நமது அன்றாட வாழ்க்கைச் சூழலில் எப்போதும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. நேர்மறை எண்ணம் கொண்ட நல்ல மனிதருக்கு மத்தியில், சுயநலம் கொண்ட மனிதரையும் நாம் பார்க்கிறோம். ஒருபுறம், அறநெறிகளும் நற்பண்புகளும் போற்றப்படும் அதே நேரத்தில், மறுபுறம் வதந்திகளும் ஏமாற்று வேலைகளும் மலிந்தே கிடக்கின்றன. எதிலும் உடனடித் தீர்வைக் கோரும் இந்தத் துரித யுகத்தில், தீமைகளை உடனுக்குடன் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்ற ஆவேசம் நம்மிடம் எழுகிறது. இந்தச் சூழலில், ‘ஏன் நல்ல மனிதர் துன்பப்படவேண்டும்? ஏன் தீயோர் செழிப்பாக இருக்க வேண்டும்?’ என்ற கேள்விகளும் மனித வரலாற்றின் தொடர்கதையாகின்றன. ஆனால், தீமையற்ற உலகை உடனடியாக உருவாக்க நினைக்கும் மனிதரின் அவசர மனநிலை, பல நேரங்களில் நல்லவற்றிற்கே தீங்காக முடிந்துவிடுகிறது என்பதே உலக எதார்த்தம்.
ஆண்டின்
பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். நம் வாழ்வில் நன்மையும் தீமையும், வளர்ச்சியும் சவால்களும், கதிர்களும் களைகளும் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், அவற்றைப் பொறுமையோடு அணுகும் ஆன்மிகப் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று இன்றைய திருவிவிலிய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
ஞானநூலிலிருந்து
எடுக்கப்பட்ட முதல் வாசகம், கடவுளின் பேராற்றலையும், அவரது வல்லமையையும் குறித்த ஒரு புதிய ஆன்மிகப் பாடத்தை நமக்குத் தருகிறது. கடவுள் எல்லாம் வல்லவர், அவரை எதிர்த்து நிற்க எவராலும் முடியாது. ஆனாலும், அவரது ஆற்றல் தீமையாளரை உடனடியாக அழிப்பதில் வெளிப்படுவதில்லை; மாறாக, பொறுமையிலும் மன்னிப்பிலும்தான் அது வெளிப்படுகிறது. “உமது ஆற்றலே நீதியின் ஊற்று. நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்; மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர்”
(சாஞா 12:16,18) என்று வாசிக்கும்போது, இறைவனின் நீதி எத்தகையது என்பதை நாம் ஆழமாக உணர்கிறோம்.
நாம்
பல நேரங்களில் தீமைகளைக் கண்டதும், உடனடியாக அவற்றை வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என்று துடிக்கிறோம். ஆனால், நம்மைப் படைத்தவர் பொறுமையின் சிகரமாக விளங்கி, தண்டனை வழங்குவதைவிட, மனிதர் மனம் திருந்த வாய்ப்பளிப்பதையே பெரிதும் விரும்புகிறார். கடவுளின் இந்த மென்மையான அணுகுமுறை, நம்மைப் போன்ற மனிதருக்கு ஒரு பெரிய எச்சரிக்கையாகவும், அதேநேரத்தில் ஆறுதலாகவும் இருக்கிறது.
மத்தேயு
நற்செய்தியில் இயேசு கூறும் ‘களைகள்’ உவமை நம் வாழ்வின் இந்த எதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஒருவர் தன் வயலில் நல்ல விதைகளை விதைக்கிறார்; ஆனால், அவருடைய பகைவன் வந்து கோதுமைக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விடுகிறான். கோதுமையும் களைகளும் அறுவடை வரை சேர்ந்தே வளர்கின்றன (மத் 13:28-30). இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
இயேசுவின் சீடர்களில் சிலர்,
இறையாட்சிச் சமூகத்தில் நல்ல மனிதரோடு தீயவர் எப்படி ஒன்றாய் இணைந்து வாழமுடியும்? என்று எண்ணினர். அத்தகைய சமூகத்தில் தீயோருக்கு இடமில்லை என்றும், அவர்கள் உடனடியாகப் புறம்பாக்கப்படவேண்டும் என்றும் கருதினர். ஆனால், இயேசுவோ தம் தோழமைச் சமூகத்தில் நல்லோருக்கும் தீயோருக்கும் இடம் உண்டு என்றே கற்பித்தார். ஏனெனில், நம் விண்ணகத் தந்தை “நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்பவர்”
(மத் 5:45) அல்லவா!
தீயோர்
எனப்படுவோர் திருந்த வேண்டியவர்கள்; அவர்களுக்குத் திருந்துவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து கொடுக்கப்படவேண்டும். மனமாற்றம் என்பதே இயேசுவின் இறையாட்சிப் பணியின் மையப்போதனை ஆகும். எனவே, தீயோராகக் கருதப்படுவோர் இயேசுவின் அன்பிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர்கள் அல்லர்; மாறாக, அவர்கள் மனம்மாற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டியவர்கள். ஆகவே, தீயோர் மனமாற்றம் பெறும்வரை அவர்கள் நல்லாரோடு சேர்ந்திருப்பது தவிர்க்க இயலாது. எனவே, ‘நல்லவர்களிடமிருந்து’ ‘தீயவர்களை’ பிரித்துவிட
வேண்டும் எனக் கோருவது கிறிஸ்துவின் இறையாட்சிப் பார்வை அன்று.
கிறிஸ்துவின்
இறையாட்சிப் பார்வை மிக ஆழமான ஒரு பாடத்தை முன்வைக்கிறது. தொடக்கத் திரு அவையில் கிறித்தவச் சமூகம் தங்களை ‘இறையாட்சியின் மக்களாகவே’
கருதியது. தங்களிடையே இருக்கும் தீயோரைக் காணும்போது, கடவுள் அவர்களை இறுதி காலத்தில் அப்புறப்படுத்துவார் என நம்பினர். எனினும்,
காலம் செல்லச் செல்ல அவர்களின் பொறுமை குறைந்துகொண்டே போனது. ‘தீயோரை அப்புறப்படுத்த இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்கவேண்டும்? இறையாட்சியின் பணியாளராகிய நாமே அப்பணியை இப்போதே செய்யக்கூடாதா?’ என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பினர். எனினும், இயேசுவின் போதனை அவர்களுக்குத் தெளிவாய் இருந்தது.
தீயோரை
நல்லோரிலிருந்து பிரிப்பதும், தண்டிப்பதும் கடவுளின் வேலை; மனிதரைத் தீர்ப்பிடுவது இறைவனின் உரிமை. நல்லோரிடமிருந்து தீயோரை அப்புறப்படுத்தும் செயலைச் சமூகம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது என்பது இயேசுவின் போதனை. அது மட்டுமல்ல, ஒருவர் நல்லவரா? தீயவரா? எனத் தீர்மானிப்பதும், எச்செயல் தீயது? எது நல்லது? என முடிவெடுப்பதும் எளிதான செயல்
அன்று; அவ்வாறு தீர்மானிப்பதற்கு நம்மிடம் சரியான அளவுகோல்கள் இல்லை; அவ்வாறு தீர்மானிப்பதற்குத் தகுதி உடையவர் இறைவன் ஒருவரே. கடவுள் தமது திட்டத்தின்படி அப்பணியைத் தாம் விரும்பும் காலத்தில் செய்வார்.
மனித
உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, ஒருவரை முற்றிலுமாக ஒதுக்கிவிடுவது அல்லது உறவை முறித்துக் கொள்வது எளிது. ஆனால், அந்த உறவில் இருக்கும் நல்லவற்றை, அதாவது நற்கோதுமைகளை உணர்ந்து, பொறுமையோடு அதனை வளர்ப்பதே உண்மையான இறையாட்சி. ‘நானும் கடவுளும்’ என்று தனித்து வாழும் முறை இறையாட்சி அல்ல; சமூகத்தோடு இணைந்து அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பரிவு, கனிவு, நம்பிக்கை, நன்னயம் போன்ற பண்புகளை உள்ளடக்கிய முறைதான் இறையாட்சி. சிறிய விதைகளுள் ஒன்றான கடுகு விதை வளர்ந்து பெரிய மரமாகிப் பறவைகளுக்கும் மனிதருக்கும் நிழலையும் கனியையும் ஈந்து வாழவைப்பது போன்ற வாழ்வு முறை இது. புளிப்பு மாவுபோல மறைந்திருந்து, ஒட்டுமொத்த வாழ்வுக்கும் பொருளும் சுவையும் தந்து, பிறரை வாழவைக்கும் உன்னத வாழ்க்கை முறையே இறையாட்சி.
இன்றைய
திருவழிபாடு நமக்கு மூன்று மிக முக்கியமான வாழ்வியல் பாடங்களை உணர்த்துகின்றது.
முதலாவதாக,
தீமைக்கு எதிராக நாம் கோபப்படுவது அல்லது வன்முறையைக் கையாள்வது நிரந்தரத் தீர்வாகாது. மாறாக, நன்மையை வளர்ப்பதன் மூலம் மட்டுமே தீமையை முறியடிக்க முடியும். நமது கவனம் முழுவதும் தீமையை அழிப்பதில் அல்ல; நன்மையைப் பெருக்குவதில்தான் இருக்க வேண்டும். நம் வாழ்வில் களைகளைப் பிடுங்குவதைவிட, கதிர்களை ஆரோக்கியமாக வளர்ப்பதுதான் நமது முதன்மைப் பணியாக இருக்கவேண்டும். அப்போது தீமைகள் தானாகவே மறைந்துவிடும்.
இரண்டாவதாக,
குற்றம் செய்வோரைத் தண்டிக்கவேண்டும் என்பது நம்முடைய பார்வையாக இருக்கிறது. அதற்காகப் பல வேளைகளில் நாம்
முனைப்போடு செயல்படுகிறோம். பிறர் குற்றங்களே நம் கண்களுக்குப் பெரிதாகத் தெரிகின்றன (மத் 7:3). ஆனால், இயேசு குறைகளையும் குற்றங்களையும் புரிந்துகொண்டு, மனிதரை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்; அவர்களை மன்னிக்கவும் அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. எனவே, பிறரின் குற்றம் குறைகளை மன்னிக்க நாமும் எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
மூன்றாவதாக,
கடுகு விதையின் அளவு மிகச் சிறியதாக இருந்தாலும், அந்தச் செடி மரமாகி வானத்துப் பறவைகளுக்கும் பலருக்கும் வாழ்வாதாரத்தை வழங்குகிறது. மிகச் சிறிய புளிப்பு மாவு, மிகப்பெரிய அளவு மாவைப் புளிப்பேற்றுகிறது. அதுபோல, நல்லதிற்கான முதல் முயற்சியையும் சிறிய செயலையும் அளவு கருதியோ, முக்கியத்துவம் இல்லை என்றோ நாம் ஒதுக்கிவிட முடியாது. நாம் செய்யும் சிறிய நற்செயல்கள்கூட காலப்போக்கில் மிகப்பெரிய இறையாட்சியின் விருட்சங்களாக வளரும்.
நிறைவாக,
நாம் குறைகள் நிறைந்த சமூகச் சூழலில்தான் வாழ்கிறோம். இறையாட்சி என்பது வன்முறையாலோ, அதிகாரத்தாலோ நிலைநாட்டப்படுவதில்லை. மாறாக, அது அன்பு, பொறுமை, விட்டுக் கொடுத்தல், மன்னிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றால் மட்டுமே கட்டியெழுப்பப்படுகிறது. கோதுமைக்கும் களைக்கும் இடையிலான இந்தப் போராட்டம் உலகின் இறுதி நாள்வரை தொடரத்தான் செய்யும். எனவே, நம் உள்ளத்தில் இருக்கும் நற்பண்புகளைப் பாதுகாத்துக்கொள்ளவும், சமுதாயத்தில் இருக்கும் தீமைகளைக் கண்டு சோர்ந்து போகாமல் இருக்கவும் புதிய ஆற்றல் வேண்டி மன்றாடுவோம். தீமைகளின் நடுவே நாம் வாழ நேர்ந்தாலும், நாம் நல்ல கோதுமைகளாகவே நிலைத்திருப்போம்.