news-details
சிறப்புக்கட்டுரை
அகலப் பார்வையா? குறுகிய வட்டமா? (இளமை ஒரு சவால்! – 07)

காரைக்குடிக்கு அருகில் உள்ள திருப்பத்தூரில் நமக்கு ஒரு நண்பர். அவர் மகள் மருத்துவப் படிப்புத்தான்வேண்டும் என்று அடம்பிடித்தார். நடுத்தரக் குடும்பம். மதிப்பெண் வாங்கியாக வேண்டும்.

மேல்நிலைப்பள்ளிப் படிப்பிற்காக காரைக்குடியில் தனியாக வீடு எடுத்தார்கள். தினமும் காலை, மாலை டியூஷன் வகுப்புகள். அம்மா பகலில் திருப்பத்தூருக்கு வேலைக்குப் போய்த் திரும்பினார். இரண்டு வருடங்கள் குடும்பமே அலையாய் அலைந்தது.

மேல்நிலைத் தேர்வில் 1200-க்கு 900 மதிப்பெண்கள். அப்போதும் விடாமல்நீட் (NEET) போட்டித் தேர்வை எழுதுகிறேன்என்றாள்.

மீண்டும் இரண்டு மாத அலைச்சல். அதிலும் தேறவில்லை. கடைசியாகப் போனதால் கலைக் கல்லூரியிலும் விரும்பிய பாடம் கிடைக்கவில்லை. கடைசியில்  என்ன மிச்சம்? அலைந்ததைத் தவிர!

இதே கதை இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் எல்லாக் குடும்பங்களிலும் நடக்கிறது. எட்டு இலட்சம் மாணவர்களும் மருத்துவராகி, கோடி கோடியாகக் குவிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நம்மைச் சுற்றி இருக்கின்ற ஏராளமான நல்ல நல்ல வாய்ப்புகளை ஏன் கைநழுவ விடவேண்டும்? நம்முடைய இன்றைய கல்வித் திறமைக்கும் ஆர்வத்திற்கும் பெற்றோரின் வசதிக்கும் தகுந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கக்கூடாதா? குறிப்பாக, நம் பெற்றோரின் பொருளாதார நிலை, உடல் நலம் பற்றியும் இளைஞர்களாகிய நாம் அக்கறை எடுத்துக்கொள்ளக்கூடாதா? அவர்களின் அறிவுரைகளையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கக்கூடாதா?

நம்மைச் சுற்றி நம் ஒவ்வொருவருக்கும் பிடித்தமாகக் கல்விப் பயணத்தை மேற்கொள்ள மிக அதிக அளவில் வாய்ப்புகள், ஏராளமான கல்வி நிலையங்கள், கல்வி வாய்ப்புகள் உள்ளன.

மேல்நிலைப்பள்ளியிலேயே தொழில்சார் கல்வி, பாலிடெக்னிக் நிறுவனங்கள்... இவற்றில் சேர்ந்து சிறப்பாகப் படித்துத் தேறினால் 17, 18 வயதிலேயே தனியார் நிறுவனங்களில் வேலைக்குப் போய்விடலாம். குடும்பத்தைப் பார்த்துக்கொண்டே மேலே படித்து முன்னேறலாம்.

இன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஏராளமான கல்வி வாய்ப்புகள் உள்ளன. வணிகவியல், ஆங்கிலம் போன்ற பாடங்கள் மட்டுமல்ல, இதழியல், தொலைக்காட்சி, உணவுக்கலை போன்ற பல்வேறு படிப்புகளும் இன்று கிடைக்கின்றன. பொறியியல் கல்லூரிகள் இன்று ஏராளம். பாடங்களும் ஏராளம். நன்கொடை வசூலும் பெருமளவு குறைந்துவருகிறது.

மருத்துவம் மட்டுமல்ல, மருத்துவம் சார்ந்த பல் மருத்துவம், உடலியக்கப் பயிற்சியாளர் (Physio therapist), செவிலியர் போன்ற வாய்ப்புகளும் இருக்கின்றன.

எதைப் படிக்கப்போகிறோம் என்பது முக்கியமில்லை; எதைப் படித்தாலும், அதை நன்றாகப் படிக்கிறோமா? அதில் முதல் 20 விழுக்காடு  தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்கிறோமோ என்பதுதான் முக்கியம். நாம் விரும்பும் வேலைக்கான தகுதிகளையும், திறமைகளையும் நாம் படித்துக் கொண்டிருக்கும்போதே வளர்த்துக்கொள்கிறோமா என்பதுதான் முக்கியம். வேலைவாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளைச் சந்திக்க உரிய நேரத்தில் தயாராகிறோமா என்பதுதான் முக்கியம்.

உயரப் போகவேண்டும் என்று ஆசைப்படுவோம், கனவு காண்போம். அது அவசியம், தேவைதான். ஆனால், நமது உயர்வுப் பயணத்தை நாம்தான் மேற்கொள்ளவேண்டும். அதற்கான பொறுப்பை நாம்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். நம்முடைய பெற்றோர் துணை நிற்பார்கள். பணத்தை வைத்து நம்மை அலுங்காமல் குலுங்காமல் வாழ்க்கைக் கோபுரத்தில் நம் பெற்றோர் தூக்கி வைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில்தான் போய்முடியும். எல்லா நிலைகளிலும் தகுதித் தேர்வுகளும், போட்டித் தேர்வுகளும் பெருகிக் கொண்டிருக்கும் காலமிது.

படிப்பு, வேலைவாய்ப்பு, சம்பளம்... இந்த வட்டத்திற்குள் மட்டும்தான் நாம் சுற்றிச் சுற்றி வரவேண்டும் என்பதில்லை. இசை, நடனம், நடிப்பு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஊடகம் சார்ந்த திறமைகள், சமூகப் பணிகள், ஏராளமான விளையாட்டுகள்... படிப்பை விட்டுவிடாமல், நமக்கு விருப்பமான ஒரு கலைத்துறையில் கால்பதிக்கலாம். சுயதொழில் அதிகம் அதிகமான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் தங்கச் சுரங்கம்.

நாங்கள் கல்லூரியில் படித்தபோது பரமக்குடி நண்பர் ஒருவர் வணிகம் படித்தார். நாங்கள் எல்லாம் வேலைக்குப் போனபோது அவர் மிளகாய் வியாபாரத்தில் இறங்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்றார். இன்று அவர் மகன் மேலாண்மைத் துறையில் படித்துத் தேறி, மிளகாய் சார்ந்த உயர் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்!

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதைத் தவிர்ப்போம். விரிந்த பார்வையால் உலகை அளப்போம்; நமக்கேற்ற துறையில் ஆழக்கால் பதிப்போம், வெல்வோம்!

இன்றைய உலகில் ஏராளமான கல்வி வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள்! என்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக் கொள்ளமாட்டேன். அகலப் பார்வையோடு என் வாய்ப்புகளை அலசுவேன். எதைப் படித்தாலும் அதை விரும்பிப் படிப்பேன்; அதன்மூலம் வெற்றி பெறுவேன்.