news-details
சிறப்புக்கட்டுரை
எதிர்மறை எண்ணங்கள் வெற்றிக்குத் தடைக்கல் (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 05)

நான் முன்பு வேலை செய்த அலுவலகத்தில் எங்களோடு வேலை பார்த்த ஒரு நண்பர், தான் எதிர்பார்த்த ஏதாவது நடைபெறவில்லை என்றால், தன் மீதோ தன் செயல்பாடு மீதோ எவ்விதப் பரிசோதனையும் செய்யமாட்டார். மாறாக, ‘எனக்கு இந்த நிற சட்டை போட்டாலே இப்படித்தான் நடக்கும்; நான் அலுவலகத்திற்கு வரும் வழியில் பாக்கக்கூடாத ஒரு முகத்த பாத்துட்டேன்; என்மேல அவருக்கு இருக்குற பழைய கோபம்... அதான் அவரு இப்படி நடந்துக்கிறாரு; இன்னக்கி எனக்குக் கட்டம் சரியில்ல, செவ்வகம் சரியில்ல, வட்டம் சரியில்ல...’ என வரிசையாகப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போவார். கேட்டுக் கேட்டுச் சலித்துப்போய் விட்டது.

இதெல்லாம் சரியா? அவரவர் மனப்போக்கு. எதில் நாம் தீவிரமாகக் கவனம் செலுத்துகிறோமோ, அது நம்மை ஆட்டிப்படைக்க ஆரம்பிக்கும். இதுதான் உண்மை. யார்மீது நாம் அதீத பாசம் வைக்கிறோமோ அவர்களும் நம்மை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விடுவார்கள். உறவு என்பதில் ஒரு கட்டத்தில் சலிப்போ சண்டையோ வந்தால் அது முறிவு காணும் சூழல் வரும். எண்ணங்கள் அப்படியல்ல; தனக்குத்தானே ஏதேதோ நினைத்துக்கொண்டு, தானும் நொந்து தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் நொந்து நூடுல்ஸாக மாற்றிவிடும் இரகம் உண்டு. இதிலிருந்து விடுதலை உண்டு. நம்மை ஆட்டிப்படைக்கும் எண்ணங்களுக்குத் தீவிர நேர்மறை எண்ணங்கள்தான் மருந்தாக அமையும்.

எப்போதுமே தோன்றும் எதிர்மறை எண்ணங்களால் என்னென்ன நடக்கும்? மனித வாழ்க்கையில் எண்ணங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நல்ல எண்ணங்கள் நம்மை முன்னேற்றத்தின் பாதையில் நடத்தினால், எதிர்மறை எண்ணங்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளுகின்றன. சில நேரங்களில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் சாதாரணமானவை. ஆனால், அவை எப்போதும் மனத்தில் நிலைத்திருக்கும்போது, வாழ்க்கையின் பல பகுதிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மனித வாழ்க்கையில் எண்ணங்கள் மிக முக்கியமானவை. நாம் எப்படிச் சிந்திக்கிறோமோ, அதன்படியே நமது செயல்களும் வாழ்க்கையும் அமைகின்றன. நேர்மறை எண்ணங்கள் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால், எப்போதும் எதிர்மறை எண்ணங்களிலேயே மூழ்கி இருந்தால் அது நமது மனநலம், உடல்நலம், உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் ஆகிய அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதலில், எதிர்மறை எண்ணங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. ‘என்னால் முடியாது, ‘நான் தோல்வியடைவேன், ‘எல்லாம் தவறாகிவிடும்போன்ற எண்ணங்கள் தொடர்ந்து வந்தால், மனத்தில் பயமும் பதற்றமும் அதிகரிக்கும். இதனால் நிம்மதி குறைந்து தூக்கமின்மை, கவலை, மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.

இரண்டாவது, தன்னம்பிக்கை குறையும். ஒருவர் எப்போதும் தன்னைப் பற்றி எதிர்மறையாக நினைத்தால், தனது திறமைகளை நம்ப முடியாமல் போகிறார். நல்ல வாய்ப்புகள் வந்தாலும் முயற்சி செய்யத் தயங்குவார். இதனால் திறமை இருந்தும் முன்னேற முடியாத நிலை ஏற்படும்.

மூன்றாவது, உறவுகள் பாதிக்கப்படும். எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் மற்றவர்களின் செயல்களையும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். சந்தேகம், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் அதிகரித்து குடும்பம், நண்பர்கள் மற்றும் பணியிட உறவுகளில் பிரச்சினைகள் உருவாகலாம்.

நான்காவது, உடல்நலமும் பாதிக்கப்படும். நீண்டகால மன அழுத்தம் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தலைவலி, சோர்வு, உயர் இரத்த அழுத்தம், செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு அதிகம்.

ஐந்தாவது, வாழ்க்கை முன்னேற்றம் தடைப்படும். எதிர்மறை எண்ணங்கள் முயற்சியைக் குறைக்கின்றன. ‘இது நடக்காதுஎன்று முன்பே முடிவு செய்துவிட்டால், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், இலக்குகளை அடையவும் ஆர்வம் குறையும். இதனால் கனவுகள் நிறைவேறாமல் போகலாம். இவை அதிகரிக்கும்போது மிகச் சாதாரண நிகழ்வுக்குக் கூட மனம் நொந்து சிறு சிறு முடிவுகள் எடுக்கக் கூட காலம் தாழ்த்தி மன நிம்மதியை இழக்க நேரிடும்.

இருப்பினும், எதிர்மறை எண்ணங்களை முழுவதும் அகற்ற முடியாவிட்டாலும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். நல்ல நண்பர்களுடன் பழகுதல், உடற்பயிற்சி செய்தல், தியானம், நன்றியுணர்வை வளர்த்தல், சிறிய வெற்றிகளை நினைவுபடுத்திக் கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் மனத்தை நேர்மறை நோக்கில் மாற்ற உதவும். எப்போதும் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் மனநலம், உடல்நலம், உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் ஆகிய அனைத்தையும் பாதிக்கக்கூடியவை. எனவே, அவற்றை உணர்ந்து, நேர்மறைச் சிந்தனையை வளர்ப்பதே மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கான முக்கியமான வழியாகும்.

இதெல்லாம் கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு, எப்படி இதிலிருந்து மீண்டு வர்றது என்று நம்முள்ளே ஓர் எண்ணம் ஓடும்? எவ்வகையான எண்ணங்கள் நம் வாழ்வில் அதிகம் இடம் பெறுகிறது? எதனால் அவை வருகிறது, அதை எப்படிக் கையாள்வது என்பது பற்றி அடுத்த வாரம் காண்போம்.