குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. முக்கியமாக இந்தியாவில் அவை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
குழந்தைகள்
ஒரு நாட்டின் கல்வி, வளர்ச்சி போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தேசியக் குற்றப்பதிவுப் புலனாய்வு அமைப்பு (NCRB) 2023-ஆம்
ஆண்டு வெளியிட்ட தகவலின்படி 1,77,335 குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022-ஆம் ஆண்டு 1,62,449 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தத்
தகவலின்படி 2022-ஐ ஒப்பிடும்போது 2023-இல் குழந்தைகளுக்கு
எதிரானக் குற்றங்கள் 9.2% அதிகரித்துள்ளன.
இந்தப் புள்ளி விவரங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடந்த குற்றங்களான வன்கொடுமை, பாலியல் குற்றம், கடத்தல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் POCSO-வில்
மட்டும் பதிவானக் குற்றங்களின் எண்ணிக்கை 2017-இல் 33,210 ஆகும். ஆனால், 2022-இல் இது 94% அதிகரித்து, 64,449 ஆக உயர்ந்துள்ளது.
பெரும்பாலும்
குழந்தைகள் அவர்களுக்கு நெருக்கமான உறவின் மூலமாகத்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தனது குடும்பத்தினர் என்று சொல்லப்படும் மாமா, அண்ணன், சித்தப்பா, தாத்தா போன்றோர்களால்தான் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள்மீது குழந்தையின் பெற்றோர் அதிக நம்பிக்கை வைத்திருப்பதால், அவர்கள் மிகவும் எளிதாகத் தங்களின் வக்கிரத்தைப் பிஞ்சுக் குழந்தைகள்மீது நடத்துகின்றனர்.
குடும்பத்தினரை
ஒப்பிடுகையில், அயலாரிடம் குழந்தைகள் குறைந்த அளவில் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றனர். அயலாரிடம் எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்த்தால், வீட்டின் அருகில் வாழும் நபர்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் போன்றோர்களால் நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, பொது இடங்களிலும், பேருந்து மற்றும் புகைவண்டி போன்ற நெருக்கம் நிறைந்த இடங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பல நடத்தப்படுகின்றன. இப்படியாக, குழந்தைகள்
பாதுகாப்பு இன்று, இந்தியாவில் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
குழந்தைகள்மீது
நடத்தப்படும் வன்முறைகள் உடல் ரீதியான வெறும் பாலியல் குற்றம் என்று அடக்கிவிட முடியாது. உடல் ரீதியான துன்புறுத்தல், வார்த்தை வழியாகத் தகாத வார்த்தைகளால் அவர்களைத் துன்புறுத்தல், உளவியல் ரீதியான துன்புறுத்தல் போன்றவை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் மனத்தில் ஆறாக் காயங்களாக மாறி அவர்களது ஆளுமை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
குழந்தைகள்
பாதுகாப்பு குறித்து பல நெறிமுறைகள் கூறப்படுகின்றன.
குறிப்பாக, ‘Good touch and Bad touch’ அதாவது,
‘நல்ல தொடுதல்’ மற்றும் ‘கெட்ட தொடுதல்’ என்பவை. இங்குப் பல Good
Touch-களுக்குப்
பிறகுதான் Bad Touch தொடங்குகிறது.
அதுவும் குறிப்பாக, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து
இப்படித்தான் தொடங்குகிறது. இதனால் குழந்தைகள் அவற்றை எவ்வாறு புரிந்துகொள்வது என்று குழம்பிவிடுகின்றனர். இதுபோன்ற சூழலைத் தவிர்க்க குழந்தைகளுக்கு ‘Don\'t touch’
என்றும், ‘விருப்பம் இல்லாத குழந்தையைத் தொடுதல் கூடாது’ என்றும் சொல்லித் தரப்படவேண்டும்.
பெரும்பாலானோர்
பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், பெண் குழந்தைகளுக்கு நடைபெறும் அளவிற்கு இல்லாவிட்டாலும், ஆண் குழந்தைகளுக்கும் அதிகமாகப் பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. ஆனால், கலாச்சாரம் என்ற பெயரில் ‘ஆண் பிள்ளை அழக்கூடாது’ போன்ற
சொல்லாடல்கள் வருவதால், அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகப்படியாக வெளியே தெரிவதில்லை.
இந்தியப்
பெற்றோர் சாதி, மதம், பாகுபாடு போன்றவற்றால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதனால் ஒரு குழந்தையிடம் எந்த மாதிரியான உரையாடல்கள் நடத்தவேண்டும் என்று தெரியாமல் கலாச்சாரம் என்ற போதைக்குள் சிக்கிக்கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தை அதனைத் தன் பெற்றோரிடம் கூற வரும்பொழுது, அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவர்களை மீண்டும் மன அழுத்தத்திற்கே பெரும்பாலான
பெற்றோர் ஆளாக்குகின்றனர். பாதிப்பை ஏற்படுத்தியது தனது குடும்ப உறுப்பினர் என்று தெரிந்தால் அவர் அப்படிச் செய்யமாட்டார் என்றும், அப்படியே தெரிந்தாலும் அதனை மூடி மறைப்பது போன்ற பல வழிகளில் பெற்றோரின்
அணுகுமுறை அமைகிறது.
பாலியல்
துன்புறுத்தலை அனுபவித்த பிறகு குழந்தைகள் உடல் மற்றும் மனரீதியாகப் பெரும் பாதிப்பை அனுபவிக்கின்றனர். அவர்கள் அச்சிறு வயதில் மனநலப் பாதிப்பு, கவலை, சோர்வு போன்ற உளவியல் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். கல்வி மீதான வெறுப்பு, சுற்றி இருப்பவர்கள் மீது நம்பிக்கை இழப்பு போன்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது அவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கிறது, கேள்விக்குள்ளாக்குகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் மீதான அவநம்பிக்கை மிகுந்த பாதிப்பை அவர்களது உறவு வாழ்வில் ஏற்படுத்துகிறது. தனிமை விரும்பிகளாக, தாழ்வு மனப்பான்மை உடையவர்களாக, அன்பு செலுத்த முடியாதவர்களாக, உணர்வுத் தளங்களில் பெரும் பாதிப்புகளை வாழ்நாள் முழுவதும் சந்திக்கக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
குழந்தைகளுக்கு
அவர்களது உரிமையைப் புரியும் வகையில் எடுத்துக் கூறுவது; பள்ளிகளில் அவர்களுக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது; பள்ளிப் புத்தகங்களில் அதற்கான பாடங்களை வகுப்பது; குழந்தைகள் பாதுகாப்பிற்காக இருக்கின்ற POCSO போன்ற
சட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் குறைக்கும் என்றாலும், இதில் சமூகத்தின் பங்கு மிகப்பெரியதாகும்.
குழந்தைகளுக்கெதிரான
பாலியல் வன்கொடுமை ஒரு சமூகப் பாவம்; அது மனித மாண்பைச் சிதைக்கிறது. குழந்தைகளின் ஆளுமையை அழிக்கிறது. எனவே, இப்படிப்பட்ட மனிதத் தன்மையற்றச் செயல்களுக்குக் குடும்பம் மட்டும் விழிப்புணர்வு அடைந்து எதிர்த்தால் போதாது; மாறாக, நமது சமூகம் இதன் விளைவுகள் குறித்தான விழிப்புணர்வைப் பெறவேண்டும். அதனை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.
அதிகரிக்கும்
இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் வெளியில் தெரிந்தாலும், அதன் வேரானது ஆபாசப் படங்கள், அதீத பாலியல் உணர்வைத் தூண்டும் இணையத்தளங்கள்- செயலிகளில் ஊன்றியிருக்கிறது. ஆகவே, இணைய வழியிலும் அதிகம் பாதிப்புள்ளாகின்றனர். வளரிளம் குழந்தைகள் பாலியல், பாலியல் உணர்வு குறித்தான சரியானப் புரிதலுக்கு வளர்ந்து வரும் முன்னர் இணைய வழி பாலியல் கொடுமைகளும், ஆபாச இணையத்தளங்களும் அவர்களது திரையில் எளிதில் கிடைக்கின்றன. அதன் விளைவாக, முதிர்ச்சியடையாத பாலியல் நம்பிக்கைகளும், பாலியல் உணர்வு போன்றவை பிஞ்சுகளின் நெஞ்சத்தில் நிலைபெறுகின்றன.
ஆபாசப்
பேச்சுத் தளங்கள், நேரலை ஆபாசக் காட்சிகள் இன்னும் பல வகையிலான பாலியல்
உணர்வைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தளங்களை இந்தியச் சமூகத்திலிருந்தும் இணையத்திலிருந்தும் ஒழிக்கவேண்டும். பாலியல் உணர்வுகளைத் தூண்டும் ஆபாசப் படங்களை எல்லா வகையான ஊடகங்களிலும் தடை செய்யவேண்டும்.
தனிநபர்,
அரசு மற்றும் சமூகம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே அதிகரித்துவரும் குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்களைக் குறைக்க முடியும்.