புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவை முன்னிட்டு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருப்பலியில், கொல்கத்தா பேராயர் மேதகு எலியாஸ் பிராங்க் மற்றும் மதுரை பேராயர் மேதகு அந்தோணிசாமி சவரிமுத்து ஆகியோருக்குத் திருத்தந்தை 14-ஆம் லியோ ‘பேராயர் திருநேரியல்’ (Pallium) அணிவித்துச் சிறப்பித்தார்.
புதிதாக
நியமிக்கப்பட்ட பேராயர்களின் ஆயர் பணிப் பொறுப்பையும், உரோமைத் தலைமைப் பீடத்துடனான ஒற்றுமையையும் குறிக்கும் இந்த வெள்ளைக் கம்பளி ஆடை, கத்தோலிக்கத் திரு அவையின் மிக உயரிய அடையாளமாகும். கடந்த 2025 செப்டம்பரில் கொல்கத்தா பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் எலியாஸ் பிராங்க், கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் திரு அவை சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அதுபோல, ஜூலை 2025-இல் மதுரைப் பேராயராகப் பொறுப்பேற்ற பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து, பிரான்ஸ் நாட்டில் திரு அவை சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவ்விரு இந்தியப் பேராயர்களும் திருத்தந்தையின் கைகளால் பால்லியம் பெற்றுக்கொண்ட நிகழ்வு, இந்தியக் கத்தோலிக்கத் திரு அவைக்கு குறிப்பாக, மதுரை மற்றும் கொல்கத்தா உயர்மறைமாவட்ட இறைமக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும், ஆன்மிக எழுச்சியையும் தந்துள்ளது. உலகெங்குமுள்ள
கத்தோலிக்கர் தங்களின் புதிய பேராயர்களுக்காக இறைவேண்டலில் ஈடுபட்டனர்.