காஸ்டெல் காண்டோல்போ அப்போஸ்தலிக்க அரண்மனை முற்றத்தில், அல்பானோ மறைமாவட்டம் சார்பில் திருத்தந்தையின் கோடைக்கால வருகையைப் போற்றும் வகையில் நடைபெற்ற இசைக் கச்சேரியின் நிறைவில் உரையாற்றிய திருத்தந்தை, “நாம் அழகு குறைந்து காணப்படும் ஓர் உலகில் வாழ்கிறோம். போர்கள், வெறுப்பு, வேலையின்மை எனப் பல பிரச்சினைகள் சூழ்ந்த இந்நாள்களில், இதுபோன்ற கலைநிகழ்ச்சிக்காக நாம் ஒன்றுகூடுவது ஒரு பெரிய வரமாகும்” என்று தெரிவித்துள்ளார். இசை, கலை மற்றும் அழகு ஆகியவை தற்போதைய கடினமான சூழல்களுக்கு அப்பாற்பட்டு நமது பார்வையைக் கடவுளை நோக்கி உயர்த்தவும், மனித மாண்பை மீட்டெடுக்கவும் உதவுகின்றன என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார். அண்மையில் தான் மேற்கொண்ட ஸ்பெயின் பயணத்தின் நோக்கமும் இதுவே என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
வயலின்
கலைஞர் மார்கோ ரோக்லியானோ மற்றும் பியானோ கலைஞர் ரொசானா டோமாசி கோல்கர் ஆகியோரின் சிறப்பான இசைத் திறமையைப் பாராட்டிய திருத்தந்தை, இறைவனின் படைப்பில் உறைந்துள்ள பேரழகை இந்த இசையின் மூலம் உணர முடிந்ததாகக் கூறி, கலைஞர்களுக்கும், அல்பானோ மறைமாவட்டத்திற்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.