news-details
சிறப்புக்கட்டுரை
படைப்பின் அற்புதம்

இறைவனின் படைப்புகள் அனைத்துமே அற்புதமானவைதாம்! குறிப்பாக, மனிதனை அடுத்து விலங்குகளும் பறவைகளும் தாவரங்களும் அற்புதங்களே! விலங்குகள், உணர்ச்சியும் அறிவும் கொண்டிருப்பதால் தாவரங்களை விடவும் மேலான படிநிலையில் உள்ளன. அதனால் விலங்கினங்கள் மீதான இறைப்பராமரிப்பு காணக்கூடிய சான்றாக உள்ளன. ஆனால், மானிடரான நாம் எல்லா உயிரினங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளோம்.

ஞானி தன் ஞானத்தைக் குறித்து பெருமை பாராட்டவேண்டாம்; வலியவர் தன் வலிமை குறித்துப் பெருமை பாராட்டவேண்டாம்; செல்வர் தன் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்டவேண்டாம். பெருமை பாராட்ட விரும்புபவர், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக (எரே 9:23) என்று கூறுகின்றார் இறைவன்.

பகுத்தறிவு அல்ல, உள்ளுணர்வே (INSTINCT) காரணம்

விலங்குகளுக்குப் பகுத்தறிவு இல்லாவிடினும், அவைகளிடம் உள்ளுணர்வும் இயற்கை நாட்டமும் இருக்குமாறு படைக்கப்பட்டுள்ளன. அதனால் விலங்குகள் பல செயல்களில் அறிவுத்திறனுடன் செயல்படுவதாக நமக்குத் தோன்றுகிறது. இறைவன் விலங்கின் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பது மட்டுமல்ல; தமது மகிமையை விலங்குகள் வாயிலாக வெளிப்படுத்துகிறார். அதன்வழி அவர் செய்த அற்புதங்கள் பெரியவை, எண்ண முடியாதவை.

மனிதன் வீட்டைக் கட்டி வாழ்வதன் மூலம் தனக்குப் பாதுகாப்பைத் தேடிக்கொள்கிறான். அதுபோல விலங்குகளும் பறவைகளும் பாதுகாப்பைத் தேடுகின்றன. எடுத்துக்காட்டாக, தூக்கணாங்குருவியைப் பார்க்கலாம். அது வாழும் கூட்டை ஆராய்ந்து பார்த்தால், நெசவாளரின் நேர்த்தியான கைவண்ணமும், பாய் முடையும் தொழிலாளியின் திறமையும் தோற்றுப் போகக்கூடும். கூட்டைக் கட்ட அது எடுத்த முயற்சிகளைக் கற்பனை செய்து பார்த்தால், நாம் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவோம்.

இறைவன் மனிதனுக்குப் பகுத்தறிவைத் தந்துள்ளார். அதனால் அவன் தனது பாதுகாப்பிற்காகவும் தேவைகளுக்காகவும் நன்மைக்காகவும் செயல்படுகிறான். இறைவன் தந்த எண்ணற்ற வசதிகளில் எவையெல்லாம் தேவையோ அவற்றை எல்லாம் தனது சக்திக்கேற்ப அமைத்துக்கொள்கிறான். அதேவழியில் பகுத்தறிவற்ற விலங்குகளும் பறவைகளும் பாதுகாப்பை அடைய வழியில்லாதபடியால் இறைவன் அவைகளுக்கு இயற்கையான நாட்டத்தையும் உள்ளுணர்வையும் தந்துள்ளார். அதனால் சில சமயத்தில் அவை மனிதனைவிட சிறப்பாகச் செயல்படுகின்றன.

அவை தங்கள் உள்ளுணர்வின் மூலமாகச் செயல்படுவதால் மனிதனைக் காட்டிலும் உறுதி தவறாமை, ஒழுங்கு ஆகிய பண்புகளால் கட்டி எழுப்பித் தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றன. தாவரங்களில் பயன் தருபவை, மருத்துவக் குணமுள்ளவை ஆகியவற்றை அறிவதுடன் வெப்பநிலை உயர்வு, காலநிலை மாற்றம் ஆகியவைகளையும் விலங்குகள் புரிந்து வைத்துக்கொள்கின்றன. பல சமயங்களில் அவைகளின் மூலமாகவே மனிதனும் அவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வுலகில் விலங்கு, பறவை இனங்கள் எண்ணற்றவை. அவற்றில் மிகச் சிறியவையாயினும் பெரியவையாயினும் அவற்றில் இறைவன் தமது பெருமை, ஆற்றல், ஞானம் மற்றும் இறைப்பராமரிப்பையும் மிகவும் சரியாக வெளிப்படுத்துகிறார். அதில் குறைவோ கூடுதலோ கிடையாது. எல்லாருக்கும் எல்லாம் சமம்.

நன்மைத்தனத்தின் மொத்த உருவான இறைவன், மனிதனின் சேவைக்காக விலங்கினங்களைப் படைத்துள்ளார். அதேசமயம் அவற்றின் நன்மைக்காகவும், தேவையான சொந்த பாதுகாப்பிற்காகவும் இறைப்பராமரிப்பையும் வழங்குகிறார். அதனால் விலங்கினங்கள் உணவு கொள்ளவும், நோயினின்று விடுபடவும் இனப்பெருக்கம் செய்யவும் ஆற்றல் பெற்றுள்ளன.

இறை ஆற்றல் விலங்குகளிலும் வெளிப்படுகிறது

இறைவன் பல்வேறுபட்ட விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் உணவுக்காகப் பலவிதமான உணவுகளை விகிதாச்சார அளவின்படி கொடுத்துள்ளார். சில விலங்குகள் இறைச்சியையும், சில விலங்குகள் தாவரங்களையும் பூச்சிகளையும் உணவாகக் கொள்கின்றன. மிகச்சிறிய விலங்காயினும் அதன் வாழ்வாதாரத்திற்கு ஏற்ப தேவையான சத்துணவுகளை வழங்குகிறார்.

திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல், “உடல் கொண்ட அனைத்திற்கும் உணவூட்டுபவருக்கு நன்றி செலுத்துங்கள் (திபா 136:25). இறைவன் எல்லா விலங்குகளுக்கும் உணவைத் தந்துள்ளார்.

விலங்குகளும் மனிதரைப்போல் நோயுறுகின்றன. கடவுள் அவை சுகம்பெற இயற்கையான உள்ளுணர்வை வழங்கியுள்ளார். அதன்வழி பரிகாரங்களையும் தேடிக்கொள்கின்றன. பகை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கத் தேவையான ஆற்றலையும், புத்திக்கூர்மையையும் கொண்டுள்ளன. ஆடுகள் ஓநாய்க்குப் பயந்து அதனிடம் அகப்படாமல் இருக்க ஓடுகின்றன. ஆனால், கிட்டத்தட்ட அதே தோற்றமுடைய ஆயனின் நாயைக் கண்டு அவை ஓடி ஒளிவதில்லை.

காலநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்னதாக அறிந்துகொள்ளும் ஆற்றலை விலங்குகளுக்கு வழங்கி உள்ளார் கடவுள். அதனால் அவை வரும்முன் காப்பானாக ஆபத்திலிருந்து பிழைக்க வழிதேடிக் கொள்கின்றன. பறவைகள் இடம் விட்டு இடம் செல்லும்வலசை (MIGRATION) போகும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. புவியில் குளிர்காலத்தில் அவை தென் பகுதிக்கும், கோடையில் வட பகுதிக்கும் பயணமாகின்றன. குளிர்கால உறக்கம் (HIBERNATION) கொள்ளும் விலங்குகளுடன் மற்ற சில விலங்குகளும் குளிர்காலத்தில் தங்களுக்குத் தேவையான உணவைக் கோடையில் தேடிப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கின்றன.

பறவைகள் தங்கள் குஞ்சுகள் மீது கொண்டுள்ள கரிசனையைச் சிந்தித்துப் பார்ப்போம். கடவுள் அவற்றைக் குஞ்சுகளின்பால் மிகுந்த அன்புள்ளவைகளாகப் படைத்துள்ளார். ஏனென்றால், அவை தங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. “கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல், நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!” (மத் 23:37) என்ற  இறைமகன் இயேசு கூறிய வார்த்தைகள் இங்கு நினைவுகூரத்தக்கன.

பறவைகள் பறக்க அவைகளுக்கு எடை குறைவான மெல்லிய உடலமைப்பைக் கடவுள் தந்துள்ளார். மேலும், மற்ற விலங்குகளைப் போல் பாலூட்டும் உறுப்பையும் பறவைகள் படைப்பின் போது தவிர்த்துள்ளார். அவை தாங்கள் சேகரித்த உணவைக் கொண்டு சென்று, குஞ்சுகளுக்கு ஊட்டுவதில் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின் றன, துன்புறுகின்றன, தியாகம் செய்கின்றன. நேசிப்பவருக்காகத் தியாகம் செய்வது எளிது. “சகோதரர்களே, நாம் இயேசுவை அன்பு செய்வோம்; ஆகையால் கடினமான அனைத்தும் நமக்கு எளிதாகி உள்ளன - புனித பெர்னார்ட்.

நாம் உற்றுநோக்கிக் கவனித்தால் பல பறவைகள் தங்கள் கூடுகளைக் கூடைபோல் அமைத்திருப்பதைக் காணலாம். ஏனென்றால், அதிக எண்ணிக்கையில் குஞ்சுகள் அதில் வசிக்க முடியும். கூட்டின் தரையில் மெல்லிய புற்களையும் மிருதுவான சிறகுகளையும் வைக்கின்றன. அப்போதுதானே குஞ்சுகள் கரடுமுரடான தளத்தால் காயப்படாமல் இருக்கும்! அவை குஞ்சுகளுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்கின்றன. குஞ்சுகளைக் கூட்டின் ஓரத்தில் வைக்கின்றன. அதனால் குஞ்சுகள் வெளியிடும் கழிவை உடனுக்குடன் தாய்ப் பறவை தனது அலகாலேயே நீக்கிக் கூட்டைச் சுத்தம் செய்கிறது. “எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர் (திபா 145:15,16).

தங்களைப் பாதுகாக்க இயலாத, வலுவற்ற சில பறவைகளும் விலங்குகளும் அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. தெய்வீகப் பராமரிப்பு அவ்வினத்தைப் பாதுகாக்க அவைகளுக்கு விரைவான கருத்தரிப்பு வாய்ப்பை வழங்குகிறது. புறாக்களிடமும் முயல்களிடமும் இதனை நாம் காணலாம். முயல் ஒவ்வொரு மாதமும் கருத்தரித்து குட்டிகளை ஈனுகிறது. கௌதாரி போன்ற பறவை இனங்கள் மாதம் 25 முட்டைகள்  வரை இடுகின்றன.

எல்லா விலங்குகளும் தங்களைக் காக்கவும், எதிரிகளைத் தாக்கவும் தேவையான ஆயுதங்களை உடல் உறுப்புகளாகக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக கொம்பு, நகம், பற்கள் போன்றவற்றைக் கூறலாம். வலுவான உடல் அமைப்பு இல்லாத விலங்குகளுக்கு இறைவன் புத்திக்கூர்மையையும் வேகத்தையும் கொடுத்துள்ளார். எதிரியைக் கண்ட புள்ளிமானும் முயலும் தங்களைக் காத்துக்கொள்ள கடுமையான வேகத்தில் ஓட்டம் பிடிக்கின்றன. தங்களிடம் உள்ள ஆயுதங்களை எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை விலங்குகள் தங்கள் உள்ளுணர்வால் அறிந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பசுவின் கன்று. அது நம்மைத் தாக்கவும் காயப்படுத்தவும் கொம்பு வளர்ச்சி அடையாத தலைப் பகுதியால் முட்டித் தாக்க முயல்கிறது..

உணவு வகையில் ஆரோக்கியமானது எது? ஆபத்தானது எது? என்பதை விலங்குகள் அறிந்துள்ளன. அதில் ஆரோக்கியமானதை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுகின்றன. அதிகமான பசி வந்தாலும் கூட மற்றவற்றை எடுப்பதில்லை. இறைவன் அதை விலங்குகளுக்குப் போதித்துள்ளார். மனிதன் ஆராய்ந்து பார்த்துச் சோதித்தால் ஒழிய அதைக் கண்டுபிடிக்கமாட்டான்.

விலங்குகள் பகுத்தறிவு இல்லாதிருப்பதால் தங்கள் உடம்பை மூடிப் பாதுகாக்க ஆடைகளை, பாதங்களைப் பாதுகாக்க பாத உறைகளை அணிந்துகொள்ளவில்லை. அதனால் கடவுள் அவைகள் பிறக்கும் முன்னதாகவோ அல்லது பிறந்த பின்னரோ ஆடைகளால் அணிவிக்கிறார். விலங்குகளைப் பொருத்து அவை தோலாக, செதில்களாக, கம்பளி உரோமங்களாக, கால் குளம்புகளாக அமைத்துக் கொடுத்துள்ளார். சில விலங்குகள் ஆண்டுதோறும் அவற்றை மாற்றுகின்றன; மற்றவை ஆயுள் முழுவதும் அவற்றை அப்படியே வைத்துக் கொண்டுள்ளன. அவை கிழிவதுமில்லை, அழிவதுமில்லை.

பறவைகளும் விலங்குகளும் பேசுவதில்லை. ஆனால், தங்கள் குரலால் கோபம், வீரம், பசி, தாழ்வு, வேதனை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. பறக்க இயலாமல் இருக்கும் குஞ்சுகள் உரத்தச் சத்தத்தால் குரல் எழுப்பி உணவின் தேவையைத் தாய்க்குத் தெரிவிக்கின்றன.

விலங்குகளும் பறவைகளும் தங்களைத் தாங்களே பாதுகாக்கவும், இனத்தை வலுப்பெறச் செய்யவும் வழிவகை செய்துள்ள இறைவன் அத்துடன் திருப்தி கொள்ளவில்லை. அவைகளுக்கு மகிழ்ச்சியும் எல்லா வகையான இன்பங்களை அனுபவிக்கவும் வகை செய்துள்ளார். இறைவன் உரிய காலத்தில் அவைகளுக்கு உணவும் நீரும் அளிக்கின்றார். தமது கைகளை விரித்து ஒவ்வொரு படைப்புக்கும் ஆசிரை வாரி வழங்குகின்றார். ஞானமும் பேரறிவும் கொண்ட படைப்பாளி இல்லாமல் எந்தப் படைப்புயிரும் பிழைக்கவும், வளர்ச்சி அடையவும் இயலாது என்பதுதான் உலகமே அறிந்து வைத்திருக்கும் உண்மை.