வாழ்க்கை என்பது வெறுமனே நுகர்வது மட்டுமல்ல; பிறரோடு இணைந்து பகிர்வதுதான் அதன் உன்னதத் தத்துவம். மகாத்மா காந்தியடிகள், “இவ்வுலகம் மனிதரின் தேவைக்கான அனைத்தையும் கொண்டுள்ளது; ஆனால், அவரது பேராசைக்கு அல்ல” என்று குறிப்பிட்ட கூற்று, இன்றைய ஞாயிறு வழிபாட்டின் மிக முக்கிய மையமாகத் திகழ்கிறது. நாம் வாழும் இந்த உலகம் எல்லாருக்குமானது. பசியும் தாகமும் மனித வாழ்வின் எதார்த்தங்கள் என்றால், அந்தப் பசியைப் போக்குவதும் தாகத்தைத் தணிப்பதுமே ஆன்மிகத்தின் மிக முக்கியக் கடமையாகும். இறைவனின் அன்பு என்பது வெறும் வார்த்தைகளில் வெளிப்படுவது அல்ல; அது பசித்த வயிறுகளுக்கு உணவாகவும், தாகமுற்ற நெஞ்சங்களுக்கு நீராகவும் மாறும்போதே முழுமை பெறுகிறது.
ஆண்டின்
பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். மனிதரின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, அதைத் தம் எல்லையற்ற இரக்கத்தால் நிறைவு செய்யும் கடவுளை இன்றைய வழிபாடு நமக்கு மையப்படுத்திக் காட்டுகிறது. இன்றைய இறைவார்த்தைகள் நம்மிடம் உள்ளவற்றைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் உன்னத மனநிலையே உண்மையான ஆன்மிகம் என்பதையும், அத்தகைய பகிர்வில் இறைவனின் மாறாத பராமரிப்பும் பேரன்பும் எங்ஙனம் வெளிப்படுகிறது என்பதையும் மிக அழகாக விளக்குகிறது.
வறுமையும்
பசியும் மனிதரை வாட்டும்போது, கடவுள் தூரமாய் நின்று வேடிக்கை பார்ப்பவர் அல்லர்; மாறாக, அவர் மனிதரின் துன்பங்களில் பங்குகொண்டு, அவர்களின் பசியைப் போக்கும் பரிவுள்ள தந்தை. பசியற்ற ஓர் உலகைப் படைக்க இறைவன் நம்மைத் தூண்டும் இந்த நாளில், அவரது மாறாத கொடையையும், நம்மிடம் அவர் எதிர்பார்க்கும் தாராள மனத்தையும் தியானிக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய
முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா வழியாக ஆண்டவர் தாகமாய் இருப்போரையும், கையில் பணமில்லாத ஏழையரையும் ஒரு மாபெரும் விருந்திற்கு அன்போடு அழைக்கிறார். திருவிவிலியப் பின்னணியில் ‘விருந்து’
என்பது வெறுமனே உண்பதைக் குறிப்பதல்ல; மாறாக, அது இறைவனின் எல்லையற்ற பராமரிப்பையும் இரக்கத்தையும், மனிதகுலத்தோடு அவர் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கையையும் குறிக்கும் குறியீடாகும். இந்த விருந்தில் பங்குகொள்ளப் பணமோ, தகுதியோ தேவையில்லை; மாறாக, கடவுள்மேல் கொண்டிருக்கக்கூடிய தாகமும், ஆன்மிக வறுமையுமே தகுதியாகக் கருதப்படுகிறது. “எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்”
என அழைக்கும் கடவுள், அழியக்கூடிய உலகப் பொருள்களுக்காக உழைப்பதைக் காட்டிலும், நிலை வாழ்வு தரும் இறைவார்த்தைக்காகத் தாகம்கொள்ள நம்மை அழைக்கிறார்.
இத்தகைய
இறைவனின் பேரன்பை எவராலும் நம்மிடமிருந்து பிரித்துவிட முடியாது என்பதை இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் வழியாக மிக ஆணித்தரமாகப் பறைசாற்றுகிறார். நாம் இவ்வுலகில் வாழும்போது ஏழ்மை, நோய், சமூக ஏற்றத்தாழ்வுகள், வன்முறைகள் போன்ற பலவித சோதனைகளையும் வேதனைகளையும் சந்திக்க நேரிடலாம். இவற்றிற்குப் பின்னால் நம்மை வீழ்த்த நினைக்கும் தீயசக்திகள் இயங்கினாலும், இயேசுவின் சிலுவைத் துன்பங்கள் வழியாக வெளிப்பட்ட கடவுளின் அன்பு நமக்குள்ளே இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. சாவே நம்மைச் சரிய வைத்தாலும், கிறிஸ்து இயேசுவின் வழியாக நாம் வெற்றி வாகை சூடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை பவுல் நமக்குத் தருகிறார். எனவே, துன்பங்களைக் கண்டு ஓடுவதல்ல ஆன்மிகம்; கிறிஸ்துவின் அன்பை உள்ளத்தில் தேக்கி வைத்து, எந்த ஒரு சவாலையும் வென்றெடுப்பதே உண்மையான நம்பிக்கை என்பதை பவுலின் வரிகள் உணர்த்துகின்றன.
இந்த
நம்பிக்கையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவும், இறைவனின் பராமரிப்பின் அடையாளமாகவும் நற்செய்தியில் இயேசு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளிக்கும் வல்ல செயல் விவரிக்கப்படுகிறது. இயேசுவின் பணி வாழ்வில் செய்த ஏராளமான வல்ல செயல்களில், நான்கு நற்செய்தி நூல்களிலும் ஒருமித்த கருத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு வல்ல செயல் இதுமட்டுமே என்பது இதன் ஆழமான முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. ஆண்களின் எண்ணிக்கை ஐயாயிரம், ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள், மீதமிருந்த பன்னிரண்டு கூடைகள் என எவ்வித மாற்றமுமின்றிச்
சீடரின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்த இந்த நிகழ்வு, யோவான் நற்செய்தியில் ஒரு புதிய பார்வையைத் தருகிறது.
பாஸ்கா
விழா அண்மையில் நிகழவிருந்த சூழலில், இயேசு மலைமேல் ஏறி அமர்ந்து இந்த வல்ல செயலைச் செய்தது, பழைய ஏற்பாட்டில் விடுதலைப் பயண நிகழ்வில் அங்குப் பசியாயிருந்து பயணம் செய்த இஸ்ரயேல் மக்களுக்கு யாவே இறைவன் வானத்திலிருந்து மன்னாவைப் பொழியச் செய்த விருந்தை நமக்கு நினைவுப்படுத்துகிறது. இங்கு இயேசு தம்மைப் பின்தொடர்ந்து வந்த மக்களுக்கு, ஒரு புதிய மோசேயாக, உடலுணவு மட்டுமல்லாமல், இறைவார்த்தையாகிய உணவையும், ஆன்மாவை ஊட்டும் தெய்வீக உணவையும் வழங்கும் இறைமகனாகத் தம்மை வெளிப்படுத்துகிறார்.
அப்பத்தைப்
பலுகச் செய்தாரா அல்லது பகிரச் செய்தாரா? என்ற தற்காலத் திருவிவிலிய ஆய்வாளரின் கேள்வி, நம் சிந்தனையை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது. ஒன்றுமில்லாமையிலிருந்து உலகைப் படைத்த இறைமகனுக்கு அப்பங்களைப் பலுகச் செய்வது ஒன்றும் கடினமான காரியமல்ல; எனினும், தம் போதனையால் மக்களின் சுயநல மனங்களை மாற்றி, அவர்கள் தமக்கெனப் பதுக்கி வைத்திருந்த உணவுகளைப் பிறரோடு பகிரச் செய்ததே இயேசு செய்த மாபெரும் வல்ல செயலாகும். அந்திரேயா சுட்டிக்காட்டிய ஒரு சிறுவனின் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே இந்த மாபெரும் விருந்திற்குத் தொடக்கப் புள்ளியாக அமைகிறது. தன்னிடம் உள்ளதை மறைக்காமல், கள்ளமில்லா மனத்தோடு அந்தச் சிறுவன் கொடுத்த சிறிய கொடையே, பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியைப் போக்கி, பன்னிரண்டு கூடைகள் மீதமாகும் அளவிற்குப் பெருகியது. இயேசு கடவுளைப் போற்றி, உணவைப் பிட்டுப் பகிர்ந்தளித்தபோது, அங்கே மனிதநேயமும், இறைவனின் எல்லையற்ற அருளும் இணைந்து வரலாற்று வல்ல செயலாக மாறியது.
இன்றைய
எதார்த்த சூழலில் உலகை நாம் உற்றுநோக்கும்போது, பசியும் பட்டினியும் இன்னும் ஒழிந்தபாடில்லை என்பது வேதனையான உண்மை. உலகில் பற்றாக்குறை இருப்பதற்குக் காரணம், இறைவனின் படைப்பில் குறைபாடு இருப்பதல்ல; மாறாக, மனிதரின் பகிர்ந்துகொள்ளும் குணத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடே ஆகும். உணவைப் பணமாக மாற்றும் பேராசையும், பதுக்கல் கலாச்சாரமும் பெருகிவிட்ட இந்தச் சமூகத்தில், ஒருபுறம் உணவு வீணாக்கப்படுவதும், மறுபுறம் வறியவர் உணவின்றித் தவிப்பதும் தொடர்கதையாக இருக்கிறது. இயேசுவின் இந்த வல்ல செயல், பதுக்கி வைக்கும் சுயநலப்போக்கை விடுத்து, மனிதநேயமும் பகிர்வும் கொண்ட சமூகமாக நாம் மாறவேண்டும் என்ற சவாலை இன்றைய உலகிற்கு முன்வைக்கிறது.
இயேசுவின்
இந்த உன்னத செயல் வழியாக நம் வாழ்வை மெருகூட்டக்கூடிய மூன்று முக்கியமான பாடங்கள்:
முதலாவதாக,
உணவுப் பற்றாக்குறைக்குக் காரணம் பகிராக்குறையே என்பதை உணர்ந்து, நம்மிடம் உள்ளவற்றைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் தாராள உள்ளத்தைப் பெறவேண்டும். அன்னை தெரேசா அவர்கள், “உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும், ஒரே ஒருவருக்கு மட்டுமாவது உணவளி” என்று கூறிய உன்னத வரிகளை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைவான பொருள்களையும் மனிதநேயத்தையும் கொண்டு பிறருக்கு உதவ முன்வரவேண்டுமே தவிர, பொருளாதார இயலாமையை ஒரு சாக்காகக் கூறக் கூடாது.
இரண்டாவதாக,
இறையாட்சியின் விழுமியமான பசிப்பிணிப் போக்கும் பணியில் நாம் பொறுப்பேற்க வேண்டும். இயேசுவின் பரிவன்பைக்கொண்டு, ஏழையரைக் கடவுள் காப்பார் என்று கடந்துபோகாமல், நாமே இறைவனின் கரங்களாக மாறி உதவ வேண்டும். ஒருவர் பசியுற்றிருக்கக் கண்டும் காணாமல் இருப்பது நமது பொறுப்பற்ற நிலையாகும். பசியும் பட்டினியுமற்ற உலகை உருவாக்க, பிறரின் தேவையை உணர்ந்து உதவ முன்வருவதே இறைவன் விரும்பும் உண்மையான ஆன்மிகம்.
மூன்றாவதாக,
உணவை வீணாக்காமல் பாதுகாக்கும் பொறுப்புணர்வை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வல்ல செயலின் இறுதியில் “ஒன்றும் வீணாகாதபடி எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்”
என்று இயேசு கூறியது, இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மிக முக்கியமான பாடம். திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதுபோல, உணவை வீணாக்குவது என்பது வறியோரின் தட்டிலிருந்து உணவைத் திருடுவதற்குச் சமமான பெரும் குற்றமாகும். எனவே, நிறைவான வாழ்வு என்பது பதுக்குவதில் இல்லை; மாறாக, பாதுகாப்பதிலும் பகிர்வதிலும்தான் உள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது.
நிறைவாக,
இயேசு காட்டிய இந்த உன்னதப் பகிர்வுப் பாதை நம்முடைய வாழ்க்கைப் பாதையாக மாறவேண்டும். பரிவுள்ள மனம் இருந்தால், பற்றாக்குறையை நீக்குவது மட்டுமல்லாமல், அளவு கடந்த நிறைவையும் உருவாக்க இயலும் என்பதைத்தான், மீதமுள்ள உணவால் நிரப்பப்பட்ட பன்னிரண்டு கூடைகள் நமக்கு உணர்த்துகின்றன. சுயநலம், சுரண்டல், பதுக்கல் போன்ற தீய பண்புகள் ஒழிக்கப்படுமேயானால், எல்லாருடைய தேவையும் போகத் தாராளமாக உணவு மிஞ்சும். எனவே, நாம் நம் சுயநலக்கூடுகளை உடைத்து, பரிவோடு பகிர்ந்து வாழ்வோம். இல்லாமை என்பது இந்நானிலத்தில் இல்லாமையாகட்டும்.