இந்திய அரசியலில், தமிழ்நாட்டு அரசியல் களம் மட்டும் எப்போதுமே தனித்துவம் கொண்டது. தொடக்கம் முதலே குறிப்பாக, கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒரு சமூக அரசியலாக்கத்தை (Social Politicization) இம்மண் முன்னெடுத்து வருகிறது.
சமூக
அரசியலாக்கம் என்பது வெறும் அதிகாரக் கைமாற்றமோ அல்லது தேர்தல் காலக் கூட்டணிக் கணக்குகளோ அல்ல; மாறாக, அது மக்கள் தங்கள் தன்னுணர்வு மூலம், உள்ளார்ந்த ஆற்றலை உணர்ந்து, புதிய சாத்தியங்களைக் கண்டுணர்ந்து, அதைச் செயல்படுத்தி வாழ்வை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு தொடர் செயல்பாடாகும். இதனால் தனிநபர்களும் குழுக்களும் அமைப்புகளும் தங்களைச் சுற்றியுள்ள சமூகப் பிரச்சினைகளை ஆய்ந்துணர்ந்து, அவற்றின் அரசியல் காரணங்களைப் புரிந்துகொண்டு, தீர்வுகாணும் நோக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட விழிப்புணர்வு பெற்று வருவது அண்மைக்காலங்களில் கண்கூடாகிறது.
விழிப்புணர்வு,
அதிகாரப் பகிர்வு, பொது ஈடுபாடு எனும் முக்கூறுகளின்மீது கட்டமைக்கப்படும் இவ்வாழ்வியல் நெறி சாதி, மதம், பொருளாதாரம், பாலினம் இவை சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை எல்லாம் வெறும் எதார்த்தங்களாகப் பார்க்காமல், அவை கட்டமைக்கப்பட்ட அதிகார அரசியலின் விளைவு என்பதைப் புரிந்துகொள்ளச் செய்கிறது. மேலும், சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு போன்றவற்றிற்கு அரசியல் ரீதியான தீர்வு காணவும் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் அரசியலைப் பிரதிபலிக்கவும், சனநாயக வழிமுறைகளில் பங்கு பெறவும் கற்றுத்தருகிறது.
ஆகவே,
சமூக அரசியலாக்கம் என்பது சமூக மாற்றத்தை உருவாக்குவது; சமூகத்தைச் சீர்திருத்துவது; அரசமைப்பை உன்னத நிலைக்குக் கொண்டுசெல்வது; வன்முறையும் நெருக்கடியும் மிகுந்த மானுட வாழ்வைச் சீரமைத்து, அமைதியும் செழுமையும் கொண்ட சகவாழ்வை உருவாக்குவது. இத்தகைய சீர்திருத்தப் பயணத்தில் குறைகளைக் களைந்து சமூகத்தை மேன்மைப்படுத்துவதையே நாம் ‘முற்போக்குக் கருத்தியல்’ என்கிறோம்.
முற்போக்குக்
கருத்தியலில் வேரூன்றிய மானுடத்தின் நிகழ்கால வாழ்வியல், கடந்தகால வரலாற்றையும் எதிர்காலச் சமூக மாற்றத்தையும் சேர்த்தே தழுவிக்கொள்கிறது. இவை பிரிக்கமுடியாதவாறு ஒன்றோடொன்று இறுகப் பிணைக்கப்பட்டவை என்பதை மார்க்சியக் கோட்பாடுகள் தெளிவாக விளக்குகின்றன. அதாவது, “மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியபடியெல்லாம் அதனை உருவாக்குவதில்லை. கடந்தகாலத் தலைமுறைகள்
உருவாக்கிய மரபுகள், தீய கனவுகள்போல இன்றைய தலைமுறையினரின் மனங்களில் ஆறாத வடுக்களாகவும் தீராத
பிரச்சினையாகவும் அமைகின்றன”
எனக் குறிப்பிட்டார் கார்ல் மார்க்ஸ்.
மார்க்சின்
இவ்வரிகள் தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் தற்போது நிகழும் அரசியல்
சூழலைப் பெரிதும் பிரதிபலிக்கின்றன. பார்ப்பனியம், வருணாசிரமம், சனாதனம், ஆணாதிக்கம், சாதியம் போன்ற தீமைகள் இன்றும் மக்கள் மனங்களைப் பீடித்துள்ளன. இத்தகைய வரலாற்றுச் சுமைகளை எதிர்கொண்டுதான் சமூக நீதியும் சமத்துவமும் நிலவும் புதிய மக்களாட்சிச் சமூகத்தை நாம் கட்டமைக்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டின்
நலன் கருதி, நீண்ட நெடிய வரலாறு கொண்ட இக்கருத்தியல் தொடர வழிவகை செய்ய வேண்டியது, ஆட்சிப் பொறுப்பேற்கும் ஒவ்வோர் அரசின் தலையாய கடமை. இம்மண்ணையும் மக்களையும் நேசித்த தலைவர்கள் எச்சூழலிலும் இக்கருத்தியலில் சமரசமின்றிப் பயணித்தனர் என்பதே வரலாறு சுட்டிக்காட்டும் பேருண்மை.
அவ்வகையில்,
மக்களாட்சி அமைப்பில் சட்டமன்றம் என்பது வெறும் சட்டங்களை இயற்றும் அரங்கம் மட்டுமல்ல; அது மக்களின் இறையாண்மையின் சின்னம். அங்கே மக்களின் பிரதிநிதிகள் எழுப்பும் வினாக்களுக்குப் பொறுப்புடன் பதிலளிப்பது அரசின் முதன்மையான கடமையாகும். இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி, முதலமைச்சர் என்பவர் மாநில அரசின் ‘முதன்மைச் செய்தித் தொடர்பாளர்’ (Chief Spokesman) மற்றும் ‘அமைச்சரவையின் தலைவர்.’ சட்டமன்றத்தில் எழுப்பப்படும் சட்டம்-ஒழுங்கு சார்ந்த கேள்விகளுக்குத் தானே முன்வந்து பதிலளிப்பதே ஒரு தேர்ந்த ஆளுமையின் அடையாளமாக இருக்க முடியும்.
அரசின்
கொள்கைகளை அவையில் அறிவிப்பதும், நெருக்கடிக் காலங்களில் துணிச்சலுடன் முன்னின்று வழிநடத்துவதும் முதலமைச்சரின் முக்கியப் பொறுப்பாகும். எதிர்க்கட்சிகளின் வினாக்களுக்குப் பதிலளிப்பது என்பது தங்களின் பலவீனத்தை வெளிப்படுத்துவதல்ல; மாறாக, அது மக்களின் உரிமைகளுக்குத் தரும் அங்கீகாரமாகவும், வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்திற்குச் சான்றாகவும் அமைகிறது.
தமிழ்நாடு
அரசியல் களத்தில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பெரும் பேசுபொருளாகி இருக்கின்றன. குறிப்பாக, முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் உள்துறை சார்ந்த சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்குத் தானே நேரடியாகப் பதிலளிக்காமல், பிற அமைச்சர்களைப் பதிலளிக்க வைப்பது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
உறுப்பினர்களின்
கேள்விகளுக்குப் பதிலளிப்பது தனது தகுதிக்குக் குறைவு என்று அவர் கருதுகிறாரா? அல்லது கோர்வையாகக் கருத்துகளை முன்வைப்பதில் அவருக்குத் தயக்கம் உள்ளதா? என்ற ஐயம் எழுகிறது. இரண்டுமே ஓர் ஆரோக்கியமான மக்களாட்சிக்கு உகந்த பண்புகள் அல்ல; சட்டமன்றத்தில் கேள்விகளுக்குப் பதிலளிப்பது என்பது வெறும் சொற்களை உதிர்ப்பதல்ல; மாறாக, அது ஒட்டுமொத்த அரசின் சார்பில் கூட்டுப் பொறுப்பை ஏற்பதாகும்.
நிலைமையை
மேம்படுத்தக் கால அவகாசம் கேட்பதோ, உயர்நிலைக் குழு அமைத்துப் பரிசீலிப்பதாகக் கூறுவதோதான் ஒரு தலைவனின் நல்ல பண்பு. அதைவிடுத்து, அமைதி காப்பது சட்டம்-ஒழுங்குச் சீர்கேட்டிற்குப் பொறுப்பேற்கத் தவறுவதையே, தயங்குவதையே காட்டுகிறது.
குறிப்பாக,
பெரியாரைத் தன் கொள்கைத் தலைவராக ஏற்கும் முதல்வர் விஜய், தலித் இளைஞர்கவின் போன்றோரின் ஆணவப் படுகொலைகளின் போது மௌனம் காத்தது ஏற்புடையதல்ல. குழந்தைகளை, இளையோரைத் தன்பக்கம் கொண்டிருக்கும் ஒரு தலைவர், பார்ப்பனியம்,
வருணாசிரமம், சனாதனம், ஆணாதிக்கம், சாதியம் போன்ற தீமைகளை அடையாளப்படுத்தி சமூகநீதி, சமத்துவம், எல்லாருக்கும் எல்லாம் என நிலைப்பாடு எடுக்கும்
போது இவர்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வார்களே! புதிய சிந்தனைகளுடன் புதிய தலைமுறை தளிர்க்க பெரும் வாய்ப்பு உள்ளதல்லவா!
திரைப்பிம்ப
அரசியலைத் தாண்டி, உண்மை அரசியலை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச்செல்லவும், அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவும், மொழியறிவும் ஆளுமைத் திறனும், எதையும் தெளிவாக விளக்கும் ஆற்றலும் ஒரு தலைவனுக்கு இன்றியமையாதவை அல்லவா!
மேலும்,
முதல்வரின் நீண்ட நாள் அமைதியும், பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுப்பதும் அவர் பிற சக்திகளால் இயக்கப்படுகிறாரோ என்ற சந்தேகத்தை விதைக்கிறது. அதிகாரக் கயிறுகளால் ஆட்டப்படும் பொம்மையாக அவர் சித்தரிக்கப்படுவதைத் தடுக்கவேண்டியது அவரின் கடமையாகும். அவர் தீர்க்கமாகச் சிந்திக்கிறார், அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் விவாதிக்கிறார் என்பது உண்மை எனினும், அது பொதுக்களத்திலும் வெளிப்படவேண்டும்.
இறுதியாக,
முதலமைச்சர் இருக்கை என்பது வெறும் அதிகாரத்தை அனுபவிக்கும் ‘பதவி’ அல்ல; அது எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்தும் மேன்மையான ‘பொறுப்பு.’ அது அதிகார மிரட்டலுக்கான களம் அல்ல; மாறாக, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்கும் கருவி.
ஒரு
மக்கள் அரசின் தலைவராக இருப்பவர் தார்மீகப் பொறுப்புடனும் துணிவுடனும் நேர்மறைச்
சிந்தனையுடனும் அரசை வழிநடத்திச் செல்ல வேண்டும். அத்தகைய செயல்பாடுகள்தான் அவரின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது; அதுவே தமிழ்நாட்டு மக்களாட்சித் தத்துவத்திற்குப் பெருமை சேர்க்கும்.
இதையே
ஐயன் வள்ளுவரும்,
‘நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா
ராட்டும் உலகு’
(குறள் 994)
என்கிறார்.
அதாவது, நீதியையும் அறத்தையும் விரும்புதலால், பிறருக்கும் தமக்கும் பயனுடையவராய் வாழ்பவரின் பண்பினையே, உலகத்தார் அனைவரும் போற்றிக் கொண்டாடிப் புகழ்வார்கள். நாற்பது நாள்களைக் கடந்து சட்டசபையில் மௌனம் கலைத்த முதல்வர் விஜய்யின் ஆட்சிக்கான திட்டங்களும் செயல்பாடுகளும் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாய் போற்றத்தக்கதாய் அமையும் - அமையவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்