2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ‘இந்தியா’ கூட்டணியை அசைத்தது. மே 4-ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் ‘தொங்கு சட்டசபை’ என முடிவானது. அன்று வழக்கத்திற்கு மாறாக ‘மாநிலக் காங்கிரஸ், த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு தருவதா? வேண்டாமா? என முடிவெடுக்கும்’ என டெல்லி காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
மே
5-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் கூடியது. த.வெ.க.
ஆட்சிக்கு ஆதரவு நிலை எடுக்கப்பட்டது. முக்கியமாக, வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல்கள், 2029 நாடாளுமன்றத் தேர்தல் வரை கூட்டணி, தொகுதி பங்கீடு அமைச்சரவையில் பங்குவரை முடிவானது.
மே
6-இல் நிபந்தனையுடன் காங்கிரஸ் த.வெ.க.வை ஆதரித்தது. ‘த.வெ.க. எந்தச்
சூழ்நிலையிலும் பா.ச.க.வின் என்.டி.ஏ.வுடன்
உறவு கூடாது’ என்றது. ஆனால், அ.தி.மு.வின் 25 சட்டமன்ற உறுப்பினர்களை சி.வி. சண்முகம்
அலுவலகம் சென்று வேலுமணி உள்பட பல அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு
முதலமைச்சர் விஜய் சால்வைப் போர்த்தி ஆதரவு திரட்டினார். தினகரனின் அ.ம.மு.க.வின் மன்னார்குடி
சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் அவர்களைத் த.வெ.க.
தன் கட்சியில் சேர்த்தது. இவர்கள் அனைவரும் என்.டி.ஏ. கூட்டணி
வாக்குப் பெற்று வெற்றி பெற்றவர்கள்.
இன்றும்
என்.டி.ஏ. கூட்டணியில்
தொடர்பவர்கள். காங்கிரஸ் தன் ஆட்சி ஆதரவிற்கான நிபந்தனை மீறப்பட்டது குறித்து மௌனம் காக்கிறது. காங்கிரஸ் 2004 முதல் 2026 வரை (2014 பாராளுமன்றத் தேர்தல் தவிர) கூட்டணியிலிருந்து வெற்றிக்குக் காரணமாக இருந்த தி.மு.க.வை மறந்தது. பொதுவுடைமைக்
கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முசுலிம் லீக் ஆகிய கட்சித் தலைவர்கள் தி.மு.க.
தலைமையிடம் பேசி த.வெ.க.
அரசில் சேர்ந்தன.
இது
குறித்துப் பேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், “நாங்கள் த.வெ.க.
கூட்டணியில் இணைவது குறித்து தி.மு.க.விடம் பேசி, எங்கள் முடிவைச் சிறப்பாகக் கையாண்டு இருக்கவேண்டும்; தவறு செய்துவிட்டோம்” எனத்
தங்கள் பிழையைப்
பொதுவெளியில் ஏற்றுக்கொண்டார்.
மே
8-இல் சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்திரப்பிரதேச மேனாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின்
அவர்களுடனான தன் சந்திப்புப் படங்களையும், மேற்குவங்க மம்தா பானர்ஜியின் படங்களையும் போட்டு ஒரு பற்றிக்கொள்ளும் ‘ட்வீட்’ இந்தியில் போட்டார். ‘துன்ப காலங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்லர்.’ இது காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்திய அரசியலை இந்தியா முழுவதும் பேச வைத்தது. காங்கிரஸ் பாராளுமன்றத் தேர்தலுக்காக மாநிலக் கட்சிகளிடம் தஞ்சம் அடைகிறது. தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரம் தவிர இந்தியாவில் எங்கும் மாநிலத் தேர்தல்களில் ‘இந் தியா’ கூட்டணி கிடையாது.
அண்மைக்கால
உதாரணமாக, பீகாரில் இராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவ்வும் இணைந்த பாதயாத்திரைகளில், பொதுக்கூட்டங்களில் அதிகபட்சம் பத்து இலட்சம் பேர் திரண்ட அதிசயம் நடந்தது. தேஜஸ்வி யாதவ் பீகார் முதல்வராகிவிடுவார் என்ற நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் பீகார் தேர்தலில் அதிக சீட் கேட்டு, கடைசி நேரம் வரை அழுத்தம் கொடுத்தது. ‘பிரண்ட்லி மேட்ச்’ என்பதாக காங்கிரஸ் பல தொகுதிகளில் கூட்டணி
மாண்பிற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த ‘நட்புப் போட்டியால்’ 15 தொகுதி
முடிவுகள் மாறின. பீகாரில் செல்வாக்கு மிக்க லாலு பிரசாத்தின் இராஷ்ட்ரிய ஜனதா தளம் தோற்றது.
பாண்டிச்சேரியில்
2026 மார்ச் 23-ஆம் தேதி மாலை
மூன்று மணிக்கு வேட்புமனு திரும்பப் பெறும் காலம். பிற்பகல் ஒரு மணி வரை கூட்டணி பேசி தி.மு.க., விடுதலைச்
சிறுத்தைகளைக் காங்கிரஸ் நட்புப் போட்டிக்குத் தள்ளியது.
புதுதில்லி
மேனாள் முதல்வர் கெஜ்ரிவால் ஊழல் வழக்கில் விடுதலை பெற்றதைக் காங்கிரஸ் கண்டித்தது. ஒரு படி மேலாக, கேரள சட்டமன்றத் தேர்தல்களில் இராகுல் மற்றும் கார்கே, பினராயி விஜயனுக்கும், பா.ச.க.வுக்கும் இரகசிய உறவு எனப் பிரச்சாரம் செய்தார்கள். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி அவர்கள்
விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் எழுதி உள்ளார்.
இக்குழப்பங்களுக்கு
இடையே ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம் 2026 ஜூன்
8-ஆம் தேதி நடந்தது. ‘இந்தியா’ கூட்டணிப் பிணக்குகள் பிளக்ஸ் பேனர்களாக டெல்லி முழுவதும் வெளிப்பட்டன. அவை அன்று புதுதில்லி பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக இருந்தன. அன்று வைக்கப்பட்ட பேனர்களில் பல்வேறு நேரங்களில் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் காங்கிரஸ்மீது வைத்த விமர்சனங்கள் இந்தியில் வெளியாகின.
‘இந்தியா’ கூட்டணியைக் கட்டமைத்த தி.மு.க.,
ஜூன் 8 அன்று ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணித்தது. ஆம் ஆத்மி கட்சியும் இதே புறக்கணிப்பு நிலையை எடுத்தது.
‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் தேசியவாதக் கட்சியின் சரத்பவாரின் மகள் சுப்ரியாசுலே, அகிலேஷ் யாதவ்,
தேஜஸ்வி யாதவ், தொல். திருமாவளவன் ஆகியோர்,
‘தி.மு,க-வைக்
குறிவைத்து, காங்கிரஸ் தோல்வி அடையச் செய்தது. காங்கிரஸ் கட்சி மாநிலக் கட்சிகளை இறுக்கிப் பிடித்து தொகுதிகளை வாங்குவது, கூட்டணிக்குள் விமர்சனங்கள் செய்வது ஏன்?’ என ஏகத்திற்கும் குற்றம்
சாட்டினர். காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் மட்டும் ‘இந்தியா’ கூட்டணி
ஒற்றுமை குறித்துப் பேசியுள்ளனர்.
கெஜ்ரிவால்,
அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கடந்தகாலக் கசப்பான காங்கிரஸ் அனுபவங்களை எண்ணுகிறார்கள். மாநிலத் தேர்தல்கள் குறித்த காங்கிரஸ் நெருக்குதலால் ‘மூன்றாம் அணி’ என்ற முன்னெடுப்பு குறித்துச் சிந்திக்கிறார்கள், வெளிப்படையாகவும் பேசுகிறார்கள். ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்திலும்
அதிருப்திகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
மூன்றாம்
அணி என்பது பா.ச.க.வுக்கு வெற்றி வாய்ப்பைத் தட்டில் வைத்துத் தருவதாகும் என்ற விமர்சனங்கள் உள்ளன. ஆனால், மாநிலங்களின் அரசியல் மாநிலக் கட்சிகளைப் பா.ச.க.வைப் போலவே அழிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாவது அணியே மாற்று
என்ற வாதமும் உண்டு.
தமிழ்நாட்டில்
மேனாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி, திருச்சி வேலுச்சாமி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோரைக் கொண்ட தி.மு,க.
வெறுப்பின் பழைய அணி இருந்தது. 2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சமூக ஊடகங்கள் வழியும், செய்தியாளர் சந்திப்பு வழியும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்,
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கீரிஸ் சோடாங்கர், பிரவீன் சக்கரவர்த்தி, மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் இராஜேஷ் குமார் ஆகியோர் பேசிய பேச்சுகள், தமிழ்நாட்டு ‘இந்தியா’ கூட்டணியின் நம்பகத்தன்மையைப் பொதுமக்களிடம் சிதைத்தன. ‘இந்தியா’ கூட்டணி தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தது.
தமிழ்நாட்டில்
திராவிடத்திற்கு மாற்றாக த.வெ.க.
வந்தபின், காங்கிரஸ் அதிரடி அரசியல் நடத்துகிறது. அதன் உடைப்புச் சத்தம் ‘இந்தியா’ கூட்டணியில் பிரதிபலிக்கிறது. இந்நாள்வரை த.வெ.க.
‘இந்தியா’ கூட்டணி
குறித்து ஒருவார்த்தை கூடப் பேசவில்லை.
தி.மு.க.வின்
மக்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, “நாங்கள் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களோடு அமர விருப்பமில்லை; வேறு இடம் தாருங்கள்”
என மக்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதிவிட்டார். தி.மு.க.வின் அதிகாரப்பூர்வக் கட்சி நாளேடான ‘முரசொலி’ தலையங்கம் உள்பட அனைத்துச் செய்தி வடிவிலும் காங்கிரஸ் கட்சியைக் கட்டம் கட்டுகிறது.
மூன்றாவது
அணி என்பது காலத்தின் கையில் உள்ளது. அதற்கான அடிப்படைக் காரணிகளை மாநிலத் தேர்தல் வெற்றிகளுக்காக காங்கிரஸ் உருவாக்கியது என்பதில் ஐயமில்லை.
மாநிலக்
கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டாட்சியே அரசமைப்புச் சட்டநெறிக்கு உள்பட்ட அடிப்படையாகும். அது மூன்றாவது அணியால் மட்டுமே
சாத்தியமாகும்.