news-details
சிறப்புக்கட்டுரை
வலிமையே வாழும் (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 03)

எளிமை எனும் வலிமை, அதன் தனித்துவம் என்ன என்பதைப் பற்றி நமக்கு ஒரு புரிதல் இருக்கும். இப்போது காணவிருக்கும்வலிமையே வாழும்என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்று.

வலிமை என்பது வெறும் உடல் ஆற்றலை மட்டுமே குறிக்காது; அதையும் தாண்டி மனிதர்களை, சமுதாயங்களை, தலைமுறைகளை வடிவமைக்கும் நிலையான கருத்துரு கொண்ட எண்ண ஆற்றலைக் குறிக்கும். வலிமையைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பொதுவான கருத்து, உடல் பலத்துடன் அனைத்தையும் எதிர்கொள்வது என்பதுதான். இதுவும் ஒரு வலிமைதான் இல்லையென்று ஒதுக்கிவிட முடியாது. மற்றொரு வலிமையாக, அதன் மற்றொரு பிம்பமாக நாம் உணர வேண்டியது, எது உண்மையான வலிமை என்பதுதான்.

உண்மையான வலிமை என்பது பொறுமை, விடாமுயற்சி மற்றும் துணிவு மூலம் தடைகளை மீறி வெற்றி காணும் ஆற்றலில் இருக்கிறது. ஒருவர் வாழ்வில் காட்டும் வலிமை, அவருக்குப் பிறகு வரும் தலைமுறைகளை வழிநடத்தும், ஈர்க்கும்; அது ஒரு மரபாக நிலைத்து நிற்கும். எங்கள் இனம் காத்த பெருந்தலைவன் என்று சிலரை அடையாளம் காட்டிப் பேருவுவகை கொள்வது இதன் அடிப்படையில்தான். ஏனென்றால் வலிமை என்றும் நிலைக்கும்.

வலிமையின் இயல்பை இருவகையாக நாம் பிரிக்கலாம். புறவலிமை மற்றும் அகவலிமை. புறவலிமை என்பது நம் உடல் பலத்தைக் குறிக்கிறது. அகவலிமை என்பது நம் எண்ணங்கள் மற்றும் மனவலிமையைக் குறிக்கிறது. இந்த இரண்டும் இருந்தால்தானே நல்லது!

ஆம், இவை இரண்டும் ஒருசேர அமைந்தால் இரட்டிப்பு வலிமைதான். உடல் வலிமை மட்டுமே இருந்தால் அது முரட்டுத்தனத்திற்குள் தள்ளிவிடும். அகவலிமை மட்டுமே இருந்தால் அது சில நேரம் சூழ்ச்சிக்குப் பாதை வகுக்கும். இரண்டும் ஒருசேர அமையும்போது மட்டும் நல்லது நடந்துவிடுமா? இல்லை! அதோடு நன்னெறியும் சேரும்போதுதான் அவ்வலிமை சிறப்புமிக்க வலிமையாக வாழ்த்தப்படும்.

வலிமை என்பது நம் வாழ்க்கைக்குப் பலமாக அமைகிறது. எப்படி? அதன் ஆழமான அர்த்தம், அதைப் புரிந்துகொள்ளும் உள்ளுணர்வில்தான் உள்ளது. எந்த இன்னலையும் எதிர்கொண்டு, தோல்விகளைக் துளைத்து, தடைகளைக் கடந்து, மீண்டும் மீண்டும் உற்சாகத்துடன் எழுந்து, அடையவேண்டிய நோக்கத்தில் உறுதியோடு நடைபோடும் வீரம் இருக்கிறதல்லவா... அதுதான் ஆகச்சிறந்த வலிமை. அதை எப்படி உள்ளூர உணர்வது? ஒன்றைப்பற்றித் தீர்க்கமாக, சரியான எண்ணத் தெளிவு இருந்தாலே போதும்; அது நமக்குள்ளே இருந்து இயக்கும் ஆக்கச் சக்தியாக மாறிவிடும்.

குழந்தைகளைத் தனியாக வளர்க்கும் தாய் தனக்குள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி; நாட்டினைக் காக்க எவ்விதச் சமரசமின்றிக் கொட்டும் பனியிலும் அயராது பணியில் ஈடுபடும் பாதுகாப்பு வீரனின் வீரம்; தொடர் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி விடாமுயற்சியோடு விடைகாணத் துடிக்கும் அறிவியல் அறிஞரின் முயற்சி; மாணவர்களை எதிர்கால ஆற்றலாக மாற்ற கூர்தீட்டும் ஆசிரியரின் அர்ப்பணிப்பு, உண்மைக்காகவும் நன்மைக்காகவும் அயராது போராடுபவர்களின் செயல்பாடு... இப்படி எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வலிமை அவர்களை இயக்குகிறது; அது தங்குதடையின்றி வெளிப்படுகிறது.

என் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகள்தான் என்னை இத்தனை வலிமையுள்ளவனாக மாற்றியுள்ளது. வலிகளே வலிமையைத் தருகிறது, வலிகளே வழிகளை ஏற்படுத்துகிறது.

சோதனைகள் ஒருவரின் உண்மையான வலிமையைச் சோதனை செய்கிறது. எப்படி இருந்தாலும், நேருக்கு நேர் பார்த்துவிட வேண்டும் எனும் ஆழ்ந்த நம்பிக்கையோடு செயல்படுபவர்களின் வாழ்வுமுறைதான், உலகம் முழுவதும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் வழிகாட்டியாக இருந்து, நிலையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், ஒரு மனிதரின் வலிமை அவருடன் மடிந்து, முடிந்துவிடாது. அவருடைய செயல்கள் வழிவழியாக வாழ்ந்துகொண்டேதான் இருக்கும்.

ஒவ்வொரு குடும்பமும் நற்பண்புகள் மூலமும், ஒவ்வோர் அரசும் மக்களுக்கான நல்லரண், அது சார்ந்திருக்கும் சமூக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைக் காப்பதன் மூலமும் வலிமையை நிலைநிறுத்துகின்றன. இவை இரண்டும் சரிவர அமையும்போது உணர்வுள்ள சமூகம் வளர்கிறது. எதிர்காலத் தலைமுறைக்குத் தேவையான விதையை இதன்மூலம்தான் விதைத்து வளர்த்தெடுக்க முடியும்.

ஒருவரது தனிப்பட்ட வலிமையே இவ்வளவு சாதனையைத் தரும்போது, ஒன்றிணைந்த வலிமை எவ்வளவு பெரிய சாதனையை உருவாக்கும் என்பதை நினைக்கும்போது மிகப் பெருமையாக உள்ளது. ஒருவருக்கொருவர் துணையாக இருக்கும்போது வலிமை இன்னும் சிறப்படைகிறது. இந்த ஒற்றுமையை இயற்கைப் பேரிடர் அல்லது தொற்றுநோய் வரும்போது எவ்வித வேறுபாடுமின்றி மனித மனம் ஒன்றிணைந்து தனது ஒருமைப்பாட்டைக் காட்டும் வலிமையை எதைக்கொண்டும் தடுத்திட முடியாது. ஒருமித்த கருத்தோடும் ஒருமித்த நோக்கோடும் ஒன்று சேரும்போது நிலையான மாற்றங்களை உருவாக்க முடியும். இப்படிப்பட்ட வலிமை ஒருபோதும் குறையாது; மாறாக, வளரும். மேலும் ஒற்றுமையால் உறவு நலன் பெருகும்.

எவ்வளவு நீண்ட காலம் வாழ்கிறோம் என்பதைத் தாண்டி, எவ்வளவு வலிமையோடும், உள்ளத் தெளிவோடும் வாழ்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். அதுதான் உண்மையான வலிமை. நம் கனவுகளை மற்றும் தன்னம்பிக்கையைப் பிறருக்குப் பரப்பி அவர்களைத் தூண்டுவதே உண்மையான வலிமை என்று சொல்லி அதைச் செய்து வாழ்ந்தவர்கள்தான் இன்றும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கிறார்கள். ஏனென்றால், வலிமை என்றும் நிலைக்கும்.

தீர்க்கமான நோக்கம் உள்ள வலிமை ஒருபோதும் குன்றாது; அது ஒரு நிலையான ஆற்றல் கொண்டது; அது காலம் கடந்து சென்றாலும் மறையாது; நினைவுகள், சாதனைகள் மற்றும் விட்டுச்சென்ற வழிகள் மூலம் உறுதியாக நம்மைப் பின்தொடரும். அது தனிநபர் உறுதிமொழியாகவோ, வரலாற்றுத் தாக்கமாகவோ, ஓர் இயக்கத்தின் கொள்கையாகவோ அல்லது ஒற்றுமை கொண்ட மக்களின் சக்தியாகவோ... இப்படி ஏதோ ஒரு வடிவத்தில் வலிமை தொடர்கிறது.

உடல் வலிமை, உள்ள வலிமை மற்றும் அதிகார வலிமை இவை மூன்றும் ஒருவருக்கு அமைந்துவிட்டால் போதும்தானே! எனும் எண்ணம் வரும். நாம் ஏற்கெனவே கூறியுள்ளது போல இந்த வலிமைகளோடு நற்குணங்களும் (Virtues) சேர்ந்தால்தான் அது சிறப்பான வலிமையாக அமையும்.

உடல் வலிமை பொறுமையையும், உள்ள வலிமை மன்னிப்பையும் தருவதே தகுதி நிறைந்த வலிமையாகும்.

(தொடரும்)