news-details
ஆன்மிகம்
ஏழையரை முன்னிறுத்தும் திரு அவை

தமிழ்நாடு மேய்ப்புப்பணிப் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் தமிழ்நாடு-புதுவை ஆயர் பேரவைத் தலைவர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின்  தொடக்க உரை

இறை இயேசுவில் அன்பார்ந்த ஆயர் பெருமக்களே, அருள்தந்தையரே, துறவியரே, இறைமக்களே! தமிழ்நாடு மேய்ப்புப்பணிப் பேரவையின் இன்றைய இந்த முக்கியமான உரையாடலுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன்.

திரு அவை என்பது கட்டடங்களின் கூட்டுத் தொகுப்போ, நிறுவனங்களின் கூட்டமைப்போ அல்ல; அது மனிதர்கள் இணைந்து பயணிக்கும் இறைமக்களின் சமூகம். நம்பிக்கையில் ஒன்றுபட்டு, இறையாட்சியை நோக்கிப் பயணிக்கும் திருப்பயணிகளின் குடும்பம். வத்திக்கானின் ஏடுAd Gentesஉணர்த்துவது போல, இந்தப் பயணத்தில் நமது இன்றைய காலகட்டத்தின் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் நம்பிக்கைகளையும் ஏமாற்றங்களையும் குறிப்பாக, ஏழையர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கை அனுபவங்களையும் முன்னிறுத்துவது நமது அழைப்பாகும். இந்த அழைப்பின் பார்வையில், நமது இந்த ஆண்டின் மேய்ப்புப்பணிப் பேரவையின் மையக்கருத்தாகத் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு, ‘ஏழையரை முன்னிறுத்தும் திரு அவை.’ இன்று நமது சிந்தனையை அறிமுகப்படுத்தும் வகையில் ஐந்து அடிப்படையான கேள்விகளை இந்தத் தொடக்க உரையில் உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.

1. ‘ஏழையரை முன்னிறுத்துதல்- பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிரான நிலைப்பாடா?

ஏழையருக்கான நிலைப்பாட்டைக் குறித்துப் பேசும்போதெல்லாம் அடிக்கடி எழும் கேள்விதான் இது. ‘ஏழையரை முன்னிறுத்தும் திரு அவைஎன்று நாம் கூறும்போது, திரு அவை செல்வந்தர்களை ஒதுக்குகிறதா? அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுகிறதா? இதற்கான திரு அவையின் பதில் மிகவும் தெளிவானது: ‘இல்லை, ஏழையரின் சார்புநிலை, பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகாது.’

திரு அவை யாரையும் புறக்கணிப்பதில்லை. இறைவனின் அன்பு அனைவருக்கும் சமமானது. ஏழையராயினும் செல்வந்தராயினும் ஒவ்வொருவரும் இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள். மனிதர்கள் எல்லாருமே புனித வாழ்விற்கும் மீட்பிற்கும் அழைக்கப்பட்டவர்கள். அப்படியானால், ஏன் திரு அவை ஏழையருக்கு முன்னுரிமை அளிக்கிறது?

அன்பார்ந்தவர்களே, இங்குதான் நாம் ஒரு முக்கியமான வேறுபாட்டை உணரவேண்டும். திரு அவை வறுமையை உயர்த்திப் பேசுவதில்லை; வறுமையால் காயமடைந்த மனிதனை உயர்த்திப் பிடிக்கிறது. மனித மாண்பைச் சிதைக்கும் ஏழ்மை ஒருபோதும் இறைவனின் விருப்பமல்ல; ஆனால், அந்த ஏழ்மையால் மனித மாண்பை இழந்து வாழும் சகோதரர்-சகோதரிகளின் பக்கம் நிற்பதே திரு அவையின் அழைப்பாகும்.

எனவே, திரு அவையின் சார்புத்தன்மை வறுமைக்கு அல்ல; வறியவர்களுக்கே. இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களால், வறுமையின் பிடியில் சிக்கியிருப்போரை விடுதலை செய்வதே திரு அவையின் மறைப்பணி. வறுமையைப் போதிக்க அல்ல; வறுமையிலிருந்து மனிதரை விடுவிக்கவே திரு அவை செயல்படுகிறது.

நற்செய்தி போதிக்கும் ஏழ்மை மற்றும் சமூகத்தில் நிலவும் ஏழ்மை இரண்டும் ஒன்றல்ல. Gospel poverty is different from the reality of poverty. Gospel\'s poverty is liberating, chosen out of free will. Poverty as a social reality is dehumanising and forced by systematic violence and indifference. We don\'t spiritualise poverty. We stand for the liberation of the poor.

ஏழையரின் சார்புநிலையும் முன்னுரிமையும், மற்றவர்களை ஒதுக்கும் மனப்பான்மை அல்ல; காயமடைந்தவர்களை முதலில் அணுகும் இறையன்பின் வெளிப்பாடு.

99 ஆடுகளைப் பாலைநிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போன ஓர் ஆட்டைத் தேடிச்செல்லும் நல்லாயனின் தேடல்.

அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர், முதலில் ஆபத்தான நிலையில் இருப்போருக்குச் சிகிச்சை அளிப்பது போல, மனித மாண்பும் வாழ்வுரிமையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பவர்களைத் திரு அவை முன்னிலைப்படுத்துகின்றது.

இது பாகுபாடு அல்ல; நீதியின் அழைப்பு. இது ஒருதலைப்பட்சம் அல்ல; இறைஇரக்கத்தின் மொழி.

மனித மாண்பு மறுக்கப்பட்ட இடத்தில் இறைவனின் அன்பு முதலில் சென்றடையவேண்டும் என்ற நற்செய்தியின் பார்வையை வாழ்வாக்கத் துடிக்கும் தேர்வு. The preferential option for the poor simply acknowledges a painful reality: those who suffer deprivation, exclusion, injustice and marginalisation require greater attention because their human dignity is more vulnerable.

இன்று உலகம் வளர்ச்சியைப் பற்றி பெருமையாகப் பேசுகிறது. தொழில்நுட்பமும் பொருளாதாரமும் அறிவியல் தொலைத்தொடர்பு கண்டுபிடிப்புகளும் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதேநேரத்தில், மனித சமூகத்தின் சரிபாதி அதாவது 50 விழுக்காடு மக்கள் இன்னும் பசியில், தனிமையில், அநீதியில், ஒதுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர்.

இந்த அப்பட்டமான முரண்பாட்டைக் கண்டும் அமைதியாய் இருக்கத் திரு அவை மறுக்கின்றது. ஆகையால், ஏழையரை முன்னிறுத்துதல் என்பது நமது சமூக அக்கறை சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல, நமது நம்பிக்கையின் உயிர்த்துடிப்பும் கூட. “மிகவும் சிறியவர்களில் ஒருவருக்குச் செய்ததை எனக்கே செய்தீர்கள்என்று ஆண்டவர் இயேசு அறிவித்த நற்செய்தியை தினசரி வாழ்வியலில் செயல்படுத்தும் வழியாகும்.

2. திரு அவையின் ஏழையருக்கான சார்பு நிலைக்கு அடித்தளம் என்ன?

ஏழையரை முன்னிறுத்தும் திரு அவையின் நிலைப் பாட்டிற்கு உறுதியான அடித்தளங்கள்:

இறைவார்த்தையின் ஒளி,

வறியவரின் முன்னேற்றத்திற்கான திரு அவையின் வரலாற்று சார்பு நிலை,

கத்தோலிக்கச் சமூகப் போதனை

திரு அவையின் வரலாறும், சமூகப் போதனையும்தான்The Church\'s preferential option for the poor is rooted in God\'s saving love revealed throughout Scripture, especially in the life and mission of Jesus Christ. It is reflected in the witness of the early Christian community, developed by the Church Fathers, and affirmed by Catholic social teaching. More than a social concern, it is a Gospel imperative that places the dignity of the poor at the heart of the Church\'s mission.

திருவிவிலியத்தில் இறைவனின் சிறப்பான பாதுகாப்பிற்கு உரிய மக்களுக்கு என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு: அனாவிம்! (Anawim). யார் இந்த அனாவிம்? கைம்பெண்கள், அனாதைகள், புலம் பெயர்ந்தோர், ஒடுக்கப்பட்டோர், உரிமையற்றோர் ஆகியோரே இறைவனின் அனாவிம். தமக்கு நீதி கிடைக்க வழியில்லாதவர்களின் நீதியாக இறைவன் நிற்கிறார். இந்த இறையன்பின் உச்ச வெளிப்பாடு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. தமது பொதுப்பணியைத் தொடங்கியபோது இயேசு அறிவித்த முதல் அறிவிப்பு இதுவே: ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை அருள்பொழிவு செய்துள்ளார் (லூக் 4:18).

இயேசு அரண்மனையில் பிறக்கவில்லை; எளிமையான தொழுவத்தில் பிறந்தார். அதிகார மையங்களில் வாழவில்லை; சாதாரண மக்களிடையே வாழ்ந்தார். சமூகம் விலக்கி வைத்த தொழு நோயாளியைத் தொட்டார். ‘பாவிஎன்று முத்திரை குத்தப்பட்டவர்களை அரவணைத்தார். பெண்களின் மாண்பைக் காத்தார். ஒதுக்கப்பட்டவர்களோடு உணவருந்தினார். சமூகம் மறுத்தவர்களுக்குள் இறைவனின் பிள்ளைகளைக் கண்டார். எனவே, ஏழையருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது இயேசுவின் பணிவாழ்வு முறையைத் தேர்ந்தெடுப்பதாகும்.

இந்த நற்செய்திப் பார்வையைத் திரு அவை இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தனது சமூகப் போதனைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த நூற்றாண்டில், ‘Rerum Novarum’ முதல் ‘Laudato Si’ வரை, அண்மையில் வெளிவந்த Magnificas Humanitas-லும் கூட மனித மாண்பைப் பாதுகாப்பதும், ஏழையருக்கு நீதியை நிலைநாட்டுவதும் திரு அவையின் மறைப்பணியாகவே வலியுறுத்தப்படுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு நினைவூட்டுகிறார்: ஏழையருக்கான முன்னுரிமை என்பது சமூக, அரசியல் அல்லது பொருளாதாரக் கருத்தியல் சார்ந்த முடிவு அல்ல; அது நமக்கு அனைத்திற்கும் மேலாக ஓர் இறையியல் தேர்வு.” அதாவது, இந்த முன்னுரிமை திரு அவையின் தன்னிச்சையான தேர்வு அல்ல; இறைவன் திரு அவைக்கு வகுத்த மறைப்பணியின் அடித்தளம். இப்போது நாம் மற்றொரு முக்கியமான கேள்வியை எழுப்பவேண்டும்.

3. ஏழையருக்கான திரு அவையின் தேர்வு வெறும் சமூகச் சேவையா?

நிச்சயமாக இல்லை. தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம்; சமூகச் சேவை முக்கியம்தான். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பதும், நோயுற்றவரைப் பராமரிப்பதும், கல்வியற்றவருக்குக் கல்வி வழங்குவதும் கிறித்தவ அன்பின் வெளிப்பாடுகள். இவை அனைத்தும் தமிழ்நாடு திரு அவையின் மறைப்பணியின் அங்கம்தான். இவற்றை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆனால், திரு அவை பேசும் ஏழையரை முன் னிறுத்தும் தேர்வு அதைவிட ஆழமானது. இது உதவி செய்வதற்கான செயல்முறை மட்டுமல்ல; நமது சமூகத்தை ஆராய்ந்து பார்க்க உதவும் புதிய பார்வை. ஏழையரின் கண்களைக் கொண்டு உலகைப் பார்க்கவும், அவர்களின் அனுபவங்களின் வழியே சமூகத்தின் உண்மைகளைப் புரிந்துகொள்ளவும் இது நம்மை அழைக்கிறது.

ஏழையருக்கான திரு அவையின் தேர்வு வறுமையின் விளைவுகளைக் குறைப்பது மட்டும் அல்ல; வறுமையை உருவாக்கும் காரணிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவது. The Option for the Poor is a call to question the systematic poverty that makes the rich richer and the poor poorer.

The Poor are not objects of charity but subjects of their liberation. மேலும் ஏழையர் இரக்கத்தின் பெறுநர்களாக மட்டும் இருக்கக்கூடாது. The poor are not just beneficiaries of our Charity programs. They are active partners of our mission. அவர்கள் திரு அவையின் வாழ்விலும், முடிவெடுப்பிலும், மறைப்பணியிலும் பங்குபெறும் சகோதர-சகோதரிகளாக மதிக்கப்படவேண்டும். ஏழைகள் நமது மறைப்பணியின் இலக்கு அல்ல; அவர்கள் நமது துணைப் பயணிகள் என்பதை Dilexit Te-இல் திருத்தந்தை லியோ தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

ஏழையரின் குரல் நமது பங்குகளில் ஒலிக்க வேண்டும்; அவர்களின் அனுபவம் நமது மேய்ப்புப் பணித் திட்டங்களை வடிவமைக்கவேண்டும்; அவர்களின் நம்பிக்கை நமது நம்பிக்கையை வளப்படுத்தவேண்டும். உண்மையில், ஏழையருக்கு நாம் நற்செய்தியை  எடுத்துச்செல்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால், பல நேரங்களில், நற்செய்தியை வாழ்ந்து காட்டுவது அவர்கள்தான். குறைவான வசதிகளோடு அதிக நம்பிக்கையுடன் வாழும் அவர்களிடமிருந்து, இறைவனை முழுமையாக நம்புவது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். ஆகவே, ஏழையரை முன்னிறுத்துதல் என்பதுஅவர்களுக்காகசெயல்படுவது மட்டுமல்ல; ‘அவர்களோடுஇணைந்து நடப்பதுமாகும்.

4. ஏழையருக்கான முன்னுரிமை நமது மேய்ப்புப்பணியில் எவ்வாறு வெளிப்படவேண்டும்?

அன்பிற்குரியவர்களே, ஏழையரை முன்னிறுத்தும் இந்த அழைப்பு அழகான கருத்தாக மட்டுமே இருந்துவிட்டால், அது நற்செய்தியின் ஆற்றலை இழந்துவிடும். ஏழையருக்கான திரு அவையின் தேர்வு நமது ஆவணங்களில் மட்டுமல்ல, நமது வாழ்விலும் மேய்ப்புப்பணியிலும் ஆளுமையிலும் வெளிப்படவேண்டும். எனவே, இந்தப் பேரவையில் நமது தமிழ்நாடு திரு அவை தன்னைத்தானே சில நேர்மையான கேள்விகளால் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

நமது பங்குகளில் ஏழையர் உண்மையாகவே வரவேற்கப்படுகிறார்களா? அவர்கள் இந்தத் திரு அவைதங்களை முன்னிறுத்தும் தங்களுடைய சொந்தக் குடும்பம்என்று உணர்கிறார்களா?

நமது கல்வி நிறுவனங்கள் சமூகத்தின் விளிம்பு நிலைகளில் வாழும் குழந்தைகளுக்குப் போதிய இடமும் முன்னுரிமையும் இருக்கின்றதா? அல்லது கல்வி என்பது வசதி படைத்தவர்களின் உரிமையாக மட்டும் மாறிவிட்டதா?

நமது பள்ளிகளின் தரத்தை எவ்வாறு தீர்மானிக்கின்றோம்? ‘எத்தனை பேர் நூற்றுக்கு நூறு வாங்கினார்கள்?’ என்ற எண்ணிக்கையை வைத்தா? அல்லதுஎனது பள்ளி எத்தனை ஏழை மாணவரை உருவாக்கி, வளர்ச்சியின் பாதைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது?’ என்ற கேள்வியை வைத்தா?

நமது மருத்துவ மற்றும் சமூகநல நிறுவனங்கள் தேவையில் இருக்கும் ஏழையரை முன்னிறுத்து கிறதா?

நமது மேய்ப்புப்பணித் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை உண்மையில் மாற்றுகின்றனவா? அல்லது பங்கு, மறைவட்ட, மறைமாவட்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரிக்கின்றனவா?

இவை வெறும் நிர்வாகக் கேள்விகள் அல்ல; நமது திரு அவையின் சாட்சிய வாழ்வை மதிப்பீடு செய்யும் ஆன்மிகக் கேள்விகள்.

ஏழையரை முன்னிறுத்தும் திரு அவை என்பது உதவிகளை வழங்கும் திரு அவை மட்டுமல்ல; மனித மாண்பை மீட்டெடுக்கும் திரு அவை.

அது தொழிலாளர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும்.

பெண்களின் மாண்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்.

தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நீதிக்கான போராட்டத்தில் துணையாக நிற்கும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்நியர்களாக அல்லசகோதர-சகோதரிகளாக வர வேற்கும்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள், தனிமையில் வாழ்பவர்கள் ஆகியோருக்கு அவர்கள் திரு அவையின் விளிம்பில் அல்ல, இதயத்தில் இருக்கிறார்கள் என்ற உணர்வை அளிக்கும்.

மனித மாண்பு புறக்கணிக்கப்படும் திருநங்கைகள் சார்பாக நிற்கும்.

வேலைவாய்ப்பிற்காகப் போராடும் இளையோருக்கும், எதிர்காலம் குறித்து அச்சத்தோடு வாழும் குடும்பங்களுக்கும் நம்பிக்கையின் துணையாக இருக்கும்.

இவ்வாறு மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் கிறிஸ்துவின் கரங்களாக மாறுவதே நமது மேய்ப்புப்பணியின் நோக்கமாக இருக்கவேண்டும். எனவே, நமது வெற்றி எத்தனை நிகழ்ச்சிகளை நடத்தினோம் என்பதில் இல்லை; எத்தனை வறியோர் கிறிஸ்துவின் அன்பை நமது வழியாக அனுபவித்தனர் என்பதில்தான் உள்ளது.

5. இன்றைய தமிழ்நாடு திரு அவைக்கு இந்தஏழையருக்கான முன்னுரிமைஅழைப்பின் பொருள் என்ன?

தமிழ்நாடு பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால், இந்த வளர்ச்சியின் மறுபக்கத்தையும் நாம் காண வேண்டியுள்ளது.

  இன்றும் கடன் சுமையால் துன்புறும் விவசாயிகள் இருக்கிறார்கள்.

வேலைவாய்ப்பின்றி எண்ணற்ற இளையோர் இருக்கிறார்கள்.

கடலின் நிலையற்ற தன்மையோடு போராடும் மீனவக் குடும்பங்கள் இருக்கின்றன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உழைக்கிறார்கள்.

தலித் மற்றும் பழங்குடியின மக்கள் இன்னும் சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலை தொடர்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறையும் பாகுபாடும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

முதியோர் பலர் தனிமையில் வாழ்கிறார்கள்.

போதைப்பழக்கம் ஏராளமான இளையோரின் எதிர்காலத்தைப் பறித்துக்கொண்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் சீரழிவு, காலநிலை மாற்றம், இயற்கை வளங்களின் அழிவு ஆகியவை ஏழை மக்களின் வாழ்வை மேலும் பாதிக்கின்றன.

இந்தச் சூழலில், நமது திரு அவை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்நாட்டின் திரு அவை கல்வி, மருத்துவம், சமூகநலம் ஆகிய துறைகளில் நூற்றாண்டுகளாக மகத்தான சேவையாற்றியுள்ளது. எண்ணற்ற மறைப்பணியாளர்கள், ஆயர்கள், அருள்தந்தையர், துறவியர், பொதுநிலையினர் தங்கள் வாழ்வையே இந்தப் பணிக்காக அர்ப்பணித்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பிற்கு நாம் நன்றியுடன் தலைவணங்குகிறோம். ஆனால், இன்று இறைவன் நம்மை இன்னும் ஆழமான மாற்றத்திற்கு அழைக்கிறார்.

ஏழையருக்காகச் சில திட்டங்களைச் செய்வதற்கு மட்டுமல்ல; ஏழையரோடு சேர்ந்து நடப்பதற்கு.

அவர்களைப் பற்றிப் பேசுவதற்கு மட்டுமல்ல; அவர்களின் குரலைக் கேட்பதற்கு.

அவர்களுக்காக முடிவெடுப்பதற்கு மட்டுமல்ல; அவர்களையும் முடிவெடுக்கும் பயணத்தில் பங்காளிகளாக மாற்றுவதற்கு.

இதுவே நமது ஒன்றிணைந்து பயணிக்கும் திரு அவை என்ற கனவின் மையக்கருத்தாகும். எனவே, நமது மறைமாவட்டங்கள், பங்குகள், அன்பியங்கள், கல்வி நிறுவனங்கள், சமூகப்பணிக் கழகங்கள், இயக்கங்கள், பக்த சபைகள் அனைத்தும் ஒரே மனத்துடன் இந்தப் புதுப்பிப்புப் பயணத்தில் இணையவேண்டும்.

முடிவுரை

நமது சிந்தனையை ஒரு முக்கியமான உண்மை யோடு நிறைவு செய்ய விரும்புகிறேன். ஏழையரை முன்னிறுத்தும் தேர்வு என்பது, இறுதியில் கிறிஸ்து வையே முன்னிறுத்தும் தேர்வாகும். புனித பவுல் கூறுகிறார்: “நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளை நீங்கள் அறிவீர்கள். அவர் செல்வராக இருந்தும், உங்களுக்காக ஏழையானார்; அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வந்தராவதற்காக (2கொரி 8:9).

நாம் ஏழையரின் கண்ணீரைத் துடைக்கும் ஒவ்வொரு முறையும், கிறிஸ்துவின் முகத்தைத் தொடுகிறோம். ஒடுக்கப்பட்டோரின் மாண்பை மீட்டெடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், இறையாட்சியின் மதிப்புகளை உலகிற்கு அறிவிக்கிறோம். நம்பிக்கை இழந்தோருக்கு எதிர்நோக்கை அளிக்கும் ஒவ்வொரு செயலிலும், உயிர்த்தெழுந்த ஆண்டவரின் ஒளியைப் பிரதிபலிக்கிறோம். எனவே, இந்த மேய்ப்புப்பணிப் பேரவை வெறும் கலந்துரையாடலுக்கான அரங்கமாக மட்டும் இருக்கக்கூடாது. இது நமது திரு அவையின் மனமாற்றத்திற்கான ஒரு திருப்புமுனையாக அமையவேண்டும் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.