news-details
சிறப்புக்கட்டுரை
எப்படியும் அரசியல்: தகர்க்கப்பட்ட நம்பிக்கைகள்

நம் வாழ்வுஇதழொன்றில்அசிங்கம்என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதிய நினைவு இருக்கிறது. அக்கட்டுரை எழுதப்பட்ட காலம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநரும், அவரது தவப்புதல்வனும் தமிழ்நாடு அரசியல் களத்தைத் துவம்சப்படுத்திக் கொண்டிருந்த அசிங்கமான காலம். யாருடைய அரசியல் போக்கைப் பெரியவர் இராமதாசு அசிங்கமென வர்ணித்தாரோ, ‘அவராகிய குமாரன் தன் உதிரத்தே உதித்தவன் என்பதால் தம்மைத் துறந்து, உடன் வந்தோரையெல்லாம்அய்யோஎன்று அலறவிட்டுவிட்டு, ‘அவராகிய மகனை உச்சிமோந்து, கண்ணீர் சிந்தி அணைத்துக் கொண்ட நிகழ்வில், அசிங்கம் கரைந்து போய் புனிதமாகிவிட்டதோ?

பெற்றெடுத்த மகன் நிகழ்த்திய அரசியல் கூத்தை அசிங்கம் என விமர்சித்த பெரியவருக்கு, இன்றுமாபெரும் தலைவர்கள் என வாழ்த்தப் பெறுவோர் பலர் ஆடிவரும் அரசியல் அநாகரிக அசிங்கங்கள் மகிழ்வையும், ஒருவகை ஆறுதலையும் தந்திருக்கலாம் என்றும் நம்பலாம்!

அசிங்கத்தின் உச்சம்

இன்று தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது? தமிழ்மண், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் அறம் என்று பேசப்பட்டவையெல்லாம் வெறும் கற்பனையோ? வெறுங்கனவோ? என்று எண்ணப்பெறுகின்ற அளவுக்கு அனைத்துவகை சீர்குலைவுகளும் அரங்கேறி வருகின்ற ஒரு துர்பாக்கிய நிலையைச் சந்தித்து வருகின்ற காலச்சூழல்! இச்சூழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

கொள்கை மறந்த கட்சிகள்

இந்தியச் சமூக அமைப்பையும், இவ்வமைப்புள் நிறுவப்பட்ட சனநாயக அரசையும் பிரபல அரசியல் ஆய்வறிஞர் ரஜினி கோத்தாரி அவர்கள்பொருத்தமற்ற ஒன்று (Mismatch) என்று வர்ணிப்பார். இந்தியச் சமூக அமைப்பும், அதன் கலாச்சாரமும் ஏற்காத சனநாயகக் கலாச்சாரத்தை வலிந்து திணித்த இந்தியத் தேசியத் தலைமைக்கு எவ்விதச் சுயநலநோக்கும் இல்லை என்பதே உண்மை. பெரும்பான்மை மக்களின் சமயரீதியான உணர்வைத் தாண்டியும் இந்நாட்டினைச் சமயச்சார்பற்ற நாடாக உருவாக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த பண்டித நேருவின் தெளிந்த மனப்பான்மையைப் போற்றுகிறோம்.

மதப்பெரும்பான்மையைக் கட்டமைத்து, மதவாத அரசொன்றினை ஏற்கும் மனநிலை நியாயப்படுத்தப்பட்ட பின், இங்குச் சனநாயகத்தின் பொருள் என்ன? சமயச் சார்பின்மையின் ஏற்புடைமை (Relevance) என்ன? இந்தப் பெருங் கேள்விகளுக்கெல்லாம் விடைகாண வேண்டிய இந்திய அரசியல் சமூகச் சூழ்நிலையில், இந்திய மதவாத அரசியலை, மதவாதம் முன்வைக்கும் மதப்பெரும்பான்மைவாதத்தை, மதப்பெரும்பான்மைவாதம் முன்னெடுக்கும் பாசிச அரசியலை எதிர்கொள்ள வேண்டி உருவாக்கப்பட்டஇந்தியா (INDIA) கூட்டணி இந்திய அளவில் என்ன நிலையில் இருந்தாலும், தேசிய அளவில் இராகுல்காந்தி தலைமையிலும், தமிழ்நாட்டில்திராவிட மாடல்அரசின் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி என்னவானது?

இந்தியாகூட்டணியின் தலைவராகவும், தொடர்ந்து இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராகவும், திராவிடத்தின் ஸ்டாலின் அவர்களால் முன்மொழியப்பட்ட இராகுல்காந்தி அவர்கள், தி.மு. கூட்டணியைக் கண்டுகொள்ளாமையின் அரசியல் என்ன?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் 40 இடங்களில் வெற்றியை உறுதி செய்த ஸ்டாலின் செய்த அரசியல் தவறு என்ன? தேசியத் தலைமைக்கு மிகத் தாராள மன நிலையில் ஆதரவு தந்த நிலையில், ஸ்டாலினோடு இணைந்து பரப்புரை கூட செய்ய முடியாத அளவுக்குத் தனித்துப் போய் பரப்புரை செய்து, மக்களுக்குத் தந்த செய்தி என்ன? இன்று தமிழ்நாட்டில்இந்தியாகூட்டணி பற்றிப் பேச இயலாமைக்கு என்னென்ன காரணம் என்று யோசிக்க வேண்டியிருக்குமோ! அதன் தொடக்கப்புள்ளி இதுதான்.

வலுவான கூட்டணிக் கட்சிகளும், தடுமாறும் நிலைப்பாடும்

தமிழ்நாட்டில் மதச்சார்பற்றக் கூட்டணி வலுவான ஒன்று. இது வெறும் கட்சிக் கூட்டணி அல்ல; கொள்கைச் செறிவான கூட்டணி என்றெல்லாம் தமிழ்நாட்டின் முற்போக்குச் சக்திகளாலும், அறிவுசீவிகளாலும் போற்றப்பட்டு வந்த நிலையில், இக்கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் இன்றைய போக்கு மக்களிடம் ஏற்படுத்தியுள்ள அவநம்பிக்கை, வருத்தம் தரும் ஒன்றாகும். பொதுவெளியில் மக்களிடம் ஏற்படுத்தி வரும் இந்த நம்பிக்கை, சனநாயகத்திற்கு இழைக்கப்படும் பெரிய அவமானமாகும். சனநாயகத்தின் மிகப்பெரிய உள்ளீடு சுதந்திரமாகும். இச்சுதந்திரத்தின் மிகப்பெரியது கருத்துச் சுதந்திரம்! கருத்துச் சுதந்திரமே இன்று நாம் காணும் கட்சிகள். கட்சிகள் என்பன கொள்கைக் கலன்கள். நாட்டின் சனநாயக இயக்கத்தின் முதன்மைக் கூறாம் தேர்தல், அத்தேர்தல் முன்வைக்கும் தெரிவுச் சுதந்திரம் அனைத்தும் கட்சிகளின் செயல்பாட்டில்தான் உருப்பெறும். இக்கட்சிகள் நபர்களால் உருவாக்கப்பெறும் கும்பலும் அல்ல, கூட்டமும் அல்ல! கொள்கை வேறுபாட்டால், கொள்கை மற்றும் கருத்துச் சுதந்திரத்தால், பேச்சுரிமையால், சங்கமாகக் கூடுதற்கான உரிமையால் உருவாக்கப்பட்ட கட்சிகள் வெறும் பெயர்களால் வேறுபட்டதல்ல. தேர்ந்து கொண்ட கொள்கையால் தனித்த வேறுபட்ட அடையாளங்களைக்  (Identity) கொண்டவை.

கொண்ட கொள்கைகளை வேதமெனப் போற்றாது, சந்தர்ப்பவாத நோக்கில் செயல்படும் கட்சிகள் கட்சிகளே அல்லஇவை வாக்கு தேடி அலைந்து, பதவி சுகம் மட்டும் தேடுதலால், சனநாயக விழுமியங்களை வணிகமயமாக்குதலால், இக்கட்சிகள் வணிகம் செய்யும் வணிக நிறுவனமாகவே செயல்படுகின்றன. வணிகம் இலாபத்தை நோக்காகக் கொண்டது. இலாபம் தீட்ட வணிகர்கள் கையில் எடுக்கும் ஆயுதம்போட்டி.’ இப்போட்டியில் எந்தவித அறக் கோட்பாடும் இல்லை; போட்டியில் எந்த ஒழுக்க விதிகளும் (Morality) இல்லை. இன்றைய அரசியல் கட்சிகள் போட்டி அரசியலுக்குப் (Competitive Politics) பயன்படுத்தப்படுமானால், மேலே கூறப்பட்ட கட்சிகளுக்கான இலக்குகளால் என்ன பயன்?

கொள்கை எனும் நங்கூரமற்ற (anchorless) கட்சிகளே இன்றைய எதார்த்தம்என்பார் அறிஞர் ரஜினி கோத்தாரி. கொள்கை எனும் உள்ளீடற்ற கட்சிகளுக்கு எந்த வலுவும் இல்லை. எந்த வகை நிலைப்பாடும் இல்லை. வெறும் கூடுகளான (Single Shell) இக்கட்சிகளை எவர் வேண்டுமானாலும் ஆக்கிரமிக்கலாம், அபகரிக்கலாம். சமயச் சார்பற்றக் கட்சிகள், மதவாத பாரதிய சனதாவிடம் பலியான காரணம் இதுவே. பாரதிய சனதா தன் கொள்கைகளை என்றும் எப்போதும் சமரசம் செய்ததே இல்லை. மேனாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி அவர்கள், “இந்துத்துவமே பாரதிய சனதாவின் Mascotஎன்பார். இக்கட்சியின் உயிரார்ந்த கலாச்சாரத் தேசியத்தின் அடிப்படைக் கூறுகள் கடந்த 12 ஆண்டு பாரதிய சனதா ஆட்சியில் நடைமுறைக்கு வருவதைப் பார்க்கிறோம்.

இவ்வளவு வலுவான இக்கட்சியுடன் அணி சேர்ந்து சோரம் போன தமிழ்நாட்டுக் கட்சிகளை நாம் அறிவோம். இக்கட்சிகளுள் திராவிடம் பேசிய கட்சிகளும் அடக்கம். பொதுவுடைமைக் கட்சிகள் மட்டுமே  ஓரளவு சுயமரியாதையைக் காத்துக் கொண்டவை என்று கூறமுடியும்.

தமிழ்நாட்டுக் கட்சிகளின் நம்பகத்தன்மை

தமிழ் மக்கள் இன்று தமிழ்நாட்டில் செயல்படும் ஏதோ ஒரு கட்சியின்மீது நம்பிக்கை கொண்டிருப்பர். இவர்களால் போற்றப்பட்ட கட்சித் தலைமைகள் ஏற்கும் முடிவுகளை எப்படி இவர்களால் ஏற்க முடிகிறது? அல்லது நாளொரு முடிவை ஏற்கும் தலைவர்கள், தம்மை இதுவரைப் பின்தொடரும் தொண்டர்கள் என்ன நினைப்பர்? என்று கூட எண்ணிப் பார்க்கமாட்டார்களா?

அண்மையில் திசை மாறிய வைகோ அவர்கள், தன் மாற்றத்திற்கு என்ன காரணம் கூறினார்? தமிழ், தமிழ் தேசியம், ஈழ விடுதலை என்று நாளும் பேசிவந்த இந்த நெடிய மனிதர் .வெ..விடம் சரணாகதி ஆகின்றார். இந்த நெடிய நீண்ட பாராளுமன்றவாதி எந்த அனுபவத்தை, எதைத் தேடி அங்கு போகிறார்? இவர் போக்கில் நடந்த சமரசம் எது? இவரின் பல பத்தாண்டு அனுபவம் மக்களுக்குத் தரும் செய்தி என்ன? இத்தனை பெரிய மனிதரின் அரசியலுக்கு இவர் முன்வைத்த தர்மம் என்ன?

அண்மையில் தடம் மாறிப்போன இக்கட்சிகள் நியாயப்படுத்தும் மற்றொரு சொல் பங்கேற்பு. பங்கேற்பு என்பது சனநாயக விழுமியம். பங்கேற்பு எனும் விழுமியம்  சனநாயகத்தின் உண்மையான உட்கூறு. இது குடிமக்களின் அடிப்படை உரிமை. இது சலுகையன்று. தமிழ்நாட்டின் புதிய அரசு அளிக்க முன்வந்துள்ள பங்கேற்பைப் பெருங்கருணையென ஏற்றுக்கொண்ட (கொள்கை) கட்சிகள், வலுவாக அணி திரண்டுள்ளன. இவ்வணியில் இடம் பெற்ற வி.சி.. தலித் விடுதலைக்கு இதுவே அச்சாரம் எனப் பூரிப்பு கொள்கிறது. ‘எழுச்சித் தமிழர்இங்குத் தோற்றாரா? வென்றாரா? வரலாறு பதில் கூறும். என்றாலும், இவர் காட்டிய இன்றைய வழி சரியானது அல்ல.

இவர்களுள் பெரிய அதிர்வைத் தந்த இந்திய முசுலிம் லீக் கட்சி மிகப்பெரிய பாதகம் இழைத்தது என்பதே உண்மை. இந்திய அரசியல் வாழ்வில், பண்பாட்டுத்தளத்தில் முசுலிம்களை முழுவதுமாக முடித்துக்கட்டும் பணியைத் திட்டமிட்டு செய்து வரும் இந்திய மதவாதிகளைக் கொள்கை ரீதியாக எதிர்த்து, சிறுபான்மையினருக்குக் காவல் அரணாகத் திகழ்ந்த திராவிடத்தை, ‘பங்கேற்புஎன்ற பெயரில் சமரசம் செய்த போக்கைச் சனநாயகச் சமூகம் மன்னிக்காது.