news-details
சிறப்புக்கட்டுரை
உயிர்கள் போற்றுதும்!

பூமியின் அதிசயிக்கத்தக்க பொருள் என்ன? இக்கேள்விக்குச் சிலர்விவரிக்க முடியாத எல்லையற்று விரியும் கோடிக்கணக்கான விண்மீன் கூட்டம்என்று பதில் கூறலாம். வேறுசிலர், நொடிப்பொழுதில் கோடிக்கணக்கான கணிப்புகளைச் செய்யும்சூப்பர் கம்ப்யூட்டர்என்று கூறலாம். இன்னும் சிலர்உயிரணுக்களின் நுட்பமான நேர்த்திஎனலாம். ஆனால், இவை எல்லாவற்றையும்விட அதிசயிக்கத்தக்க ஒன்று உண்டு. அது நமக்கெல்லாம் தெரிந்த ஆனால், நாம் அதிகம் எண்ணிப்பார்க்காத ஒன்று. அதுதான் மனித உயிர்!

பூமியின் அதிசயம், எல்லையற்று விரியும் விண்மீன் கூட்டங்கள் மட்டுமல்ல; அதைவிட அதிசயம், அவற்றை எண்ணிப்பார்த்து வியந்து நிற்கும் ஓருயிர் - மனித உயிர்! உலகம் அற்புதமானது. ஆனால், அதன் அற்புதம் அதற்குப் புரிவதில்லை. அதைப் புரிந்துகொள்ளும் ஒரே உயிர் மனித உயிர்!

உலகில் பல கோடி உயிரினங்கள் வாழ்ந்தாலும், அவற்றுள் ஒன்றான மனித உயிரினம் அதிசயமானது. நாம் ஒவ்வொருவரும் கருவுற்ற, கண்ணுக்குத் தெரியாத ஒற்றை உயிரணுவிலிருந்து தோன்றினோம். அந்த உயிரணு தன்னகத்தே உள்ளடக்கி வைத்திருக்கும் உயிர் தகவல்கள் வியக்கத்தக்கவை. மனித மூளையின் ஆற்றல், எந்த ஓர் உயர்திறன் கணினியின் ஆற்றலைவிடவும் பல மடங்கானது. எனவேதான் திருத்தந்தை லியோ இதைஅற்புதமான மானுடம்என்கிறார். இந்த மானுடம் இன்று மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்கிறது. ஒருவகையில் இங்கு ஓர் இனப்படுகொலை நடக்கிறது என்றே கூற வேண்டும். ஒரு குறிப்பிட்ட மக்கள் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கில் குறிவைத்துக் கொல்லப்பட்டால், அதை இனப்படுகொலை என்றுதான் கூறமுடியும். இவர்கள் இன்னும் பிறக்கவில்லை; உலகைக் காணவில்லை; தங்களைக் கொல்வது யார் என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை என்பது இன்னும் வேதனையான ஒன்று.

அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 12 இலட்சம் மனித உயிர்கள் கருவிலே கொல்லப்படுகின்றன. உலகம் முழுவதும் இந்த ஆண்டு மட்டும் இரண்டு கோடியே இருபது இலட்சம் மனித உயிர்கள் கொல்லப்பட்டிருக்கின்றன. வினாடிக்கு ஒரு கொலை என்னும் அளவுக்கு எண்ணிக்கை இன்னும் உயர்ந்துகொண்டே செல்கின்றது.

மரணத்தின் பண்பாடு: ஒரு சமூகத்தின் பண்பாட்டு உயரத்தை அதன் சிறைச்சாலைகளுக்குள் நுழைந்து பார்த்தால் கண்டுகொள்ளலாம்என்றார் இரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் பியடோர் டொஸ்ட்டேவ்ஸ்கி. அதையே இன்றைய சூழலில் இப்படியும் கூறமுடியும்: ‘ஒரு சமூகத்தின் பண்பாட்டு உயரத்தை அது குரலற்ற மனிதர்களை - இன்னும் பிறக்காத, ஊனமுற்ற, முதிய மற்றும் மறக்கடிக்கப்பட்ட மனிதர்களை  எப்படி நடத்துகிறது என்பதிலிருந்து கண்டுகொள்ளலாம்.’

இன்னும் பிறக்காத அல்லது ஊனமுற்ற அல்லது முதிர்வயதில் உள்ள மனிதர்களைத் தூக்கி வீசி எறியப்பட வேண்டிய உயிர்கள் என நினைக்கும் மனநிலையைத் திருத்தந்தை புனித ஜான்பால்மரணத்தின் பண்பாடு (culture of death) என்று அழைக்கிறார். ‘வாழ்வின் நற்செய்தி (Evangelium Vitae- 1995)  என்னும் தனது மடலில் கருக்கொலை, கருணைக்கொலை, கருவில் நடைபெறும் முறையற்ற ஆய்வுகள் இவற்றைக் கண்டிக்கிறார். மனித உயிர் அதன் தொடக்க நிலையிலும், இறுதி நிலையிலும் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். கருவிலே உயிரை வேரறுப்பது கொலை என்ற நனவுணர்வுகூட இன்று இல்லை. இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு கருத்தியல், ‘கருவில் இருப்பதை ஒரு மனிதன் என்று அழைக்க முடியுமா?’ என்ற கேள்வியை மையப்படுத்தியது. அதோடு, ஒரு பெண்ணுக்குத் தன் உடலில், தான் சுமக்கும் கருவின்மீது முழு உரிமையும், அதை என்ன செய்ய வேண்டும் என்பதில் முழுச் சுதந்திரமும் இருக்கிறது என்ற கருத்தாக்கமும் இதன்பின் உள்ளது.

கருச்சிதைப்பிற்கான உரிமை: ஜூடித் ஜார் விஸ் தாம்சன் என்னும் அமெரிக்காவைச் சேர்ந்த மெய்யியலாளர் 1971-இல் எழுதியகருக்கலைப்பிற்கான நியாயங்கள் (A Defense of Abortion) என்னும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் இதைக் கற்பனை செய்துபாருங்கள்; ஒருநாள் நீங்கள் கண்விழிக்கும்போது ஒரு மருத்துவமனையில் படுத்திருக்கிறீர்கள். நீங்கள் உறங்கும்போது, உங்கள் உடலில் அறுவை சிகிச்சை செய்து உங்கள் உள்ளுறுப்புகளை, சிறுநீரகம் செயலிழந்து உணர்வற்றுப் படுத்திருக்கும் ஓர் உலகப் புகழ்பெற்ற இசை மேதையின் உடலோடு குழாய்கள் மூலம் இணைத்திருக்கிறார்கள். அவர் உங்களோடு உங்கள் படுக்கையிலே உணர்வற்றுக் கிடக்கிறார். உங்கள் சிறுநீரகங்கள் மட்டுமே அந்த மேதையை உயிருடன் வைத்திருக்கும். உங்களுடனான  அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டால் அவர் இறந்துவிடுவார். நீங்கள் அவருடன் ஒன்பது மாதங்கள் தொடர்ந்து இணைப்பில் இருந்தால் அவர் பிழைத்துக்கொள்வார்.” ஜூடித் தொடர்ந்து கேட்கிறார்: “அறவியல் அடிப்படையில், நீங்கள் தொடர்ந்து அவருடைய உடலோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறதா?”

ஜூடித் கூறவரும் கருத்து: இசை மேதைக்கு உயிர் வாழும் உரிமை இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர் உயிர் வாழ, உங்கள் உடலைப் பயன்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை.” ஜூடித் கூறிய இந்த உவமைதான் கருச்சிதைவிற்கான உரிமை குறித்த விவாதங்களுக்குப் பின்னால் இருக்கும் அனுமானம். ஒருவரின் உயிரைத் தொடர்ந்து காப்பாற்ற மற்றொருவர் கட்டாயப்படுத்தப்படலாமா?

சிக்கல்களும் சவால்களும்: இப்பிரச்சினை குறித்த திரு அவையின் கண்ணோட்டம் தெரிந்த ஒன்றுதான். மனித உயிர்கள் உற்பத்தி செய்யப்படவில்லை; அவை பெறப்படுகின்றன. மனித உறவில் கருவாகி, உதரத்தில் சற்று நின்று, உலகில் வந்து சேர்கின்றன. அவை மாண்புக்குரியவை. போற்றப்பட வேண்டியவை. மனிதனுக்குரிய அனைத்து உரிமைகளும் அதற்கு உள்ளன. எனவேதான், மாறிவரும் காலச்சுழலிலும் கருக்கலைப்பிற்கு எதிரான வலுவான குரல் திரு அவையிடமிருந்து தொடர்ந்து எழுகிறது.

திரு அவையின் கரிசனைகளில் நியாயம் இருக்கிறது. ஆனால், இன்று பிரச்சினை, பிறக்காத குழந்தைக்கான உயிர் வாழும் உரிமையா? அல்லது ஒரு பெண்ணுக்குத் தன் உடலில் வளரும் கருவைக் குறித்தான விருப்ப உரிமையா? என்னும் கேள்விகளைத் தாண்டி நிற்கிறது. “என் உடல், என் விருப்பம்என்று முழக்கமிடும் பெண்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு என்றே எண்ணுகிறேன். கருக்கலைப்பு என்பது பல நேரங்களில் பெண்ணின்மேல் திணிக்கப்படும் தீர்மானமாகவே உள்ளது.

கருக்கலைப்பு விசயத்தில் இது ஒரு பெண்ணுக்கும், அவள் உதரத்தில் வளரும் குழந்தைக்குமான பிரச்சினை எனப் பார்க்கப்படுவதே குறைபாடான பார்வை. இதில் ஆணின் பங்கு என்ன? குடும்பத்தின் பங்கு என்ன? சமூகத்தின் பங்கு என்ன? போன்ற கேள்விகள் பிரச்சினை குறித்த முழுமையான புரிதலைக் கொடுக்கும். பல நேரங்களில் பெண்ணின் விருப்பமின்றியே கணவனின் அல்லது குடும்பத்தின் அழுத்தங்களினால் கருச்சிதைவிற்கான முடிவுக்கு ஒரு பெண் வருகிறாள். எனவே, கருக்கலைப்பு ஓர் இனப்படுகொலை என்றால், அதனை அரங்கேற்றுவதில் ஆண் சமூகத்திற்கு இருக்கும் பங்கு அதிகமானது என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும்.

இளமையின் தவறுகள், வறுமை, வன்புணர்வு, தன் மற்றும் குடும்ப மானம், சமூகம்... இப்படியாக எத்தனையோ காரணிகள் இப்பிரச்சினைக்குப் பின்னால் ஒளிந்து நிற்கின்றன. அத்தோடு இந்தியச் சமூகத்தில் புரையோடிப்போன ஆண் மகனுக்கான வேட்கை, கருவில் இருப்பது பெண்சிசு என்றால் கருவறுக்கத் தூண்டும் அவலம் போன்றவை இப்பிரச்சினையின் வேர்களாகி, அவை அகலமாக, ஆழமாக ஊன்றி நிற்கின்றன.

தேவை: புதிய பார்வைகள்: எனவே, மனித உயிர்களைப் பேணிப்பாதுகாக்கும் ஆர்வலர்களின் பணி, அறவியல்  கோட்பாடுகளை முழக்கமிடுவதில் மட்டும் அடங்கிவிட முடியாது. மனித உயிர் குறித்த ஒரு வியப்பு கலந்த நற்புரிதல் இளமையிலிருந்தே வளர்த்தெடுக்கப்படவேண்டும். ‘கருவில் வளரும் குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியுமா?’ என்று அங்கலாய்க்கும் குடும்பங்களுக்கான அரசு நலத் திட்டங்கள் உறுதி செய்யப்படவேண்டும். இளமையின் தவறுகள், பாலியல் வன்புணர்வுகள் (சில நேரங்களில் இவை குடும்பங்களில் நடைபெறுகின்றன என்பதுதான் துன்பியல்), இவற்றால் ஏற்படும் கருவுறுதலின்போது பாதிக்கப்பட்டவருக்கான நீதியோடு, அவரைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் குடும்பத்திலும் சமூகத்திலும் வளரவேண்டும். இப்படியாக இப்பிரச்சினை ஒட்டுமொத்தச் சமூகப் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டு, தனிமனித, சமூக மாற்றத்திற்காக உழைப்பதில்தான் மனித உயிர்கள் மீதான நம் தணியாத காதலில் பொருள் இருக்கும்.