news-details
சிறப்புக்கட்டுரை
விறகுகளாய் எரிக்கப்படும் வீணைகள் (ஜூலை 26: உலக தாத்தா-பாட்டியர் தினம்)

பயன்படுத்திவிட்டு வீசி எறிந்திடுஎனும் கோட்பாடு இன்று ஏறக்குறைய உலகத்தின் வாழ்வியல் நடைமுறை என்றாகிவிட்டது. ஒரு பொருளோ, மனிதரோ பயன்படுகிற வரைதான் முக்கியம் என்பதை ஏற்கவேண்டிய கட்டாயத்திற்குக் காலம் நம்மைக் கொண்டு வந்துவிட்டது. எப்போது ஒரு பொருளோ, மனிதரோ நமக்கு இனி பயனில்லை என உணரும்போது தூக்கி எறிந்துவிட எவ்விதத் தயக்கமும் மனிதருக்கு ஏற்படுவதில்லை.

நவீன உலகின் தொழில்நுட்பமும், சமூக ஊடகங்களும் வாழ்க்கை முறைகளும் உறவு, மதிப்பீடு, அறம், ஒழுக்கம், நன்றியுணர்வு, வாழ்வியல் மாண்பு, மனிதநேயம், இயற்கை நேசம் என நீள்கிற மானுடக்கூறுகளை அழித்து, ஒழித்து வருகின்றன. அதன் விளைவாக, மனிதரை அதுவும் குறிப்பாக, வயது மூப்பின் காரணமாக உடல் நலிவுற்ற மூத்த குடிமக்களை முற்றிலும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தன்னைப் பெற்றவர்கள், தனக்கு உயர்நிலையைத் தந்தவர்கள், வசதியான வாழ்வுக்கு வழிவகை செய்தவர்கள், தம் தியாகத்தால் நம்மை ஆளாக்கி வளர்த்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் முதுமையை அடையும்போது அவர்களை மூலையிலே முடக்கிப்போடுவது வேதனை நிறைந்த உண்மைகளாய் வீட்டுக்கு வீடு தலை நீட்டுகிறது.

குடும்பம் மனித வாழ்வின் நாற்றங்கால்; அடிப்படை விழுமியங்கள் கட்டமைக்கப்படும் அன்புப் பாசறையே குடும்பம்! சமூகத்தின் முதல் அணுக்கலம் என்றும் மனுக்குலத்தின் மூல மற்றும் அடிப்படைப் பள்ளி என்றும் குடும்பத்தை வரையறுக்கிறார் திருத்தந்தை லியோ. குடும்பத்தைவீட்டுத் திரு அவைஎனக் குறிப்பிடும் திருத்தந்தை லியோ, வீட்டில் மேசையில் உணவு பகிரப்படுவதுபோல நம்பிக்கை தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றப்படுகிறது எனப் பாரம்பரியக் கத்தோலிக்கக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதோடு, குடும்பத்தில் தாய்-தந்தையர் ஓரங்கட்டப்படுவதை எடுத்துரைத்து, பெற்றோர் எனும் புனித நிலைக்குக் கண்ணியத்தை மீட்டெடுக்கும் சமூகக் கொள்கைக்கு அழைப்பு விடுக்கிறார்.

திருத்தந்தை லியோ மூத்த குடிமக்கள் மற்றும் முதுமையின் மதிப்பு குறித்த ஆவணங்களையும் ஆண்டு உரைகளையும் வழங்கியுள்ளார். மூத்த குடிமக்களைவாழ்க்கை ஆசிரியர்கள்எனக் குறிப்பிட்டு, அவர்கள் திரு அவையின் சிறப்பு ஆசிர் என வர்ணிக்கிறார். தாத்தா, பாட்டி மற்றும் மூத்த குடிமக்கள் உலக தினத்தில் கண்ணியம், சமூகம் மற்றும் தனிமையை எதிர்த்துப் போராடுதல் ஆகிய கருப்பொருள்களில் கவனம் செலுத்தி, வருடக் கொண்டாட்டங்களில் மூத்த குடிமக்களைப் போற்றி செய்திகள் வெளியிட்டு வருகிறார். திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியஅமோரிஸ் லேத்தியாஎனும்அன்பின் மகிழ்ச்சிதிருமடல் வழியாகக் குடும்ப வாழ்க்கை குறித்த விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறார். இறுக்கமான விதிகளை விடுத்து, இரக்கமும் கருணையும் கொண்ட குடும்பங்களைக் கட்டிக்காப்பதே திரு அவையின் முக்கியப் பணி என வலியுறுத்துகிறார்.

திரு அவையின் முதன்மைக் கரிசனையாக மூத்த குடிமக்களைப் போற்றி வந்தாலும், குடும்ப வாழ்வின் நலிவு அத்தனை வாழ்வியல் அறங்களையும் பின்னடைய வைக்கிறது. கூட்டுக் குடும்பங்களின் வீழ்ச்சி ஒட்டுமொத்த மானுட உறவுகளுக்கே உலை வைத்துவிட்டது. திருமணம் எனும் உயரிய அருளடையாளத்தால் இணைக்கப்பட்டு, புனித உடன்படிக்கையாக அமையவேண்டிய இல்லற வாழ்வு, இன்று பல சவால்களைச் சந்திக்கிறது. திருமண உறவை மீறிய சேர்ந்து வாழ்தல் கலாச்சாரம், மாற்று இணையரோடு வாழ்தல், ஒரே பாலினச் சேர்க்கை, திருமணப் பந்தத்தை முறித்தல் போன்ற இல்லறத்திற்கு உலை வைக்கும் காரணிகள் குடும்ப வாழ்வைச் சிதைப்பதோடு, மூத்தோரையும் பெற்றோரையும் மாண்புடன் பேணுதல்வேண்டும் என்கிற மானுட அறத்தைக் குழிதோண்டிப் புதைத்து விடுகிறது.

கூட்டுக் குடும்ப வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்த அன்றே, மூத்த குடிமக்களைப் பேண வேண்டும் என்னும் அன்புக் கடமை முடிவுக்கு வந்துவிட்டது. முன்காலத்தில் தாத்தா-பாட்டி, அம்மா-அப்பா, பிள்ளைகள்-பேரப்பிள்ளைகள் என மேன்மைமிக்க உறவு முறைகள் குடும்பத்தை அலங்கரித்தன. கணவன்-மனைவியிடையே குடும்பத்தில் விரிசல்கள் தொடங்கும்போதே குடும்பத்திலிருக்கும் மூத்தவர்கள் தலையிட்டு அதனைக் கச்சிதமாகத் தீர்த்து வைப்பதுண்டு. வக்கீல்கள், வழக்கு, நீதிமன்றம், விவாகரத்து எனும் தளங்களுக்குக் குடும்ப வாழ்க்கை சென்றதில்லை. குடும்பத்தில் மூத்தவர்களின் அறிவுரைகளும் கண்டிப்பும் உறவுகளை வலுப்படுத்தின. பிள்ளைகளைப் பராமரிக்க வாடகை மனிதர்களை அமர்த்தியோ, மழலைப் பள்ளிகளில் குழந்தைகளைச் சிறைவைக்க வேண்டிய அவசியமோ ஏற்படவில்லை. தாத்தா-பாட்டியரின் பாசமிகு பராமரிப்பில் வளர்ந்த குழந்தைகள் ஆரோக்கியமான குடும்பத்தைக் கட்டிக் காத்து வந்தார்கள். தாத்தா-பாட்டி கதைகள், வைத்தியங்கள், பராமரிப்புகள் இன்று காணாமல் போய்விட்டன.

தாத்தா-பாட்டியரின் இடங்களை இன்று தொலைக்காட்சிப் பெட்டியும் கைப்பேசியும் பிடித்துக்கொண்டன. பாட்டி வைத்தியம் இருந்த இடத்தை மாத்திரை, மருந்துப் பெட்டிகள் ஆக்கிரமித்துக்கொண்டன. உறவுகள் உடைந்து விடாமல் சேர்த்துவைக்க இவர்கள் இல்லாததால் தம்பதியரைப் பிரித்து வைக்க வக்கீல்களும் நீதிமன்றங்களும் வந்துவிட்டன.

வீடுகளில் எஞ்சியிருக்கிற மூத்தவர்கள் பேணப்படும் நிலை மிகவும் கவலைக்குரியது. ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களாவது மாதத்தின் தொடக்கத்தில் பணத்திற்காகச் சிறிதளவு பராமரிக்கப்படுகிறார்கள். எந்த வருமானமும் இன்றி தங்கள் உடைமைகளை எல்லாம் சிந்திக்காமல் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டுப் பிச்சைக்காரர்களாகத் தன்மானம் இழந்து வீடுகளில் சித்திரவதைகளைத் தினம் தினம் அனுபவிக்கும் அபலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் உயிரோடு வீடுகளில் கல்லறை வாழ்க்கை நடத்தும் பெரியவர்களின் நிலையைக்  கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வயது முதிர்வால் ஏற்பட்ட முதுமை, பார்வை மங்கி, செவி மந்தமாகி நிரந்தர நோயாளராகிவிட்ட நிலையில், மூத்த குடிமக்கள் படும்பாடு பரிதாபமானது. தங்கள் உழைப்பால் நிலம் வாங்கி, பட்டினி கிடந்து கட்டிய வீட்டில் அவர்களுக்கு இடம் தரப்படுவதில்லை. வயதான பெற்றோரை வீட்டுக்கு வெளியே குடிசை அமைத்துக் குடி வைத்திருக்கிற பிள்ளையர் தங்களின் எதிர்காலத்தைத் தெரிந்திருப்பதில்லை. இறந்த காலத்தில் இவர்களை வளர்த்திட இன்றைய முதியவர்கள் செய்த தியாகத்தையும் நிகழ்காலத்தில் நினைப்பதில்லை. பேரப்பிள்ளைகளாக உறவு பாராட்ட வேண்டிய குழந்தையரை முதியோரிடமிருந்து பிரித்து வைப்பதையும், அவர்களைப் பற்றி குழந்தையரிடம் தவறாகச் சொல்லித் தந்து இழிவுபடுத்துவதையும் சில இளம்பெற்றோர் இயல்பாகச் செய்து வருகின்றனர். பழுத்த ஓலையைப் பரிகசிக்கும் இந்தப் பச்சை ஓலையின் நிலை, நாளை பரிதாபம் எனும் எதார்த்தத்தை ஏனோ உணராமல் போகிறார்கள்.

மூத்த குடிமக்களின் நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு அவர்களின் ஓய்வூதியம், அரசு தரும் உதவிகள், அவர்களின் சேமிப்பு ஆகியவற்றைப் பிடுங்கும் ஈனச் செயல்களிலும் சில குடும்பத்தினர் ஈடுபடுவதுண்டு. முதியோரின் உடல் நலிவைப் பயன்படுத்தி, அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தாக்கும் நிகழ்வுகளும் சில வீடுகளில் நடப்பதுண்டு. மூத்த குடிமக்களைச் சுமையாகக் கருதிக்கொண்டு அவர்களுக்கு உணவைத் தராமல், உடல்நலம் பராமரிக்காமல், தூய்மையான ஆடைகளைத் தராமல் கொடுமைப்படுத்தும் கூட்டத்திற்குச் சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தரவேண்டியது இன்றைய தேவையாகும்.

படுக்கை நோயாளராக இருக்கும் மூத்த குடிமக்களைப் பராமரிப்பதில் சவால்கள் உள்ளன. ஆயினும், அவர்கள் மனிதர்கள், நமக்கு உடல் தந்து வாழ்வு தந்த நமது உதிரத்தின் உதிரம் என்கிற உறவு உந்துதல் இருந்தால் மட்டுமே அவர்களைக் கரிசனையோடு கவனிக்க முடியும். மொத்தத்தில், மூத்த குடிமக்களின் உடைமைகளை மொத்தமாகக் கபளீகரம் செய்துகொள்கிற அவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களை மனிதராகக் கருத மனமில்லாமல் போவது ஏன்? இவர்கள் வீணைகள்; எரிக்கப்படுகிற விறகுகள் அல்ல என்பதை உணரவேண்டும்.    

வீடுகளில் இருக்கும் மூத்த குடிமக்கள் வீட்டிற்குப் பாரங்கள் அல்ல; வீட்டின் விளக்குகள். அவர்கள் ஒரு காலத்தில் ஆற்றல்மிகு ஆளுமைகளாக இருந்தவர்கள். தங்கள் உழைப்பாலும் முயற்சியாலும் தியாகத்தோடு குடும்பத்தை நிலைநிறுத்தியவர்கள். நாம் இன்று காணும் உயரங்களுக்கு அன்றைக்குத் துயரங்களைச் சுமந்தவர்கள். இவர்கள் எதற்கும் உதவாதவர்கள் என்று ஊரைக் கூட்டி ஊளையிடுகிறவர்கள், அவர்கள் போட்ட உணவுப் பிச்சையாலும், கல்விப் பிச்சையாலும் கரையேறியவர்களே! இன்று இவர்களின் பெயருக்குப் பின்னால் அலங்காரமாய் அமர்ந்திருக்கும் பல்கலைக்கழகத்தின் பட்டங்கள் அவர்களின் வியர்வைத் துளிகளின் மொழிபெயர்ப்பு. குடியிருக்கும் கோபுர வீடுகள் அவர்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்த கலவை. அவர்களின் முகத்தில் இயற்கை வரைந்திருக்கின்ற நெற்றிச் சுருக்கம் இன்றைய தலைமுறையின் முகவரி.

இன்றைய வசதியான வாழ்க்கை விருட்சத்திற்கு வேர்களாக அமைந்திருப்பது நம்மால்பயனற்றவர்கள்எனத் தூக்கி எறியப்படும் மூத்த குடிமக்களே. வேர்களை வெட்டி எறிந்துவிட்டு மரக்கிளைகளில் மகரந்தச்சேர்க்கை நடத்துகிறோம். நம்மால் புழுதியில் வீசப்படுகிற இந்தப் புல்லாங்குழல்கள் நமக்குத் தாலாட்டு பாடல் இசைத்தவை. அவர்களின் தொங்கிய தோள்களில்தான் இன்றைய இளையோருக்குத் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. வீடுகளில் மனிதப் பட்டியலிலிருந்து நம்மால் விலக்கி வைக்கப்பட்ட இவர்கள்தான், நாம் தொடக்கப்பள்ளிகளைத் தொடாத காலத்திற்கு முன்பிருந்தே தொடக்கப் புள்ளிகள். இவர்களின் பக்குவம் நிறைந்த பழக்கங்களும், அளப்பரிய அனுபவங்களும் அடுத்ததலைமுறைக்கான அகராதிகள். செயற்கை நுண்ணறிவைத் தாண்டிய இயற்கையின் ஞானங்கள்.

இவர்கள் கண்மூடுகிற காலம் வரை இவர்களைக் கருத்தாய் கவனித்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும். இவர்களின் வயோதிகக் காலத்தில் வயிற்றுக்கு உணவிடாமல், நோய்க்கு மருந்திடாமல், கவலையில் ஆறுதல் தராமல் அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்துவிட்டு, உயிர் போனபின்பு ஊரைக் கூட்டி இரங்கல் நடத்துவதும், ஆடம்பரமாய் அடக்கச்சடங்கு நடத்துவதும், பெரும்பணம் செலவழித்துப் பத்திரிகை விளம்பரம் தருவதும் போலித்தனத்தின் புதுப் பதிப்பல்லவா?

சாகும்வரை சங்கடப்படுத்திவிட்டு, இறந்த பிறகு சந்தனப் பெட்டியில் அடக்கம் செய்கிறவெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்ஊருக்கு ஊர் பெருகிவிட்டார்கள். இந்த வாசம் வீசும் இயற்கை மலர்களை வீதியில் வீசி எறிந்துவிட்டு, காகிதப் பூக்களைக் கௌரவிக்கும் போக்கு போலித்தனம் என்பதைப் புரிந்துகொள்வது எப்போது?