news-details
சிறப்புக்கட்டுரை
பிடித்ததா? கிடைத்ததா? (இளமை ஒரு சவால்! – 08)

கனவு காணுங்கள்என்று நம் இராமேஸ்வரத்து வழிகாட்டி அப்துல்கலாம் கூறினார்; அவர் கூறினாலும், கூறாவிட்டாலும் நாம் எப்போதுமே கனவு காண்பதில் மட்டும்தான் காலத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தக் கனவை நிறைவேற்ற அவர் அதிகாலையில் வீடு வீடாகச் செய்தித்தாள் போட்டுவிட்டு படிக்கப் போனாரே! படிப்படியாகக் கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு தனக்குப் பிடித்த வழியில் முன்னேறிக் காட்டினாரே! அந்தக் கனவை நனவாக்கும் வழித்தடத்தைப் பின்பற்றி நாம் முயல்கிறோமா? அதுதான் கேள்வி!

என் கனவை யார் நனவாக்குவது? என்னைத் தவிர வேறு யார் நிறைவேற்றுவார்கள்? யாரால் நிறைவேற்ற முடியும்? நான் மருத்துவக் கல்லூரியில்தான் படிப்பேன்; நீ இடம் வாங்கிக்கொடு! நான் இந்தப் பொறியியல் பாடம்தான் படிப்பேன்; அதற்குரிய மதிப்பெண்கள் வாங்க மாட்டேன்போட்டித் தேர்வை எழுதமாட்டேன்; ஆனால், அங்கே என்னைச் சேர்த்துவிட வேண்டியது உன் வேலை!’

என் நண்பர்கள் அதை வைத்திருக்கிறார்கள், இதை வைத்திருக்கிறார்கள். ஆடம்பர உடை, மொபைல், பைக், ஸ்கூட்டர்... எனக்கு எல்லாம்வேண்டும், நீங்கள் வாங்கிக் கொடுங்கள்...’

படிப்பைத் தாண்டியும் இந்தஎன் கனவுஅதை நிறைவேற்றுவது உன் பொறுப்பு என்கிற மனப்போக்கு தொடர்கிறது.

நாம் விரும்பிய வேலை, நான் விரும்பிய ஊதியம், நான் விரும்பும் வெளிநாட்டு மாப்பிள்ளை, நான் விரும்பும் சினிமா ஸ்டார் பெண்...  இப்படி நமக்குப் பிடித்த கனவுகள் ஏராளம்! ஆனால், உலகில் நம்மைச் சுற்றி இருக்கும் இளைஞர் எல்லாருமே இதே வகையான கனவுகளைத்தான் தூக்கிச் சுமந்து கொண்டு காலம் கடத்துகிறார்கள். இன்று ஒவ்வொரு வேலைவாய்ப்பிற்கும் போட்டி, மிகக் கடுமையான போட்டி! போகப்போக இந்தப் போட்டி கடுமையாகத்தான் இருக்கும்! பணம் பாதாளம் மட்டும் பாயாது! பெற்றோரின் வசதி வாய்ப்புகள் நமக்குத் துணையாக நிச்சயம் இருக்கும். ஆனால், நம் கடுமையான முயற்சியும் உழைப்பும் இல்லாமல் நம் கனவுகள் கைகூடாது.

எந்த வேலைக்குப் போனாலும் வேலையில் சேர்ந்ததும் கால்மேல் கால்போட்டுக் கொண்டு பணத்தை அள்ளிக்கொட்டும் வாய்ப்புகளும் இன்றில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல, அரசுப் பணிகளிலும் கூட பணிகள் கூடுகின்றன. கண்காணிப்பும் அதிகரித்து வருகிறது.

எனவே, கனவு காண்போம். நமக்குப் பிடித்த வாழ்க்கை பற்றி நாம்தான் கனவு காணவேண்டும். நமது வாழ்க்கைக்கான குறிக்கோள்களை நாம்தான் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். பார்வையில் தெளிவிருந்தால்தான் பாதைகள் தெளிவாகும். இதைத்தான் கனவு என்கிறோம். ஆனால், பாதையைப் பார்த்துக்கொண்டு நம் வீட்டுப் படிக்கட்டிலேயே உட்கார்ந்திருக்க முடியாது. கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு நாம்தான் பயணத்தைத் தொடங்கவேண்டும். எந்த முயற்சியிலும் எடுத்தவுடன் வெற்றிபெற்றுவிட முடியாது. சவால்கள் வரும். புதிய பணிகளில் சிரமங்கள் வரும். தடைகள் குறுக்கே வந்து வழிமறிக்கும், தோல்விகள் வரும். ஆனால்இவற்றையெல்லாம் தாண்டித்தான் நாம் வெற்றி பெற்றாகவேண்டும். நமக்குப் பிடித்தமான வாழ்க்கையை நோக்கி முன்னேறியாகவேண்டும்.

நமக்கு முன்னால் அப்துல்கலாம் மட்டுமல்ல; அவரைப் போன்ற ஏராளமான வெற்றி வீரர்கள் இத்தகைய கனவுப் பயணத்திற்கு வழிகாட்டி இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது பற்றியும் பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன.

இவர்கள் எல்லாரும் கடைப்பிடித்த சில உத்திகளை நாம் நினைவில் பதித்துக் கொண்டு செயல்பட்டால் போதும், வெற்றி நிச்சயம்.

இந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லைஎன்று ஒருபோதும் நினைக்கமாட்டேன், சொல்லமாட்டேன். என் செயல்திறனை நானே குறைத்துக் கொள்ளமாட்டேன்.

என் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லைஎன்று ஒருநாளும் புலம்பமாட்டேன். பலன் கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன்.

இது என் வேலையில்லைஎன்று ஒருநாளும் ஒதுங்கமாட்டேன். மற்றவர்கள் பணியிலும் பங்கேற்பேன். கூட்டு முயற்சிகளின் மூலம் வெற்றிபெற முயற்சிப்பேன்.

இது நடக்காது, சரியா வராது, முடியாதுபோன்ற எதிர்மறைச் சொற்களைத் தவிர்ப்பேன். செய்யக்கூடிய பணிகளில் மட்டும் உற்சாகத்துடன் பங்கேற்பேன்.

வேறு வழியில்லாமல் இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன்என்று ஒருநாளும் நினைக்கமாட்டேன், கூறமாட்டேன். உழைக்கத் தயாராக இருந்தால் ஆயிரம் வாய்ப்புகள்.

எனக்குப் பிடித்த வாழ்க்கை அமையும் வரை என் முயற்சி தொடரும்.

இந்த நம்பிக்கைச் சிந்தனையை நாள்தோறும் நினைவுபடுத்திக்கொள்வோம். நெஞ்சில் பதிப்போம், செயல்படுவோம், வெற்றிபெறுவோம்.

எனக்குப் பிடித்த சுகமான வேலைக்காகக் காத்திருக்கமாட்டேன். என் முழுத்திறமையையும் பயன்படுத்தி, கிடைத்த வேலையைக் கொண்டு படிப்படியாக முன்னேறுவேன்.