இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் உள்ள லபுவான் பாஜோ மறைமாவட்ட ஆயர் மாக்சிமஸ் ரெகஸ், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள புகழ்பெற்ற ‘கோலோ கோயே’ திருவிழாவை முன்னிட்டு, விண்ணேற்பு அன்னை திருவுருவத்தின் வாராந்திர மாபெரும் திருப்பயணத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இவ்வாண்டின் திருப்பயணம் அன்னை மரியாவின் மீதான பக்தியோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைக்கும் உன்னத நோக்கத்துடன், ‘இறைப்படைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க ஒன்றிணைந்த திருப்பயணம்’ என்ற கருப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்கொள்ளும் வகையில் கடற்கரை தூய்மைப் பணி, தென்னை மரக்கன்றுகள் நடுதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுடன் இது தொடங்கப்பட்டுள்ளது. இத்திருப்பயணத்தின் வழியெங்கும் நிலவிய மதநல்லிணக்கம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். அன்னை மரியாவின் திருவுருவப் பவனி இசுலாமியர் வாழும் கிராமத்தைக் கடந்தபோது, அங்குள்ள மக்கள் பாரம்பரிய நடனமாடி அன்போடு வரவேற்றனர். ஆகஸ்டு 10 முதல் 15 வரை நடைபெறவுள்ள இறுதி விழாக்களில் இத்தீவின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இளைஞர்களும் சமூகமும் ஒன்றிணைய உள்ளனர்.