கத்தோலிக்கத் திரு அவையின் உயிர் பாதுகாப்பு நிலைப்பாடு, அறிவியல் மற்றும் இயற்கை விதிகளில் வேரூன்றியுள்ளது. இது பகுத்தறிவின் அடிப்படையிலும் புரிந்துகொள்ளக் கூடியதாகும். நலிவடைந்த நபர்களுக்காகத் திரு அவை துணை நிற்பதைப் போலவே, அனைத்து மனிதரின் உயிரின் மாண்புக்காகவும், புனிதத்திற்காகவும் திரு அவை தொடர்ந்து வாதிடுகிறது.
உலகெங்கிலும்
உள்ள உயிர் பாதுகாப்பு இயக்கங்கள், மனித வாழ்வின் புனிதத்தன்மையைக் குறித்த
தெளிவை ஏற்படுத்த வெவ்வேறு தலைமுறையினர்மீது கவனம் செலுத்துகின்றன. இந்தக் கட்டுரையில்
நாம் இன்றைய ‘ஜென் Z\\\' (Gen Z) தலைமுறையினருக்கு உயிர் பாதுகாப்பு (Pro life) தொடர்பான சவால்கள் குறித்தும், திரு அவையின் போதனைகள்
குறித்தும் சுருக்கமாகப் பார்க்கலாம்.
இன்றைய
சூழலில், ‘ஜென் Z’ தலைமுறையினரின்
உண்மைக்கான தேடல், ஒரு சிலரைக் கத்தோலிக்கத் திரு அவைக்கு மீண்டும் வந்துசேர உதவியுள்ளது.
அவ்வாறு வந்தவர்கள் வாழ்வின் புனிதத்தை உணர்ந்துள்ளனர். ஒவ்வொரு மனிதனுக்கும் கருவுற்றது
முதல் இயற்கையான மரணம் வரை உள்ளார்ந்த கண்ணியம் உண்டு என்ற திரு அவையின் பார்வையுடன்
துணை நிற்கிறார்கள். மேலும், Youth United for Christ (YU4C), Jesus Youth, Youth Commission போன்ற அமைப்புகள் மனித உரிமைகள் மற்றும்
சமூக நீதி விழுமியங்களில் உறுதியாக வேரூன்றி நிற்கிறார்கள். எனவே, ‘ஜென் Z’ தலைமுறையினருக்கு
ஆன்மிகப் போதனைகள் மூலம் தொடர்ந்து வழிகாட்டுவதும், பிரச்சாரங்களில் பங்கேற்கச் செய்து,
சமூகத் திட்டங்களில் ஈடுபடுத்துவதும் திரு அவையின் பங்காகும்.
சவால்கள்: இன்றைய மதச்சார்பற்ற உலகம், ‘தனிநபர்
தேர்வு உரிமை’ (pro-choice)
சார்ந்த முன்னெடுப்புகளை ‘ஜென் Z’ தலைமுறையினரிடையே பரவலாக ஊக்குவிக்கிறது. கருக்கலைப்பு,
கருத்தடை, செயற்கை கருத்தரிப்பு (IVF), கருத்தரித்தலை ஒரு வணிகப் பொருளாக
மாற்றுதல், பாலியல் மற்றும் பாலின அடையாளங்கள் சார்ந்த கோட்பாடுகள் போன்றவற்றிற்கான
ஆதரவையும் நிதி உதவியையும் இவர்கள் மூலம் முன்னெடுக்கின்றனர்.
‘வாழ்க்கை
ஒருமுறைதான்’ (YOLO) என்ற கோட்பாட்டால் ஈர்க்கப்பட்ட இன்றைய
‘Gen Z’தலைமுறையினர் சமூக, கலாச்சார, பாரம்பரிய
அல்லது மதரீதியான நெறிமுறைகளுக்குள் கட்டுப்படாமல் ‘தேர்வுரிமை’ (Pro-choice) அடிப்படையில் வாழ்வதை எளிதில் ஏற்றுக்கொள்கிறார்கள்.
கல்வி, தொழில், வாழ்க்கை முறை, வாழ்க்கைத்துணை
தேர்வு, பாலினம் மற்றும் பாலியல் அடையாளம் போன்றவைகளில் தங்கள் விருப்பப்படியே
முடிவெடுத்து வாழ வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடாக உள்ளது.
‘தேர்வுரிமை’ என்பது தனிநபர்களுக்கான ஒரு சுதந்திரமான தேர்வு அல்ல; மாறாக,
நவீன சிந்தனை மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தைக் கொண்டு நிதி ஆதாயத்திற்காக ஒரு வணிகப்
பொருளாக விற்கப்படும் கருத்தாக்கமேயாகும். ‘FOMO’(விட்டுவிடப்படுவோமோ என்ற அச்சம்) எனும் கருத்தாக்கத்தை
ஏற்கெனவே ‘Gen Z’ தலைமுறையினருக்கு
விதைத்திருப்பதால், அவர்களுக்கு அங்கீகாரம் தேவை என்பதை உணர்ந்து வணிக உலகம் இவற்றைச்
செயல்படுத்துகிறது. இந்தக் கூற்றுகளின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள நம் திரு அவை
நமக்குத் தெளிவான விளக்கங்களைத் திருவிவிலிய மற்றும் மறைக்கல்விப் போதனைகள் வாயிலாக
வழங்குகிறது
கருக்கலைப்பு: ‘தேர்வுரிமை’ பாலியல் சுகாதார உரிமை மற்றும் பராமரிப்பின் கீழ் ‘மருத்துவ
ரீதியான கருக்கலைப்பை’ (MTP) குறிப்பிடுகிறது. திரு அவை கருத்தரித்த
கணம் முதலே மனித உயிர் முழுமையாக மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் எல்லா உரிமைகளைக்
கொண்ட நபராக அங்கீகரிக்கிறது (CCC 2270. CCC 2271). கருக்கலைப்பை விரும்பிச் செய்தால் அது மனித உயிருக்கு
எதிரானது (காண்க: நியமன விதி 1398). மனித உயிர் எவ்வாறு கருத்தரிக்கப்பட்டிருந்தாலும்
(பாலியல் வல்லுறவு, வன்கொடுமை, முறையற்ற உறவு) அது விலைமதிப்பற்றது என்று திரு அவை
தெளிவாகக் கூறுகிறது. கருக்கலைப்பு பாலியல்
வன்புணர்வின் வலியை, தாக்கத்தை நீக்குவதில்லை, அது மேலும் ஒரு நபர் பாதிப்புக்குள்ளாவதற்கு
வழிவகுக்கிறது. உண்மையான மருத்துவ அவசரநிலைகளில் (எ.கா. கருப்பைக்கு வெளியே கருத்தரித்தல்,
புற்றுநோய் சிகிச்சை), திட்டமிடப்படாத சிசுவின் மரணம் போன்ற சூழல்களை நேரடிக் கருக்கலைப்பிலிருந்து
திரு அவை தார்மீக ரீதியாக விலக்கு அளிக்கின்றது (இரட்டை விளைவுக் கோட்பாடு - CCC
2263).
‘Gen Z’ தலைமுறையினருக்குத் திரு அவையின் போதனை ஆண்-பெண் என்னும்
பாலின அடையாளத்தை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும். பாலியல்பு, உடல் ஒழுக்கம் (chastity), திருமணத்தின் நன்மைகளையும் குடும்ப
வாழ்வின் செழிப்பை மையப்படுத்தியதாக உள்ளன என்பதை வலியுறுத்துகிறது (CCC 2333). மேலும், பாலின அடையாள முரண்பாடுகளை (gender dysphoria) எதிர்கொள்ளும் நபர்களுக்கு கருணைமிக்க ஆலோசகர்கள் மற்றும்
ஆன்மிக வழிகாட்டிகளின் ஆதரவைப் பெற்றுத் தரவேண்டும் என்று அங்கீகரிக்கிறது. ஒரே பாலின
ஈர்ப்பு கொண்ட நபர்களை மரியாதை, கருணை மற்றும் உணர்வுப்பூர்வமான புரிதலுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்
என்று திரு அவை போதிக்கிறது. அவர்கள் கிறித்தவர்களாக இருப்பின், தங்கள் நிலையால் ஏற்படும்
சிரமங்களை ஆண்டவரின் சிலுவை தியாகத்தோடு இணைக்கவும் அழைக்கப்படுகிறார்கள் என்று எடுத்துரைக்கிறது (CCC 2358 – 2359).
திருமணத்திற்கு
முன் அல்லது திருமணப் பந்தத்திற்கு வெளியே
பாலுறவு கொள்வதைத் திரு அவை மனித உடலின் மாண்பைக் குறைக்கும் செயலாகக் கற்பிக்கிறது. தூய ஆவியின் ஆலயமான நம் உடலைக் களங்கப்படுத்தும் செயலாகக் கருதுகிறது; ‘Gen Z’ தலைமுறையினருக்குத் தம் உடலைக் காத்துக்கொள்ளப் போதிக்கிறது.
திரு
அவை IVF-ஐ எதிர்க்கிறது. IVF-இல் பல கருக்களை உருவாக்கி, பின்னர் உருவான உயிர்கள்
உறைய வைக்கப்படுகின்றன, நிராகரிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. கருக்கள்
ஒவ்வொன்றும் கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு மனித உயிர். அதன் மாண்பைக் காக்கவே இந்த நிலைப்பாடு.
திரு
அவையும், உயிர் பாதுகாப்பு இயக்கங்களும் அருளடையாளங்கள் வழியாகக் கிறிஸ்து இயேசுவின்
மறையுடலில் அனைவரையும் மீண்டும் இணைப்பதை ஊக்குவிக்கிறது. இறைவனால், திரு அவையால் மன்னிக்க முடியாத குற்றம் எதுவும்
இல்லை என்பதை ‘Gen Z’தலைமுறையினருக்கு
மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. அவ்வாறு பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இணைந்த
‘Gen Z’-தலைமுறையினர் உள்பட பலர் உயிர் பாதுகாப்புக்கான
மிகச்சிறந்த குரல்களாகத் திகழ்கின்றனர்.
‘Gen Z’தலைமுறையினரின் YOLO மற்றும் FOMO கோட்பாடுகளைத்
திரு அவை தன் வழியில் இன்னும் மெருகேற்றி, நாம் ஒருமுறை மட்டுமே இவ்வுலகில் வாழ்கிறோம்
(YOLO), அதையும்
நாம் இறைவனுக்காக வாழ்வோம் எனும் கருத்தை அறிவுறுத்துகிறது. ‘Gen Z’தலைமுறையினருக்கு ear Of Missing Out
(FOMO) இந்த உலக வாழ்வில்
விடுபட்டு விடுவோமோ என்ற பயத்தைப் போக்கி, திரு அவையின் ஒப்புரவு அருளடையாளத்தின் வாயிலாக
இறையாட்சியில் இடம்பெற புது வாழ்வு அளிக்கிறது.
Youth
United for Christ (YU4C), Jesus Youth, Youth Commission போன்ற அமைப்புகள் ‘Gen Z’ தலைமுறையினருக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.
நாமும் அவர்களோடு இணைவோம், நம்பிக்கை வாழ்வு வாழ்வோம். இறைமகன் இயேசுவின் வார்த்தையின்படி
நம் நம்பிக்கையின்படியே நம் வாழ்வு மூவோர் இறைவனின் மாட்சிக்காக அமையட்டும்.