‘இந்தியப் பகுதிக்குப் போகலாமா? வேண்டாமா?’ என்ற குழப்பம் தோமாவிடம் பல நாள்கள் நீடித்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஒருநாள் அவரைத் தேடி யாரோ ஓர் அந்நியன் வந்திருப்பதாகச் சொல்ல, அவனைச் சந்தித்தார் தோமா. வந்தவன் தோமாவுக்கு வணக்கம் செலுத்தினான். முன்பின் அறிந்திராத அம்மனிதனைக் கண்ட தோமா, “நீர் யார்? நான் உமக்கு என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார்.
வந்தவன்
“என் பெயர் ஹப்பான். நான் ஒரு வணிகன். நான் தச்சர் தோமாவைப் பார்க்கவேண்டும்” என்றான்.
‘நான் செய்யும் தொழில் இந்த அந்நிய மனிதனுக்கு எப்படித் தெரியும்?’ என்று யோசித்த தோமா, “நான்தான் தோமா. எங்கிருந்து நீர் வருகிறீர்?” என்று வினவினார்.
“பார்த்தியா தேசத்திலிருந்து வருகிறேன்”
என்ற ஹப்பானிடம், “பார்த்தியாவா? அது எங்கிருக்கிறது?” என்று தோமா கேட்க, “இந்தியப் பகுதிக்கு அருகாமையில் இருக்கிறது” என்று
அவன் பதில் கூறவும், “இந்தியாவா?” என்று வினவிய தோமா, ‘இந்தியப் பகுதிகளே வேண்டாம் என்றிருக்கும் நிலையில் இந்த அழைப்பு பார்த்தியாவுக்கானதா அல்லது இந்தியாவுக்கானதா?’ என்ற குழப்பம் ஏற்பட்டது.
சிலநொடிகள்
அமைதிக்குப்பின் “அது சரி, என்னை எப்படி அறிவீர்? உம்மை என்னிடம் அனுப்பி வைத்தது யார்?” என்று கேட்க, “உம்மிடம் அனுப்பி வைத்ததுடன், உம்மை என்னிடம் ஒப்படைத்து உறுதிப் பத்திரமும் கொடுத்திருப்பவர் உம் தலைவராக அல்லவா இருக்கவேண்டும்! உம் தலைவரை நீர் அறிந்ததில்லையா?” என்ற ஹப்பானின் கேள்வியால் திகைத்துப் போன தோமாவிடம் ஹப்பான் சொன்னான், “நான் இந்தியாவின் வடமேற்கிலுள்ள பார்த்தியா தேசத்திலிருந்து வரும் வணிகன். எம் மன்னர் கொண்டோபரஸ் தன் நாட்டில் அரண்மனையைக் கட்ட விரும்பி ஒரு சிறந்த தச்சரை அழைத்து வருமாறு என்னை இங்கே அனுப்பியிருக்கிறார். இங்கு வந்ததும் உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ஏர்க்கலப்பைகள், துடுப்புகள், படகுகள், கப்பல் பாகங்கள் செய்வதுடன் கல்தூண்கள், கோயில், அரண்மனை போன்றவற்றை நீர் கட்டுவீர் என அறிந்தேன். அதற்காகவே
உம்மை நான் நாடி வந்திருக்கிறேன்” என்றான்.
“என்னைப் பற்றி யார் மூலம் கேள்விப்பட்டீர்?” என்ற தோமாவின் கேள்விக்கு, “உம் நண்பர்கள் வழியாக அறிந்தேன்”
என்றவன், மேலும் “உம் தலைவர் என்னை அங்காடித் தெருவில் சந்தித்தார். அவர்தாம் உம் பெயரைக் குறிப்பிட்டார். அவர் உமக்கு நெருக்கமானவராம். அவருக்கு நீர் கடமைப்பட்டிருக்கிறீராம். அதனால் உம்மை என்னிடம் ஒப்புவிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். உம்மைக் குறித்து தம் கைப்பட இந்த உறுதிப் பத்திரத்தை எழுதிக் கொடுத்தார்” எனக்
கூறி ஒரு பத்திரத்தை தோமாவின்முன் நீட்டினான் ஹப்பான். அதைச் சிந்தனையோடு வாங்கிப் படித்தார் தோமா. அதில் ‘தச்சர் யோசேப்பின் மகன் இயேசு கிறிஸ்துவாகிய நான், யூதா தோமாவைப் பார்த்தியா தேசத்து மன்னர் கொண்டோபாஸ் என்பாரின் வணிகரான ஹப்பான் என்பவரிடம் ஒப்படைக்கிறேன்’ என்று
எழுதப்பட்டிருந்ததைக்
கண்டு பரவசமடைந்த தோமா மனம் மாறியவராக, “மாபெரும் தச்சராகிய இயேசுவே! உம் சித்தத்தின்படியே ஆகட்டும். நீர் சொல்லுமிடத்திற்கு நானும் செல்கிறேன்” என்றார்.
அடுத்த சில நாள்களில் தோமா பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
இந்தியாவிலிருந்து
முத்து, மிளகு, ஏலக்காய், கிராம்பு, பருத்தி, பட்டு, வாசனைப் பொருள்கள் ஆகியன மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட காலம் அது. குறிப்பாக, உரோமானிய நாட்டுடன் மிகச் சிறப்பான முறையில் வணிகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தியாவிலிருந்து நேரடியாக மட்டுமின்றி, சீன நாட்டிலிருந்து இந்தியா வழியாகப் பலர் வாணிபம் செய்தனர். வணிகர் பலர் பார்த்தியா (ஆப்கானிஸ்தான்), பெர்சியா (ஈரான்), மெசபடோமியா (ஈராக்) போன்ற நாடுகள் வழியாகப் பயணம் செய்து பல்வேறு பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டனர். இவர்கள் தரைவழியாகப் பயணித்து வணிகம் செய்வது பாதுகாப்பற்றும் கடினத்துடனும் இருந்ததோடு, அவர்கள் உட்புகும் நாடுகளின் அரசர்களுக்கு அதிக வரிசெலுத்த வேண்டிய நிலைமையும் இருந்தது. இதனால் வணிகர்கள் சிலர் கடல்வழிப் பயணத்தையே பெரிதும் விரும்பினர். இத்தகைய சூழலில், ஹப்பானும் தோமாவும் கடல்வழியே பார்த்தியாவை அடைய முடிவெடுத்தனர்.
பாலஸ்தீன
நாட்டின் பெரும்பாலான வணிகர் அதன்
பழமையான துறைமுகமான யோப்பா அல்லது தீர் துறைமுகத்திலிருந்தே கிழக்கிந்திய நாடுகளுக்குப் புறப்படுவார்கள். அவர்கள் எகிப்திலுள்ள அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தை அடைகையில், பிற வணிகர் பலரும் அங்கே கூடுவர். அங்கிருந்து அவர்களின் பயணம் எகிப்தில் ஆண்டிரோபோலிஸ் நகரைச் சென்றடையும். அங்கிருந்து நைல்நதிப் பள்ளத்தாக்கிலிருந்து செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுகங்களை நோக்கிச் செல்லும் பாலைவன வழியிலுள்ள கோப்டோஸ் என்ற கடற்கரை நகரை அடைவர். அங்கிருந்துதான் வணிகர்கள் தங்கள் பொருள்களை ஒட்டகங்களின் மேல் ஏற்றிச் செங்கடலில் அமைந்துள்ள பெர்னிஸ் என்ற துறைமுகத்திற்குக் கொண்டு செல்வர். இந்தியர்களும் அராபியர்களும் வணிகம் செய்ய முக்கிய இடமாகப் பெர்னிஸ் விளங்கியது.
பெர்னிஸ்
துறைமுக நகரில் கடல் பயணம் செய்பவர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், வணிகர் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருள்களை விற்கவும், புதிய பொருள்களை வாங்கவும் வசதி இருந்தது. அங்கிருந்து இந்தியாவிற்கு ஆண்டுக்கு ஒருமுறை கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. அக்கப்பல்கள் மேற்கு ஆசியாவில் அரேபிய தீபகற்பத்தில் ஏமன் நாட்டிலுள்ள சொகோட்டிரா என்ற தீவிலும், ஏடேன் என்ற பகுதியிலும் நின்று உணவு, நீர் ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு இந்தியா சென்றடைந்தன.
தோமா
பாலஸ்தீனாவிலிருந்து பார்த்தியா புறப்பட்ட காலம் அநேகமாக கி.பி. 44-ஆம்
ஆண்டாக அளவிடப்படுகிறது. ஹப்பான் வணிகனுடன் அவர் புறப்பட்டு அலெக்சாண்ட்ரியாவைக் கடந்து பயணிக்கையில், பயங்கரக் கடல்காற்று வீசிட மிகுந்த சிரமத்துடன் ஆண்டிரோபோலிஸ் நகரை இருவரும் வந்தடைந்தனர். அவர்கள் அங்கு வந்த நேரம் குழலூதும் சத்தமும், இன்னிசை முழக்கமும் தொடர்ந்து கேட்க, ஏதோ ஒரு விழா நடப்பதற்கான ஆரவாரம் தென்பட்டது. இருவரும் அந்நகருக்குள் நுழைந்திட, ஹப்பான் அங்குள்ளவர்களை விசாரித்தான். அரசனின் மகளுக்கு அன்று திருமணம் நடைபெறுவதாகவும், அவ்விழாவில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்று அரசனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி கிடைத்தது. காற்று வீசுவதால் காலதாமதம் செய்ய எண்ணிய இருவரும் அவ்விழா நடக்கும் இடம் சென்றபோது, விருந்திற்கு வந்திருந்த மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாசனைத் திரவியங்கள், நறுமணப் பொருள்கள், எண்ணெய் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாகப் பெற்று உடலில் பூசி மகிழ்வதைக் கண்டனர். தூரத்தே குழலூதும் பெண்ணொருத்தி அங்குமிங்குமாக ஓடி நடனம் ஆடிக் கொண்டிருந்தாள்.
பல்வகை
உணவும் மதுவும் தாராளமாக வழங்கப்பட்ட சிறப்பான திருமண விருந்து நடந்து கொண்டிருந்தது. தோமா அவற்றில் அதிகம் கவனம் செலுத்தாது, சிலுவை அடையாளம் வரைந்து கொண்டவராய் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி அமர்ந்திருந்தார். குழலோசை இப்போது அருகே கேட்கவே, தலை நிமிர்ந்துப் பார்க்க, அவர் அருகே ஆடிக் கொண்டிருந்தவள் தன் இனம் சார்ந்த எபிரேயப் பெண் என்பதைக் கண்டு கொண்டார். அப்பெண்ணும் தோமாவை ஓர் எபிரேயர் என்பதை இனம் கண்டுகொண்டதால் ஆனந்த மிகுதியால் அவர் முன்னே குழலூதியபடி வெகுநேரம் ஆடலானாள்.
அவள்
பார்வை தோமாவின் மீதே பதிந்திருந்தது. ஆனால், தோமா அப்பெண்ணின் நடனத்தை இரசிக்காமல், அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் வானத்தையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். தன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த இன்ப நாட்டங்களில் அவர் மனம் இலயிக்கவில்லை. இதைக் கவனித்துவிட்டான் விருந்தில் மது பரிமாறுபவன். நீண்ட நேரம் ஒரு பெண் அருகே நடனம் ஆடியும், அதனை இரசிக்காமல் வானத்தையே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் தோமாவின் செயலைக் கண்டு, அப்பெண்ணை அவமரியாதை செய்வதாக எண்ணிக் கொண்டான். ஆத்திரம் பொங்க தோமாவின் அருகே சென்றவன் அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
தோமா
அவனை உற்றுநோக்கியபடி அமைதியான குரலில், “மறுவுலக வாழ்வின் பொருட்டு இறைவன் உன்னை மன்னிக்கக்கூடும்; ஆனால், இவ்வுலகில் அவர் உன்னை மன்னிப்பாரா என்பது இன்னும் சிறிது நேரத்தில் உனக்குப் புரிந்துவிடும். எந்தக் கையால் அறைந்தாயோ, அந்தக் கையை நாய் இழுத்துச் செல்லும்”
என்று கூற, அவர் மொழி புரியாத மதுபானக்காரன் அவரைக் கண்டு ஏளனமாகச் சிரித்தான். ஆனால், அருகிலிருந்த எபிரேயப் பெண், தோமாவின் எபிரேய மொழியை அறிந்தவளாதலால் அச்சத்திற்குள்ளானாள். எனினும், அவர் தன் நாட்டவர் என்பதாலும், ஆளுமைத் தன்மை மிக்கவராகவும் தெரிந்ததால் தோமாவின் மேல் அவளுக்கு மதிப்பும் ஈடுபாடும் அதிகமாயிற்று. அவரிடம் எபிரேய மொழியில் உரையாட முயன்றாள். தோமாவோ எபிரேய மொழியில் இறைப்பாடல் ஒன்றைப் பாட, பொருள் புரிந்த அப்பெண் அவருக்கு முன்பாகச் சென்று அமர்ந்தாள். ஆனாலும், தோமா தன் பார்வையை எங்கும் செலுத்தவில்லை.
திடீரென்று
அந்த விழாவில் கூச்சல் ஏற்பட்டது. தன் வாயில் ஒரு மனிதக் கையைக் கவ்விக்கொண்டு ஓடிய ஒரு நாயைத் துரத்திக்கொண்டு சிலர் ஓடி வந்தனர். அந்த நாயோ விருந்து நடக்கும் இடத்தை நோக்கி ஓடியது. சற்று நேரத்திற்குமுன் தன் நாட்டு மனிதர் கூறிய வார்த்தைகளை எண்ணிப் பார்த்த எபிரேயப் பெண், “இந்த மனிதர் உண்மையில் கடவுளின் தூதராகத்தான் இருக்கவேண்டும்; இவர் சொன்னபடியே இவரை அறைந்தவனின் வலது கையை நாய் கவ்விக்கொண்டு ஓடுகிறது”
என்று கூச்சலிட்டாள். அவள் பேச்சை நம்பியும் நம்பாமலும் அங்கே கூடியிருந்த மக்கள் குழம்பியிருக்கையில் அங்கு வந்த ஒருவன், “நான்தான் பார்த்தேன். கிணற்றில் நீர் எடுக்க வந்த மதுபானக்காரன்மேல் எங்கிருந்தோ வந்த சிங்கம் ஒன்று பாய்ந்து அவன் உடலைக் கிழித்துப் போட்டுவிட்டது. அவன் உடலில் இருந்த கையைத்தான் நாய் கவ்விக்கொண்டு ஓடுகிறது”
என்றான்.
தோமாவைக்
கண்ட மக்கள் அவரை அச்சத்தோடு பார்த்தனர். அங்கே தோமா இயேசு பற்றி அவர்களுக்குப் போதிக்கலானார். அவரின் போதனையை அம்மக்கள் ஆர்வத்தோடு கேட்டனர். தோமாவின் கடவுள்மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படலாயிற்று. தோமாவின் வார்த்தைகளினால் மதுபானக்காரனுக்கு ஏற்பட்ட நிலையைக் கேள்விப்பட்ட அரசன், ஓர் ஆளை அனுப்பி திருமணமாகப் போகும் தன் மகளுக்காகச் செபிக்குமாறு வேண்டி தோமாவுக்கு அழைப்புவிடுத்தான். ஆனால், தோமா செல்லவில்லை. எனினும், அவர் வற்புறுத்தப்பட்டு மணமகனும் மணமகளும் இருந்த அறைக்கு அழைத்துவரப்பட்டார்.
இருவரையும்
தனிமையில் கண்ட தோமா அவ்விருவருக்கும் இயேசு பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். “இல்லற வாழ்வைக் காட்டிலும் மணத்துறவு வாழ்வு மேலானது. மணத்துறவு வாழ்வையே கடவுள் விரும்புகிறார். கடவுளுக்கான அர்ப்பணிப்பு வாழ்வில் கிட்டும் மகிழ்ச்சியைப் போல் சிறந்தது உலகில் வேறேதுமில்லை” என்று
அவர்களுக்கு அறிவுறுத்தியபோது, இயேசுவே தோமாவின் வழியாய் தங்களிடம் பேசுவதுபோல் மணமக்கள் உணர்ந்தனர். இருவர்மீதும் தன் கரங்களை வைத்துச் செபித்து, “கடவுள் உங்களோடு இருப்பார்”
என்று கூறி அவர்களை ஆசிர்வதித்தார்.
தோமா மணமக்களை
ஆசிர்வதித்தது குறித்து மனமகிழ்வு கொண்ட அரசன் அவருக்குப் பரிசுகள் கொடுக்க முனைந்தபோது, தோமா அவற்றை மறுத்துவிட்டுப் புறப்பட்டார். உடன் வந்த ஹப்பான் தோமாவின் செயல்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்திருந்தான்.
(தொடரும்)