news-details
ஆன்மிகம்
தோமா கால் பதித்த தேசம் (புதிய தொடர் – 01)

இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புனித தோமா, இயேசுவின் பாடுகளின் போதும், அவருடைய அநியாய மரணத்தின் போதும் எருசலேமில் இல்லாமல் போனது ஏன் என்ற கேள்விக்கான விடை இன்னமும் நாம் அறியாததாகவே உள்ளது. எனினும், உயிர்த்த இயேசுவின் விலாக் காயங்களில் தன் விரலைவிட்டுச் சோதித்துப் பார்த்து, “என் ஆண்டவரே, என் தேவனே என அவர் உலகிற்கே அறிக்கையிட, அந்நிகழ்வு அமைந்தது.

இத்தகைய மகத்தான நம்பிக்கை அறிக்கைக்காகவே ஆண்டவர் இயேசுவின் சித்தப்படி தன்னிச்சையாகவே தோமா அன்று எருசலேமில் இல்லாது போயிருக்கலாம். எது எப்படியோ, நாமும் இது குறித்துச் சில கேள்விகளைக் கேட்டு, நமக்குள்ளேயே சமாதானப் பதிலைத் தேடிக்கொள்ளும் விதமாக அமைந்துள்ள கீழ்க்காணும் கவிதையுடன் ‘தோமா கால் பதித்த தேசம் என்னும் தலைப்பிட்ட இந்தியாவின் திருத்தூதரான புனித தோமாவின் வரலாற்றுக்குள் நாம் மனம் பதிப்போம்.

வாருங்கள் அவரோடு நாமும் இறப்போமென

வார்த்தைகளில் கூறியவரா நீர்?

வாழ்வும் வழியுமான தலைவர் இயேசுவையே

வேதனையில் விட்டவரா நீர்?

கூறுங்கள் தோமாவே,

பாடுகளின் வேளையிலே

கூட வரா தெங்கே போனீர்?

கூட்டமாய் எருசலேமே வேடிக்கைப் பார்க்கையிலே

கோமகனே என்ன ஆனீர்?

உயிரைத் துச்சமென மதித்து இயேசுவுடன்

பெத்தானியா சென்றீர் அன்று.

உம் வீரம் எங்களுக்கு வியப்பைத் தருவதனால்

உள்ளுக்குள் கேள்வியொன்று

உடன் வந்த சீடரெல்லாம் இயேசுவைக் கைவிட்டு

உயிர் பிழைக்க ஓடிச்சென்று ஒளிய,

நீர் மட்டும் ஊரிலேயே இல்லாமல்

போனதுதான் ஏனோ அன்று?

விருந்து முடிந்தவுடன் அவசரப் பணி நிமித்தம்

விடைபெற்றுப் போயிருந்தீரோ?

வீரர்கள் இயேசுவைக் கைது செய்த சேதியறியா

வெளியூரில் நீர் இருந்தீரோ?

பருந்துகள் வசம் சிக்கிய

அமைதிப்புறா இயேசு பற்றி

அறிந்திரா இடம் சென்றீரோ?

பார்க்காது நம்பிக்கையின் பண்பை வெளிப்படுத்த

பரம னும்மைத் தேர்ந்தெடுத்தாரோ!

இயேசு பிரா னறியாது தூசு கூட நகராது

எல்லாம் அறிந்தவர் அவரே -அவர்தம்

இன்னல் வேளையில் நீர் இல்லாது போனதற்குக்

காரணமாய் இருந்த த(அ)வரே

மாசு மருவில்லா உம் நம்பிக்கை வெளிப்படவே

நிகழ்ந்தது இந்தப் புதிரே

மாபரன் இயேசுவுக்காய்

மறைச்சாட்சி ஆனவரே

தோமா என்னும் ஞானக் கதிரே!

இயேசுபிரான் பாடுவேளை இல்லாது போனாலும்

இயேசுவுக்காய் பாடுபட்டீர்!

இயேசு தந்த நற்செய்தி எங்கெங்கோ அறிவிக்க

இருக்கின்ற நாடு விட்டீர்!

இயேசு வழி மாந்தரிந்த பூமியில் இணைந்திடவே

இயேசுவுக்காய் உயிரை விட்டீர்!

எள்ளளவும் குறையாத நம்பிக்கை சாட்சியமாய்

எங்கள் நெஞ்சில் மதிப்பைப் பெற்றீர்!

நம்பிக்கையின் இலக்கணமாய், வீரத்தின் உறைவிடமாய் திருவிவிலியம் காட்டும் புனித தோமாவின் வரலாறு ஒரு வீரியமிக்க வரலாறு. இந்திய நாட்டின் இதயத்தோடு இணைந்த வரலாறு. ஐரோப்பிய நாடுகள் கிறித்தவத்தை அறியும் முன்னமே ஆசிய கிறித்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக, இந்தியக் கிறித்தவர்களுக்குக் கிறித்தவத்தை தோமா அறிமுகப்படுத்திய தீரமிக்க வரலாறு. புனித தோமாவின் இவ்வரலாறு இந்தத் தொடரில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்ந்த ஒரு வார காலத்திற்குப்பின் ஆரம்பமாகிறது.

தங்கள் தலைவர் இயேசு சிலுவை சுமந்து, பாடுகள் பட்டு மரித்த துயரமான நிகழ்வுகள் அவரின் பதினோரு சீடர்களின் நினைவுகளை விட்டு நீங்காமல் அவர்தம் உள்ளங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியிருந்தன. மேலும், எதிரிகள் முன்பைவிட தீவிரமாக அவர்களைத் தேடிவந்த அந்நிலையில், தாங்கள் எருசலேமில் தங்கியிருப்பது பாதுகாப்பானது அல்ல என்பதையும் உணர்ந்தனர். எனவே, யூதேயா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வடக்கிலுள்ள கலிலேயாவிற்குச் செல்லத் தீர்மானித்தனர்.

இயேசுவின் பன்னிரு சீடர்களில் இறந்த யூதாஸ் இஸ்காரியோத் மட்டுமே யூதேயா நாட்டைச் சார்ந்தவர். மற்ற பதினோரு பேரும் கலிலேயாவைச் சார்ந்தவர்களே. எனவே, பாதுகாப்பிற்காகத் தங்கள் சொந்த நாடான கலிலேயாவிற்கு அவர்கள் புறப்பட்டனர். மேலும் இயேசுவை அதிகம் நேசித்த மக்கள் வாழும் நாடு என்ற சிறப்பும் கலிலேயாவுக்கு இருந்தது.

ஆண்டவர் இயேசுவின் விலாக்காயங்களில் விரல் நுழைத்து அவர் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு “ என் ஆண்டவரே, என் தேவனே!” என்று நம்பிக்கை அறிக்கையிட்ட தோமா இந்த முறை தன் நண்பர்களை விட்டு விலகவில்லை. இனி எந்த நிலையிலும் அவர்களை விட்டு விலகக்கூடாது என்ற உறுதியான மனநிலையோடுதான் அவர்களுடன் கலிலேயா புறப்பட்டார். கலிலேயாவின் அருகிலிருந்த திபேரியா பகுதியில்தான் தோமாவின் பெற்றோரும் வசித்து வந்தனர்.

அவர்கள் அனைவரும் புறப்பட்ட அந்தப் பயணத்தில் கலிலேயா எல்லையை அடைந்தபோது அங்குத் தெரிந்த மலைகள்,  வயல்கள், சோலைகள், வழிப் பாதைகள் என எல்லா இடங்களும் இயேசுவுடன் தாங்கள் நடந்த அந்த நாள்களை நினைவுபடுத்தின. கலிலேயா கடற்கரையில் அமைந்திருந்த பதினான்கு மைல் நீளமும், ஆறு மைல் அகலமும் கொண்ட கெனசரேத் ஏரியைக் கண்டபோது அதன் கரையில் மனிதர்களைப் பிடிக்கும் பணிக்குத் தங்களை இயேசு அழைத்த நினைவு நிழலாடியது.

கெனசரேத் ஏரியின் மேற்குப் பகுதியில் கோதுமைப் பயிர் நிறைந்த பரந்த வயல்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்பட்டன. மரம், செடி, கொடிகள், கரும்புத் தோட்டங்கள், பனைமர வயல்கள் இருந்தன. அதற்கு நேர்மாறாக, கிழக்குப் பகுதியில் காடுகளும் கற்பாறைகளும், பாலைநிலங்களுமே இருந்தன.

கிழக்குப் பகுதிக் கரையோரத்தில் செங்குத்தான பாறைகள் இருந்தபடியால், படகுகள் வந்து இறங்கும் துறையாக அப்பகுதி விளங்கியது. ஏரியின்மீது எப்போதும் படகுகள் போய்க்கொண்டிருந்தன. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் நூற்றுக்கணக்கில் கரையில் காத்திருந்தன. மீனவர்களுக்கான குடிசைகள் அங்கே நிறைந்திருந்தன. இந்தப் பகுதிகளிலும் அவர்கள் இயேசுவோடு நடந்த நாள்களை நினைவுகூர்ந்தனர்.

பாஸ்கா பண்டிகை முடிந்த ஒருவார காலத்திற்குப் பின்னர் புறப்பட்ட பயணம் நிறைவுற்றபோது, அவர்கள் தங்கள் சொந்தக் கடற்கரை நிலத்தில் கால் பதித்தனர். இனிப் பிழைப்பிற்கு வழிதேடியாக வேண்டிய நிலையில் சீமோன் பேதுரு “நான் மீன் பிடிக்கப்போகிறேன் என்று மற்றவர்களுக்குக் கூறினார். ஆம், அதுவே அவர்கள் முன்னர் செய்துவந்த மூதாதையரின் தொழில்.

மீன்பிடிப்பதில் ஏற்கெனவே அனுபவம் பெற்றிருந்த சீடர்களில் ஆறு பேர், “நாங்களும் வருகிறோம்  என்றனர். அந்த ஆறு பேரில் ஒருவரின் சம்மதக் குரலாக தோமாவின் குரலும் ஒலித்தது. ஏற்கெனவே இயேசுவின் மரணத்தில் பாடம் கற்றுக்கொண்ட அனுபவம் உடையவரான தோமா, மற்றவர்களை விட்டுப் பிரிவதால் நல்ல சந்தர்ப்பங்களை இனி இழக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார். எனவே, அந்திரேயா, பெரிய யாக்கோபு, யோவான், சின்ன யாக்கோபு, யூதா, ததேயு இவர்களின் குரல்களோடு தோமாவின் குரலும் சேர்ந்துகொண்டது.

திபேரியா கடற்கரைப் பகுதியில் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த தொழிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், ஒருநாள் ஏழு பேரும் படகில் ஏறிக் கடல் நடுவில் சென்று, இரவெல்லாம் உழைத்தும் ஒரு மீன்கூடப் பிடிபடாத கவலையில் இருந்தனர். அப்போது சூரிய உதயத்திற்குள் இருள் கவ்வியிருந்த நேரத்தில் இயேசுவை அவர் யாரென்று அறியாமலேயே அவர் கூறியபடி படகின் வலதுபக்கம் வலையை வீசி 153 பெரிய மீன்களைப் பிடித்து வந்து, இயேசுவுடன் பகிர்ந்து உண்டனர். இயேசுவைச் சீடர்கள் அறிந்துகொண்ட பின்னர் பேதுருவிடம் தம் ஆட்டுக்குட்டிகளை மேய்க்கச் சொல்லி, இயேசு தம் திரு அவையைப் பேதுருவிடம் ஒப்படைத்த ஒப்பற்ற நிகழ்வும் அங்கே நடந்தது.

உயிர்த்தபின் நாற்பது நாள்கள் பூமியில் இருந்த இயேசு இறுதியாக அவர்களுடன் சேர்ந்து உணவு உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குகளை நிறைவேற்ற அங்கே காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள் என்று அறிவுறுத்தினார். இயேசுவின் கட்டளைப்படி அவர்கள் மீண்டும் யூதேயா நாட்டிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அங்கே பெத்தானியாவிலுள்ள ஒலிவ மலைப்பகுதியில் இயேசு விண்ணேற்றமடைந்தார்.

(தொடரும்)