news-details
உலக செய்திகள்
திருத்தந்தை லியோவுக்கு ‘லிபர்ட்டி மெடல்’ விருது!

உலகளவில் மதச் சுதந்திரம், மனச்சாட்சி மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்திய பங்களிப்பிற்காக, அமெரிக்காவின் தேசிய அரசமைப்பு மையம் வழங்கும் 38-வது மதிப்புமிக்கலிபர்ட்டி மெடல் (Liberty Medal) விருது திருத்தந்தை லியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உருவானதன் 250-வது ஆண்டு விழாவின் முன்னிரவில், உரோம் நகரிலிருந்து பிலடெல்பியாவில் கூடியிருந்தவர்களிடம் திருத்தந்தை காணொளி வாயிலாக உரையாற்றினார்.

அமெரிக்காவில் பிறந்த முதல் திருத்தந்தையான 14-ஆம் லியோ, நாட்டின் சுதந்திர முழக்கத்தின் உன்னத விழுமியங்களான சமத்துவம் மற்றும் மனித மாண்பை நினைவுகூர்ந்தார். “ஒரு நாட்டின் தார்மீக மேன்மை என்பது, கரு உருவானது முதல் இயற்கை மரணம் வரை, விளிம்புநிலை மக்கள் உள்பட அனைத்து மனித உயிர்களையும் பாதுகாக்கும் சட்டங்களில்தான் அடங்கியுள்ளது. உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டால், எவராலும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாதுஎன்று அவர் வலியுறுத்தினார். அமெரிக்க அரசமைப்பின் முதல் திருத்தம் வழங்கும் மதச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பன்முகத்தன்மை கொண்ட அமெரிக்கா, என்றும் நீதியுடனும் அமைதியுடனும் திகழவேண்டும் என வாழ்த்தி, ‘காட் பிளஸ் அமெரிக்கா (God bless America) என்று தனது உரையை நிறைவு செய்தார்.