுப் பிரதிநிதி கடவுளிடம், “முதல் நாட்டின் வரைபடம் உலக வரைபடத்தில் இல்லாமல் செய்துவிடுங்கள் என்றார். மூன்றாம் நாட்டுப் பிரதிநிதியோ, “முதல் இருவரின் வேண்டுதல்களை நிறைவேற்றினால் என் ஆசை தானாக நிறைவேறிவிடும் என்றார்.

இதைக் கேட்ட கடவுள் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்.

ஒருவர் மற்றவரைச் சார்ந்துதான் வாழ வேண்டும். ஒரு தெருவில் ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்துதான் வாழவேண்டும். ஒரு மாநிலம் பக்கத்து மாநிலத்துடன் தொடர்பில் இருந்துதான் ஆக வேண்டும்.  அதுபோல் ஒரு நாடும் அண்டை நாடுகளுடன் சார்புடன் வாழவேண்டும். ஒருவரை அழித்து மற்றவர் நன்றாக வாழ முடியாது.

மனிதச்சார்பு வாழ்க்கையே இவ்வளவு நன்மைகளை ஏற்படுத்தும்போது, கடவுளைச் சார்ந்து வாழும் வாழ்வு அதிக நற்பயன்களை விளைவிக்க வல்லது. உயர்நெறியாம் இறைவனுடன் இணைந்து வாழும் போது மனக்கவலைகள் அற்று நல்வாழ்வு வாழ முடியும்.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்று அழைக்கிறார் ‘இருக்கின்றவராய் இருக்கின்றவர் நானே என்ற நம் கடவுள். ‘நானே இருக்கின்றவர் என்று முக்காலத்திற்கும் நம்மோடு வாழ்ந்து வருகின்றார். அவரோடு இணைந்து வாழ்ந்தால் மனக்கவலைகள் நீங்கும். நம் கவலைகளையும் சுமைகளையும் ஆண்டவரிடம் இறக்கி வைப்போம்: நிம்மதியாய் வாழ்வோம்.