இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் செய்தித் தொடர்புப் பிரிவு (CBCI-OSC) மற்றும் ‘நிஸ்கார்ட்’ கல்வி நிறுவனம் இணைந்து, திருத்தந்தை 14-ஆம் லியோவின் ‘மகத்தான மானுடம்’ திருமுகத்தின் வழிகாட்டுதலில், ‘செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனித கண்ணியம்’ குறித்த உலகளாவிய கருத்தரங்கை நடத்தின. இதில் திரு அவைத் தலைவர்கள், இறையியலாளர்கள், ஊடக வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டு, அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பச் சூழலில் மனித விழுமியங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். கருத்தரங்கில் வத்திக்கான் செய்தித்துறை இயக்குநர் டாக்டர் நடாஷா கோவேக்கர் முதன்மை உரையாற்றினார். அப்போது “எவ்வளவு அதிநவீன கணினி அமைப்பாக இருந்தாலும், மனித இதயத்தை உருவாக்க முடியாது” என்று குறிப்பிட்ட அவர், “தொழில்நுட்ப வளர்ச்சி எப்போதும் மனிதரை மையமாகக் கொண்டதாகவே இருக்கவேண்டும்” என வலியுறுத்தினார்.