திருப்பலி முன்னுரை
நம்
ஆண்டவராகிய இயேசு இந்த உலகை ஒரு வயலாகவும், நம்மை அதில் விதைக்கப்பட்ட விதைகளாகவும் உருவகப்படுத்துகிறார். இந்த உலகத்தில் நன்மை என்று ஒன்று இருந்தால், தீமை என்ற ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது. நல்ல விதையாகிய கோதுமையைக் கடவுள் விதைக்கிறார். ஆனால், நாம் ஆன்மிகத் தளர்ச்சியில் விழ நேரிடும்பொழுது பகைவன் வந்து களைகள் என்னும் நச்சுப் புற்களை விதைத்துவிட்டுப் போகிறான்.
இன்று
நம்முடைய சமூகத்தில் அன்பு இருக்கும் இடத்தில் வஞ்சகமும், உண்மை இருக்கும் இடத்தில் போலித்தனமும் கோதுமையும் களையையும் போல ஒன்றாகவே வளர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் வெளித்தோற்றத்திற்காக நல்லவர்களாக வாழ்ந்தாலும், நம்முடைய சிந்தனையும் செயலும் நாம் செய்யும் நன்மைகளாகிய கனிகள் மூலமே நாம் யார் என்பது உலகிற்குத் தெரியும். களைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைவிட, நாம் எப்படி இறையாட்சிக்கேற்ற மக்களாக வாழ்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவோம்.
நம்மைச்
சுற்றிலும் தீமை மிகுந்து இருந்தாலும், நாம் நன்மையின் சாட்சிகளாய், கோதுமை மணிகளாய் வாழ கடவுளின் துணை வேண்டுவோம். நம்முடைய வாழ்க்கையாலும் வார்த்தையாலும் இறையரசின் மதிப்பீடுகளை விதைத்து, நூறு மடங்கு பலன் கொடுத்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
கடவுள்
எல்லாவற்றையும் ஆள்கின்ற ஆற்றல் கொண்டவராக இருந்தாலும், நம்மைத் தண்டிப்பதில் அவசரப்படுவதில்லை. மாறாக, தம் ஆற்றலை மன்னிப்பதில், தண்டியாமல் காலம் தாழ்த்துவதில் காட்டுகிறார். தம் குழந்தைகளிடம் கனிவோடும் நீடிய பொறுமையோடும் நடந்துகொள்கிறார். இத்தகைய இறைச்சிந்தனைகளை நாமும் கடைப்பிடிக்க அருள்வேண்டி இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
உரோமையருக்கு
எழுதிய இத்திருமுகப் பகுதி நம்முடைய பலவீனமான செப வாழ்க்கைக்குப் புத்துயிர் ஊட்டும் உன்னதமானதொரு செய்தியைத் தருகிறது. பல நேரங்களில் நாம்
எப்படி, எதற்காகச் செபிக்கவேண்டும் என்று தெரியாமல் திகைத்து நிற்கும் வேளையில், தூய ஆவியானவரே நம்முடைய பலவீனங்களில் நமக்குத் துணைசெய்கிறார் என்று தூய பவுலடியார் நினைவூட்டுகிறார். இறைநம்பிக்கையில் நாளும் வளர அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. எல்லாம்
வல்ல இறைவா! எம் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர் மற்றும் உலகமெங்கும் உள்ள உமது பணியாளர் அனைவரும் நீர் வழங்கும் இறைவார்த்தையை மக்களுக்கு உண்மையோடும் தாகத்தோடும் அறிவிக்கத் தேவையான தூய ஆவியின் கொடைகளையும் வரங்களையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின்
இறைவா! எங்கள் நாட்டை ஆளும் தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் அனைவரும் சுயநலமின்றி நீதியோடும் நேர்மையோடும் செயல்படவும், ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து அமைதியானதோர் ஆட்சியை நடத்தவும் நல்ல ஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. இரக்கமுள்ள
இறைவா! நோய்களினாலும் வறுமையினாலும் மனக்கவலைகளினாலும் தவித்து வரும் உமது குழந்தைகள் அனைவரையும் உம் சிலுவை நிழலில் தேற்றியருளும். உமது ஆறுதல் தரும் வார்த்தைகள் அவர்களுக்குப் புது நம்பிக்கையையும் அமைதியையும் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
4. குடும்பங்களின்
நற்பாதுகாவலே எம் இறைவா! இத்திருப்பலியில் கூடிச் செபிக்கும் நாங்கள் அனைவரும் வெறும் இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் நின்றுவிடாமல், அதன்படி வாழும் சாட்சிகளாய் மாறவும், எங்கள் குடும்பங்களில் அன்பும் அமைதியும் நிலைத்திருக்கவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.