news-details
ஆன்மிகம்
திருவிவிலியப் பார்வையில் படைப்பின் மேன்மையும் வாழ்வெனும் கொடையும்

படைத்தான் படைப்பை மனுவுக்காக; மனுவைப் படைத்தான் தனை வணங்கஎன்பது முதுமொழி. இறைவன் உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்தார் என்பதில் கிறித்தவர்களாகிய நமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இருக்க இயலாது. ஏனெனில், திருவிவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்கநூலின் முதலிரு அதிகாரங்கள் இறைவன் எப்படி விண்ணையும் மண்ணையும், அதில் உள்ள யாவற்றையும் படைத்தார் என விளக்கிக் கூறுகின்றன. அப்படைப்புகளில் மனிதப் படைப்பானது தனித்துவமானதுதான். எனவேதான் தொடக்கநூலின் முதல் அதிகாரத்தில் இறைவனது படைப்பை விவரிக்கும் குருத்துவ மரபு படைப்புகளுக்கு மணிமுடியாக மனிதப் படைப்பை அமைக்கின்றது (தொநூ 1:26,27).

அதே நூலின் இரண்டாம் அதிகாரத்தில் இறைவனது படைப்பை விவரிக்கும் யாவே மரபு, படைப்புகளுக்கெல்லாம் முதன்மையாக, சிகரமாக அல்லது தலைமையாக மனிதப் படைப்பை விளக்குகின்றது (தொநூ 2:7). மனிதப் படைப்பு வெறும் உயிருள்ள படைப்பு மட்டுமல்ல; இறைவன் மனிதரைத் தமது சாயலிலும் உருவிலும் படைத்தார் (தொநூ 1:26,27).  ஆகவே, மனித வாழ்வு ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது இறைவனின் அரிய, மதிப்புமிக்க, புனிதமான கொடை. எனவே, ஒவ்வோர் உயிரும் மதிப்புக்குரியது, மாண்புக்குரியது மட்டுமல்ல; எல்லா உயிர்களையும் பொறுப்புடனும் சமத்துவத்துவத்துடனும் பேணி, அன்பு செய்து, பாதுகாக்கவேண்டியது தனது கடமை என்பதை மனிதப் படைப்பு உணர்ந்துகொள்ளவேண்டும்.

இன்றைய உலகில் போர்கள், வன்முறைகள், கருக்கலைப்பு, முதியோர் புறக்கணிப்பு, சுற்றுச்சூழல் அழிவு, சாதி-சமய வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவை மனித வாழ்வின் மதிப்பைக் குறைக்கும் நிலையை உருவாக்கியுள்ளன. இத்தகைய சூழலில் திருவிவிலியம் ஒவ்வொரு மனித உயிரும் இறைவனுக்கு மதிப்புமிக்கது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. மனித வாழ்வை மதிப்பதும் காப்பதும் வளர்ப்பதும் ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரின் கடமையாகும்.

1. படைப்பின் மேன்மை

இறைவனின் படைப்புச் செயலை விவரிக்கும் தொடக்க நூல், ஒவ்வொரு படைப்பையும் படைத்த பிறகுஅது நன்றுஎன்று கடவுள் கூறுவதாக அமைக்கிறது. ஆறு நாள்கள் நடைபெறும் படைப்புப் பணிகளில் ஏழு முறைகள் கடவுள்நன்று (தொநூ 1:4,10,12,18,21,25,31) என்று கூறும் சொல் இடம்பெறுகின்றது. ஆனால், ஆறாம் நாள் மனிதரைப் படைத்த பிறகு, படைப்பின் முழுமையை மற்றும் நிறைவைக் கண்ட இறைவன்மிகவும் நன்றுஎன்று கூறுவதாகத் தொடக்க நூல் கூறுகின்றது. இறைவனின் இக்கூற்று மனிதரின் மேன்மையையும் மாண்பையும் எடுத்துரைக்கிறது.

மனிதர் இறைவனின் சாயலைத் தாங்கியவராக இருப்பதால் அவரை இன ரீதியாக, மொழி ரீதியாக, சமூக ரீதியாக, பண்பாட்டு ரீதியாக மட்டும் நாம் கூறுபோட்டுப் பார்ப்பதை விடுத்து, இவ்வுலகில் இறைவனைப் பிரதிபலிப்பவராகவும், இறைவனது பதிலாளாகவும் மனிதரைப் பார்ப்பது சிறப்பு. எனவே, எந்த மனிதரையும் இழிவாகக் கருதுவது இறைவனின் படைப்பை அவமதிப்பதாகும். தொடக்க நூல் 2:7-இல், “ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்என்று கூறப்பட்டுள்ளது. எல்லா உயிரினங்களையும் இறைவனே படைத்தார். ‘உண்டாகுக!’ என்ற உடனே அவை படைப்புகளாக உருமாறிவிட்டன. ஆனால், மனிதனைப் படைத்த போது மட்டும் இறைவன் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவர் வடிவமைத்த அம்மனித உருவத்தின் நாசிகளில் தமது உயிர்மூச்சை ஊதி, அவனைச் சிறப்பான விதத்தில் படைக்கின்றார். இதனால் மனித வாழ்வு இறைவனிடமிருந்து வரும் கொடை. மனித உயிர் என்பது மனிதனின் தனித்துவமான சொத்து அல்ல; அது இறைவன் மனிதனுக்கு வழங்கிய அரும்பெரும் கொடை. இறைவன் மனிதருக்கு வழங்கிய கிடைத்தற்கரிய வரம்.

2. மனித வாழ்வு இறைவனின் கொடை

ஒவ்வொரு மனித வாழ்வும் இறைவனின் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மனிதன் பிறப்பதற்கு முன்பே இறைவன் அவரை அறிந்திருக்கிறார். “என் தாயின் கருவிலே எனக்கு உரு தந்தவர் நீரே (திபா 139:13) என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். மனித வாழ்வின் தொடக்கம் முதல் இறைவனின் படைப்பாற்றல் மிக்க அன்பு செயல்படுகிறது என்பதைத் திருப்பாடல் ஆசிரியரின் இக்கூற்று உணர்த்துகிறது. கருவிலுள்ள குழந்தையும் இறைவனின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே எண்ணப்பட வேண்டும். எனவே, மனித வாழ்வை அது கருவாக உருப்பெற்றது முதல் அதன்பின் உலகில் குழந்தையாகப் பிறந்து, வளர்ந்து, மூப்பு எய்தி மண்ணுக்குத் திரும்பும்வரை மதிக்கவேண்டும். இறைவாக்கினர் எரேமியா அழைக்கப்பட்டபோது இறைவன் பின்வருமாறு கூறுகிறார்: “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன் (எரே 1:5). இதன் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட அழைப்பும் நோக்கமும் இருப்பதை அறிகிறோம்.

3. மனிதன் இறைவனின் சாயல்

இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனின் மாண்பை யாராலும் அழிக்க முடியாது. இந்த மாண்பு பாலினம், வயது, சாதி, சமூகம், உடல்நிலை, கல்வி, செல்வம் போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை. இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் எல்லா மனிதர்களையும் சமமாக மதித்தார். அவர் ஏழைகளை, பெண்களை, குழந்தைகளை, உடல்நலமற்றோரை, பாவிகளாகக் கருதப்பட்டவர்களை, வரிதண்டுவோரை, சமாரியர்களை அன்போடு ஏற்றுக்கொண்டார். “ஏழைகளே பேறு பெற்றோர் (லூக் 6:20) என்று அவர் கூறியபோது, ஏழைகள்பால் அவருக்கு இருந்த அக்கறையை நாம் அறிய முடிந்தது. பாவிப்பெண் ஒருவர் தமது காலடிகளில் நறுமணத்தைலம் பூசியதில் குறை கண்ட பரிசேயரான சீமோனிடம் அப்பெண் தம்மீது கொண்டிருந்த அன்பின் பெருமை குறித்துப் பேசியபோது (லூக் 7:37-47), பெண்கள்பால் அவருக்கு இருந்த மதிப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்\" (மாற் 10:14) என்று அவர் கூறியபோது பச்சிளங் குழந்தைகளின் மாண்பை அவர் பேணும் தன்மையை நம்மால் உணர முடிந்தது. ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்கு வெளியே சூம்பிய கையுடன் நின்றுகொண்டிருந்த உடல் நலமற்ற ஒருவரை அழைத்துத் தொழுகைக்கூடத்தின்நடுவே வந்து நில்என்று கூறி அவரைக் குணப்படுத்தியபோது (லூக் 6:6-8), உடல் நலமற்றோரின்மீது அவருக்கு இருந்த கரிசனையை நாம் அறியமுடிந்தது. பாவியும் வரிதண்டுவோருமான சக்கேயுவின் வீட்டில் தங்க விரும்புவதாக இயேசு கூறியபோது (லூக் 19:1-10) பாவிகளான வரிதண்டுபவரோடு உறவு கொள்வதில் அவருக்கு இருந்த விருப்பத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. இவ்வாறு சமூகத்தில் கீழ்நிலையில் இருந்த எல்லாரிடமும் இயேசு இறைவனின் சாயலைக் கண்டார் என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.

4. மனித உயிர் புனிதமானது

மனித உயிரின் தொடக்கம் என்பது இறைவனின் மூச்சுக்காற்றே (தொநூ 2:7). இறைவனின் மூச்சுக்காற்றை உள்வாங்கியதும் மனிதன் உயிர் பெறுகிறான்; செயல்படுகிறான்; நடமாடுகிறான். மனிதனுக்கு உயிர் தந்து, அவனைச் செயல்பட வைப்பது இறைவனே. ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாதுஎன்பது நாம் அறிந்த முதுமொழி. இறைவனே மனித வாழ்வின் உயிராக, மனித வாழ்விற்கு மூச்சாக இருப்பதால் மனித உயிர் புனிதமானது. எனவே, மனித உயிருக்கான அதிகாரமும் பொறுப்பும் இறைவனிடமே உள்ளன. இந்தச் சிந்தனையின் பின்னணியில்தான் தொடக்கத்தில் மனிதன் உள்பட உயிரினங்கள் அனைத்தும் செடி, கொடிகள், தாவரங்கள் இவற்றின் கனிகளை உண்டதையும் (தொநூ 1:29), காயினின் முதல் இரத்தப்பலி மற்றும் பெருவெள்ளம் ஆகிய நிகழ்வுகளுக்குப்பின் இரத்தம் தவிர்த்து உயிரினங்கள் அனைத்தையும் இறைவன் மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் உணவாகக் கொடுத்ததையும் (தொநூ 9:3-4) நாம் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

உயிரினங்களின் இரத்தத்தில் இறைவனின் மூச்சுக்காற்று இருப்பதாகத் தொடக்க காலத்தில் யூதர்கள் எண்ணியதால் இரத்தத்தை உண்ணலாகாது என்று வலியுறுத்தினர். “கொலை செய்யாதே (விப 20:13) என்பது மோசேயின் பத்துக் கட்டளைகளில் ஒன்று. இதன் அடிப்படையில், ஒருவரது உயிரை இன்னொருவர் பறிக்கவும் ஒருவரது உயிரை அவரே மாய்த்துக் கொள்ளவும் உரிமை இல்லை என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

5. அன்பு மனித வாழ்வின் அடித்தளம்

மனித வாழ்வை நாம் மதிக்கவேண்டும் என்பதற்கான அடிப்படை நோக்கம் அன்பே ஆகும். மிகப்பெரிய கட்டளைகளாக இயேசு தமது போதனையின்போது வலியுறுத்தியது, “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து... உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக (மத் 22:37-39) என்பதே. யூதர்களைப் பொறுத்தமட்டில்அடுத்திருப்பவர்என்றால் அது மற்றொரு யூதரைத்தான் குறிக்கும். ஆனால், இயேசுவைப் பொறுத்தமட்டில் அடுத்திருப்பவர் யார் என்பதை நல்ல சமாரியர் உவமை (லூக் 10:25-37) வழியாகத் தெளிவுபடுத்துகின்றார். சாலையோரத்தில் காயமடைந்திருந்த மனிதனை உதாசீனப்படுத்தாமல் உதவி செய்த சமாரியரே காயப்பட்டவருக்கு அடுத்திருப்பவர் என்று நல்ல சமாரியர் உவமையில் இயேசு கூறியதன் வழியாக, யூதருக்கு ஒரு சமாரியர் அடுத்திருப்பவராக இருக்க முடியும் என்பதை வலியுறுத்துகின்றார்.

அப்பா, நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும், ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல்வேண்டும்என்றார் வடலூர் வள்ளலார். ‘அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்புஎன்பார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது, அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிருள்ள உடம்பு. அன்பு இல்லாதவர்களுடைய உடம்பு எலும்பின்மேல் தோலைப் போர்த்தி வைத்துள்ளதற்குச் சமம் என்பது இதன் பொருள்.

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், “நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலை சிறந்தது (1கொரி 13:13) என்கிறார் திருத்தூதர் பவுல். நாம் அன்பு செய்ய வேண்டியவர்கள் நம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்ல; உலகில் உள்ள எல்லா மனிதர்கள் உள்பட அனைத்துப் படைப்புகளும் நம்மால் அன்பு செய்யப்பட வேண்டியவையே. இன்று நாம் தேவையில் உள்ள ஒவ்வொரு படைப்புக்கும் நமது உதவிக்கரங்களை நீட்டும்போது, மனித வாழ்வையும் இறைவனின் ஒவ்வொரு படைப்பையும் நாம் மதிக்கிறோம் என்பது பொருள்.

6. இன்றைய காலத்தில் மனித வாழ்வை மதிப்பதற்கான நடைமுறைகள் எவை?

இன்றைய சமூகத்தில் மனித வாழ்வின் மதிப்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன:

சாதி, சமயம், மொழி, பாலின வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துதல்.

கருவிலுள்ள குழந்தை முதல் முதியோர் வரை ஒவ்வோர் உயிரையும் மதித்தல்.

ஏழைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலமற்றோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கு உதவுதல்.

குடும்பத்தில் அன்பு, பரிவு, ஒற்றுமை, சமத்துவம், நட்புறவு மற்றும் மன்னிப்பு போன்ற இறையாட்சியின் விழுமியங்களை வளர்த்தெடுத்தல்.

வன்முறையையும் வெறுப்பையும் தவிர்த்து, அமைதியைக் குடும்பங்களில், சமூகங்களில், ஊர்களில் நிலைநாட்ட முயற்சி செய்தல்.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் இறைவனின் படைப்பை மதித்தல் மற்றும் பல்லினப் பெருக்கத்திற்குத் துணை நிற்றல்.

சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடுதல்.

முடிவுரை

மனித வாழ்வு இறைவனின் அரிய கொடை. ஒவ்வொரு மனிதரும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்களாக இருப்பதால் மனித உயிர்களின் மாண்பை யாராலும் அழிக்க இயலாது. அன்பு, இரக்கம், நீதி, சமத்துவம், மன்னிப்பு மற்றும் சேவை ஆகியவற்றின் வழியாக மனித வாழ்வை மதிக்க நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு கிறிஸ்துவின் வாழ்வும் போதனைகளும் ஒவ்வொரு மனிதரையும் அன்போடு ஏற்றுக்கொண்டு, அவர்களின் வாழ்வை உயர்த்தவேண்டும் என்பதை நமக்குக் கற்றுத்தருகின்றன.

மனித உயிரைக் காப்பதும், வலிமை குன்றியவர்களைத் தாங்குவதும், படைப்பைப் பாதுகாப்பதும் இறைவனுக்குச் செலுத்தும் உண்மையான வழிபாடாகும். எனவே, ஒவ்வொரு மனித உயிரையும் இறைவனின் விலைமதிப்பற்ற கொடையாக ஏற்று, மதித்து, அன்பு செய்து, பொறுப்புணர்வுடன் வாழ்வோம். அப்போதுதான் இறைவனின் படைப்பின் மேன்மையை நம் வாழ்வில் வெளிப்படுத்த முடியும். உலகமும் மனிதநேயத்தாலும் இறையன்பாலும் புதுப்பிக்கப்படும்.