news-details
சிறப்புக்கட்டுரை
ஏழையரை முன்னிறுத்தும் திரு அவையாக... (தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவையின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம்)

தமிழ்நாடு திரு அவையின் உயர்ந்ததோர் அமைப்பான தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவையின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டமானது மதுரையிலுள்ளபில்லர்என்னும் நிலையத்தில் 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை இனிதே நடைபெற்றது. தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவையின் தலைவர், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் தலைமையில் இனிதே ஆரம்பமானது.

சாந்தோம் கலைத்தொடர்பு பணிக் குழு வழங்கிய இறைவணக்கப் பாடலுடன் இணைந்த இறைவேண்டல் முடிந்தவுடன், துணைத் தலைவர் திரு. வனத்தைய்யன் பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்திருப்பவர்களை மகிழ்வுடன் வரவேற்றார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கூட்ட அறிக்கையினை, செயலர் தந்தை அருள்பணி. பிரான்சிஸ் ஜோசப் தொகுத்து வழங்கிட, அனைவரும் அதை மாற்றமின்றி ஏற்றுக்கொண்டனர்.

தனது தலைவர் உரையில் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி, “ஏழையரை முன்னிறுத்துதல் என்பது பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிரான நிலைப்பாடா?” என்ற வினாவைத் தொடுத்து ஆரம்பித்தார். திரு அவை யாரையும் புறக்கணிப்பதில்லை. இறைவனின் அன்பு அனைவருக்கும் சமமானது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து, ‘திரு அவை ஒருமையை உயர்த்திப் பேசுவதில்லை; மாறாக, மனித மாண்பைச் சிதைக்கும் ஏழ்மை ஒருபோதும் இறைவனின் விருப்பமல்ல; ஆனால், ஏழ்மையால் மனித மாண்பை இழந்து வாடும் சகோதர-சகோதரிகளின் பக்கம் நிற்பதே திரு அவையின் அழைப்பாகும்என்று வலியுறுத்தினார்.

இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களால் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பவர்களை விடுதலை செய்வதே திரு அவையின் மறைப்பணி என்பதைக் கோடிட்டுக் காட்டினார் பேராயர். ஏழையருக்கான முன்னுரிமை என்பது சமூக, அரசியல் அல்லது பொருளாதாரக் கருத்தியல் சார்ந்த முடிவு அல்ல; அது நமக்கு அனைத்திருக்கும் மேலான ஓர் இறையியல் தேர்வு. ஏழையருக்கான திரு அவையின் தேர்வு என்பது ஆவணங்களில் மட்டுமல்லாமல், நமது வாழ்விலும் மேய்ப்புப் பணியிலும் ஆளுமையிலும் உண்மையிலேயே வெளிப்படவேண்டும்.

பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ள நமது தமிழ்நாடு நவீன ஏழையரைக் குறித்தும் கவனம் கொள்ளவேண்டும். எண்ணற்ற மறைப்பணியாளர்கள், ஆயர்கள், அருள்தந்தையர்கள், துறவியர், பொதுநிலையினர் தங்கள் வாழ்வை ஒரு பொருட்டாக எண்ணாமல் இந்தப் பணிக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு நன்றியுடன் தலை வணங்குவோம். ஆழமான மனமாற்றத்திற்கு அழைக்கும் இறைவனின் குரலைக் கேட்டவர்களாய், ஏழையரை முன்னிறுத்தும் திரு அவை, ஒன்றிணைந்து பயணிக்கும் திரு அவை என்பவை கனவின் மையக்கருத்தாகும் என்றார். அருள்பணிப் பேரவை வெறும் கலந்துரையாடலுக்கான அரங்கமாக இருந்துவிடாமல், திரு அவையின் மனமாற்றத்திற்கான திருப்புமுனையாக அமையவேண்டுமென்று கூறி, தனது தலைவர் உரையை நிறைவு செய்தார் பேராயர்.

அதைத் தொடர்ந்துஏழையரை முன்னிறுத்தும் திரு அவையாகஎன்ற தலைப்பில் சிறப்புரையாற்ற வந்த இயேசு சபையைச் சார்ந்த அருள்பணி. ஜெரி சே.., வத்திக்கான் சங்க வரிகளிலிருந்தும், நாம் வாழும் காலத்தில் திருத்தந்தையாய் பணியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் பணியாற்றிக் கொண்டிருக்கும் திருத்தந்தை லியோ அவர்களின் உரைகளிலிருந்தும் எழுத்துகளிலிருந்தும் மேற்கோள்காட்டி, ஏழையர் எவ்வாறு திரு அவையில் முன்னிறுத்தப்படலாம் என்று எடுத்துரைத்தார்.  “ஏழை இயேசுவின் வாரிசுகள் நாம்என்ற திருத்தந்தை லியோவின் கூற்றைக் கொண்டு ஆரம்பித்து, நவீன உலகு ஏழை மக்கள் யார் என்பதைத் திருத்தந்தையர் பிரான்சிஸ் மற்றும் லியோ இவர்களின் பார்வையில் எடுத்துரைத்தார். இயற்கையைப் பாழ்படுத்துவது, இறைமையை ஏழ்மைப்படுத்துவது என்ற கருத்தில் இயற்கைக்கெதிரான செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தனது உரையின் நிறைவில் சில பரிந்துரைகளை வந்திருந்த அனைவருக்கும் வழங்கிய அருள்தந்தை ஜெரி சே.., அவற்றைக் கொண்டு குழு ஆய்வில் சிந்திக்கும்படியும் அழைப்பு விடுத்தார்.

பன்னிரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட பொதுக்குழுக் கூட்ட உறுப்பினர்கள் ஆன்மிக உரையாடல் வழியாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கேள்வியை விவாதிக்க அழைக்கப்பட்டனர். ‘தமிழ்நாடு திரு அவையை ஏழையரை முன்னிறுத்தும் திரு அவையாக மாற்ற என்னுடைய பரிந்துரை என்ன?’ மற்றும்என் குழு உறுப்பினர்கள் கூறுகின்ற பரிந்துரைகளில் என்னை மிகவும் கவர்ந்தது என்ன?’ என்பதைக் குறித்து ஒவ்வொரு குழுவும் சிந்திக்க அழைக்கப்பட்டனர்.

நண்பகல் உணவிற்குப் பின் பன்னிரண்டு குழுக்களின் செயலர்கள் தங்களது குழுவில் இறுதியாக முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு பரிந்துரைகளை மட்டும் அக்குழுவின் அறிக்கையாக வாசித்தனர். அவற்றைத் தொகுத்த பின்பு இறுதியாகச் செயல்திட்டம் தீட்டப்பட்டு ஆயர் பேரவையின் அனுமதிக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

அனைவராலும் முழுமனதாக ஏற்கப்பட்டு ஆயர் பேரவையின் அனுமதியுடன் தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணி 2026-2027-ஆம் ஆண்டிற்கான செயல்திட்டம் பின்வருமாறு:

நமது இலக்கு

ஏழை இயேசுவின் வாரிசுகள் நாம் (திருத்தந்தை லியோ), இறையருளிலும், நிறைவாழ்விலும் வளர (காண். யோவா 10:10), நம்மைச் செல்வந்தராக்க (காண். 2கொரி 8:9) தம்மையே வெறுமையாக்கிக் கொண்டவரின் (காண். பிலி 2:6-11) புதிய உடன்படிக்கையாளர்கள் நாம். ஏழையருக்கு நற்செய்தி அறிவிப்பதோடு, ஏழையரோடு நற்செய்தியாக வாழக் கடமைப்பட்டவர்கள் நாம் (திருத்தந்தை பிரான்சிஸ்). 

ஏழையரின் மதிப்பை உயர்த்துவதே நமது அனைத்து அருள்பணிகளின் அழுத்தம். அதன்வழி, ஒரு சமத்துவ, சமதர்ம, சகோதரத்துவமிகு புதிய சமுதாயமே நமது இலட்சியம். இறையாட்சியின் இலக்கணமும் அதுவே (காண். லூக் 11:1-4).

நமது ஏழையர்

இன்றைய நம் சூழலமைவில் கீழ்க்காண்பவர்களைஏழையரிலும் ஏழையாகதெளிந்து தேர்ந்தோம்: தலித்துகள்/தலித்திலும் கடைநிலையிலிருப்போர், திருநர், மாற்றுத்திறனாளர், நாடோடிகள், குடிநோயாளர், கைவிடப்பட்ட முதியோர், அனாதையாக்கப்பட்ட குழந்தைகள், பாலினப் பாதிப்பாளர்கள், அந்தந்தத் தளங்களில் அடிப்படை வாழ்வாதாரங்களுக்காக அன்றாடம் போராடுபவர்கள்.

நமது செயல்திட்டங்கள்

ஏழையர் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்ய முடியும் (மாற் 14:7) என்னும் அழைப்பின் அடியொற்றி, இக்காலம் காட்டுகின்ற அறிகுறிகளான ஏழையரை முன்னிறுத்தி 2026-2027 ஆண்டின்போது பின்வருபனவற்றைச் செயல்படுத்தத் தீர்மானித்தோம்:

1. மறைமாவட்ட, மறைவட்ட, பங்கின் பங்கேற்பு அமைப்புகளில் ஏழையருக்கும், அவர்களின் திட்டங்களுக்கும் முதன்மை தந்து, ஏழையருக்குப் போதிய பிரதிநிதித்துவமும் உரிய உரிமைகளையும் வழங்குவோம்.

2. மறைமாவட்டம், பங்கு, துறவற சபைகள், நிறுவனங்களில் மொத்த வருமானத்தில் குறைந்தது 10% ஏழையரின் கல்வி, மருத்துவம், வீடுகள் போன்ற வாழ்வாதாரங்களுக்கு ஒதுக்கீடு செய்வோம்.

3. படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணாக்கர் அதனைத் தொடர்ந்திட உதவிடவும்; மேலும் உயர் கல்வி பெற்றிட பங்கு அளவில் பொருளுதவியும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களால் கல்வி, வேலைவாய்ப்புத் தேர்வுகளுக்கு வழிகாட்டுதலும், பங்கு வழக்குரைஞர்களால் அரசின் திட்டங்களைப் பெற இலவசச் சட்ட உதவி வழங்குதலும் செய்வோம்.

4. தலித் கிறித்தவர்களின் முழுவிடுதலைக்கான தமிழ்நாடு ஆயர் பேரவையின் பத்து அம்சத் திட்டங்கள், எட்டு அம்சத் திட்டங்கள், இந்திய இலத்தீன் ஆயர் பேரவையின்ஆற்றல்படுத்தும் கொள்கைஆகிய ஆவணங்களைப் பரவலாக்குவதுடன், தலித் மாணாக்கருக்கு வகுக்கப்பட்டுள்ள கொள்கை விதிகளுக்கேற்ப கட்டணச் சலுகையுடனான உரிமையினை வழங்குவோம்.

5. பசுமைப் பங்குகளாகவும், பரந்த பசுமை இயக்கமாகவும் நம் பங்குகள் வளர்வதற்கான முனைப்புகளை முன்னெடுப்போம்.

மேற்கண்ட செயல்திட்டங்களை மனத்தில் கொண்டு அருள்பணிப் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது மேய்ப்புப் பணி நிலையங்களின் இயக்குநர்கள், ஆயரோடு கலந்தாலோசித்து மறைமாவட்டத்தில் செயல்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

இவ்வாறு நன்முறையில் செயல்படுத்தும் திட்டங்களால் திரு அவையின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் குறிப்பாக, கூட்டொருங்கியக்கத் திரு அவையில் ஏழையரின் வளமான பங்கேற்பிற்கும் சிறப்பான பங்களிப்பிற்கும் ஆவன செய்திட அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து துணைத் தலைவி திருமதி. மேரி இந்திரா பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மகிழ்வுடன் நன்றிபகர்ந்தார். இறுதியாக, இறைவேண்டலுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

தமிழ்நாடுபாண்டிச்சேரி அருள்பணிப் பேரவைக்காக அருள்பணி. பிரான்சிஸ் ஜோசப் செயலாளர், தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவை