news-details
ஞாயிறு மறையுரை
ஜூலை 12, 2026 ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு - எசா 55:10-11; உரோ 8:18-23; மத் 13:1-23 (விதைக்கப்படும் வார்த்தையும் விழித்தெழும் இதயங்களும்)

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வார்த்தைகள் மிக உன்னதமான கருவிகளாகவும், அதேவேளையில் கூர்மையான ஆயுதங்களாகவும் செயல்பட்டு வந்திருக்கின்றன. ஒரு நல்வார்த்தை வீழ்ந்து கிடக்கும் ஆன்மாவை உயிர்ப்பிக்கும் ஆற்றல் கொண்டது; ஒரு தீய வார்த்தை ஓங்கி வளர்ந்த வாழ்வை ஒரு கணத்தில் சிதைக்கும் வல்லமை பெற்றது. ஆனால், இன்றைய நவீன உலகில் காட்சி ஊடகங்களின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் பெருக்கமும் வார்த்தைகளின் உழவை முற்றிலும் மாற்றி அமைத்திருக்கின்றன. நொடிக்கு நூறு தகவல்கள் நம் கண்களையும் காதுகளையும் கடந்து செல்லும் இந்தத் தகவல் தொழில்நுட்பப் பெருவெளியில், வார்த்தைகள் தங்களின் ஆழத்தையும் புனிதத்தையும் இழந்து, வெறும் சத்தங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.

எங்கும் பரவிக்கிடக்கும் எதிர்மறைச் சிந்தனைகளும், போலியான கவர்ச்சிகளும் மனித உள்ளங்களில் அவநம்பிக்கை என்னும் நச்சுக் காற்றைப் பரப்பி வருகின்றன. இந்த அதீத காட்சி ஊடகத் தாக்கத்தால், ஆழமான சிந்தனைகளுக்கோ அல்லது அமைதியான இறைவார்த்தை தியானத்திற்கோ மனித இதயங்களில் இடமில்லாமல் போகிறது. வார்த்தைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவமும் மரியாதையும் குறைந்துபோன இன்றைய எதார்த்த சூழலில், இறைவனின் வார்த்தை எவ்வாறு நம் வாழ்வில் செயலாற்றப் போகிறது என்ற மாபெரும் வினா நம் முன்னால் எழுகிறது.

இத்தகையதோர் உலகியல் பின்புலத்தில், இறைவனால் விதைக்கப்பட்ட வார்த்தையை ஏற்கும் அளவுக்கு நம் இதயங்கள் ஆன்மிக விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற பெரும் உண்மையை உணர்த்தி, ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு கொண்டாட்டம் நம்மை ஆழமான ஆன்மிகச் சிந்தனைக்கு அழைக்கிறது.

இன்றைய இறைவாக்குகள், இறைவார்த்தையின் இயல்பும் அதன் எல்லையற்ற ஆற்றலும் பற்றி மிக அழகாக வெளிப்படுத்துகின்றன. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில், கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்து மனித இதயங்களில் விதைக்கப்படும் வார்த்தை வெறும் வெற்று ஒலியோ அல்லது தற்காலிகமான கட்டளையோ அல்ல; மாறாக, அது ஒரு முழுமையான செயல்வடிவம் என்பது தெளிவாக்கப்படுகிறது. எசாயா இறைவாக்கினர் வானத்திலிருந்து இறங்கி வரும் நீரையும் பனியையும் வெறும் வீழ்ச்சியாகப் பார்க்காமல், அவை விண்ணகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வரும் ஆசிராகக் காண்கிறார். அவ்வாறு இறங்கி வரும் மழையும் பனியும் மீண்டும் வானத்திற்கு வீணாகச் செல்வதில்லை; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, நிலத்தின் தன்மையையே மாற்றியமைக்கின்றன.

இந்த இயற்கைச் செயல்பாடு மிகவும் அமைதியாகவும், மறைமுகமாகவும் நடந்தாலும், அது பூமியின் வெளியமைப்பையே மாற்றும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது விதைப்பவருக்கு விதையையும், உண்பவருக்கு உணவையும் கொடுத்து, வாழ்வின் சுழற்சியை உறுதிசெய்கிறது. இதேபோலத்தான் கடவுளின் வாயிலிருந்து புறப்பட்டு மனித இதயங்களில் விதைக்கப்படும் வார்த்தையும் தன் நோக்கத்தில் ஒருபோதும் தோற்பதில்லை. அது கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றி, எதற்காக அனுப்பப்பட்டதோ அந்தப் பணியில் முழு வெற்றியடைந்துதான் அவரிடம் திரும்பும்.

இதையே கடவுள் எசாயா வழியாகத் தம் மக்களுக்கு நினைவூட்டுகிறார். அவரது வார்த்தை என்பது அவருடைய விருப்பம், சட்டம் மற்றும் உறுதிமொழிகளின் தொகுப்பாகும். அது மனிதரின் மனங்களாகிய நிலங்களைப் பண்படுத்தி, உலகியல் மயக்கத்தில் உறங்கிக் கிடக்கும் மனங்களில் மறைந்து கிடக்கும் நன்மைகளையும் தெய்வீக ஆற்றல்களையும் வெளிக்கொணர்ந்து, மனிதரைப் பண்புள்ளவர்களாய் விழித்தெழச் செய்யவல்லது. இந்த விதைக்கப்பட்ட வார்த்தையின் செயலாற்றலை மனித உள்ளங்களோடு ஒப்பிட்டு, இயேசு நற்செய்தியில் விதைப்பவர் உவமையின் வாயிலாக எத்தகைய இதயங்கள் விழித்தெழுகின்றன, எத்தகைய இதயங்கள் உறங்குகின்றன என்ற இறையியல் விளக்கத்தைத் தருகிறார். மனித இதயங்களை நான்கு வகையான நிலங்களாகப் பிரித்து, வார்த்தையின் தேவையை விவரிக்கிறார்.

வழியோரம் விழுந்த விதைகள், இறைவார்த்தையைக் கேட்டும் அதன் ஆழத்தைப் புரிந்துகொள்ளாமல் ஆன்மிக உறக்கத்தில் இருக்கும் மனிதரைக் குறிக்கின்றன. இத்தகைய சூழலில், சாத்தான் என்னும் தீயோன் மிக எளிதாக வந்து, அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட வார்த்தையைக் கவர்ந்து செல்கிறான். சாத்தானின் இந்த அழிவு வேலை வெளியில் தெரிவதில்லை; மாறாக, விழிப்பற்ற மனித இதயத்தில் அது நடக்கிறது என்பதை மத்தேயு நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

அடுத்ததாக, பாறைப் பகுதியில் விழுந்த விதைகள், இறைவார்த்தையை மிக வியப்போடும் மகிழ்ச்சியோடும் கேட்டு உடனடியாக ஏற்கும் இதயங்களைக் குறிக்கின்றன. ஆனால், இவர்களிடம் நம்பிக்கையின் ஆழமான வேர்கள் இருப்பதில்லை. இதனால், இவர்களின் ஆன்மிக விழிப்புணர்வு தற்காலிகமானதாக மாறிவிடுகிறது.

மூன்றாவதாக, முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகள், உலகியல் போட்டிகளுக்குள்ளும் ஆடம்பர மோகத்திற்குள்ளும் சிக்கி, விதைக்கப்பட்ட வார்த்தையைத் தொலைத்துவிட்டு, பயன் தர இயலாமல் இருக்கும் இதயங்களைக் குறிக்கின்றன. இங்கு முட்செடிகள் என்பவை உலகச் சவால்கள், கவலைகள் மற்றும் செல்வத்தின் மீதான பேராசை என்று மத்தேயு விளக்குகிறார். இந்த முட்செடிகள் இறைவார்த்தையைவிட உயரமாக வளர்ந்து, அதன் சுடரை அணைத்து, அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தி நெருக்கிவிடுகின்றன. இன்பம் தரக்கூடிய தற்காலிக சக்திகள் அதிகமாக இருக்கும்படியால், நம்பிக்கையின் வேர்கள் விரைவில் காய்ந்து போகின்றன. முட்செடிகளின் நெருக்குவாரம் பலமாக இருந்தாலும், வார்த்தையை ஏற்று விழித்தெழும் நல்ல நிலத்தைத் நோக்கி ஆண்டவரின் பார்வைகள் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இறுதியாக, நல்ல நிலத்தில் விழுந்த விதைகள், இறைவார்த்தையைக் கேட்டு, அதனை ஆழமாய் ஆன்மாவில் புரிந்துகொண்டு, தங்கள் வாழ்வில் நூறு மடங்காகவும், அறுபது மடங்காகவும், முப்பது மடங்காகவும் பலன் தரும் இதயங்களைக் குறிக்கின்றன. இவர்களின் இந்த மிகுதியான பலனே, அவர்கள் உலகிற்கு அளிக்கும் சாட்சிய வாழ்வாகும். அவர்களின் தகுதிக்கு ஏற்ப அந்தப் பயன் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இறைவார்த்தையைத் தம் வாழ்வின் நல்நிலமாக ஏற்றுக்கொள்பவர்களுக்கு அருள்மாரி பொழியப்படும் என்பது திண்ணம் என்றாலும், உலக மாயைகளிலும் கவலைகளிலும் மூழ்கி இதயத்தை விழித்தெழச் செய்ய மறுப்பவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளும் நழுவிச் செல்லக்கூடும். எனவே, இயேசுவின் இறையாட்சியைப் புரிந்துகொள்வதும், அந்த வார்த்தையின் ஊடுருவலைத் தம் உள்ளத்தில் அனுமதிப்பதுமே ஒருவரின் வாழ்வை நூறு மடங்காகப் பலன்தரும் நல்ல நிலமாக மாற்றும் வல்லமை கொண்டது.

இத்தகைய மனிதனின் ஆன்மிக விழிப்புணர்வோடு இந்த உலகப் படைப்பும் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதைத் திருத்தூதர் பவுல் மிக ஆழமாக விளக்குகிறார். மனிதர் உயர்வடையும்போது படைப்பும் புனிதமடைகிறது; மனிதர் பாவத்தில் வீழும்போது படைப்பும் வீழ்ச்சியடைகிறது என்ற யூத நம்பிக்கையின் அடிப்படையில், படைப்பு அனைத்தும் மெசியா காலத்து முழு வெற்றிக்காகப் பேறுகால வேதனையோடு காத்திருக்கிறது. தூய ஆவியின் முதற்கனிகளைப் பெற்றிருக்கும் நாமும், கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக முழுமையாகத் தத்தெடுக்கும் அந்த மாட்சிமையின் நாளுக்காகப் படைப்பைப் போலவே ஆவலுடன் காத்திருக்கிறோம். இன்றைய வழிபாட்டின் பின்னணியில், நம் இதயங்களை விழித்தெழச் செய்ய மூன்று பாடங்கள் அவசியமாகின்றன.

முதலாவதாக, நாம் நம்முடைய அக நிலத்தை நாளும் சுய ஆய்வு செய்து பக்குவப்படுத்த வேண்டும். வழியோர நிலமாக இறைவார்த்தையை அசட்டையாகக் கடந்து போகிறோமா? அல்லது பாறை நிலமாக இருந்து சோதனைகளின்போது நம்பிக்கையை இழக்கிறோமா? என்பதை ஆராய்ந்து, நம் இதயத்தின் கடினத்தன்மையை ஆன்மிகத் தியானத்தாலும் செபத்தாலும் உடைத்து விழிப்படையச் செய்யவேண்டும்.

இரண்டாவதாக, நுகர்வோர் கலாச்சாரமும் செல்வத்தின் மீதான ஆசையும் கொண்ட உலகியல் முட்களை நாம் களைந்தெறியவேண்டும். உலகப் போக்குகள் நம்மைத் திசைதிருப்பினாலும், உலகக் கவலைகளை இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து இறைவார்த்தைக்கு நம் வாழ்வில் முதலிடம் கொடுக்கும்போது, நம்பிக்கையின் வேர்கள் காய்ந்து போகாமல் பாதுகாக்கப்பட்டு நம் இதயம் ஆன்மிக விழிப்புணர்வு பெறுகிறது.

மூன்றாவதாக, தூய ஆவியின் முதற்கனிகளைப் பெற்ற நாம், சாட்சிய வாழ்வின் மூலம் முப்பது, அறுபது, நூறு மடங்கு நற்கனிகளைத் தர அழைக்கப்படுகிறோம். நம்முடைய அன்பும் நீதியும் பிறரன்புச் செயல்களுமே நாம் தரும் நற்கனிகள் என்பதால், படைப்பு அனைத்தும் கடவுளின் பிள்ளைகளின் மாட்சிமிகு சுதந்திரத்திற்காகக் காத்திருப்பது போல, நம்முடைய நற்செயல்களின் வழியாய் இந்த உலகிற்கு விடுதலையையும் ஒளியையும் கொண்டு வரவேண்டும்.

நிறைவாக, இறைவார்த்தை ஆற்றல் வாய்ந்தது; அது வெறுமையாகத் திரும்புவதில்லை. சவால்களும் திசைதிருப்பல்களும் சூழ்ந்திருந்தாலும், கடவுளின் வார்த்தையை வாழ்வின் அடித்தளமாக்கி, தூய ஆவியின் துணையோடு நற்கனிகள் தரும் சாட்சிகளாய் விழித்தெழுவோம். அப்போது, படைப்பு எதிர்நோக்கும் அந்த மாட்சியின் சுதந்திரத்தை நாமும் பெற்று, கடவுளின் பிள்ளைகளாய் மிளிர்வது உறுதி.