1491-இல் இஸ்பானிய நாட்டின் குஸ் பிஸ்கோவா பகுதியிலுள்ள இலயோலா அரண்மனை இல்லத்தில் பிறந்து, 1556-இல் உரோமையில் இறந்த புனித இஞ்ஞாசியார் இயேசு சபையைத் தோற்றுவித்து வளர்த்தெடுத்தவர். வீர சாகசங்கள் செய்து, பெரும் புகழ் பெற்று அழகிய இளவரசியை மணந்து ஆடம்பரத்தில் வாழ விரும்பிய இனிகோ இளைஞனுக்கு, இறைவன் வேறொரு திட்டத்தை வெளிப்படுத்தினார்.
1521-இல் தனது
நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் பாம்பலூனா கோட்டையில் பிரெஞ்சுப் படைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் போர் புரிந்த போர்வீரன் இனிகோவின் காலை அணுகுண்டு துளைத்தது. குணமாகிக் கொண்டிருந்தபோது இயேசுவிற்காகப் பணிபுரியும் போர்வீரனாக இனி மாறவேண்டும் என்ற மனமாற்றம் அவருக்கு ஏற்பட்டது. அரண்மனை வாழ்வைத் துறந்து, ஆண்டியாகத் துறவு மேற்கொண்டு, கடுந்தவம் புரிந்து, ஆழ்ந்த செபத்திலே இறைத் திருவுளத்தைக் கண்டுகொண்டு, திரு அவை வழியாக அகில உலகிற்கும் பலதரப்பட்ட பணிகள் வழியாக இறை-மனிதப் பணி செய்திட இயேசு சபையை நிறுவி வழிநடத்தினார்.
திரு அவையின்
ஆன்மிகப்
புதையல்:
நீண்ட காலமாகத் தான் பெற்ற ஆழ்ந்த இறையனுபவத்தை எல்லாரோடும் பகிர்ந்துகொள்ள ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ என்ற
நூலை வடித்தெடுத்து பொதுநிலையினருக்கும் துறவறத்தாருக்கும் குருக்களுக்கும் இறைவழி காட்டிடும் ஆன்மிகப் புதையலை விட்டுச் சென்றிருக்கின்றார். இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகள் வழியாக மலர்ந்துள்ளதுதான் புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகம். திரு அவையை வழிநடத்திடும் பலவகையான ஆன்மிகங்களில் சிறப்பான ஆன்மிகமாக 500 ஆண்டுகளைக் கடந்தும் பயனுள்ளதாகச் செயல்பட்டு வருகின்றது.
இயேசு சபையாருக்கு
மட்டுமல்ல;
இறை
மக்களுக்கும்
உரிய
ஆன்மிகம்:
இஞ்ஞாசியார் ஆன்மிகம் என்றால் ஏதோ இயேசு சபையாருக்கு மட்டுமே உரித்தான ஆன்மிகம் என்று சிலர் நினைக்கின்றனர். மாறாக, இந்த ஆன்மிகம் திரு அவையில் இருப்போர் அனைவருக்கும் கொடையாகப் புனித இஞ்ஞாசியார் விட்டுச் சென்றுள்ளார். இந்த ஆன்மிகப் பயிற்சிகளைத் தொடக்க காலத்தில் பொதுநிலையினரிடம்தான் அதிகமாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். இன்றும் இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளை ஒரு மாதம், எட்டு நாள், மூன்று நாள் தியானமாகப் பல துறவற சபையினரும்
குருக்களும், சில பொதுநிலையினரும் செய்து ஆன்மிகத்தில் வளர்ந்து வருகின்றனர். மேலும், மேற்கத்திய நாடுகளிலே பொதுநிலையினர் இந்த ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல், அவர்களே அதில் பாண்டித்தியம் பெற்று இந்த ஆன்மிகப் பயிற்சிகளை வழிநடத்தி வருவது பெருமைக்குரியதாக உள்ளது.
தியானத்திற்கு
மட்டுமல்ல,
வாழ்வுமுறை
வழி
காட்டியாகவும்:
இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளை வெறும் ஒரு தியானச் சூழலுக்குள் மட்டும் சுருக்கி வைத்துவிட முடியாது. கிறித்தவ வாழ்வை நெறிப்படுத்தும் ஒரு வாழ்வு முறையாக இவ்வான்மிகம் பார்க்கப்படுகின்றது. இயேசுவை, அவரின் வாழ்வை, பணியை, விழுமியங்களை மையமாகக் கொண்டுள்ள இவ்வான்மிகப் பயிற்சிகள் கிறித்தவ வாழ்வை, ஏன் மனித வாழ்வையே வழிநடத்தும் ஒரு வழிமுறையாக உள்ளது.
மரியன்னையின்
மகத்தான
பக்தர்:
இந்த இஞ்ஞாசியார் ஆன்மிகத்தில் கடந்த 54 ஆண்டுகள் வளர்ந்து வந்த இயேசு சபையாளன் என்ற முறையில் இவ்வான்மிகம் முன்வைக்கும் சில முக்கியமான பார்வைகளை, வழிமுறைகளை, அணுகுமுறைகளைக் கிறித்தவர் அனைவரின் நலன்களுக்காகவும், குடும்ப-குழும வாழ்வின் வளர்ச்சிக்காகவும் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
மனித வாழ்வின்
மூலக்கோட்பாடும்
முக்கியக்
குறிக்கோளும்:
தனது ஆன்மிகப் பயிற்சி நூலின் 23-வது எண்ணிலே மனித வாழ்வின் மூலக்கோட்பாட்டையும் முக்கியக் குறிக்கோளையும் பதிவுசெய்துள்ளார். “கடவுளாகிய நம் ஆண்டவரைப் போற்றவும் வணங்கவும் அவருக்குப் பணிபுரியவும், அவ்வாறு செய்வதன் வழியாக நமது ஆன்மா ஈடேற்றம் அடைவதற்கும் மனிதர் படைக்கப்பட்டுள்ளனர்.” நம்மைப் படைத்து, பராமரித்து, வழிநடத்திடும் இறைவனைப் போற்றுவதும் வணங்குவதும் வெறும் வழிபாடுகளில், செபங்களில், சடங்குகளில் மட்டும் நின்றுவிடாது, அவை நமது வாழ்வில் பணியாகப் பரிணமிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றார்.
எனவே,
மனிதரின் நலனுக்காக உலகில் படைக்கப்பட்டுள்ளவற்றை இந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகத்தான் மனிதர் பயன்படுத்த வேண்டுமே ஒழிய, தமது சுயநலத்திற்காகவோ, பிறரது வாழ்வை அடிமைப்படுத்தி, அவர்களது நலன்களைப் பறித்துக்கொண்டு சுகமாக வாழ்வதற்கோ அல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். இதற்கு மிகவும் தேவையான அகச்சுதந்திரத்தில் (holy
indifference or interior freedom) செயல்பட
அழைப்பு விடுக்கின்றார்.
இன்றைய
முதலாளித்துவச் சூழலில், தேவைகளைவிட ஆடம்பர வசதிகளுக்காக வாழ நிர்ப்பந்திக்கும் நுகர்வுவெறிக் கலாச்சாரத்தில், அதற்காக எதையும் எவரையும் காவுகொடுத்திடத் துடித்திடும் இச்சூழலில், மனிதர் எல்லாரையும் படைப்புகள் அனைத்தையும் மாண்புடன் நடத்திடும் வாழ்வுக்கு இஞ்ஞாசியார் ஆன்மிகம் சவால் விடுக்கின்றது.
ஆண்டவரின் அதிமிகு
மாட்சிக்கே:
இயேசு சபை நிறுவனங்களிலும் இல்லங்களிலும் பணித் தளங்களிலும் ‘ஆண்டவரின் அதிமிகு மாட்சிக்கே’ (AMDG: Ad Maiorm Dei Gloriam) எனும்
இலட்சினையைக் காணலாம். எதைப் போதித்தாலும், எதைச் செய்தாலும், எங்குப் பணி செய்தாலும் அனைத்தையும் கடவுளின் மாட்சிக்காகத்தான் செய்ய வேண்டும் எனும் உயர் இலட்சியத்தோடு வாழ்ந்த புனித இஞ்ஞாசியார், தனது சபையும் அப்படித்தான் வாழவேண்டும் எனப் பணித்தவர். தான் வடிவமைத்துக் கொடுத்துள்ள ‘இயேசு சபை சட்டச் சாசனத்தில்’ இந்த
ஏ.எம்.டி.ஜி. எனும்
சொல்லாடல் ஏறக்குறைய இருநூறு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளதிலிருந்து
இந்த நோக்கத்திற்காக இஞ்ஞாசியார் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெளிவாகின்றது. உலகின் படைப்பையே கடவுளின் மாட்சியாகக் கண்ட புனித இஞ்ஞாசியார், உலகில் நடக்கும் அனைத்தும் கடவுளின் மாட்சிக்காக நடக்கவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.
கடவுளின்
திருவுளத்தை, திட்டத்தைத் தெளிந்து தேர்ந்துகொண்டு, அதன்படி வாழ்வதும், வாழ வைப்பதும்தான் ‘கடவுளின் மாட்சி’ என நம்பிச் செயல்பட்டவர்
இஞ்ஞாசியார். ஒட்டுமொத்தமாக, கடவுளின் மாட்சி என்பது, அவரது படைப்புகளும் மானிடரும் மாண்போடு வாழ்வதுதான். புனித ஐரேனியுஸ் மொழிந்தபடி ‘மனிதர்கள் நிறைவாக வாழ்வதுதான் கடவுளின் மாட்சி’ ஆகும்.
‘தான்’,
‘தனது’, ‘தமது’ என்று
அனைத்தையும் பயன்பாட்டுப் பார்வையோடு நடத்துவதும், எதைச் செய்தாலும் சுயபாராட்டிற்காகவும் சுயகௌரவத்திற்காகவும் தன்னை மட்டும் முன்னிறுத்திப் பெருமை பெறுவதற்காகவும் செயல்படும் இன்றைய சமுதாயத்தில், பிறரும் படைப்புகளும் மாண்போடு வாழ்வதுதான் கடவுளின் மாட்சி எனும் வேரோட்டமான பார்வையை வழங்குகின்றது இஞ்ஞாசியாரின் ஆன்மிகம்.
இன்னும் அதிகமாக:
கடவுளுக்காகப் பணிபுரிவதில், பிறருக்காக வாழ்வதில் ‘இன்னும் அதிகமாக’ (MAGIS) எனும்
போக்கோடு செயல்பட வேண்டும் என்று இஞ்ஞாசியார் ஆன்மிகம் வழிகாட்டுகின்றது. ‘போதும்’,
‘குறைந்த அளவு’,
‘இவ்வளவுதான்’ எனும்
சொல்லாடல்களுக்கு இஞ்ஞாசியாரின் வாழ்விலும் பணியிலும் அகராதியிலும் இடமே இல்லை. கணக்கிடாமல் கொடுத்திட, காயத்தைக் கவனியாது போரிட, ஓய்வைத் தேடாது உழைத்திடத் தூண்டுகின்றது இஞ்ஞாசியாரின் ஆன்மிகம்.
குறைவாக
உழைத்துவிட்டு மிகுதியாக ஆடம்பர வாழ்க்கை வாழும் போக்குகள் அதிகரித்து வரும் இச்சமுதாயத்தில், அன்பிற்கு அணை போடாமல், பிறர் பணிக்கு வேலி போடாமல் இன்னும் அதிகமாக... இன்னும் அதிகமாக என்று அன்பு செய்ய வேண்டும், பணி செய்யவேண்டும் என அறைகூவல் விடுப்பது
இஞ்ஞாசியார் ஆன்மிகமாகும். கணக்குப் பார்த்து, கைம்மாறு கருதி, பயன்பாட்டுப் பார்வையில் (Utilitarianism) தனது
சாதி, தனது சொந்தங்கள், தனக்குப் பிடித்தவர்கள் என்று மட்டும் அன்பு செய்திடும் சுயநலச் சூழலில் இஞ்ஞாசியார் காட்டும் ‘இன்னும் அதிகமாக’ எனும் ஆன்மிகப் பார்வை, புதிய மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கொண்டு வந்து, சமத்துவத் தோழமை இறையாட்சிச் சமுதாயமாகக் கட்டி எழுப்பிவிடும்.
தெளிந்து தேர்ந்திடல்
- தீர்க்கமாகத்
தீர்மானித்திடல்:
எதைச் செய்தாலும் அது கடவுளின் திருவுளத்தின் வழியாகத் தெரிந்து கொண்டுதான் செய்யவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் இஞ்ஞாசியார். நமது தனிப்பட்ட, குடும்ப, குழும வாழ்விற்கும், இன்னும் பணிவாழ்விற்கும் பொது வாழ்விற்கும் நமது விருப்பங்களும் ஆசைகளும் முக்கியமல்ல; கடவுள் எதை விரும்புகிறார்? எதைச் செய்யச் சொல்கின்றார்? என்பதை அறிந்திட ‘தெளிந்து தேர்ந்திடல்’ (Discernment) எனும் ஆன்மிகப் பயிற்சியை, உத்தியை, வழிமுறையை வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு
நாளும் நாம் பல தீர்மானங்களை எடுக்கின்றோம்,
அவை இறைத் திருவுளத்தால் தூண்டப்பட்டு எடுக்கின்றோமா? அல்லது நமது சுயநலங்களை முன்னிறுத்தி எடுக்கின்றோமா? என்பதை ஆய்வுசெய்து செயல்பட இஞ்ஞாசியார் வழங்கியுள்ள ‘தெளிந்து தேர்ந்திடல்’ வழிமுறை
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இன்று மேலாண்மைக் கல்வி நிறுவனங்களும் இவரின் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டு வருகின்றன. எப்போதுமே நல்லதைச் செய்யச் சொல்லும் கடவுளின் திருவுளம் நாடி நமது முடிவுகளை, தீர்மானங்களை எடுத்தால் அது நமது வாழ்வையும் பிறரது வாழ்வையும் மேம்படுத்தும்.
எல்லாவற்றிலும்
எல்லாரிடமும்
கடவுளைக்
கண்டிட:
உடல்-ஆன்மா, பொருள்-ஆவி என மானுடத்தைக் கூறுபடுத்திய
ஆன்மிகப் பார்வைகளின் மத்தியில் ‘கடவுளை எல்லாவற்றிலும் கண்டிட, எல்லாவற்றிலும் கடவுளைக் கண்டிட’ எனும் புதிய, நேர்மறையான, ஆக்கப்பூர்வமான பார்வையைத் தருகின்றது இஞ்ஞாசியார் ஆன்மிகம். புனிதம் புனிதமற்றது, தூய்மையானது, தீட்டுப்பட்டது என்று உலகையும் மானுடத்தையும் கூறுபடுத்திப் பார்க்கையில், ஏற்றத்தாழ்வுகளும் மேடு பள்ளங்களும் பிளவுபடுத்துதலும் பிரித்தாளுவதும் ஆதிக்கப்போக்கும் அடிமைத்தனமும் போட்டி போட்டு மனித சமுதாயத்தைக் காயப்படுத்தி வருகின்றன.
இறைவன்
படைத்திட்ட அனைத்தும் புனிதமானது. அவை அனைத்திலும் ஆண்டவர் பிரசன்னமாய் உள்ளார். ‘கடவுளின் அன்பை அடைந்திட’
எனும் காட்சித் தியானத்தில் ‘இறைவன் அனைத்திலும் அன்பிற்காக உழைத்துக் கொண்டு இருக்கின்றார்’ என்று
நம்மை உணர்வுப்பூர்வமாக உணர வைக்கின்றார். மேலும், இந்தப் பார்வையானது படைப்பையும் படைப்புயிர்களையும் மதித்து, மாண்போடு நடத்த வழிவகுக்கின்றது. நம்மோடு பிரசன்னமாய் இருந்து அன்புசெய்து கொண்டிருக்கின்ற கடவுளைப் போல, நாமும் பிறரது வாழ்வில் பிரசன்னமாக இருந்து அன்புசெய்திடத் தூண்டுகின்றது.
அனைவருக்கும்
துணை
நின்றிடும்
இஞ்ஞாசியார்
ஆன்மிகம்:
படைப்பாற்றலோடு நேர்மறையாக ஆக்கமுடன் வாழ்ந்திட வழிகாட்டும் இஞ்ஞாசியார் ஆன்மிகம் இயேசு சபையினருக்கும் துறவிகளுக்கும் குருக்களுக்கும் உரியன மட்டுமல்ல; ஒவ்வொரு கிறித்தவருக்கும் உரிய ஆன்மிகச் சொத்தாகும். பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் வாழப்பட்ட துறவற வாழ்வை மக்களை, சூழலை மையமாக வைத்து வாழவேண்டிய திருத்தூதுத் துறவாக மாற்றியுள்ளதில் இஞ்ஞாசியார் ஆன்மிகத்திற்குப் பெரும் பங்கு உள்ளதைத் திரு அவையில் யாரும் மறுக்க முடியாது.
மனித
வாழ்வின் மூலக்கோட்பாடு, முக்கியக் குறிக்கோள், ஆண்டவரின் அதிமிகு மாட்சி, இன்னும் அதிகமாக, எல்லாவற்றிலும் கடவுளைக் காண்பது போன்ற பார்வைகளை உள்ளடக்கியுள்ள இஞ்ஞாசியாரின் ஆன்மிகம் இன்று எல்லாக் கிறித்தவருக்கும் தேவையான ஒன்று. லூத்தர் கொணர்ந்த எதிர்ப்பு கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம் திரு அவையை வெகுவாகப் பாதித்துப் பிளவுபடுத்திய சூழலில், மாற்று மறுமலர்ச்சி இயக்கத்தை வளர்த்தெடுத்து, கத்தோலிக்கத் திரு அவையின் தூணாகத் தானும் தனது சபையும் தீவிரமாகச் செயல்பட உந்தித் தள்ளியுள்ளது இஞ்ஞாசியாரின் ஆன்மிகம்.
இன்றைய
சூழல்களில் நாம் சந்திக்கும் சவால்கள், போராட்டங்கள், மானிட உரிமை காத்திடச் சந்திக்கும் நெருக்கடிகள் மத்தியில் நீதி நிறைந்த சமத்துவம் போற்றிடும் இறையாட்சிச் சமுதாயமாக வாழ்ந்திட உதவுகின்றது இஞ்ஞாசியார் ஆன்மிகம். இயேசுவின்
உண்மையான சீடர்களாக உருவெடுத்திட இஞ்ஞாசியாரின் ஆன்மிகம் அனைத்துக் கிறித்தவர்கட்கும் துணை நிற்கும் எனும் எதிர்நோக்கில் தொடர்ந்து வாழ்ந்திடுவோம்.
இஞ்ஞாசியார்
ஆன்மிகம் அறிந்திடுவோம், இயேசுவின் உண்மைச் சீடராய் மலர்ந்திடுவோம்!