news-details
சிறப்புக்கட்டுரை
மகத்தான மானுடம்: சில முன்னோட்டத் தகவல்கள்

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின்மகத்தான மானுடம்என்ற முதல் சமூகச் சுற்றுமடலை அறிந்து கொள்வதற்கு ஏதுவான சில செய்திகள், கருத்துகள், புரிதல்கள் இங்கே இடம் பெறுகின்றன.

Magnifica Humanitasஎன்பது இம்மடலின் தலைப்பு. இத்தலைப்பைத் தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது? ‘மாண்புமிகு மனிதம்என்றா? ‘மிக மதிப்புக்குரிய மனிதம்என்றா? ‘மாட்சிமிகு மனிதம்என்றா? ‘மகத்தான மானுடம்என்று மொழிபெயர்ப்பது பொருத்தமாக இருக்கலாம்.

பொதுவாக, திருத்தந்தையரின் சுற்றுமடல்கள் தலைப்பை வைத்தே தொடங்கும். உதாரணத்திற்குத் திருத்தந்தை 13 -ஆம் லியோ அவர்களின் சுற்றுமடல் Rerum Novarum (புதிய உலகு - ஆலைத் தொழிலாளர் பிரச்சினை குறித்து) எனத் தொடங்குகிறது. ஆனால், இம்மடல் Magnifica Humanitas என்று தொடங்கவில்லை. இதன் உபதலைப்புசெயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் மானிடரைப் பாதுகாத்தல் என அமைந்திருக்கிறது. ‘மகத்தான மானுடம்என்ற தலைப்பில் உள்ள மானுடம் அருவமான ஒரு கருத்து; நம் பார்வைக்கு அப்பாற்பட்டது. மானிடரைப் பாதுகாத்தல் என்ற உபதலைப்பில்மானிடர்என்பது பொருண்மையானது; நம் பார்வைக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டது.

செயற்கை நுண்ணறிவுஎன்பது என்ன? என்ற விளக்கம் இம்மடலில் இல்லை. மனிதர்களுக்கு இது பற்றிய புரிதல் உண்டு எனத் திருத்தந்தை எண்ணியிருக்கலாம். காதுகள், வாய் இவைகளின் நீட்சி அலைப்பேசி அல்லது கைப்பேசி எனலாம். இதுபோல மனித மூளையின் நீட்சி செயற்கை நுண்ணறிவு எனக் கொள்ளலாம்.

செயற்கை நுண்ணறிவு எப்படிச் செயல்படுகிறது? எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது? என்பதைக் காட்டிலும், இதன் நேர்மறைப் பயன்பாடு என்ன? அபாயங்கள் என்ன? என்கிறது இம்மடல்.

மனிதர் பற்றிய பல புரிதல்கள் உள்ளன. மனிதர் விலங்கினத்தைச் சார்ந்தவர் என விலங்கியலும் உயிரியலும் கூறுகின்றன. விலங்குகளிலிருந்து மனிதரை வேறுபடுத்துவது அவரது சிந்திக்கும் ஆற்றல். எனவே, அரிஸ்டாட்டில்மனிதர் சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்த விலங்குஎன்றார். நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் பிரான்ஸ் நாட்டு ரெனேடெகார்ட்சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்என்றார்.

சமூகவியல், சமூக உளவியல் ஆய்வாளர்கள்மனிதர்கள் உறவு சார்ந்தவர்கள், உறவுகளால் உறவுகளுக்காக வாழ்வதே மனித வாழ்வுஎன்கின்றனர்.

மனிதர் அடிப்படையில் உழைக்கும் உயிரினம். இயற்கையை மாற்றி, உழைப்பின் மூலம் தன்னையும் சமூகத்தையும் உருவாக்குபவர் மனிதர்என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

மனிதரை மனிதராக அடையாளப்படுத்துவது பண்பாடு (culture); எனவே, மனிதர் பண்பாட்டு விலங்குஎன்கிறது மானுடவியல்.

கடவுளால் படைக்கப்பட்ட அனைத்திலும் மகத்தானது மானுடம்; ஏனெனில், ‘கடவுளுடைய சாயலாகப் படைக்கப்பட்டவர் மனிதர் (தொநூ 1: 26-27) என்கிறது இச்சுற்றுமடல்.

முன்னுரை

மனிதத்தின் உண்மையான தான்மை சிதைக்கப்படும்போது கிறித்தவர்களாகிய நாம் மனுவுருவான இறைவனை நோக்கி கண்களை உயர்த்துகிறோம். ஏனெனில் வார்த்தை மனுவுருவான மறைபொருளில்தான், மானுடம் என்ற மறைபொருள் தெளிவாகிறது. ஒவ்வொரு தலைமுறையும் மனிதருடைய மாண்பைப் பாதுகாக்கவும், நீதியை வளர்த்தெடுக்கவும், சகோதரத்துவத்தைச் செயல்படுத்தவும் கடமைப்பட்டிருக்கிறது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் திறந்த மனத்தோடு கூடிய உரையாடலை மானிட வாழ்வின் இன்றியமையாத கூறாகக் கருதுகிறது. அனைத்துச் சகோதர, சகோதரிகளோடு திறந்த மனத்தோடு உரையாடி உண்மையான மானுடத்தைக் கண்டறிய திரு அவை அழைப்பு விடுகிறது என்கிறது இம்மடல்.

திரு அவை உலகக் காரியங்களில் தலையிட்டு நேரத்தை விரயமாக்க வேண்டாமெனச் சிலர் கூறுகின்றனர். இதற்குத் திருத்தந்தை 13-ஆம் லியோ, ‘நற்செய்தி அறிவிப்பு என்பது மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் புறந்தள்ள முடியாதுஎன்று பதிலுரைத்தார். இப்பாரம்பரியத்தைத் தொடர்ந்து நானும் தொடக்கம் முதல் இவ்வுலகில் செயல்பட்டு வரும் ஆவியாரின் துணை வேண்டி (நீமொ 8:22-31). இன்றைய எண்ணியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உலகில் இச்சுற்றுமடலை எழுதுகிறேன் என்கிறார் திருத்தந்தை லியோ.

மானிடராகிய நாம் எத்தகைய இலக்கை நோக்கி நகர விழைகிறோம்?’ என்ற கேள்வியை எழுப்பி, திருவிவிலியத்திலிருந்து இரண்டு காட்சிகளை நம்முன் வைக்கிறது இம்மடல். ஒன்று, பாபேல் கோபுர உருவாக்கம் (தொநூ 11:1-9); மற்றொன்று, நெகேமியா எருசலேம் சுவர்களைத் திரும்பக் கட்டுவது (நெகே 2- 6).

பாபேல் கோபுரம் கடவுள் இல்லாத உலகைக் கட்டமைக்கிறது. பன்மையை ஒதுக்கி, ஒற்றை மையத்தை உருவாக்குகிறது. மனித முகத்தை அழித்து, தோழமை உறவைக் கெடுக்கிறது. தன் மையப்போக்கில் தானும் தன் கணினியும் போதும் என்று மானிட உறவுகளைத் தவிர்க்கிறது. மாறாக, பாபிலோன் நாடு கடத்தலிலிருந்து திரும்பி வந்த நெகேமியா நோன்பிலிருந்து இறைவேண்டல் செய்து, மக்களுக்காகப் பரிந்து பேசுகிறார். அழிக்கப்பட்ட சுவர் பகுதிகளை அமைதியில் ஆய்வு செய்கிறார். அனைவரோடும் இணைந்து சிதிலமடைந்த சுவர்களைத் திரும்பக் கட்டி எழுப்புகிறார். இங்கு மனிதர்களின் பன்மைத் தன்மையும் கூட்டு முயற்சியும் சகோரத்துவமும் வெளிப்படுகின்றன.

பாபேல் கோபுரம், எருசலேம் சுவர்கள் இரு காட்சிகளின் ஒளியில் தூய ஆவியார் இன்றைய நவீன தொழில் நுட்பத்தோடும் தொடரும் எண்ணியல் புரட்சியோடும் நமக்குள்ள உறவை எண்ணிப் பார்க்க அழைக்கிறார். மானிடப் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பம் தீர்வு அல்ல. மானிடர் நவீன தொழில்நுட்பத்தைவிட உயர்ந்தவர்கள். மேலும், தொழில்நுட்பம் நடுநிலையான ஒன்று அல்ல; அதை உருவாக்குவோர், அதற்கு நிதி முதலீடு செய்வோர், அதைப் பயன்படுத்துவோர் ஆகியோரின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அது பிரதிபலிக்கிறது. எனவே அதற்கு அறநெறி வழிகாட்டுதலும் பொதுப்பொறுப்பும் தேவைப்படுகிறது.

பாபேல் கோபுர நோய், இலாபத்தையே சிலை வழிபாடாகக் கொண்டது. இதற்காக ஏழைகளைப் பலியாக்குகிறது, பன்மையை மறைக்கிறது. எண்ணியல் மொழியையே பேசுகிறது. மானுடத்தின் மறைபொருளைத் தரவுகளாக மொழிபெயர்க்கிறது. இவ்வாறு மகத்தான மானுடத்தைச் சிதைக்கிறது. கடவுளற்றத் தொழில்நுட்ப எதிர்காலத்தைக் கட்டமைக்கிறது.

நெகேமியாவின் வழியோ, கூட்டுத் தோழமையில் கடவுளின் நகரைக் கட்டி எழுப்ப அழைக்கிறது. இக்கூட்டு முயற்சி ஒருவருக்கொருவர் செவிமடுத்து, உரையாடி, பொதுநன்மையின் மேல் நீதிப் பண்பாட்டையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதைச் சாத்தியப்படுத்துகிறது. அப்போது திருவெளிப்பாடு சொல்வதுபோல, ‘புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வரும் (திவெ 21:2) என்பதைக் காண முடியும்.

பொதுநன்மையைக் கட்டி எழுப்பும் 4 தூண்கள்

1. கடவுளோடு கொண்டுள்ள மிக உறுதியான அடித்தளம் அமைத்தல். செயற்கை நுண்ணறிவு, கடவுள் தேவையில்லை என்கிறது.

2. மனித வரையறைகளையும் பலவீனங்களையும் ஏற்றுக்கொள்வது. செயற்கை நுண்ணறிவு, மனித வரையறைகளையும் பலவீனங்களையும் திருத்தப்படவேண்டிய தவறு என்று கருதி, இவைகளைக் கடந்துவிட அழைக்கிறது.

3. ஒவ்வொருவரும் வளமாக வாழக் கூட்டுப் பொறுப்புணர்வும் துணிச்சலும் தேவை. செயற்கை நுண்ணறிவு, நானும் என் கணினியும் போதும் என்கிறது.

4. அனைவரையும் ஒருங்கிணைக்கும் நற்செய்தி மொழியைப் பேசுதல். செயற்கை நுண்ணறிவு, மூளை மொழியைப் பயன்படுத்துகிறது. கைகளையும் உடலையும் பயன்படுத்தி உழைப்பவர் மொழிக்கும் மூளையைப் பயன்படுத்துபவர் மொழிக்கும் இடையே ஒருங்கிணைக்கும் பொதுமொழி சாத்தியமில்லை என்றாகிறது.

புறக்கணிப்பட்ட கற்களான ஏழைகள், நோயாளிகள், புலம்பெயர்ந்தோர், சமுதாயத்தின் கடை நிலையினர் சமுதாயத்தின் மூலைக்கல்லாகும் போது, ‘பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் நிலைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும் (திபா 85:10) உலகு உருவாகும்.